Sunday, 21 February 2016

சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day - February 21)


ஈன்ற பொழுதில் துவங்கி அவர்தம் தாய் வழியே பாலோடு தொடர்ந்து ஊட்டப்படுவதே தாய் மொழி. பின்னர் அதுவே நம் சிந்தையாகி உலகோடு நம்மை நெருங்க வைக்கிறது.அதனால்தான் எல்லா மனிதரும் பின்னாளில் பல மொழிகள் கற்றாலும் தத்தம் தாய்மொழி வாயிலாகவே சிந்திக்க முடிகிறது.

தாய் மொழி பேசுபடு பொருள் மட்டுமல்ல அது ஒரு இனத்தின் அடையாளம். அது அவர்களின் வழக்கியல் தொன்மைகளின் ஆதி ஊற்று. அதன் தனித்த தன்மையே அதன் குடிகளின் சொத்தாய் விளங்குவது.

கடந்த வாரத்தில் ஒரு நெகிழ்வான தருணத்தினை கண்டேன்.

எனது ஆய்வகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திலி சீனாவின் மேற்கு எல்லையில் இருக்கும் சின்சியாங் (Xinjiang) தேசத்தில் இருந்து வந்திருந்ததால் அவருக்கு சீன மொழி தாய் மொழியாக இருக்க கூடும் என எண்ணி இருந்தேன். 

ஆனால் அவருடன் பேசும் போதுதான் அவர் அங்கிருக்கும் தனித்த மொழியாகிய உகுய்ர் (Uyghurئۇيغۇر تىلى) எனப்படும் மொழி பேசுபவர் என தெரிந்தது.   உகுய்ர் மொழி துருக்கியும் அரபி மொழியும் கலந்த கலப்பின மொழி என சொன்னார். அதன் எழுத்துருக்கள் பார்க்க அரபி போல் இருந்தது. அவரது பெயரை எழுத சொன்னபோது மகிழ்வுடன் எழுதிக் காட்டினார்.

பெரும் மொழி வளத்தோடு வாழ்ந்த இவர்கள், காலப் போக்கில் ஏதேச்சதிகாரத்தினால் தங்கள் எல்லை ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது அவர்கள் வசிக்கும் பகுதி சீன எல்லைக்குள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசமாக தள்ளப்பட்டுள்ளது.  

ஆயினும், கல்வி பயில அவர்கள் சீன கல்வி நிறுவனங்களுக்கே செல்ல வேண்டிய சூழல். தங்களில் வீடுகளில் மட்டுமே பேசவும் எழுதவும் இருக்கும் சூழலில் மனதளவில் தங்கள் தாய்மொழியினை விடாமல் தொடர்ந்து எடுத்து செல்கின்றனர். 

"வேலை வாய்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு சீன மொழிதானே உதவுகிறது ஏன் நீங்கள் குறைந்த அளவில் பேசப்படும் மொழியினை தொடர்ந்து போற்றுகிறீர்கள்" என கேட்டபோது, "தாய் மொழி உயிருக்கு இணையானது, அது வேலை கொடுக்க மட்டும்தான்  என்பது மிக மோசமான தாழ்வான எண்ணம்" என்ற போது எனக்கு பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. 

ஜப்பானில் நான் பணி புரிந்த போது இதே சின்சியாங் மாகாணத்தினை சேர்ந்த ரிசுவான் என்பவர் என்னோடு ஆராய்ச்சியாளராக பணி புரிந்தது ஞாபகத்திற்கு வந்தது. அவரை பற்றி சொன்னவுடன், உற்சாகமானவராய் அவருடைய தொடர்பு  மின்னஞ்சலோ, முகநூல்  இணைப்போ தர முடியுமா என கேட்டார். 

ஏன் இவ்வளவு ஆர்வம் என கேட்டால், உலகின் மொழி சிறுபான்மையராகிய யாம் பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தாலும் எமது மொழியின் உறவு கொடி சங்கிலியினை அறுந்து விடாமல் பாதுகாக்கிறோம் என்றவுடன் மெய் சிலிர்த்தது. அவருக்கு என வாழ்த்துகளை சொன்னேன். 

இப்படி உலகமெங்கும் பல்லாயிரக் கணக்கான மொழி சிறுபான்மையினர் பெரும்பான்மை சமூகத்தவரின் அதிகார அரசியல், புவி எல்லை ஆக்கிரமிப்பினால் மொழி சிதைவில் இருந்து அவர்கள் மொழியினை காக்கும் பொருட்டு தொடர்ந்து போராடுகின்றனர். அவர்களுக்கு இந்த தாய்மொழி தினம் ஒரு சிறு ஆறுதல். 


தாய் மொழியில் பயின்றதால் உயர்வில்லை என பொருளீட்டுதலோடு தாழ்ச்சியாய் பொருள் கொள்ள தேவையில்லை, அதுவே உலகில் பிறரோடு நம்மை உரையாட வைத்தது. அதுவே நம் பெற்றோர் நமக்கு தரும் சொத்து. தாய் மொழியினை போற்றுவோம். 

தமிழ் மொழி பேசுவதன் மூலம் நான் உயர்வடைகிறேன். எனக்கு ஒரு போதும் இதில் தாழ்ச்சி இல்லை. அதுவே உலகோடு என்னை இணைக்கிறது. 

நண்பர்கள் அனைவருக்கும் எமது சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துகள்.

"Tamil" is my mother language and i feel proud to speak and write in my language. Warm Greetings for International Mother Language Day. Please support to promote linguistic and cultural diversity and multilingualism.

1 comment:

  1. Our proud rich culture will be protected by learn our mother tongue.

    ReplyDelete