Friday, 2 December 2016


ரொக்கமற்ற (Cashless) வியாபாரம் - ‍கனவில் விழும் மாங்கனிகள்


"ரூபாய் நோட்டு இப்போதான் பிரிண்ட் ஆகுது.. லேட்டாகத்தான் வரும்" அருண் ஜேட்லி ஒப்புதல்
செய்தி; ஒன் இந்தியா தமிழ்

"நல்ல கொலை பசியில் உள்ளீர்கள். வீட்டில் உள்ள‌ சாப்பாட்டை எடுத்து பசியாறும் வேளையில் தட்டை பிடுங்கி கீழே போட்டு விட்டு, அடுத்த நாள் காலை அடுப்பில் ஊற்றி வைத்த இட்லி வந்து விடும் அது வரை பொறு" என்று சொன்னது போல் உள்ளது நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இன்றைய‌ அறிவிப்பு.

தற்போது புழக்கத்தில் இருந்த‌ 87 சதவிகித பணத்தாள்களை செல்லாது என அறிவித்து விட்டு இன்னும் அதற்கான மாற்றுப் பணத்தாள் அச்சடித்து முடிக்க கால தாமதம் ஆகும் எனச் சொல்லும் ஒரே நாடு நம் நாடுதான்.

இந்நிலையினை சமாளிக்க ரொக்கமற்ற வியாபாரத்திற்கு மாறுங்கள் என ஒரு கோசத்தையும் நடுவன் அரசு முன் வைக்கிறது. செல்லாக் காசு விவகாரத்திற்கும், ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கும் ஏன் இவர்கள் இவ்வளவு முடிச்சு போட்டார்கள் என இப்பொழுதாவது விளங்கி கொள்ளுங்கள்.

ரொக்கமற்ற வியாபாரம் மூலம் வெகுசன மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்க இயலுமா?

பலவீனமாக உள்ள‌ இணைய வசதி உட்கட்டமைப்பு, செயற்கைக் கோள் அடிப்படையிலான GPRS மின்னனு இயந்திர வசதி, வங்கிகளில் தற்போது வைத்திருக்கும் குறைந்த செயல் வேக சர்வர்கள், மோசமான வாடிக்கையாளர் சேவை மையங்கள் இவற்றை சீரமைக்காமல் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை என்பது நம் முன் இருக்கும் பெரிய சவால்.

இப்போதைக்கு வேண்டுமானால் பெரு நகரங்களில் மட்டுமே இவ்வசதி சாத்தியம் ஆகும். அதுவும், அந்நகரில் இருக்கும் மத்திய‌ அடித்தட்டு மக்களின் அன்றாட வியாபாரங்களை கொஞ்சமேனும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு நகரங்கள், கிராமங்களில் இதன் நிலை இன்னும் மோசம்.

முக்கியமாக, பணப் பரிமாற்ற தேய்ப்பு அட்டைகள் (Swiping cards) மற்றும் வியாபார முனையப் புள்ளிகள் (Point of Sales Terminal) மூலம் ரொக்கமற்ற வியாபாரமாக்கலுக்கு தரப்படும் சேவை வரியாக விற்கப்படும் பொருளுக்கு 2% சேவை வரியாக வங்கிகள் கேட்கிறது.

2% சதவிகித லாபம் மட்டுமே பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இது எப்படி கட்டுப்படியாகும். ஆகவே இந்த சேவை வரியினை மக்களே செலுத்த வேண்டும் என்று பல‌ வர்த்தக நிறுவனங்கள் பொது மக்களை நிர்பந்திக்கின்றனர். ஏனெனில் வியாபாரிகளை பொறுத்த வரை இது கூடுதல் சுமை. பொருளுக்கான எல்லா வரியையும் செலுத்துவதோடு, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கும் சேவை வரியினையும் கூடுதலாக‌ செலுத்துவது என்ற செயல்பாடு பொருளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு"சுண்டக்கா காப் பணம், சுமக் கூலி முக்காப் பணம்" என்பது போல் உள்ளது.

