Monday 8 February 2016


நல்லதொரு அறிவியல் ஆசான் ‍ - 

(In the memory of Prof. Dmitri Mendeleev)


இன்று பிப்ரவரி 8 ஆம் திகதி, தனிம ஆவர்த்தன அட்டவணையினை (Periodic table of the elements) வடிவமைத்த ருசிய நாட்டு வேதியியல் ஆய்வாளர், பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்   (Dmitri Mendeleev) அவர்களது பிறந்த தினம் ஆகும்.

நானோ நுட்பவியலில் (Nanotechnology) பருப்பொருள் (Material ) பற்றிய ஆராய்ச்சியானது இன்று உலகெங்கும் கொடி கட்டி பறக்கிறது. இத்துறையில் சிறந்த நுலைப் புலம் வேண்டுமெனில் புவியில் கிடைக்கும் தனிமங்களின் இயல் மற்றும் வேதி பண்புகளை பற்றிய அடிப்படையினை அறிதல் மிகவும் அவசியம். இதனை எளிமையாக அறிந்து கொள்ள உதவும் வகையில் பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ் அவர்கள்  வடிவமைத்த தனிம‌ அட்டவணையே  (Periodic Table) இன்றும் நமக்கு எளிய வடிவில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டுகிறது எனக் கூறினால் அது மிகையாது. அவரது இந்த ஒப்பில்லா கண்டுபிடிப்பிற்கு  நாம் நிச்சயம் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம். 




பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்

 அவரது இந்த பிறந்த நாளை போற்றும் விதமாக கூகுள் நிறுவனத்தினர் தேடு பொறியில் அவரது புகைப்படத்தினை வைத்துள்ளனர்.


பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்   ருசிய (Russia) நாட்டில் உள்ள புனித பீட்டர்சுபெக் நுட்பவியல் நிலையத்திலும் பின்னாளில் புனித பீட்டர்சுபெக் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராவும் பணியாற்றினார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு கரிம வேதியல் பாடத்தினை நடத்தும் போது  அவர்களுக்கு  தனிமங்களை பற்றி  எளிமையாக சொல்லி தரும் வண்ணம் தனிமங்களின் அணு நிறையினை அடிப்படையாக கொண்டு ஒரு அட்டவணை விதியினை (periodic law) 1869 ஆம் ஆண்டு  வடிவமைத்து அதனை ருசிய வேதியியல் கழகத்தில் (Russian Chemical Society) பல அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னாளில் அதுவே ஆவர்த்தன அட்டவணையாக விரிவடைந்தது. 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது காலத்தில் பல தனிமங்கள் கண்டுபிடிக்கபடாமாலேயே இருந்தது. ஆனால் பேரா.திமித்ரி, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படப் போகும் தனிமங்கள் பற்றிய கருத்துகளையும் முன் வைத்தார். அது இன்றளவும் மிக கச்சிதமாக பொருந்தி போகிறது. 

பேராசிரியர் டிமிட்ரி மெண்டலீப்பின் நூற்றாண்டு நினைவினை போற்றும் விதம் ருசிய அரசு 1969 ஆம் ஆண்டு வெளியிட்ட தபால் அஞ்சல்தலை (Picture courtesy: RSC.org, UK)

1934 ஆம் ஆண்டு புனித பீட்டர்சுபெக் நகரில் வைக்கப்பட்டுள்ள மெண்டலிப்பீன் தனிம அட்டவணை ((Picture courtesy: Gorden woods)


உலகின் முதல் பார்வைக்கு பேரா. மெண்டலீப் தந்த தனிம அட்டவணை  (Picture courtesy: RSC.org, UK)
மெண்டெலீப்பின் தனிம அட்டவணையில் பல குறைபாடுகள் இருந்தாலும் பின்னாளில் வந்த ஆராய்ச்சியாளர்களால் அவை சரி செய்யப்பட்டு இன்று நமக்கு நவீன ஆவர்த்தன அட்டவணையாக கிடைத்துள்ளது.

ஒரு நல்ல ஆசிரியரால் உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான‌ அறிவியல் தூண்டுகோலை தர முடியும் என்பதே  பேராசிரியர் திமீத்ரி மெண்டெலீவ்  வாழ்க்கை நமக்கு சொல்கிறது.

எங்கள் வேதியியல் மற்றும் இரசாயன பொறியியல் துறையில் (Chemistry and Chemical Engineering, Queens University, Belfast) முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவர்த்தண அட்டவணையினை அடிக்கடி பார்த்து கொண்டே செல்வேன். இந்த அட்டவணையில் தனிமங்களை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களின் புகைப்படமும் இருப்பதால் எனக்கு ஞாபகம் வைத்து கொள்வதும் எளிதாக இருக்கிறது. இது போன்று பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தனிம ஆவர்த்தன அட்ட்வணையினை தினமும் மாணவர்கள் பார்க்கும் வண்ணம் சுவற்றில் பொருத்தி இருந்தால் அவர்களின் மனதில் எளிதாக தனிமங்கள் பற்றிய தகவலை பதிக்கலாம்.

First Floor, David Keir Building, Department of Chemistry and Chemical Engineering, Queens University Belfast, UK





No comments:

Post a Comment