Sunday, 28 February 2016

அருங்காட்சியகத்தில் ஓர் இரவு - Night at the Museum(இன்று பிப்ரவரி 28 இந்தியாவின் தேசிய அறிவியல் தினம். இந்நன்னாளில் இந்தியாவின்  நோபல் பரிசாளர் பெருமைமிகு பேராசிரியர் சி வி இராமன் அவர்களை பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இந்த நாளில் இந்த கட்டுரை எழுதுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்) 

புராதன காலத்து நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், முதுமக்கள் தாழி, விலங்குகளின் எலும்பு படிமங்கள் என்று இருட்டு அறையில் சற்றே பழைய இரும்பு சட்டங்களில் எழுதப்பட்டு இருக்கும் வரலாற்று தகவல்கள் என நம் ஊர் அருங்காட்சியகங்க‌ள் தற்போது கவனிப்பாரற்று கிடக்கிறது. 

இந்த‌ தலைமுறையில் இருக்கும் இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் பகுதியில் இருக்கும் அருங்காட்சியகங்களுக்கு தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று பார்த்திருப்பார்களா என தெரியாது.

ஏன் நம்மவர்கள் அருங்காட்சியகங்களை புறக்கணிக்கிறார்கள்?

பழமையான பொருட்களை பொக்கிசமாக பாதுகாக்கும் அருங்காட்சியகங்களுக்கு அரசு ஒதுக்கும் குறைவான‌ நிதி ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், மக்கள் பெரும்பாலும் தொலைகாட்சி பெட்டிகளிலேயே மூழ்கி முத்தெடுப்பதால் பழைய வரலாறுகளை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேகமாக குறைந்து வருகிறது என்பதே கசப்பான உண்மை. 

ஆனால் ஒரு அருங்காட்சியகத்தையே மக்கள் பெரும் திரளாக கூடி அறிவியல் சோதனைகளை செய்து பார்க்கும் ஒரு தளமாக‌ மாற்றி சாதித்து காட்டி இருக்கிறார்கள் வடக்கு அயர்லாந்து மக்கள்.

வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்டு (Belfast) நகரில் கடந்த வாரம் 18 ஆம் தேதி முதல் 28 ந் திகதி வரை "வடக்கு அயர்லாந்து அறிவியல் திருவிழா" (NI Science Festivel http://www.nisciencefestival.com/)என்ற பெயரில் வருடம் தோறும் நடத்தி வருகிறார்கள். இதன் நோக்கம் அடிப்படை அறிவியல் மற்றும் நுட்பங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. இவ்விழாவானது பெல்பாஸ்டு நகரின் பல பகுதிகளில் வல்லுநர்களை கொண்டு நிகழ்த்தப்படுகிறது.

இந்த அறிவியல் விழாவிற்கான இடங்களை பெல்பாஸ்டு நகரின் சுற்றுலாத் துறையினருடன் இணைந்து முக்கியமான சுற்றுலா இடங்களின் நடத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் பொது மக்கள் இந்த இடங்களுக்கு வந்து பார்க்கும் வாய்ப்போடு அறிவியலை பற்றியும் தெரிந்து கொள்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக நம்மை சுற்றியுள்ள வேதியியல் தனிமங்களை (Elements) பற்றிய அடிப்படை அறிவியல் புரிதலை ஏற்படுத்த குயின்சு பல்கலைக்  கழகத்தின் (Queens University Belfast) வேதியியல் மற்றும் இராசாயன பொறியியல் பள்ளியின் (School of Chemistry and Chemical Engineering) ஆராய்ச்சி மாணவர்களும், வடக்குஅயர்லாந்தின் அல்ஸ்ட்டர் தேசிய  அருங்காட்சியகமும் (Ulster Museum) இணைந்து LaTe  என்ற பெயரில் இந்த விழாவினை கடந்த வெள்ளியன்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை நடத்தியது. லாந்தனம், டெல்லூரியம் என்ற தனிமங்களின் குறியீடே LaTe ஆகும்.அல்ஸ்ட்டர் அருங்காட்சியகத்தின் வரவேற்பரை


அல்ஸ்ட்டர் அருங்காட்சியகத்தின்  அடுக்கு தளங்கள்


LaTe நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் பொதுமக்களுக்கு எளிய அறிவியல் சோதனைகள் மூலம் வேதியல் தனிமங்களின் பயன்பாடுகளை விளக்குவது அதன் மூலம் தனிமங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. ஏனெனில் நாம் இன்று பயன்படுத்தும் பற்பசை முதல் கடையில் வாங்கி உண்ணும் உணவு வரை பல வேதிப் பொருட்களின் கலப்பு உள்ளது. அதனை பற்றிய அடிப்படை அறிவு என்பது இன்றைய சூழலில் இன்றியமையாததாக உள்ளது. மேலும் நம் பொறுப்பற்ற தனத்தால் நம் சூழல் எவ்வாறு இந்த வேதி நச்சுகளால் சீரழிகிறது என்பதை பற்றியும் பெரிய விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு  சேவைக் கட்டணமாக  5 பவுண்டு மட்டும் வாங்குகின்றனர். அதற்கு பதிலாக‌ தனிமங்களின் பெயர் அடங்கிய ஒரு அடையாள வில்லையினை பங்கேற்பாளர்களுக்கு தருகிறார்கள். கழுத்தில் மாட்டில் கொள்ளும் ஒரு ப்ளாரசன்ஸ் (Light Emitting Florescence) குப்பியினை தொங்க விட்டு ஆச்சரியப்படுத்தினர்.

எமது ஆய்வகத்தில் இருந்து நண்பர்கள் லூக் பர்னசும், நேத்தன் வெல்சும் சோதனைகள் செய்து காட்ட இருப்பதால் அவசியம் வர வேண்டும் என்று இரண்டு வாரத்திற்கு முன்பாகவே சொல்லி இருந்தனர். ஆனால் என்னால் எட்டு மணிக்குதான் அங்கு செல்ல முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் பொது மக்களும் சோதனைகள் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் நிகழ்ச்சி நன்கு களை கட்டி இருந்ததை காண முடிந்தது. நிறைய முதியவர்கள், பள்ளி, பல்கலைக் கழக மாணவர்கள் நிறைய வந்திருந்ததை பார்கவே எனக்கு வியப்பாக இருந்தது.

அல்ஸ்டரின் அருங்காட்சியகத்தின் மூன்று தளங்களில் சோதனை சாலைகளை மிக நேர்த்தியாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். வரவேற்பரை தாண்டியதும் லேசர் கற்றைகளில் வண்ண ஜாலங்களோடு மேற்கத்திய இசையினை ஒலிக்க விட்டிருந்தனர். இந்த சூழல் எனக்கு வித்தியாசமாக பட்டாலும் ஒரு இறுக்கமான சூழலை உடைத்து ஓர் விடுதியில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தவே இதை செய்து இருக்கிறார்கள் என புரிந்தது.

முதல் தளத்தில் எளிமையான சோதனைகளை வைத்திருந்தனர். உதாரணத்திற்கு பேட்டரிகள் எப்படி இயங்குகிறது என ஆரஞ்சு பழத்தை கொண்டு எல் ஈ டி எரிய வைக்கும் வழக்கமான சோதனைகள் முதல் ஒரு லேசர் கற்றை எந்த அளவிற்கு வலிமை வாய்ந்தது என பலூனை வைத்து உடைத்து காட்டுவது வரை பல்வேறு விதமான சோதனைகளை நேரடியாக செய்து காட்டி இருந்தனர்.கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு திட, திரவ நிலைக்கு மாறுகிறது என்பதனை திரவ நைட்ரஜன் கொண்டு எளிதில் மக்களுக்கு விளக்கினர். திரவ நைட்ரஜனில் -78.5 டிகிரி செல்சியசில் திண்ம நிலையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயு எவ்வாறு திரவ நிலைக்கு -56.7 டிகிரி செல்சியல் உருமாறி பின் அறை வெப்பநிலையில் வாயுவாக மாறுகிறது என்பதனை ஒரு சோதனை குழாயில் பொது மக்களிடம் கொடுத்து அதனை செய்து காட்டினர். கார்பன் டை ஆக்சைடு திண்மத்தினை சோதனை குழாயில் நீரில் அமிழ்த்து வைத்திருந்த ஒரு பெண்மணி அது வாயு நிலைக்கு மாறும் போது பட்டென்று சத்தத்தோடு வெடித்த போது  ஆச்சரியத்தில் ஓவென கத்தினார். அந்த ஆச்சரியம் விலகும் முன்னே கார்பன் டை ஆக்சைடின் நிலை படத்தினை (Phase Diagram) விளக்கும் போது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம்.கார்பன் டை ஆக்சைடு வாயு சோதனை

கார்பன் டை ஆக்சைடு வாயு சோதனை

அதோடு மட்டுமில்லாமல் நவீன அறிவியல் நுட்பங்களான நீரை சூரிய ஒளி மூலம் பிரித்து ஹைட்ரஜன் வாயுவாக மாற்றி எவ்வாறு எரிம கலன் மூலம் ஒரு மகிழ்வுந்தை எப்படி இயக்குவது என சிறிய சோதனைகள் மூலம் செய்து காட்டி அசத்தினர்.  முதல் தளத்தில் மூலையில் இருந்த சோதனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தது. சிக்கலான கரிம மூலக்கூறுகளை (Complex Organic Molecules) எவ்வாறு வடிவமைத்து அவற்றினை பயன்படுத்துவது என விளக்கி சொன்ன போது பொதுமக்கள் வாயை பிளந்து  கொண்டு பார்த்தனர். அயனி திரவத்தின் (Ionic Liquid) மூலம் காந்த செயலை எவ்வாறு அடைவது மற்றும் அதன் மூலம் இரண்டு வேறுபட்ட திரவ அடுக்குகளில் இருந்து மாசுகளை எவ்வாறு பிரிப்பது என ஒரு மாணவி அருமையாக செய்து காட்டினார்.Hydrogen powered vehicle demonstrationMagnetic nanoparticle from Ionic liquid 

orange battery 

water splitting fuel cell

Electoplating using coins

water splitting fuel cell


இரண்டாவது தளத்தில் வைக்கப்பட்டு இருந்த சோதனை சாலையில் எமது ஆய்வகம் சார்பாக லூக்கும், நேத்தனும் போட்டோ கேட்டலிஸ்ட்கள் மூலம் எளிமையாக விளக்கி காட்டினர்.   இந்த சோதனைகளுக்கு எமது பேராசிரியர் ஆன்ட்ரூ அவர்கள் வடிவமைத்த திறனுறு போட்டோ கேட்டலிஸ்ட் மை அச்சுகள் மூலம் புற ஊதா கதிர்கள் எவ்வாறு அவற்றை நிறமிழக்க செய்கிறது என்பதை அழகாக செய்து காட்டினர்.  குறிப்பாக‌, மெத்திலின் ஊதா சாயம் பூசப்பட்ட டைட்டானியம் டை ஆக்சைடு திரவம் புற ஊதா கதிர் வெளிச்சத்தில் வைத்த இரண்டு நிமிடத்தில் அவை நிறம் இழந்து கண்ணாடி போன்ற திரவமாக மாறுகிறது, பிறகு அவ்வெளிச்சத்தில் இருந்து நீக்கி அக்குடுவையினை குலுக்கும் போது அது மீண்டும் ஊதா நிறம் பெறுகிறது. இந்த வண்ண மாற்றம் எப்படி எலக்ட்ரான் துளைகள் (Photoelectron, photoholes) மூலம் நிகழ்கிறது என குறை கடத்தி அறிவியலை விளக்கி சொன்ன போது பொது மக்கள் மிகவும் அவர்களை பாராட்டினர்.

சரி இதன் பயன் என்ன என ஒரு பெரியவர் வினவியபோது  போட்டோகேட்டலிஸ்ட் நுட்பத்தின் மூலம் செறிவாக இயங்கும் திறனறு மை எவ்வாறு குடி நீர் சுத்திகரிப்பு பயன்பாட்டில் மிகக் குறைந்த விலையில் செயல்படுத்த முடியும் என லூக் பொறுமையாக விளக்கியது பொது மக்கள் அனைவரையும் ஈர்த்தது. ஆப்ரிக்காவில் பல லட்சம் மனிதர்கள் சுகாதாரமான குடிநீர் இல்லாமல் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் இந்த போட்டோகேட்டலிஸ்ட் மை ஒரு நிவாரணியாக இருக்கும் என்று சொன்ன போது அந்த பெரியவர் இது போன்ற அறிவியல் தன் காலத்தில் இல்லாமல் போனது பற்றி குறைப் பட்டு கொண்டார்.
Photocatalytic dye degradation experiment demonstration by Luke

Photocatalytic dye degradation experiment demonstration by Luke

Luke and Nathen


இந்த தளங்களில் நடக்கும் போது கோமாளி வேடம் அணிந்த இருவர் பார்வையளார்களை செல்லமாக அழைத்து அவர்கள் கையில் பச்சையினை குத்தி உங்களை கைது செய்வேன் என மிரட்டி கொண்டு இருந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.இந்த அறிவியல் திருவிழாவின் வெற்றியினை இரண்டு சம்பவங்கள் மூலம் நானே உணர்ந்து கொண்டேன்.

முதல் சம்பவம், அருங்காட்சியகத்தின் மூன்றாவது தளத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டு இருக்கும் தனிமங்கள் பற்றிய காட்சி தொகுப்பு அறையில் வழகத்துக்கு மாறாக மக்கள் கூடி இருந்தனர். அது வரை மூன்று தளங்களில் அவர்கள் பார்த்த தனிமங்களின் பெயர் இந்த பட்டியலில் எங்கே உள்ளது, நிஜத்தில் பார்க்க அந்த தனிமம் எப்படி இருக்கும் என ஆர்வமாக தேடி அதனை பற்றி சுவாரசியமாக மக்கள் உரையாடியதை பார்த்த போது வியப்பின் உச்சிக்கே போனேன். இரண்டாவது அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த தனிமங்களை ஜோடி சேர்க்கும் அட்டை விளையாட்டு. உதாரணத்திற்கு ஹைட்ரஜன் அட்டை தனியாகவும் ஆக்சிஜன் பெயர் பொறித்த அட்டை தனியாகவும் இருக்கும், அதில் உள்ள தனித்த வடிவத்தினை கொண்டு இரு அட்டைகளை இணைத்தால் நீர் என்று பொருள் தருவதோடு அதன் பண்புகளையும் அந்த அட்டையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தனிம விதிகளுக்கு முரணாக தனிமங்களை இணைக்க இயலா வண்ணம் அட்டை வடிவமைக்கப்ப்ட்டு இருந்ததால் மக்கள் தாங்களாகவே அவ்வட்டைகளை தங்களுக்கு தெரிந்த வகையில் சேர்த்து பார்த்து மகிழ்ந்தனர். நேரடி அறிவியல் சோதனை என்பது நூறு ஆசிரியர்களுக்கு சமம் என்பதனை அப்போதுதான் உணர்ந்தேன்.


ஒரு நகரில் பகலிலேயே மக்கள் போக யோசிக்கும் அருங்காட்சியகம் ஒன்றில் இரவு பத்து மணிக்கும் மக்கள் நெரிசலை பார்க்க முடிந்ததே இந்த அறிவியல் திருவிழாவின் மகத்துவம் என்பேன்.

அறிவியல் கல்வியாளர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது மடமை. அது பொதுமக்களுக்கும் புரியும் படி செய்தலே கல்வியாளர்களின் கடமை. ஆனால் வெறும் புத்தகங்கள் மூலம் இதனை சாதித்து காட்டி விட முடியாது.

நம் ஊரில் இது போன்று மக்கள் கூடும் இடங்கள் அல்லது அருங்காட்சியகங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு அறிவியல் சோதனைகளை பொது மக்களுக்கு செய்து காட்டுவதன் மூலம் மக்களை இது போன்ற இடங்களுக்கு வர வழைப்பதோடு அவர்களும் அறிவியல் நுட்பங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதனை எதிர் வரும் அறிவியல் தினத்திலாவது நிகழ்த்த வேண்டும்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நம் ஊரில் இல்லாததால்தான் மந்திரம், தந்திரம் என்று பல போலிகள் எல்லா இடத்திலும் பொது மக்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே மக்களிடையே அறிவியல் நுட்ப விழிப்புணர்ச்சி வருவதன் மூலம் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை இன்னும் ஊக்குவிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியினை முடித்து விட்டு வெளியே வந்த போது அருங்காட்சியகத்தின் வாயிலில் ஒரு கொல்லர் இரும்பு துண்டுகளை கரி அடுப்பின் நெருப்பில் காய்ச்சி சம்மட்டியில் அடித்து மக்கள் விரும்பி கேட்கும் வாள், கேடயம், மற்றும் போர் வீரனின் முத்திரைகளை செய்து கொடுத்து கொண்டு இருந்தார். அதை பார்த்த மாத்திரத்தில் என் மனதில் தோன்றியது இதுதான், நம் சமூகத்தில் நம் மாணவர்கள் நெருப்பு துண்டுகளாக  இருக்கிறார்கள் அந்த சூடு அணைவதற்குள் அவர்களை கொண்டு இது போன்று செயலாற்ற செய்திட வேண்டும்.

அறிவியல் நெருப்பு அணைவதற்குள் நாம் செய்வோமா.
Saturday, 27 February 2016


La Te Science Festival at Ulster Museum, Belfast

Night at the Museum
Tonight, it is an unusual routine at Ulster museum, Belfast and was filled with public and school students. The event namely LaTe was conducted at Ulster museum. It is one of the public events in the NI Science Festival.
In real time, plenty of chemical elements were surrounding with us. But understanding the chemistry of elements through theory is really difficult. So the researchers from School of Chemistry and Chemical Engineering, Queens University Belfast educating the public through simple and fun full experiments.

The high school students and elders were enjoyed the live experiments. For instance, how the hydrogen powered car working, impact of laser beam on baloon, hybrid battery solar fuel cell etc.
As part of this event, photocatalyst smart inks were demonstrated by our colleagues Luke Burns, and Josh Wells. They used only simple UV light , dye coated TiO2 powder and ink coated papers. In real time, these photocatalyst ink has been greatly applied in purification of water at low cost compare to the conventional membrane technology. Like Africa undeveloped countries, a millions of people suffering without fresh and hygienic water. It is anticipated that this photocatalyst technology which combine with nature sun light and earth abundant semiconductor materials could be a remedy to afford purified water.
Hatts off to Luke and Nathan for your effective demonstration.
Luke demonstrated the photocatalytic experiments

Luke demonstrated the photocatalytic experiments

Tuesday, 23 February 2016

பேராசிரியர், மருத்துவர் புருனோ (Dr. J Mariano Anto Bruno Mascarenhas) அவர்கள் எளிய தமிழில் எழுதும் மருத்துவ தொடர்.
முகநூலில் எத்தனையோ குப்பைகள் படு அவசரமாக பகிரப்படுகின்றன. சரியா தவறா என ஒரு நிமிடம் சிந்தித்து பார்ப்பதற்கு கூட நேரமில்லாமல் பகிரப்படும் இணைய கட்டுரைகள், மீம்ஸ் படங்கள் மத்தியில் மருத்துவர் புருனோ போன்றவர்கள் தங்கள் பொக்கிசமான நேரத்தினை நம் சமூகத்திற்காக‌ செலவிடுகிறார்கள். அவருக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இதில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து உங்கள் அருகில் இருக்கும் பள்ளி மாணவர்களுடன் பகிருங்கள். கிராமத்தில் இருப்பவர்கள் இந்த கட்டுரைகளை வாட்சுஅப்பில் பகிரலாம்.
தமிழில் மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள் வெகு அரிதாக வரும் சூழலில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன். இந்த‌ முகநூல் பக்கத்தினை நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்

Sunday, 21 February 2016

ஜப்பானிய மக்களோடு ஒரு நாள் - ஒசிதா நகரம் 


ஜப்பானிய மண்ணில் இருந்து நாம் பெற்றது அதிகம். ஆனால் நாம் அவர்களுக்கும், அங்குள்ள சமூகத்திற்கும் என்ன செய்திருக்கிறோம் என அடிக்கடி ஒரு கேள்வி முழுமதி அறக்கட்டளைக்கு எழுவதுண்டு.

இதற்கான விடை தேடலில் முழுமதியின் முதல் பயணம் கடந்த வருடத்தில் தொடங்கியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மியாகி மாகாணத்தில் மகினோகாமி நகரில் அருகில் உள்ள ஒரு மலைகிராமத்திற்கு கடந்த ஆண்டு சென்று ஓர் இரவு தங்கி அம்மக்களுக்கு இந்திய உணவு சமைத்து அவர்களோடு விருந்துண்டு ஒரு நம்பிக்கையினை கொடுத்து வந்தோம். இது இறுக்கமான ஜப்பானிய சமூக வெளியில் உள்ளே நாம் நுழைவதற்கும், தோழமையுடன் அவர்கள் நம்மை புரிந்து கொள்ளவும் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி. அப்போது முழுமதிக்கு அறிமுகமானவர்தான் கோதாமா- சன் (Kodama-san) இவர் யமாகதா (Yamagada) மாகாண சட்ட சபையின் உறுப்பினர். 

அந்த சந்திப்பில் கோதாமா சன்,  குளிர் காலத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவில் (snow fall)  எங்கள் ஒசிதா (Oishida) நகரின் எல்லா போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. உள்ளூர் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நீங்களும் இங்கு வந்து தங்கி ஓரிரு நாட்கள் பனியினை விலக்கும் பணியில் ஒத்தாசை செய்தால்  எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கேட்டார்.

மேலும் அவர்களுக்கு நம் தமிழ் கலாச்சார பண்பாட்டினையும் அறிந்து கொள்ளவும் ஆசை எனத் தெரிவித்தார். 

நிச்சயம் வருகிறோம், உங்கள் மக்களுக்கு உதவுவதோடு நாங்களும் அவர்களது பண்பாடுகளை அறிந்து கொள்ள எங்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனச் சொல்லி முழுமதி களத்தில் இறங்கியது.

தோக்கியோவில் இருந்து பத்து குடும்பங்களோடு, இன்னும் சில தோழர்கள் சேர்ந்து கொள்ள யமாகதா மாகாணத்தில் உள்ள ஒசிதா நகரை நோக்கி கடந்த வெள்ளியன்று  பயணத்தை துவக்கினார்கள். ஏறத்தாழ எட்டு மணி நேர பயணம்.

வடக்கு ஜப்பானில் அமைந்துள்ள  யமாசிதா மாகாணத்தில் கிதாமுரா மாவட்டத்தில் உள்ள சிறு நகரமே ஒசிதா. இந்நகரின் வழியாகத்தான் ஜப்பானின் மூன்று பெரிய காட்டாறுகளில் ஒன்றான மொகாமி (mogami) ஆறு ஓடுகிறது. எதோ (Edo) காலகட்டத்தில், இந்த ஆறு வழியாக ஜப்பானில் பிற பகுதிகளுக்கு விளை பொருட்கள் எடுத்து செல்லும் பயணப் பாதையாகவும் பயன்படுத்தப்பட்டது.

இந்நகரில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். ஜப்பானின் தலைநகராகிய தோக்கியோவை ஒப்பிடும் போது இங்கு நிலவும் கடுமையான பருவ நிலை வேறுபாடு கோடை காலத்தில் அதிகமான வெம்மையையும், குளிர் காலத்தில் உறை பனி கொண்ட பனி பொழிவும் அதிகமாக இருக்கும். 

கடுமையான பனிப் பொழுவின் போது நகரின் முக்கியமான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் நான்கு அடிக்கும் மேல் மூடி விடும். இத்தனை பனி பொழிவினையும் அம்மக்களால் அகற்றுவது மிகவும் கடினம். 
ஆகையால்தான் நமது முழுமதி அறக்கட்டளையின் உதவியினை கேட்டுள்ளார்கள். 

நம் முழுமதி நண்பர்கள் அனைவருக்கும் ஒசிதா நகரில் தங்கும் ஏற்பாடுகளை உள்ளூர் நகர் மன்றம் மூலம் செய்து கொடுத்திருந்தனர். பனி நிறைந்த பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும், எவ்வாறான காலணிகள் அணிய வேண்டும் என பாதுகாப்பு பற்றி நண்பர்களுக்கு பயிற்சி கொடுத்ததால் இப்பணியின் மூலம் புதிய அனுபவத்தினை பெற முடிந்தது.

நம் நண்பர்களோடு, இப்பணியில் உள்ளூரில் வசிக்கும் 80, 90 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டது மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. 

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பனி பொழிவினை அகற்றும் பணி உள்ளூர் மக்களோடு செவ்வனே நடந்து முடிந்தது. சனிக் கிழமை அன்று உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தினை அரங்கேற்றினர். பின்னர் அனைவருக்கும் விருந்து உபசரித்து . அடுத்த வருடம் மீண்டும் வர வேணும் என்ற அன்பு கட்டளையோடு, பிரியா விடை அளித்தனர்.

ஆகையால் இம்முறை நமது முழுமதி அறக்கட்டளையின் உதவியினை கேட்டுள்ளார்கள். 

நம் முழுமதி நண்பர்கள் அனைவருக்கும் ஒசிதா நகரில் தங்கும் ஏற்பாடுகளை உள்ளூர் நகர் மன்றம் மூலம் செய்து கொடுத்திருந்தனர். பனி நிறைந்த பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும், எவ்வாறான காலணிகள் அணிய வேண்டும் என பாதுகாப்பு பற்றி நண்பர்களுக்கு பயிற்சி கொடுத்ததால் இப்பணியின் மூலம் புதிய அனுபவத்தினை பெற முடிந்தது.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பனி பொழிவினை அகற்றும் பணி உள்ளூர் மக்களோடு செவ்வனே நடந்து முடிந்தது. சனிக் கிழமை அன்று உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தினை அரங்கேற்றினர். இந்நகரின் மேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நம் நண்பர்களை வெகுவாக பாராட்டினர். நம் தமிழ் கலாச்சாரத்தினை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டனர்.

 பின்னர் அனைவருக்கும் விருந்து உபசரித்து . அடுத்த வருடம் மீண்டும் வர வேணும் என்ற அன்பு கட்டளையோடு, பிரியா விடை அளித்தனர்.

முழுமதி நண்பர்களின் சேவையினை யமாகதா மாகாணத்தில் இருந்து வெளி வரும் ஜப்பானிய செய்திதாளான யமாகதா- சிம்புன் இதழிலில்  பாராட்டி கவுரவித்தனர். ஒசிதா நகர மக்களின் அன்பினை பெற முழுமதி அறக்கட்டளைக்கு வாய்ப்பளித்த கோமதா சன் அவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெரும் நன்றிகள்.

தொடந்து ஜப்பானிய மக்களின் கலாச்சார பண்பாடுகளுடன் பயணிப்போம்.

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள்.

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள் சிறப்பு மர காலணிகளுடன்.

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள் 

 
ஒசிதா நகர மக்கள் தங்கள் பாரம்பரிய நடனத்துடன் விருந்தளிப்பு

முழுமதி நண்பர்கள் பனிப் பொழிவினை அகற்றும் பணி பற்றிய செய்தி யமாகதா சிம்புன் செய்திதாளில் வந்த செய்தி

ஒசிதா நகரில் பனி பொழிவினை அகற்றும் முழுமதி நண்பர்கள் 

  

சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day - February 21)


ஈன்ற பொழுதில் துவங்கி அவர்தம் தாய் வழியே பாலோடு தொடர்ந்து ஊட்டப்படுவதே தாய் மொழி. பின்னர் அதுவே நம் சிந்தையாகி உலகோடு நம்மை நெருங்க வைக்கிறது.அதனால்தான் எல்லா மனிதரும் பின்னாளில் பல மொழிகள் கற்றாலும் தத்தம் தாய்மொழி வாயிலாகவே சிந்திக்க முடிகிறது.

தாய் மொழி பேசுபடு பொருள் மட்டுமல்ல அது ஒரு இனத்தின் அடையாளம். அது அவர்களின் வழக்கியல் தொன்மைகளின் ஆதி ஊற்று. அதன் தனித்த தன்மையே அதன் குடிகளின் சொத்தாய் விளங்குவது.

கடந்த வாரத்தில் ஒரு நெகிழ்வான தருணத்தினை கண்டேன்.

எனது ஆய்வகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திலி சீனாவின் மேற்கு எல்லையில் இருக்கும் சின்சியாங் (Xinjiang) தேசத்தில் இருந்து வந்திருந்ததால் அவருக்கு சீன மொழி தாய் மொழியாக இருக்க கூடும் என எண்ணி இருந்தேன். 

ஆனால் அவருடன் பேசும் போதுதான் அவர் அங்கிருக்கும் தனித்த மொழியாகிய உகுய்ர் (Uyghurئۇيغۇر تىلى) எனப்படும் மொழி பேசுபவர் என தெரிந்தது.   உகுய்ர் மொழி துருக்கியும் அரபி மொழியும் கலந்த கலப்பின மொழி என சொன்னார். அதன் எழுத்துருக்கள் பார்க்க அரபி போல் இருந்தது. அவரது பெயரை எழுத சொன்னபோது மகிழ்வுடன் எழுதிக் காட்டினார்.

பெரும் மொழி வளத்தோடு வாழ்ந்த இவர்கள், காலப் போக்கில் ஏதேச்சதிகாரத்தினால் தங்கள் எல்லை ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது அவர்கள் வசிக்கும் பகுதி சீன எல்லைக்குள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசமாக தள்ளப்பட்டுள்ளது.  

ஆயினும், கல்வி பயில அவர்கள் சீன கல்வி நிறுவனங்களுக்கே செல்ல வேண்டிய சூழல். தங்களில் வீடுகளில் மட்டுமே பேசவும் எழுதவும் இருக்கும் சூழலில் மனதளவில் தங்கள் தாய்மொழியினை விடாமல் தொடர்ந்து எடுத்து செல்கின்றனர். 

"வேலை வாய்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு சீன மொழிதானே உதவுகிறது ஏன் நீங்கள் குறைந்த அளவில் பேசப்படும் மொழியினை தொடர்ந்து போற்றுகிறீர்கள்" என கேட்டபோது, "தாய் மொழி உயிருக்கு இணையானது, அது வேலை கொடுக்க மட்டும்தான்  என்பது மிக மோசமான தாழ்வான எண்ணம்" என்ற போது எனக்கு பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. 

ஜப்பானில் நான் பணி புரிந்த போது இதே சின்சியாங் மாகாணத்தினை சேர்ந்த ரிசுவான் என்பவர் என்னோடு ஆராய்ச்சியாளராக பணி புரிந்தது ஞாபகத்திற்கு வந்தது. அவரை பற்றி சொன்னவுடன், உற்சாகமானவராய் அவருடைய தொடர்பு  மின்னஞ்சலோ, முகநூல்  இணைப்போ தர முடியுமா என கேட்டார். 

ஏன் இவ்வளவு ஆர்வம் என கேட்டால், உலகின் மொழி சிறுபான்மையராகிய யாம் பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தாலும் எமது மொழியின் உறவு கொடி சங்கிலியினை அறுந்து விடாமல் பாதுகாக்கிறோம் என்றவுடன் மெய் சிலிர்த்தது. அவருக்கு என வாழ்த்துகளை சொன்னேன். 

இப்படி உலகமெங்கும் பல்லாயிரக் கணக்கான மொழி சிறுபான்மையினர் பெரும்பான்மை சமூகத்தவரின் அதிகார அரசியல், புவி எல்லை ஆக்கிரமிப்பினால் மொழி சிதைவில் இருந்து அவர்கள் மொழியினை காக்கும் பொருட்டு தொடர்ந்து போராடுகின்றனர். அவர்களுக்கு இந்த தாய்மொழி தினம் ஒரு சிறு ஆறுதல். 


தாய் மொழியில் பயின்றதால் உயர்வில்லை என பொருளீட்டுதலோடு தாழ்ச்சியாய் பொருள் கொள்ள தேவையில்லை, அதுவே உலகில் பிறரோடு நம்மை உரையாட வைத்தது. அதுவே நம் பெற்றோர் நமக்கு தரும் சொத்து. தாய் மொழியினை போற்றுவோம். 

தமிழ் மொழி பேசுவதன் மூலம் நான் உயர்வடைகிறேன். எனக்கு ஒரு போதும் இதில் தாழ்ச்சி இல்லை. அதுவே உலகோடு என்னை இணைக்கிறது. 

நண்பர்கள் அனைவருக்கும் எமது சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துகள்.

"Tamil" is my mother language and i feel proud to speak and write in my language. Warm Greetings for International Mother Language Day. Please support to promote linguistic and cultural diversity and multilingualism.

Sunday, 14 February 2016

ஒரு வார்த்தை ஒரு காசு ‍ - பீப் உண்டியல்


அடுத்த மாதம் வரப் போகும் ஈஸ்டர் பண்டிகைக்கு ஆய்வகத்தின் சார்பில் ஏதாவது சமூக சேவைக்கு நிதி அளிக்கலாம் என யோசித்து கடந்த வெள்ளியன்று எமது ஆய்வகத்தில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டது. 

ஆய்வகத்தில் யாராவது கெட்ட வார்த்தை பேசினால் ஒரு காசு போட வேண்டும் அது ஒரு பென்னியாகவோ அல்லது ஒரு பவுண்டு காசாகவோ இருக்கலாம். 

வெள்ளி மாலை நிலவரப்படி உள்ளே 100 காசுக்கும் மேல் கிடந்தது. அப்படியானால் ஆய்வக‌த்தில் எந்த அளவிற்கு கெட்ட வார்த்தை புழங்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உத்தேசமாக இன்னும் பத்து நாளில் உண்டியல் நிரம்பி விடும். 

இதனை ஒரு பகடிக்காக செய்தாலும் இதன் பின்னனியில் நாலு பேருக்கு உதவ வேண்டும் என்ற யோசனையினை சொன்ன ஆய்வக நண்பர் நேத்தனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ஜப்பானியர்களின் பறை இசை நடனம்


ஜப்பானை பற்றிய நம்மவர்களின் பொது புத்தி மிக சுவாரசியமானது

குள்ளமானவர்கள், சப்பை மூக்குகாரர்கள், பாம்பு பல்லி என அனைத்தும் உண்பவர்கள்  இப்படி ஒரு பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

நான் ஜப்பானில் வாழ்ந்த இரண்டு வருடத்தில் ஒரு சப்பை மூக்குகாரர்களையும் நான் பார்த்ததே இல்லை.  நம் மக்கள் மேலே சொன்ன பட்டியலை தாண்டி, ஜப்பான் நாட்டின் கலைகளை பற்றி எதாவது  தெரிந்து வைத்திருக்கிறார்களா என்றால்  அதுதான்  கிடையாது. 

நம் ஆட்களுக்கு சுவாரசியத் தன்மைக்காக வாயில் அவல் கணக்காக எதையாவது மென்று கொண்டே இருக்க வேண்டும்  காலப் போக்கில் இதுவே முற்றி வெளிநாடுகளில் உள்ள‌ புவி சார், மக்கள், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றினை பற்றிய‌ உண்மையான தகவல்களை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாகி அதனையே கோசமயமாக்கி விட்டார்கள்.

தமிழகத்தில் ஆதி இசைக் கருவியான பறையினை நாம் கற்பதற்கு இந்த தமிழ் மண்ணில் பல தடைகள் இருக்கின்றன. இசைக் கருவிகளுள் இதனை தொடலாம், இதனை தொடக் கூடாது என பேதம் பார்த்த பேதைகள் வாழும், வாழ்ந்த மண் இது. ஏன் இந்த தயக்கம்?

இறந்த விலங்கின் தோலில் செய்யப்பட்ட இசைக் கருவி அதனால் அதனை தொடக் கூடாது. அப்படியானால், தபேலா, மிருதங்கம், மத்தளம் இவையெல்லாம் டைனோசர் தோலில் செய்யப்பட்டவையா. பிறகு ஏன் பறைக்கு மட்டும் தள்ளி வைப்பு. அதை இசைப்பவனின் பின் புலத்தோடு தொடர்பு படுத்தி பார்க்கும் சிறுமையான எண்ணதான் இதனை கற்க தடையாக உள்ளது.
.

ஆனால் நாம் கற்க தயங்குகிற, ஒதுக்கி வைக்கிற நம் ஆதி பறை இசையினை ஜப்பானியர்கள்  தங்கள்  மண்ணிற்கே வர வைத்து பிழையற கற்று இன்று ஜப்பான் முழுவதும் நம் பறை இசையினை பரப்பி வருகின்றனர்.  ஆம், கடந்த ஆண்டு திண்டுக்கல் சக்தி குழுவினரை ஜப்பானுக்கு பத்து நாட்களுக்கு வர வைத்து அவர்க‌ளிடம் முறையாக பறை இசை நடனத்தினை ஜப்பானியர் கற்றுக் கொண்டனர். உலகின் கீழைத் திசையான ஜப்பானில் ஒரு நாள் பறை இசை  ஒலிக்குமென எந்த தமிழனும்  எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

நம்மில் பெரும்பாலானோருக்கு பறை இசை ஒரு கொட்டு கருவி போல எவரும் வாசிக்க இயலும் என்ற மனோ நிலை உள்ளது. பார்க்க எளிதாக தெரியும் பறை இசையினை அதன் இலக்கணங்களோடு இசைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல‌. உணர்ச்சி பெருக்கிற்கேற்றார் அடி வகைகள் மாறும். பறை இசையின் தனித்த அடி வகைகளாக தற்போது கிடைப்பவை, சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமாஅடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என்பவனவாகும். ஆட்ட இலக்கணம் பிடிபடுவதென்பது நீண்ட பயிற்சிக்கு பின்பே சாத்தியமாகும். 

நம மண்ணில் இருக்கும் இசைக் கருவிகளிலேயே வாசித்துக் கொண்டே நடனமாடும் ஒரே தனித்த சிறப்பு பறை இசைக்கு மட்டும்தான் உண்டு. பறை அடித்துக் கொண்டே ஆடும் அடவுகள் மூளைக்கும் உடலியசைவுக்கும் ஒரே நேரத்தில் ஒத்திசைவாக இருக்க வேண்டும். 

குறிப்பாக‌ நேர்நின்று,எதிர்நின்று, வளைந்து நின்றுஆடுதல் என இரு அணிகளாக பிரிந்து பறை இசைத்து கொண்டே ஆடும் போது பறையின் இலக்கணங்கள் பார்வையானளை உள்ளே இழுத்து கொண்டு அவனும் அந்த குழுவின் அங்கதமாகி, எழுந்து அதிர்ந்து ஆட வைக்கும் வசீகரிப்பு தன்மை உடையது.


சமீபத்தில் முழுமதி அறக் கட்டளையின் பொங்கல் விழாவில் ஜப்பானியர்களின் பறை இசையினை அரங்கேற்றும் வண்ணம் செய்திருந்தோம். நம்மவர்கள், ஜப்பானியர்களுக்கு கற்று தந்தது போய், அவர்கள் நம் தமிழ் நண்பர்களுக்கு பறை இசைக்க கற்று கொடுத்ததுதான் காலத்தின் வியப்பு.

மிக நேர்த்தியான அடவுகளோடு மெய் சிலிர்க்கும் வண்ணம் நடனமாடிய படியே பறை இசைத்த ஜப்பானியர்களின் காணொளி உங்கள் பார்வைக்கு,

https://www.youtube.com/watch?v=E7o7BttShJM


நண்பர்களே நம் கலையினை ஜப்பானிய மண்ணில் அறங்கேற்றிய  குரகோவா (Kurokawa) அவர்களின் ஒருங்கிணைப்பில் இயங்கும் நிர்தாலயா குழுவிற்கு (Nrityalaya Group) இந்த காணொளியினை அதிகமாக பகிர்வதோடு நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் சொல்வோம்.


Monday, 8 February 2016


நல்லதொரு அறிவியல் ஆசான் ‍ - 

(In the memory of Prof. Dmitri Mendeleev)


இன்று பிப்ரவரி 8 ஆம் திகதி, தனிம ஆவர்த்தன அட்டவணையினை (Periodic table of the elements) வடிவமைத்த ருசிய நாட்டு வேதியியல் ஆய்வாளர், பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்   (Dmitri Mendeleev) அவர்களது பிறந்த தினம் ஆகும்.

நானோ நுட்பவியலில் (Nanotechnology) பருப்பொருள் (Material ) பற்றிய ஆராய்ச்சியானது இன்று உலகெங்கும் கொடி கட்டி பறக்கிறது. இத்துறையில் சிறந்த நுலைப் புலம் வேண்டுமெனில் புவியில் கிடைக்கும் தனிமங்களின் இயல் மற்றும் வேதி பண்புகளை பற்றிய அடிப்படையினை அறிதல் மிகவும் அவசியம். இதனை எளிமையாக அறிந்து கொள்ள உதவும் வகையில் பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ் அவர்கள்  வடிவமைத்த தனிம‌ அட்டவணையே  (Periodic Table) இன்றும் நமக்கு எளிய வடிவில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டுகிறது எனக் கூறினால் அது மிகையாது. அவரது இந்த ஒப்பில்லா கண்டுபிடிப்பிற்கு  நாம் நிச்சயம் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம். 
பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்

 அவரது இந்த பிறந்த நாளை போற்றும் விதமாக கூகுள் நிறுவனத்தினர் தேடு பொறியில் அவரது புகைப்படத்தினை வைத்துள்ளனர்.


பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்   ருசிய (Russia) நாட்டில் உள்ள புனித பீட்டர்சுபெக் நுட்பவியல் நிலையத்திலும் பின்னாளில் புனித பீட்டர்சுபெக் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராவும் பணியாற்றினார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு கரிம வேதியல் பாடத்தினை நடத்தும் போது  அவர்களுக்கு  தனிமங்களை பற்றி  எளிமையாக சொல்லி தரும் வண்ணம் தனிமங்களின் அணு நிறையினை அடிப்படையாக கொண்டு ஒரு அட்டவணை விதியினை (periodic law) 1869 ஆம் ஆண்டு  வடிவமைத்து அதனை ருசிய வேதியியல் கழகத்தில் (Russian Chemical Society) பல அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னாளில் அதுவே ஆவர்த்தன அட்டவணையாக விரிவடைந்தது. 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது காலத்தில் பல தனிமங்கள் கண்டுபிடிக்கபடாமாலேயே இருந்தது. ஆனால் பேரா.திமித்ரி, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படப் போகும் தனிமங்கள் பற்றிய கருத்துகளையும் முன் வைத்தார். அது இன்றளவும் மிக கச்சிதமாக பொருந்தி போகிறது. 

பேராசிரியர் டிமிட்ரி மெண்டலீப்பின் நூற்றாண்டு நினைவினை போற்றும் விதம் ருசிய அரசு 1969 ஆம் ஆண்டு வெளியிட்ட தபால் அஞ்சல்தலை (Picture courtesy: RSC.org, UK)

1934 ஆம் ஆண்டு புனித பீட்டர்சுபெக் நகரில் வைக்கப்பட்டுள்ள மெண்டலிப்பீன் தனிம அட்டவணை ((Picture courtesy: Gorden woods)


உலகின் முதல் பார்வைக்கு பேரா. மெண்டலீப் தந்த தனிம அட்டவணை  (Picture courtesy: RSC.org, UK)
மெண்டெலீப்பின் தனிம அட்டவணையில் பல குறைபாடுகள் இருந்தாலும் பின்னாளில் வந்த ஆராய்ச்சியாளர்களால் அவை சரி செய்யப்பட்டு இன்று நமக்கு நவீன ஆவர்த்தன அட்டவணையாக கிடைத்துள்ளது.

ஒரு நல்ல ஆசிரியரால் உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான‌ அறிவியல் தூண்டுகோலை தர முடியும் என்பதே  பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்  வாழ்க்கை நமக்கு சொல்கிறது.

எங்கள் வேதியியல் மற்றும் இரசாயன பொறியியல் துறையில் (Chemistry and Chemical Engineering, Queens University, Belfast) முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவர்த்தண அட்டவணையினை அடிக்கடி பார்த்து கொண்டே செல்வேன். இந்த அட்டவணையில் தனிமங்களை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களின் புகைப்படமும் இருப்பதால் எனக்கு ஞாபகம் வைத்து கொள்வதும் எளிதாக இருக்கிறது. இது போன்று பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தனிம ஆவர்த்தன அட்ட்வணையினை தினமும் மாணவர்கள் பார்க்கும் வண்ணம் சுவற்றில் பொருத்தி இருந்தால் அவர்களின் மனதில் எளிதாக தனிமங்கள் பற்றிய தகவலை பதிக்கலாம்.

First Floor, David Keir Building, Department of Chemistry and Chemical Engineering, Queens University Belfast, UK