சரி எதிர்காலத்தில் இப்படி ஒரு வசதி வந்தால் நல்லது தானே?

நல்லதுதான், நாம் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்தான். ஆனால் குறைந்த பட்சம் இந்தியா இந்த திசையில் சென்று வெற்றி பெற ஐந்தில் இருந்து ஏழு வருடங்களாவது பிடிக்கும். அப்போதும் 50 சதவிகிதம் மாறி இருக்குமா என்பது கூட‌ எதார்த்தத்தில் சாத்தியமில்லாதது. அதற்கு ஏன் மக்களின் காசை பிடுங்கி வைத்துக் கொண்டு இத்தனை அக்கப்போர்.

உலகிலேயே இப்படி பட்ட ஒரு திட்டத்தை கொண்டு வந்து மறுமலர்ச்சி அடைந்த நாடு எங்காவது உள்ளதா என தெரியவில்லை. அதுவும் மக்கள் தொகை அதிகம் உள்ள இரண்டாவது பெரிய நாடு நம் இந்தியா. இத்தனை கோடி மக்களுக்கும் ரேசன் முறையில் பணத்தை தந்து எத்தனை காலம் சமாளிக்கப் போகிறீர்கள்.

அடுத்த படியாக, “உடனடி பதிலளிப்பு குறியீடு” (Quick Response Code –QR Code) மூலம் எளிதாக பணப்பரிமாற்றத்தினை செய்ய்யுங்கள் என்ற கோசமும் எழுந்துள்ளது. நல்ல அருமையான யோசனை, இதனை செயல்படுத்த குறைந்த பட்சம் திறன் அலை பேசிகள் வேண்டும். இதில் உள்ள செயலிகள் (Apps) மூலம் மட்டுமே இந்த குறியீடுகளை வருட இயலும் (Scan).

அப்படியானால் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் திறன் அலை பேசிகளும், அதனை இயக்க நல்ல வைபை (Wifi) இணைய வசதியும் தேவை. இதில் சிக்கல் ஏற்பட்டால் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவைக்குத்தான் நீங்கள் அணுக வேண்டும். அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை அனுபவித்தவர்கள் வாயால்தான் கேட்க வேண்டும்.

உடனடி பதிலளிப்பு குறியீடு வசதி முதலில் தகவல் தொழில் நுட்ப வசதிகளுக்காக வளந்த நாடுகளில் கொண்டு வந்தார்கள். அதாவது கூடுதல் சிறப்பு சேவை. உதாரணத்திற்கு, பேருந்து நிறுத்தத்தில் எப்போது பேருந்து வரும் என அறிந்து கொள்ள அறிவிப்பு பலகை வேண்டும். பொதுவாக இது போன்ற தகவல்களை பேருந்து நிறுத்தத்தில் QR குறியீட்டினை தாளில் ஒட்டி விடுவார்கள். அந்த குறிப்பிட்ட நிலையத்திற்கு பேருந்து எப்போது வ‌ருகிறது என்பதை நம் அலைபேசியில் உள்ள வருடல் செயலி மூலம் படம் பிடிக்கும் பொழுது, அதனோடு இணைக்கப்பட்ட செயலிக்கு எடுத்துச் சென்று எளிதில் தகவலை தந்து விடும். ஆனால் அதே நேரத்தில் அந்த பேருந்து எந்த நேரத்திற்கெல்லாம் அந்நிலையத்திற்கு வருகிறது என்ற தகவலை வழமையாக ஒரு பலகையில் அச்சிட்டு வைத்திருப்பார்கள்.

யோசித்து பாருங்கள், இவ்வளவு நுட்பம் வந்த பிறகும் ஏன் இப்படி அவர்கள் அச்சிட வேண்டும். கீழ்கண்ட எதார்த்த பிரச்சினைகள் தான் காரணம்.

இந்த வசதியினை பெற எல்லோரிடமும் நான் சொன்னது போல் திறன் அலைபேசி வேண்டும். திடீரென பாட்டரி தீர்ந்து விட்டாலும் இயக்க முடியாது. ஆக இது போன்ற அடிப்படை சிக்கலை தீர்க்க எப்போதும் போல் தகவலை எழுதியும் வைத்திருப்பார்கள். நம்மிடம் தான் QR குறியீடு வசதி உள்ளதே என வளர்ந்த நாடுகள் அறிவிப்பு பலகையினை தூக்க வில்லை. இந்த வசதியினை கண்டறிந்த ஜப்பானில் கூட இன்னும் ரொக்கப் பரிமாற்றம் இன்னும் நடை முறையில் உள்ளது. பல கடைகளில் ரொக்கம் மட்டுமே தந்து வாடிக்கையாளார் தனது சேவையினை பெற முடியும்.

நம் ஊரில் அரசு சொல்வது போல் சிறு வணிகர்களுக்கு இந்த வசதி வந்தால் நல்லதே. ஆனால் அதற்கு ஏன் ரொக்க வியாபாரத்தை அழிக்க வேண்டும். மேலே சொன்னபடி அடிப்படை சிக்கல் இருந்தால் பொருள் வாங்குபவர்கள், வியாபாரிகள் இருவருமே பாதிக்கப்படுவார்களே?

தேசத்தினை நவீன நுட்பத்தில் பாதையில் எடுத்துச் செல்ல பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. இந்த மாற்றங்கள் இயல்பாகவே ஒரு ஜனநாயக நாட்டில் நிகழும். இன்று விதைத்து விட்டு நாளை அறுவடை செய்யும் மாய வித்தைக‌ள் செய்ய நாம் ஒன்றும் சர்வாதிகார நாடு கிடையாது.

நுட்பவியலாளர்கள், பொது மக்கள் துணை கொண்டே இந்த மாற்றத்தினை சமூகத்தில் நிகழ்த்த இயலும். தற்போதைய செல்லாக்காசு விவகாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் முன் வைக்கும் ரொக்கமற்ற வியாபாரத்தில் உள்ள அடிப்படை சிக்கல், எதேச்சதிகாரம் ஆகியவற்றை இனியாவது அரசு உணர வேண்டும்.

வங்கிகள் ஒரு மாதமாக முடங்கி கிடக்கிறது. எந்த பணியும் இல்லை. பத்து ரூபாய் போட்டால் பத்து ஒரு ரூபாய் காசுகள் தரும் சில்லறை இயந்திரங்கள் போல வங்கிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

நடைமுறையில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அடையாள எண் வசதிகளை கொண்டு பணத்தாளுக்கு நிகரான சில்லறை தரும் எளிய எந்திரங்களை கூட இந்தியா நிறுவ இயலாமல் இருப்பது எவ்வளவு கொடுமை. ஒரு தனி வங்கி ஊழியர் ஆயிரக்கணக்கான கூட்டத்திற்கு 40 நாட்கள் தொடர்ந்து சில்லறை மட்டுமே வழங்கி அதன் வரவு செலவுகளை பார்க்க வேண்டும் என்பது எத்தையக உடல் ரீதியிலான உளைச்சலை தரும். நுட்பங்கள் மூலம் இயந்திரமயமாக்கலை ஆதரிக்கும் அரசு இதை அல்லவா முதலில் செய்திருக்க வேண்டும்.


மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கும், அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் இடையே ஒரு கூட்டம் உள்ளது. சிறு தொழில் முனைவோர். இவர்கள்தான் பெரும்பாலான உள்ளூர் வேலைகளை உருவாக்குபவர்கள். இவர்களின் நிலைமை இன்னும் மூன்று மாதம் இப்படியே தொடர்ந்தால் நிலைமை சிரமம் தான்.