Sunday 31 January 2016

குப்பையல்ல மாணிக்கம் ‍-  பிரித்தானியா இதய அறக்கட்டளை (British Heart Foundation)



வீடுகளில் பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள மரச்சாமான், மின் மற்றும் மின்னனு பொருட்களை போன்றவற்றினை வளர்ந்த நாடுகளில் குப்பைகளில் தூக்கி போட்டு விடுவார்கள். இந்த பொருட்களை மறு சுழற்சி செய்து மக்களிடம் விற்பதன் மூலம் கார்பன் குப்பைகளை பெருமளவில் இந்நாடுகள் தடுக்கிறது.

வீட்டில் வசிப்பவர்கள் இது போன்ற மரச்சாமான் மற்றும் மின், மின்னனு பொருட்களை தெருவில் குப்பையில் போட்டு விட முடியாது. அதெற்கன நகர் மன்றங்களில் மறு சுழற்சிக்கு கட்டணத் தொகையினை செலுத்தி அடையாள சீட்டை ஒட்டிதான் போட முடியும். ஆக வேண்டாம் என்று தூர எறிந்தாலும் பிரச்சினைதான்.

சற்றே வித்தியாசமாக, பிரித்தானியாவில் மக்கள் பயன்படுத்திய பொருட்களை தூக்கி எறியாமல் இங்குள்ள பிரித்தானியாவின் இதய அறக்கட்டளைக்கு தொலைபேசியில் அழைத்து சொல்லி விட்டால் அவர்களே வீடு தேடி வந்து அப்பொருட்களை எடுத்து கொள்கிறார்கள்.

அவர்கள் அந்த பொருட்களை வைத்து என்ன செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

எடுத்து வந்த பொருட்களை சீரமைத்து நல்ல நிலையில் புதிய வடிவில் மக்களுக்கு பயன்படும் விதம் மாற்றி தனித்த  நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இதில் வரும் பணத்தினை பிரித்தானியாவில் உள்ள இதய நோயாளிகளின் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு நிதியாக கொடுத்து விடுகிறார்கள்.

பிரித்தானியாவில் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதனை மனதில் வைத்து இவர்களுக்கு உதவும் வண்ணம் 1961 ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்களால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த‌  அறக்கட்டளையினை பெரும் வல்லுநர் குழு குழு நிர்வகிக்கிறது.

எல்லா நகரங்களிலும் இந்த அறக்கட்டளையினர் இரண்டு விதமான விற்பனை நிலையங்களை வைத்திருக்கின்றனர். ஒன்று தெருக்கடைகள் (street shops) என்பவற்றில் துணி மணிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை விற்கிறார்கள்.  மரச்சாமான், மின்சாதன பொருட்களை ( Furniture and Electrical) தனியாக மற்றொரு கடையில் விற்கிறார்கள்.

இன்று வீட்டிற்கு மரச்சாமான்கள் வாங்கலாம் என முடிவெடுத்த போது அண்ணன் பேரா. செந்தில் அரசு அவர்கள் இந்த கடையினை பரிந்துரைத்தார். இன்று சுவான்சி (swansea) நகரில் உள்ள இதய அறக்கட்டளையினரின் கடைக்கு அவரின் பரிந்துரையின் பேரில்  சென்று பார்த்தேன்.

ஆச்சரியம், இங்கே உள்ள பொருட்கள் மிக நேர்த்தியாகவும், நல்ல முறையிலும் உள்ளது.  மூன்று மடங்கு குறைந்த விலையில் மரச்சாமான்கள் கிடைக்கிறது.

நம் ஊரிலும் நாம் பயன்படுத்திய நல்ல பொருட்களை தூக்கி எறியாமல் இது போன்று மறுசுழற்சி கடைகள் மூலம் சிறிய தொகைக்கு விற்பனை செய்து அதனை இது போன்று மருத்துவ வசதி இல்லாத மக்களுக்கு பயன்படுத்தலாம்.

இனி வரும் காலங்களில் போகி பண்டிகை என பயன்படுத்திய  பொருட்களை எரிக்காமல், அவற்றினை மறு சுழற்சி மையங்கள் (recycling center) மூலம் மீள் உபயோகத்திற்கு கொண்டு வந்தால் நம் ஊரிலும் கார்பன் நச்சு வாயுவினை கட்டுபடுத்தி சுகாதாரமான சுற்று சூழலை கொண்டு வரலாம். அதே நேரத்தில் மற்றவர்களுக்கு உதவிய மாதிரியும் ஆயிற்று.




சுவான்சி நகரில் உள்ள பிரித்தானிய இதய அறக்கட்டளையினரின் மரச்சாமான் விற்பனை நிலையம்

சுவான்சி நகரில் உள்ள பிரித்தானிய இதய அறக்கட்டளையினரின் மரச்சாமான் விற்பனை நிலையம்

சுவான்சி நகரில் உள்ள பிரித்தானிய இதய அறக்கட்டளையினரின் மரச்சாமான் விற்பனை நிலையம்



No comments:

Post a Comment