Sunday 28 February 2016

அருங்காட்சியகத்தில் ஓர் இரவு - Night at the Museum



(இன்று பிப்ரவரி 28 இந்தியாவின் தேசிய அறிவியல் தினம். இந்நன்னாளில் இந்தியாவின்  நோபல் பரிசாளர் பெருமைமிகு பேராசிரியர் சி வி இராமன் அவர்களை பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இந்த நாளில் இந்த கட்டுரை எழுதுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்) 

புராதன காலத்து நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், முதுமக்கள் தாழி, விலங்குகளின் எலும்பு படிமங்கள் என்று இருட்டு அறையில் சற்றே பழைய இரும்பு சட்டங்களில் எழுதப்பட்டு இருக்கும் வரலாற்று தகவல்கள் என நம் ஊர் அருங்காட்சியகங்க‌ள் தற்போது கவனிப்பாரற்று கிடக்கிறது. 

இந்த‌ தலைமுறையில் இருக்கும் இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் பகுதியில் இருக்கும் அருங்காட்சியகங்களுக்கு தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று பார்த்திருப்பார்களா என தெரியாது.

ஏன் நம்மவர்கள் அருங்காட்சியகங்களை புறக்கணிக்கிறார்கள்?

பழமையான பொருட்களை பொக்கிசமாக பாதுகாக்கும் அருங்காட்சியகங்களுக்கு அரசு ஒதுக்கும் குறைவான‌ நிதி ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், மக்கள் பெரும்பாலும் தொலைகாட்சி பெட்டிகளிலேயே மூழ்கி முத்தெடுப்பதால் பழைய வரலாறுகளை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேகமாக குறைந்து வருகிறது என்பதே கசப்பான உண்மை. 

ஆனால் ஒரு அருங்காட்சியகத்தையே மக்கள் பெரும் திரளாக கூடி அறிவியல் சோதனைகளை செய்து பார்க்கும் ஒரு தளமாக‌ மாற்றி சாதித்து காட்டி இருக்கிறார்கள் வடக்கு அயர்லாந்து மக்கள்.

வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்டு (Belfast) நகரில் கடந்த வாரம் 18 ஆம் தேதி முதல் 28 ந் திகதி வரை "வடக்கு அயர்லாந்து அறிவியல் திருவிழா" (NI Science Festivel http://www.nisciencefestival.com/)என்ற பெயரில் வருடம் தோறும் நடத்தி வருகிறார்கள். இதன் நோக்கம் அடிப்படை அறிவியல் மற்றும் நுட்பங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. இவ்விழாவானது பெல்பாஸ்டு நகரின் பல பகுதிகளில் வல்லுநர்களை கொண்டு நிகழ்த்தப்படுகிறது.

இந்த அறிவியல் விழாவிற்கான இடங்களை பெல்பாஸ்டு நகரின் சுற்றுலாத் துறையினருடன் இணைந்து முக்கியமான சுற்றுலா இடங்களின் நடத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் பொது மக்கள் இந்த இடங்களுக்கு வந்து பார்க்கும் வாய்ப்போடு அறிவியலை பற்றியும் தெரிந்து கொள்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக நம்மை சுற்றியுள்ள வேதியியல் தனிமங்களை (Elements) பற்றிய அடிப்படை அறிவியல் புரிதலை ஏற்படுத்த குயின்சு பல்கலைக்  கழகத்தின் (Queens University Belfast) வேதியியல் மற்றும் இராசாயன பொறியியல் பள்ளியின் (School of Chemistry and Chemical Engineering) ஆராய்ச்சி மாணவர்களும், வடக்குஅயர்லாந்தின் அல்ஸ்ட்டர் தேசிய  அருங்காட்சியகமும் (Ulster Museum) இணைந்து LaTe  என்ற பெயரில் இந்த விழாவினை கடந்த வெள்ளியன்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை நடத்தியது. லாந்தனம், டெல்லூரியம் என்ற தனிமங்களின் குறியீடே LaTe ஆகும்.



அல்ஸ்ட்டர் அருங்காட்சியகத்தின் வரவேற்பரை


அல்ஸ்ட்டர் அருங்காட்சியகத்தின்  அடுக்கு தளங்கள்


LaTe நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் பொதுமக்களுக்கு எளிய அறிவியல் சோதனைகள் மூலம் வேதியல் தனிமங்களின் பயன்பாடுகளை விளக்குவது அதன் மூலம் தனிமங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. ஏனெனில் நாம் இன்று பயன்படுத்தும் பற்பசை முதல் கடையில் வாங்கி உண்ணும் உணவு வரை பல வேதிப் பொருட்களின் கலப்பு உள்ளது. அதனை பற்றிய அடிப்படை அறிவு என்பது இன்றைய சூழலில் இன்றியமையாததாக உள்ளது. மேலும் நம் பொறுப்பற்ற தனத்தால் நம் சூழல் எவ்வாறு இந்த வேதி நச்சுகளால் சீரழிகிறது என்பதை பற்றியும் பெரிய விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு  சேவைக் கட்டணமாக  5 பவுண்டு மட்டும் வாங்குகின்றனர். அதற்கு பதிலாக‌ தனிமங்களின் பெயர் அடங்கிய ஒரு அடையாள வில்லையினை பங்கேற்பாளர்களுக்கு தருகிறார்கள். கழுத்தில் மாட்டில் கொள்ளும் ஒரு ப்ளாரசன்ஸ் (Light Emitting Florescence) குப்பியினை தொங்க விட்டு ஆச்சரியப்படுத்தினர்.

எமது ஆய்வகத்தில் இருந்து நண்பர்கள் லூக் பர்னசும், நேத்தன் வெல்சும் சோதனைகள் செய்து காட்ட இருப்பதால் அவசியம் வர வேண்டும் என்று இரண்டு வாரத்திற்கு முன்பாகவே சொல்லி இருந்தனர். ஆனால் என்னால் எட்டு மணிக்குதான் அங்கு செல்ல முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் பொது மக்களும் சோதனைகள் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் நிகழ்ச்சி நன்கு களை கட்டி இருந்ததை காண முடிந்தது. நிறைய முதியவர்கள், பள்ளி, பல்கலைக் கழக மாணவர்கள் நிறைய வந்திருந்ததை பார்கவே எனக்கு வியப்பாக இருந்தது.

அல்ஸ்டரின் அருங்காட்சியகத்தின் மூன்று தளங்களில் சோதனை சாலைகளை மிக நேர்த்தியாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். வரவேற்பரை தாண்டியதும் லேசர் கற்றைகளில் வண்ண ஜாலங்களோடு மேற்கத்திய இசையினை ஒலிக்க விட்டிருந்தனர். இந்த சூழல் எனக்கு வித்தியாசமாக பட்டாலும் ஒரு இறுக்கமான சூழலை உடைத்து ஓர் விடுதியில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தவே இதை செய்து இருக்கிறார்கள் என புரிந்தது.

முதல் தளத்தில் எளிமையான சோதனைகளை வைத்திருந்தனர். உதாரணத்திற்கு பேட்டரிகள் எப்படி இயங்குகிறது என ஆரஞ்சு பழத்தை கொண்டு எல் ஈ டி எரிய வைக்கும் வழக்கமான சோதனைகள் முதல் ஒரு லேசர் கற்றை எந்த அளவிற்கு வலிமை வாய்ந்தது என பலூனை வைத்து உடைத்து காட்டுவது வரை பல்வேறு விதமான சோதனைகளை நேரடியாக செய்து காட்டி இருந்தனர்.



கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு திட, திரவ நிலைக்கு மாறுகிறது என்பதனை திரவ நைட்ரஜன் கொண்டு எளிதில் மக்களுக்கு விளக்கினர். திரவ நைட்ரஜனில் -78.5 டிகிரி செல்சியசில் திண்ம நிலையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயு எவ்வாறு திரவ நிலைக்கு -56.7 டிகிரி செல்சியல் உருமாறி பின் அறை வெப்பநிலையில் வாயுவாக மாறுகிறது என்பதனை ஒரு சோதனை குழாயில் பொது மக்களிடம் கொடுத்து அதனை செய்து காட்டினர். கார்பன் டை ஆக்சைடு திண்மத்தினை சோதனை குழாயில் நீரில் அமிழ்த்து வைத்திருந்த ஒரு பெண்மணி அது வாயு நிலைக்கு மாறும் போது பட்டென்று சத்தத்தோடு வெடித்த போது  ஆச்சரியத்தில் ஓவென கத்தினார். அந்த ஆச்சரியம் விலகும் முன்னே கார்பன் டை ஆக்சைடின் நிலை படத்தினை (Phase Diagram) விளக்கும் போது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம்.



கார்பன் டை ஆக்சைடு வாயு சோதனை

கார்பன் டை ஆக்சைடு வாயு சோதனை

அதோடு மட்டுமில்லாமல் நவீன அறிவியல் நுட்பங்களான நீரை சூரிய ஒளி மூலம் பிரித்து ஹைட்ரஜன் வாயுவாக மாற்றி எவ்வாறு எரிம கலன் மூலம் ஒரு மகிழ்வுந்தை எப்படி இயக்குவது என சிறிய சோதனைகள் மூலம் செய்து காட்டி அசத்தினர்.  முதல் தளத்தில் மூலையில் இருந்த சோதனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தது. சிக்கலான கரிம மூலக்கூறுகளை (Complex Organic Molecules) எவ்வாறு வடிவமைத்து அவற்றினை பயன்படுத்துவது என விளக்கி சொன்ன போது பொதுமக்கள் வாயை பிளந்து  கொண்டு பார்த்தனர். அயனி திரவத்தின் (Ionic Liquid) மூலம் காந்த செயலை எவ்வாறு அடைவது மற்றும் அதன் மூலம் இரண்டு வேறுபட்ட திரவ அடுக்குகளில் இருந்து மாசுகளை எவ்வாறு பிரிப்பது என ஒரு மாணவி அருமையாக செய்து காட்டினார்.



Hydrogen powered vehicle demonstration



Magnetic nanoparticle from Ionic liquid 

orange battery 

water splitting fuel cell

Electoplating using coins

water splitting fuel cell


இரண்டாவது தளத்தில் வைக்கப்பட்டு இருந்த சோதனை சாலையில் எமது ஆய்வகம் சார்பாக லூக்கும், நேத்தனும் போட்டோ கேட்டலிஸ்ட்கள் மூலம் எளிமையாக விளக்கி காட்டினர்.   இந்த சோதனைகளுக்கு எமது பேராசிரியர் ஆன்ட்ரூ அவர்கள் வடிவமைத்த திறனுறு போட்டோ கேட்டலிஸ்ட் மை அச்சுகள் மூலம் புற ஊதா கதிர்கள் எவ்வாறு அவற்றை நிறமிழக்க செய்கிறது என்பதை அழகாக செய்து காட்டினர்.  குறிப்பாக‌, மெத்திலின் ஊதா சாயம் பூசப்பட்ட டைட்டானியம் டை ஆக்சைடு திரவம் புற ஊதா கதிர் வெளிச்சத்தில் வைத்த இரண்டு நிமிடத்தில் அவை நிறம் இழந்து கண்ணாடி போன்ற திரவமாக மாறுகிறது, பிறகு அவ்வெளிச்சத்தில் இருந்து நீக்கி அக்குடுவையினை குலுக்கும் போது அது மீண்டும் ஊதா நிறம் பெறுகிறது. இந்த வண்ண மாற்றம் எப்படி எலக்ட்ரான் துளைகள் (Photoelectron, photoholes) மூலம் நிகழ்கிறது என குறை கடத்தி அறிவியலை விளக்கி சொன்ன போது பொது மக்கள் மிகவும் அவர்களை பாராட்டினர்.

சரி இதன் பயன் என்ன என ஒரு பெரியவர் வினவியபோது  போட்டோகேட்டலிஸ்ட் நுட்பத்தின் மூலம் செறிவாக இயங்கும் திறனறு மை எவ்வாறு குடி நீர் சுத்திகரிப்பு பயன்பாட்டில் மிகக் குறைந்த விலையில் செயல்படுத்த முடியும் என லூக் பொறுமையாக விளக்கியது பொது மக்கள் அனைவரையும் ஈர்த்தது. ஆப்ரிக்காவில் பல லட்சம் மனிதர்கள் சுகாதாரமான குடிநீர் இல்லாமல் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் இந்த போட்டோகேட்டலிஸ்ட் மை ஒரு நிவாரணியாக இருக்கும் என்று சொன்ன போது அந்த பெரியவர் இது போன்ற அறிவியல் தன் காலத்தில் இல்லாமல் போனது பற்றி குறைப் பட்டு கொண்டார்.
Photocatalytic dye degradation experiment demonstration by Luke

Photocatalytic dye degradation experiment demonstration by Luke

Luke and Nathen


இந்த தளங்களில் நடக்கும் போது கோமாளி வேடம் அணிந்த இருவர் பார்வையளார்களை செல்லமாக அழைத்து அவர்கள் கையில் பச்சையினை குத்தி உங்களை கைது செய்வேன் என மிரட்டி கொண்டு இருந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.



இந்த அறிவியல் திருவிழாவின் வெற்றியினை இரண்டு சம்பவங்கள் மூலம் நானே உணர்ந்து கொண்டேன்.

முதல் சம்பவம், அருங்காட்சியகத்தின் மூன்றாவது தளத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டு இருக்கும் தனிமங்கள் பற்றிய காட்சி தொகுப்பு அறையில் வழகத்துக்கு மாறாக மக்கள் கூடி இருந்தனர். அது வரை மூன்று தளங்களில் அவர்கள் பார்த்த தனிமங்களின் பெயர் இந்த பட்டியலில் எங்கே உள்ளது, நிஜத்தில் பார்க்க அந்த தனிமம் எப்படி இருக்கும் என ஆர்வமாக தேடி அதனை பற்றி சுவாரசியமாக மக்கள் உரையாடியதை பார்த்த போது வியப்பின் உச்சிக்கே போனேன். இரண்டாவது அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த தனிமங்களை ஜோடி சேர்க்கும் அட்டை விளையாட்டு. உதாரணத்திற்கு ஹைட்ரஜன் அட்டை தனியாகவும் ஆக்சிஜன் பெயர் பொறித்த அட்டை தனியாகவும் இருக்கும், அதில் உள்ள தனித்த வடிவத்தினை கொண்டு இரு அட்டைகளை இணைத்தால் நீர் என்று பொருள் தருவதோடு அதன் பண்புகளையும் அந்த அட்டையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தனிம விதிகளுக்கு முரணாக தனிமங்களை இணைக்க இயலா வண்ணம் அட்டை வடிவமைக்கப்ப்ட்டு இருந்ததால் மக்கள் தாங்களாகவே அவ்வட்டைகளை தங்களுக்கு தெரிந்த வகையில் சேர்த்து பார்த்து மகிழ்ந்தனர். நேரடி அறிவியல் சோதனை என்பது நூறு ஆசிரியர்களுக்கு சமம் என்பதனை அப்போதுதான் உணர்ந்தேன்.






ஒரு நகரில் பகலிலேயே மக்கள் போக யோசிக்கும் அருங்காட்சியகம் ஒன்றில் இரவு பத்து மணிக்கும் மக்கள் நெரிசலை பார்க்க முடிந்ததே இந்த அறிவியல் திருவிழாவின் மகத்துவம் என்பேன்.

அறிவியல் கல்வியாளர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது மடமை. அது பொதுமக்களுக்கும் புரியும் படி செய்தலே கல்வியாளர்களின் கடமை. ஆனால் வெறும் புத்தகங்கள் மூலம் இதனை சாதித்து காட்டி விட முடியாது.

நம் ஊரில் இது போன்று மக்கள் கூடும் இடங்கள் அல்லது அருங்காட்சியகங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு அறிவியல் சோதனைகளை பொது மக்களுக்கு செய்து காட்டுவதன் மூலம் மக்களை இது போன்ற இடங்களுக்கு வர வழைப்பதோடு அவர்களும் அறிவியல் நுட்பங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதனை எதிர் வரும் அறிவியல் தினத்திலாவது நிகழ்த்த வேண்டும்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நம் ஊரில் இல்லாததால்தான் மந்திரம், தந்திரம் என்று பல போலிகள் எல்லா இடத்திலும் பொது மக்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே மக்களிடையே அறிவியல் நுட்ப விழிப்புணர்ச்சி வருவதன் மூலம் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை இன்னும் ஊக்குவிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியினை முடித்து விட்டு வெளியே வந்த போது அருங்காட்சியகத்தின் வாயிலில் ஒரு கொல்லர் இரும்பு துண்டுகளை கரி அடுப்பின் நெருப்பில் காய்ச்சி சம்மட்டியில் அடித்து மக்கள் விரும்பி கேட்கும் வாள், கேடயம், மற்றும் போர் வீரனின் முத்திரைகளை செய்து கொடுத்து கொண்டு இருந்தார். அதை பார்த்த மாத்திரத்தில் என் மனதில் தோன்றியது இதுதான், நம் சமூகத்தில் நம் மாணவர்கள் நெருப்பு துண்டுகளாக  இருக்கிறார்கள் அந்த சூடு அணைவதற்குள் அவர்களை கொண்டு இது போன்று செயலாற்ற செய்திட வேண்டும்.

அறிவியல் நெருப்பு அணைவதற்குள் நாம் செய்வோமா.




No comments:

Post a Comment