Saturday, 31 December 2016

நாட்காட்டியின் கதை (A Story of Modern Calendar)


உலக நாட்காட்டி (calendar) முறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது மாயன், அராபிய, அஜ்டெக், காவ்ல், கிரேக்கர்கள், சீனர்கள், யூதர்கள், காப்ட்ஸ். பெரும்பாலான நாட்காட்டி முறை சூரியன், சந்திரன் இரண்டில் எதோ ஒரு நகர்வினை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்பட்டு வந்தன.

இவை தவிர நம் தமிழ் சமூகத்தில் பருவ காலங்களை முன் வைத்து பெயரிடப்பட்ட மாதங்களும், வருடங்களும் சூரியனின் நகர்வை முன் வைத்து இயங்கி வந்துள்ளன.

ஒவ்வொரு சமூகமும் தனக்கான நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு நாட்காட்டி முறையினை பின்பற்றி வந்தார்கள். குறிப்பாக மேற்கத்திய நம்பிக்கையில் கிறிஸ்துவின்  ஈஸ்டர் தினத்தை (Easter day) வரையறுக்கும் வகையில் பல்வேறு முறைகள் கையாளப்பட்டன. பெரும்பாலும் நாட்காட்டியினை கடவுளே தந்தார் என்ற நம்பிக்கை பலமாக அப்போது இருந்தது.அவை ஜீலியன் நாட்காட்டி (Julion Calendar) என அழைக்கப்பட்டது.  ஆனால் இதில் உள்ள குறைபாடுகளை அப்போது யூதர்களும், இசுலாமியர்களும் சுட்டிக் காட்டி வந்தனர். குறிப்பாக ஆங்கில தத்துவவியலாளர் ரோகர் பேகன் (Roger Becon :1220-1292) என்பார் அதில் குறிப்பிடத்தக்கவர். 

ஒரு வழியாக நாட்காட்டி வடிவமைப்பில் புரட்சிகரமான மாற்றத்திற்கான விதை 16 ஆம் ஆண்டின் துவக்கத்தில் போலந்து நாட்டு வானவியல் அறிஞர் நிக்கோலசு கோப்பர் நிக்கசு (Nicholas Copernicus -1473 1543)என்பாரால் இடப்பட்டது . அவரது  இறப்பிற்கு முன் (1543) ஒரு வருடத்தின் நீளத்தினை மிகத் துல்லியமாக வரையறுத்தார். அவரது சூரிய மையக் கோட்பாட்டிற்கு (helio centric theory) முன்பு வரை மக்கள் சூரியன் பூமியினை சுற்றி வருகிறது என்று பிழையாக கருதி வந்தனர்.

நிக்கோலசின் கண்டுபிடிப்பிற்கு பிறகு  நாட்காட்டியினை சிரமைக்கும் பணி துவங்கப்பட்டது. அதன் படி சூரிய ஆண்டு என்பது முழுமையான நாட்களாக‌ இருக்க வாய்ப்பில்லை என்ற உண்மை புலப்படத் துவங்கியது. ஆகவே இதற்கான எளிமையான தீர்வொன்றை இத்தாலிய மருத்துவர் லூகி லிலியோ (Luiigi Lillio-1510-1576) முன் வைத்தார். இவர்  அலாய்சியசு லிலியசு (Aloysius Lilius) என்று பரவலாக‌ அழைக்கப்பட்டார், மேலும் இவர் வானவியலாளர், தத்துவியலாளர் என்றும் சொல்லப்படுகிறது. 

Aloysius Lilius (Image credit:fhshh.com)
ஒவ்வொரு நானூறு வருடத்திற்கும் மூன்று நாட்களை நீக்கவும்,  அதன் மூலம் ஒவ்வொரு லீப் நாட்களை கூடுதலாகவும் (366 நாட்கள்) சேர்க்க வலியுறுத்தினார். அதாவது 400 ஆல் வகுபடும் ஆண்டுகள் மட்டும் 366 நாட்களுடன் இருக்கும் (1600, 2000, 2400) (bisextile year). அவ்வாறு வகுபடாத நூற்றாண்டுகள் (1700, 1800,1900) செக்குலர் ஆண்டு (Secular years) என்று அழைத்தார், அவை 365 நாட்களை கொண்டிருக்கும். பல திருத்தங்களுக்கு பிறகு ஒருவழியாக நிலவின் வயது ஜனவரி 1 ஆம் திகதி துவங்குகிறது என சீரமைத்தார். இவரது நாட்காட்டியினை திருத்தியமைக்கும் பணியில் குறிப்பிடத்தக்க உதவியினை செய்தவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த யூதர் கிறிஸ்டோபோரஸ் கிளாவிசு ( Chirstophorus Clavius-1537-1612) என்பார்.

Chirstophorus Clavius (Image credit:Linda Hall Library)

மேற்சொன்ன இரு அறிஞர்களின் உழைப்பை கவுரவிக்கும் வகையில் பின்னாளில் நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்களில் (crators) ஒன்றிற்கு இவர்களது பெயரை சூட்டினார்கள். 

இவர்களது பரிந்துரையினை ஏற்று, வழமையாக பின்பற்று வந்த ஜீலியன் காலண்டர்  முறையில் மாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 24, 1582 ஆம் ஆண்டு போப் அதிகாரபூர்வ ஒப்பம் இடப்பட்ட (papal bull - Inter Gravissimas) கடிதம் வெளியானது. இந்த பரிந்துரையில் சொல்லப்பட்டபடி அது வரை கடைபிடிக்கப்பட்ட நாட்காட்டியில் பத்து நாட்களை நீக்கி புதிய கிரிகோரியன் காலண்டர் முறையினை போப், 13 ஆம் கிரிகோரி (Gregory XIII) (1502- 85) 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தார். இங்கிருந்துதான் நாம் தற்போது கடைபிடிக்கும் காலண்டர் துவங்குகிறது. கிரிகோரியன் நாட்காட்டியினை எடுத்தாண்ட விதத்தினை நினைவுகூறும் வகையிலும், லிலியோ அவர்களை கவுரவிக்கும் வகையி லும்  “லிலியன் தேதி” (Lilion date) என கணிப்பொறி துறையில் அழைக்கிறார்கள். மேலும் இவரது நினைவினை போற்றும் வகையில் மார்ச் 21 ஆம் திகதியினை உலக நாட்காட்டி தினமாக கொண்டாட வேண்டும் என்று இத்தாலியில் உள்ள, சிசிலிய மாகாண அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். 

1576 ஆம் ஆண்டு நாட்காட்டியினை சீரமைக்கு பொருட்டு கவுன்சில் ஆம் டிரென்ட் உறுப்பினர்களுடன் 13 ஆம் போப் கிரிகோரி கலந்துரையாடிய நிகழ்வினை விளக்கும் ஓவியம்  (Image credit:Linda Hall Library)

மாற்றியமைக்கப்பட்ட நாட்காட்டியினை பற்றி வாடிகன் சபையின் அறிவிப்பு "லுனாரியோ" (Image credit: bbvaopenmind.com)



வாடிகன் திருச்சபையில் உள்ள 13 ஆம் போப் கிரிகோரியின் கல்லறை

13 ஆம் போப் கிரிகோரி (Gregory XIII)
ஆனால் மாற்றியமைக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியினை அந்நாட்களில் பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இது தங்கள் நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று பலரும் இதனை எதிர்த்தனர். குறிப்பாக பிராடஸ்டான்டுகள் இந்த புதிய முறையினை பலமாக எதிர்த்து பழைய முறையான ஜீலியன் நாட்காட்டி முறையினை தொடர்ந்து கடை பிடித்து வந்தனர்.  இந்த சிக்கலை கண்ட வானவியலாளர்  கெப்லர் சூரியனை விடவும் பிராட்டஸ்டான்டுகள் போப்பை எதிர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றார்.

சீரமைக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியினை கத்தோலிக்க நாடான‌ பிரான்சு உடனே ஏற்றுக் கொண்டது. சில வருடங்களுக்கு பிறகே மற்ற கத்தோலிக்க நாடுகளான ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி மற்றும் செருமனியின் ஒரு சில பகுதிகளும் இந்த நாட்காட்டி முறையினை ஏற்றுக் கொண்டது. இந்த சிக்கல் 18 ஆம் ஆண்டின் மத்தியில் வரை  நீடித்தது. ஆங்கில, அமெரிக்க, ஸ்வீடன் காலணி நாடுகள் பழைய முறை (Old Style), புதிய முறை (New Style) என வரையறை செய்து அதனை பயன்படுத்தி வந்தனர். ஒருவழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடைசியாக கிரிகோரிய காலண்டர் முறையினை ஏற்றுக் கொண்ட நாடு இங்கிலாந்து.

இன்றைக்கும் ரசியா, கிரீசு நாட்டின் சில பகுதிகளில் உள்ள‌ அதிதீவிர நம்பிக்கை கொண்ட (Orthodex) கிறித்துவ மதப்பற்றாளர்கள் ஜீலியன் நாட்காட்டி முறைப்படியே ஈஸ்டர் நாளை கொண்டாடுகின்றனர் (கிரிகோரியன் நாட்காட்டியினை ஒப்பிடும் போது 13 நாட்களுக்கு முன்பாகவே). ஆனால் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு பிறகு  உலகமே இன்று கிரிகோரியன் நாட்காட்டி முறைக்கு மாறி விட்டது. அது எவ்வாறு இந்த புதிய முறையினை ஏற்றுக் கொண்டது என்பது ஒரு நீள் வரலாறு.

கிரிகோரியன் காலண்டரனின் கணக்கீடானது அப்போதைய காலகட்டத்தில் இருந்த வானவியல் கருவிகளினை கொண்டே கணக்கிடப்பட்டது. இவற்றின் துல்லிய தன்மை அறுதியிட்டு சொல்ல இயலாவிட்டாலும், இன்று வரை பெரிய பிழைகள் இன்றி வானவியலாளர்களால் பாராட்டப் படுகிறது.

தொலைநோக்கு கருவிகளின் புதிய புதிய‌ வடிவமைப்பு மூலமாக வானவியல் ஆராய்ச்சியில் ஏற்பட்ட நவீன கண்டுபிடிப்புகள் இன்று மணித்துளி, மாதம் பற்றிய வரையறையில் நிரூபிக்கப்பட்ட பல உண்மைகளை கொண்டு வந்துள்ளது. நாட்காட்டியின் வரையறையில் பின்னால் இருந்த அத்துனை ஆராய்ச்சியாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைபட்டு இருக்கிறோம்.

இன்று உலகம் முழுமைக்கும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி முறையே தற்போது புழக்கத்தில் உள்ளது. இதன் படி பார்த்தால் முதல் உலகமயமாக்கல் முறை (globalization) கிரிகோரியன் நாட்காட்டி முறையில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம்.

 13 ஆம் போப் கிரிகோரி (Gregory XIII) (1502- 85) செய்த அதிரடி புரட்சி மாற்றமே இன்று நாம் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டர். ஆகவே ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்வதே தவறு.


 அனைவருக்கும் கிரிகோரியன் புத்தாண்டு 2017 வாழ்த்துகள்!

Reference:
The Calender Measuring Time. Written by Jacqueline de Bourgoing. Publisher- Thames & Hudson, New Horizons 2001.

No comments:

Post a Comment