Friday, 5 February 2016

மொழி என்னும் பெருவரம் ‍- 2தாயாக பாவிப்பவர்கள் மொழி "தமிழ்"
கடவுளாக பாவிப்பவர்கள் மொழி "சம‌ற்கிருதம்"

இங்கே நடைமுறையில் உள்ள நம்பிக்கை இதுதான் .

முன்னது நடைமுறையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பின்னது ஆலயங்களிலும், வழிபாட்டு சடங்குகளிலும் மட்டும் இருந்து கொண்டு இருக்கிறது.

இதில் எது சிறந்த மொழி என சண்டை போட்டு என்னை இழுத்தால் யார் பக்கமும் இல்லாமல் எனக்கு உவப்பான‌ என் தாய் மொழியாகிய‌ தமிழை வளர்க்கும் வேலைக்கு நகர்ந்து சென்று விடுவேன். மேலே சொன்ன , இரண்டு கருத்தியலில்களிலும் பிழை உள்ளது.

அதீத உணர்ச்சியில் நின்று கிளர்ந்தெழும் எந்த மொழியும் ஒரு நாளில் வீழும். எதார்த்த நிலையில் யோசித்து பார்த்தால் அவரவர் தாய் மொழியினை நேசிப்பவரும், அதனை பகட்டின் பொருட்டு விலக்குபவரும் உண்டு.

இப்படி பேசித் திரிவதால் என்ன பயன்.

மொழியினை சண்டை போடுவதாலும், ஆகடியம் செய்வதாலும் அது மேற் கொண்டு வளருமா. நீங்கள் உங்கள் மொழியினை நட்போடு நேசித்து எடுத்தாள்வதோடு, புதிய சொற்களை நம் மொழிக்கு கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அது நிலைத்து நிற்கும்.

பல மொழிகளை நன்கு கற்ற பாரதி "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றான். வெறுமனே மொழிகளை தெரிந்து கொள்ளாமல் அதனை நுட்பமாக கற்று அதன் சுவையில் திளைத்து பின்னர்தான் தமிழ் மொழி சிறந்தது என்று சொன்னான். ஆக, மொழி ஒப்பீட்டோடுகளுடனே தன் இருத்தியலை தக்க வைத்து மட்டும் கொள்ளாமல் மக்களின் அன்றாட வாழ்வியலில் நிற்பன மட்டுமே நிலைத்து நிற்கும்.

ஒரு மலையாளியோடு நான் பேசுகையில் அவரின் மொழியானது தமிழிலும், சமற்கிருதத்தின் கலப்பு என தாழ்ச்சியுறாமல், நான் இன்னும் நல்ல தமிழ் பேசுகிறேன் என இறுமாப்புடன் இருப்பதை நான் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். ஆனால் தமிழனுக்கோ தன் மொழி பேசுவதால் மட்டுமே தான் உயரவில்லை என்ற தாழ்மையான குணம் குடி கொண்டுள்ளது எப்படி என ஆச்சரியமாக இருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடும் போது இப்போது நிறைய நண்பர்கள் முகநூலிலும், என்னாப்புவிலும் தமிழில் தட்டச்சு அதிகமாக செய்கிறார்கள். நிறைய எழுத்து பிழைகள், ஒற்று பிழைகள், சந்தி பிழைகள், வாக்கிய கட்டமைப்பு என பெரும் சங்கடங்கள் நேர்ந்தாலும் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். ஒரு அதியசம் நிகழ்ந்துள்ளது, பள்ளி, கல்லூரி காலத்தில் அவர்கள் தொலைத்த அல்லது எழுதிப்பார்க்க முடியாத‌ தமிழை இப்போது எழுதுவதற்கான ஒரு வாய்ப்பாக சமூக வலைதளங்கள் இருப்பதை நாம் காண்கிறோம்.

எப்படி தமிழ் மொழியில் தட்டச்சு செய்வது என எனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். அவர்களுக்கு கனிவுடன் பதில் அனுப்புகிறேன்.

பிழைகளோடு தட்டச்சு செய்பவருக்கு, அன்போடு தனி செய்தியில் அவரது பிழைகளை திருத்தினால் விரைவில் நற்றமிழ் எங்கும் நறுமணம் வீசும்.

மொழி வளர்ப்பதில் நம் பங்கு எத்தையகதாக இருக்க வேண்டும் என்பதில் என் நண்பருடனான அனுபவத்தினை இங்கு பகிர்கிறேன்.

என் பேராசிரிய நண்பர் சமற்கிருதத்தில் கரை கண்டவர், வேத விற்பன்னர், நான் தமிழை நேசிப்பவனாகவும், அவரோ வேதங்களை முற்றோதும் சமற்கிருத பண்டிதராகவும் இருந்தாலும் ஒரு போதும் இருவரும் ஒருவரை ஒருவர் தாழ்த்தி கொண்டது கிடையாது.

சிறு பிள்ளை பிராயத்திலேயே பள்ளியில் இந்தியும் பின்னாளில் சமற்கிருதமும் பயில ஆரம்பித்ததால் தமிழ் பேசுவதோடு சரி, எழுத்துகளை வாசிக்க அவரால் முடியாது.

ஆனால், ஒவ்வொரு முறை நான் அவரை தொலை பேசியில் அழைத்து பேசும் போதும், நேரில் பேசும் போதும் மணிக் கணக்கில் நான் பேசுவதை அமைதியாக கேட்பார். கேட்டு விட்டு, தமிழில் இப்படி உயர்வான விசயங்கள் இருப்பதை நீங்கள் சொல்லியது போல் யாரும் எனக்கு சொல்லவில்லை என்று வியந்து ஓதுவார்.. நற்றமிழை நாளெல்லாம் கேட்பதில் தனக்கும் ஆனந்தம் என்பார்.

அவர் நம்புகிற, மேன்மையான மொழி என எண்ணுகிற சமற்கிருதத்தினை சப்பான் நாடு முழுவதும் பயணம் செய்து பயிற்று விக்கிறார். சமற்கிருத மொழியினை எப்படி உச்சரிக்க வேண்டும் என அவர் வைத்திருந்த விளக்க படங்களை எனக்கு காண்பித்தார். எளிமையான அந்த வரைபடங்கள் ஒவ்வொரு வார்த்தையினையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என அருமையாக வண்ணமாக தீட்டப்பட்டு இருந்தது.

இது போல தமிழில் இருந்தால் கொடுங்கள் இங்குள்ளவர்களுக்கு நாம் பயிற்றுவிக்கலாம் என ஆலோசனையும் சொன்னார்.

நண்பர்களே, கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் சரியென படுகிற ஒரு செயலை செய்ய பெரும் பிரயத்தனம் செய்யும் என் நண்பரிடம் நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான், அது நம் தாய் மொழியாகிய தமிழை பிற நாட்டவருக்கும் அறியும் வண்ணம் செய்வது.

மேடைகளிலே வாய் கிழிய கத்துவதாலும், பிற மொழியினரை வசை பாடுவதாலும் நம் மொழி ஒரு போதும் வாழாது. நல்ல முயற்சிகளுடன் நம் மொழியினை பிறருக்கு கற்பிக்க வேண்டும்,

அதே நேரத்தில் பிற மொழியினரையும் அவர் பண்பாடுகளையும் மதித்து நடந்திட வேண்டும். அந்த நடத்தையின் மூலம் அவர்கள் நம் மொழியினை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்படுத்திட வேண்டும்.

வாழ்க நற்றமிழ்!


தேமதுரத் தமிழோசை உலகமேலம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
‍‍‍-பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment