உலகின் முதல் நீர்ப்புகா ஆடையின் முன்னோடி- சார்லசு மெக்கின்டோசு(A pioneer in world’s first waterproof raincoats – Charles Macintosh)
இன்றைக்கு மழை பெய்யும் போது நனையாமல் செல்ல குடை தவிர்த்து நானோ நுட்பவியல் மூலம் வடிவமைக்கப்பட்ட நீர் விலக்குமை (water repelling) ஆடைகள் தயாரிக்கும் அளவிற்கு அறிவியல் நுட்பம் முன்னேறி உள்ளது. இயற்கையில் நாம் காண்கின்ற தாமரை இலையின் மீது நீர் ஓட்டாத (lotus effect) தன்மையினை தழுவி செய்யப்படும் இந்த ஆடைகள்தான் எதிர்காலத்தில் மிகப் பேசுபடுபவையாக இருக்கப் போகிறது. மேலும் இந்த நீர் விலக்குமை தன்மையால் ஆடைகளில் ஒட்டும் அழுக்கு எளிதாக நீங்கும் வல்லமையுடைய துணிகளும் சந்தையில் தற்போது வரத் துவங்கி உள்ளது.
ஆனால், வரலாற்றில் பின்நோக்கி போனால் மழையில் நனையாமல் அணிந்து செல்ல எத்தையக ஆடைகளை தயாரித்திருப்பனர் என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது.
ஆம், நீர்ப்புகா ஆடைகள் (waterproof cloths) வடிவமைக்கப்பட்டு இன்றோடு 250 வருடம் ஆகிறது.
இதன் வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா.
ஐக்கிய முடியாட்சியில் (United Kingdom) தனக்கென்று தனித்த வரலாறு உடையது ஸ்காட்லாந்து தேசம். குறிப்பாக 1824 ஆம் ஆண்டிற்கு முன் இப்பகுதியில் பிறப்பது என்பது ஒரு தண்டனையாக கருதும் அளவிற்கு எப்போதும் மழை பெய்யும் சூழல் இருந்து வந்தது. வெளியே செல்லும் போது குடைகளை எடுத்துக் கொண்டே செல்லும் கட்டாயம் இருந்தது. எப்படி இருந்தாலும் நனைந்து விடும் சூழல் ஒருவித எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
இதனை தடுக்க எண்ணெய் தடவப்பட்ட ஆடைகளை உடுத்த துவங்கினர். ஆனால் இந்த ஆடைகள் அதிகமான எடையோடு, எண்ணெய் துர்நாற்ற வாடையும் அடித்ததால் வேறு வழியின்றி இதனை உடுத்தி வந்தனர். இந்த சூழலில்தான் அப்பகுதியினை சேர்ந்த சார்லசு மெக்கின்டோசு (Charles Macintosh) என்ற வேதியியலாளர் நீர்புகா ஆடையினை முதன் முதலாக வடிவமைத்து தந்தார். இவர் எவ்வாறு அந்த ஆடையினை வடிவமைத்தார் மற்றும் அவரது வரலாற்றினை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
மெக்கின்டோசு பிரித்தானியாவில் உள்ள கிளாஸ்கோ (Glascow) நகரில் 1766 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி பிறந்தவர். அதாவது இன்றோடு 250 ஆண்டுகள் ஆகிறது.
Charles Macintosh (image credit: Wikipedia) (https://commons.wikimedia.org/wiki/File:Charles_Macintosh.jpg) |
ஒரு குமாஸ்தா எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு வேதி பொருட்களின் மீது ஏற்பட்ட காதலால் தனது எழுத்தர் பணியை உதறி தள்ளினார். இவரது தந்தை ஜியார்ஜ் மெக்கின்டோசு சாய வேதிபொருட்கள் விற்பனை செய்பவராக இருந்ததால் இவரது வேதியியல் சார்ந்த சோதனைகளுக்கு ஏதுவாக இருந்தது.
துவக்க காலத்தில் அவரது தந்தைக்கு சாயப் பொருட்கள் தயாரித்து தரும் பணிகளை செய்து வந்துள்ளார். அவரது தந்தையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு வீணான பொருட்களில் இருந்து பயன்படு பொருட்களை தயாரித்து அதனை சந்தையில் விற்பது. அதில் முக்கியமனாது மனிதர்களின் சிறு நீரில் இருந்து அமோனியா தயாரிப்பது.
1797 ஆம் ஆண்டு தனது தந்தையைப் போலவே வீணான பொருட்களில் இருந்து பயனுறு பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையினை துவங்கி வேதிப் பொருட்களை தயாரித்து வந்தார். அமோனியம் குளோரைடு, பெர்சிய நீல சாயம், ஆகியவற்றை தயாரித்து வந்தார். மேலும், காரிய மற்றும் அலுமினிய அசிட்டேட் ஆகியவற்றை தயாரித்து நெதர்லாந்து நாட்டிற்கு விற்று வந்தார். இதனோடு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அமோனியா, படிக உப்பு போன்றவற்றினை தயாரித்து வழங்கினார். இந்த கால கட்டத்த்தில் பல முக்கியமான தொழில்துறை முன்னோடிகளோடு இணைந்து தொழில் செய்தார். அதில் குறிப்பிட்டு ஒன்றை சொல்லலாம். சார்லசு டென்னன்ட் (Charles Tennant) என்பவருடன் இணைந்து உலர் பிளிச்சீங் பவுடரை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.
இதில் வியக்க வைக்கும் ஆச்சரியம் என்னவெனில் சிறிய வயதிலேயே, மேற்சொன்ன வேதிப்பொருட்களை தயாரிக்கும் அளவிற்கு அவருக்கு உந்துதலாக இருந்தது எடின்பரோவில் (Edinburg) இருந்த மருத்துவ பேராசிரியர் ஜோசப் பிளேக் (Joseph Black). இவர் தான் நிலையான காற்று (fixed air) என்றழைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயுவினை கண்டறிந்தவர். அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட அறிவின் மூலம் அப்போதே வேதியியல் கழகத்திற்கு (Chemical Soceity) ஆல்கஹால், அலும் (alum) வேதி பொருள், காய்களில் இருந்து நீல நிற சாயத்தை தயாரித்தல் போன்ற தலைப்புகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவ்வளவு சிறிய வயதில் எல்லோரும் வியக்கும் வண்ணம் இருந்த இவரது செயல்பாடுகள் பின்னாளில் இவரை உலகமே அறியும் படி நிலை நிறுத்தும் என்று ஆருடம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
தன் தந்தையாரின் சாயத் தொழிலை முன்னெடுக்கும் வண்ணம், மரத்தின் மீது வளரும் பச்சை நிற பூஞ்சைகளில் (lichen) இருந்து இளஞ்சிவப்பு (pink) நிற சாயம் தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தார். இது துணிகளில் சாயமேற்றும் தொழிற்சாலைகளில், இளஞ்சிவப்பு தொடங்கி நீல நிறம் வரை எவ்வாறு வண்ண நிழல்களை (color shade) ஏற்படுத்துவது என்ற முயற்சிகளுக்கு மிகவும் பயன்பட்டது.
இந்த கால கட்டத்தில்தான் அவரது மிக முக்கிய கண்டுபிடிப்பு ஒன்று நாப்தா (Naptha) வேதிப் பொருள் மூலம் வெளிப்பட்டது.
நாப்தா வேதிப் பொருள் வழமையாக தீப்பந்தங்களில் எரிபொருளாக பயன்பட்டு வந்த தார் (tar-எண்ணெய் போன்ற ஹைட்ரோ கார்பன் வேதிப்பொருள்) என்னும் எரிபொருளின் வடிகட்டப்பட்ட ஒரு பக்க-விளைவுப் பொருளாகும்.
மெக்கன்டோசு பல வருடம் முயன்று நாப்தா வேதிப்பொருளை பல்வேறு வகையில் முயற்சி செய்து எவ்வாறு இந்திய ரப்பர் பொருளை கரைக்கிறது என்று கண்டுபிடித்தார். மேலும் அது நீரில் நனையாமல் இருந்ததை கண்டு வியந்தார்.
இந்த நாப்தா பொருளை இரண்டு துணிகளுக்கு இடையில் வைத்து நன்கு அழுத்தி தைத்து நீர் உட்புகா ஆடைகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியடைந்தார். இதற்கான காப்புரிமையினை 1823 ஆம் ஆண்டு ஜீன் மாதம் பெற்றார் (காப்புரிமை எண் 4804). இந்த காப்புரிமைதான் பின்னாளில் நீர்புகா துணிகளை கொண்டு மழைகோட்டுகள் தயாரிக்க மிகப் பெரிய உதவியாக இருந்தது.
