Sunday, 14 February 2016


ஜப்பானியர்களின் பறை இசை நடனம்


ஜப்பானை பற்றிய நம்மவர்களின் பொது புத்தி மிக சுவாரசியமானது

குள்ளமானவர்கள், சப்பை மூக்குகாரர்கள், பாம்பு பல்லி என அனைத்தும் உண்பவர்கள்  இப்படி ஒரு பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

நான் ஜப்பானில் வாழ்ந்த இரண்டு வருடத்தில் ஒரு சப்பை மூக்குகாரர்களையும் நான் பார்த்ததே இல்லை.  நம் மக்கள் மேலே சொன்ன பட்டியலை தாண்டி, ஜப்பான் நாட்டின் கலைகளை பற்றி எதாவது  தெரிந்து வைத்திருக்கிறார்களா என்றால்  அதுதான்  கிடையாது. 

நம் ஆட்களுக்கு சுவாரசியத் தன்மைக்காக வாயில் அவல் கணக்காக எதையாவது மென்று கொண்டே இருக்க வேண்டும்  காலப் போக்கில் இதுவே முற்றி வெளிநாடுகளில் உள்ள‌ புவி சார், மக்கள், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றினை பற்றிய‌ உண்மையான தகவல்களை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாகி அதனையே கோசமயமாக்கி விட்டார்கள்.

தமிழகத்தில் ஆதி இசைக் கருவியான பறையினை நாம் கற்பதற்கு இந்த தமிழ் மண்ணில் பல தடைகள் இருக்கின்றன. இசைக் கருவிகளுள் இதனை தொடலாம், இதனை தொடக் கூடாது என பேதம் பார்த்த பேதைகள் வாழும், வாழ்ந்த மண் இது. ஏன் இந்த தயக்கம்?

இறந்த விலங்கின் தோலில் செய்யப்பட்ட இசைக் கருவி அதனால் அதனை தொடக் கூடாது. அப்படியானால், தபேலா, மிருதங்கம், மத்தளம் இவையெல்லாம் டைனோசர் தோலில் செய்யப்பட்டவையா. பிறகு ஏன் பறைக்கு மட்டும் தள்ளி வைப்பு. அதை இசைப்பவனின் பின் புலத்தோடு தொடர்பு படுத்தி பார்க்கும் சிறுமையான எண்ணதான் இதனை கற்க தடையாக உள்ளது.
.

ஆனால் நாம் கற்க தயங்குகிற, ஒதுக்கி வைக்கிற நம் ஆதி பறை இசையினை ஜப்பானியர்கள்  தங்கள்  மண்ணிற்கே வர வைத்து பிழையற கற்று இன்று ஜப்பான் முழுவதும் நம் பறை இசையினை பரப்பி வருகின்றனர்.  ஆம், கடந்த ஆண்டு திண்டுக்கல் சக்தி குழுவினரை ஜப்பானுக்கு பத்து நாட்களுக்கு வர வைத்து அவர்க‌ளிடம் முறையாக பறை இசை நடனத்தினை ஜப்பானியர் கற்றுக் கொண்டனர். உலகின் கீழைத் திசையான ஜப்பானில் ஒரு நாள் பறை இசை  ஒலிக்குமென எந்த தமிழனும்  எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

நம்மில் பெரும்பாலானோருக்கு பறை இசை ஒரு கொட்டு கருவி போல எவரும் வாசிக்க இயலும் என்ற மனோ நிலை உள்ளது. பார்க்க எளிதாக தெரியும் பறை இசையினை அதன் இலக்கணங்களோடு இசைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல‌. உணர்ச்சி பெருக்கிற்கேற்றார் அடி வகைகள் மாறும். பறை இசையின் தனித்த அடி வகைகளாக தற்போது கிடைப்பவை, சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமாஅடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என்பவனவாகும். ஆட்ட இலக்கணம் பிடிபடுவதென்பது நீண்ட பயிற்சிக்கு பின்பே சாத்தியமாகும். 

நம மண்ணில் இருக்கும் இசைக் கருவிகளிலேயே வாசித்துக் கொண்டே நடனமாடும் ஒரே தனித்த சிறப்பு பறை இசைக்கு மட்டும்தான் உண்டு. பறை அடித்துக் கொண்டே ஆடும் அடவுகள் மூளைக்கும் உடலியசைவுக்கும் ஒரே நேரத்தில் ஒத்திசைவாக இருக்க வேண்டும். 

குறிப்பாக‌ நேர்நின்று,எதிர்நின்று, வளைந்து நின்றுஆடுதல் என இரு அணிகளாக பிரிந்து பறை இசைத்து கொண்டே ஆடும் போது பறையின் இலக்கணங்கள் பார்வையானளை உள்ளே இழுத்து கொண்டு அவனும் அந்த குழுவின் அங்கதமாகி, எழுந்து அதிர்ந்து ஆட வைக்கும் வசீகரிப்பு தன்மை உடையது.


சமீபத்தில் முழுமதி அறக் கட்டளையின் பொங்கல் விழாவில் ஜப்பானியர்களின் பறை இசையினை அரங்கேற்றும் வண்ணம் செய்திருந்தோம். நம்மவர்கள், ஜப்பானியர்களுக்கு கற்று தந்தது போய், அவர்கள் நம் தமிழ் நண்பர்களுக்கு பறை இசைக்க கற்று கொடுத்ததுதான் காலத்தின் வியப்பு.

மிக நேர்த்தியான அடவுகளோடு மெய் சிலிர்க்கும் வண்ணம் நடனமாடிய படியே பறை இசைத்த ஜப்பானியர்களின் காணொளி உங்கள் பார்வைக்கு,

https://www.youtube.com/watch?v=E7o7BttShJM


நண்பர்களே நம் கலையினை ஜப்பானிய மண்ணில் அறங்கேற்றிய  குரகோவா (Kurokawa) அவர்களின் ஒருங்கிணைப்பில் இயங்கும் நிர்தாலயா குழுவிற்கு (Nrityalaya Group) இந்த காணொளியினை அதிகமாக பகிர்வதோடு நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் சொல்வோம்.










2 comments: