நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!(International Day of the Girl Child)
அடக் கடவுளே! உனக்கு பெண் பிள்ளையா என பரிதாபமாக பார்த்த இந்திய சமூகத்தை
நம் சம கால பெண் பிள்ளைகள் ஒலிம்பிக் மெடலால் அடித்திருக்கிறார்கள்.
ஆண் வரம் வேண்டும் என கோவிலை சுற்றி வருபவர்களையும், அடுத்தாவது ஆண்
பிறக்க வேண்டும் என்று "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என மகப் பேறு முயற்சிப்பவர்களையும்
ஒவ்வொரு முறை மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவிகள் மதிப்பெண்களால் அடித்து
நொறுக்கியுள்ளார்கள்.
பெண் குழந்தைகளின் கல்விக்காக இனி நீ பேசவே கூடாது என மலாலா என்னும்
பாகிஸ்தானிய சிறுமியை தலிபான் தீவிரவாதிகளின் குண்டுகள் துளைத்த போது அவள் ஆன்மா அடங்கிப்
போகவில்லை. இதோ இன்று உலகில் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுக்கும்
நம்பிக்கை பெண்ணாக ஐ.நா சபை உள்ளிட்ட உலக அமைப்புகளை வெற்றி கரமாக சுற்றி வருகிறாள்.
இன்னும் ஆயிரம் ஆயிரம் சவலான துறைகள் பெண் குழந்தைகளுக்கு காத்திருக்கிறது. ஆராய்ச்சி,
விண்வெளித் துறையில் இன்னும் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும். இந்த துறைகளில்
உங்கள் பெண் பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பெருமிதம் கொள்ளுங்கள். உங்கள் சமூகத்தின்
நம்பிக்கைகளை, கட்டுப்பாடுகளை அவள் மேல் திணிக்காதீர்கள். ஏனெனில் பெண்ணுக்கான சுதந்திரம்
என்று தனியே ஒன்று இல்லை. இயற்கையின் படைப்பில் அது அவளது உரிமை. அதனை ஆண்கள் தரத்
தேவையில்லை. திருடாமால் இருந்தாலே போதும்.
பெண் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துள்ள உணவு, உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை,
தரமறுக்கும் பாலின பாகுபாடு நிறைந்த சமூகத்தை உடைத்தெறியுங்கள்.
No comments:
Post a Comment