Image credit: Davy Tolmie (https://twitter.com/DavyTolmie/status/611084289145458689) |
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த நீர்புகா ஆடை வடிவம் கிளாஸ்கோ நகரில் உள்ல தையற்காரர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அவர்கள் இதனை தைப்பதற்கு சிரமமாக உள்ளது என சுணங்கினர். ஆகையால் சார்லசு மெக்கன்டோசு சுயமாகவே கிளாஸ்கோ நகரிலும், பின்னாளில் மான்செஸ்டர் கேஸ் வொர்க்சு என்ற தொழில் நிறுவனத்தின் உரிமையாளரான கக் கார்ன்பி பிர்லெ (Hugh Hornby Birley) என்பாருடன் கூட்டாக சேர்ந்து 1824 ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் ஒரு நிறுவனத்தினை துவங்கினார்.
இவர்கள் தயாரித்த நீர்புகா ஆடைகளை அதில் இருந்து வரும் வாடையினையும் பொருட்படுத்தாது பிரித்தானிய ராணுவமும், கப்பற் படையும் வாங்கி அங்கீகரித்தனர். முக்கியமாக உறைபனி நிறைந்த ஆர்ட்டிக் துருவ பகுதியினை கண்டறிய சென்ற பிராங்ளின் என்பாரின் செயலுக்கும் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Mackintosh model, from an 1893 catalogue (Image credit: http://www.mirror.co.uk/tech/who-charles-macintosh-what-makes-9528300) |
பின்னர் ஒரு வருடம் கழித்து (1825) பிரித்தானியாவின் ரப்பர் தொழில்களின் தந்தை என்றழைக்கப்பட்ட தாமசு ஹன்காக் (Thomas Hancock) என்பாருடன் இணைந்து இரட்டை கலவையிலான நீர்புகா ஆடைகளை (waterproof double textures) வடிவமைத்து வெற்றி கண்டார்.
அதற்குப் பிறகு அவரது நிறுவனத்தை Charles Macintosh & Co என்று மாற்றினார்கள். மாக்கென்டோசின் நீர்புகா ஆடை வடிவமைப்பில் சில மாற்றங்களை வல்கனைசிங் (vulcanizing) முறையில் தாமசு ஹன்காக் செய்தார்.
இந்த முறையில் ரப்பர் ஆடைகளின் உழைப்பு வெப்ப நிலைக்கு தக்கவாறு எதிர்கொள்ளு திறன் நன்கு மெறுகேறியது. இந்த ஆண்டு எதிர்பாரா விதமாக மெக்கன்டோசு இயற்கை எய்தினார்.
அவரது உடல் கிளாஸ்கோ நகரில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. அவரின் மறைவிற்குப் பிறகு அவரது பெயரில் “k” என்ற எழுத்து சேர்க்கப்பட்டு “Mackintosh” என உச்சரிக்கப்பட்டது.
வல்கனைசிங் முறையில் பெரிதும் மெருகேற்றப்பட்ட நீர்புகா ஆடை வடிவம் 1853 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற மிகப்பெரிய கண்காட்சியில் சிறந்த வடிவமைப்பு விருதினைப் பெற்றது. மெக்கன்டோசு மறைவிற்கு பின் Charles Macintosh & co நிறுவனம் 1923 ஆம் ஆண்டு வரை உலகின் புகழ் பெற்ற டன்லப் டயர் நிறுவனம் வாங்கும் வரை வெற்றிகரமாக நடைபோட்டது.
தற்போது மெக்கன்டோசு பெயர் பொறிக்கப்பட்ட நீர் புகாத மழை கோட்டுகள் பிரித்தானியாவின் பாரம்பரிய ஆடை வடிவங்களில் ஒன்றாக திகழ்கிறது. அவை சுருக்கமாக மேக் கோட்டுகள் (Mac Coat) என அழைக்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் நூல் கொண்டு தையல் இடப்படாமல் பசை மூலமாக ஒட்டப்பட்ட கோட்டுகள் இன்றும் சந்தையில் கிடைக்கிறது. மற்றொரு ஆச்சரியம் இன்னும் மெக்கன்டோசு வகை ஆடைகள் ஸ்காட்லாந்து தேசத்தில் இயந்திரங்கள் இல்லாமல் கையால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
ஏறத்தாழ 250 ஆண்டுகளாக மெக்கன்டோசுவின் காலத்தில் இருந்து நீர்புகா ஆடைகள் நம் சமூகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. அவரது நினைவினை போற்றும் விதத்தில் இன்று கூகுள் தேடு பொறியில் டூடுல் (google doodle) சின்னமாக அவரை கவுரவித்துள்ளார்கள்.
மெக்கன்டோசு வேதியியல் ஆராய்ச்சியாளராக மட்டுமில்லாமல் இளம் வயதில் சாதிக்க துடிக்கும் தொழில் முனைவோர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர். அந்த வகையில் இவரை நினைவூட்டிய கூகுளின் செயல் பாராட்டுக்குரியதே.
No comments:
Post a Comment