Monday 3 July 2017

வெகுசன அறிவியல் விளையாட்டு சோதனைகள் (Solar Cells)

சூரிய மின் கலம் (solar cells) என்பது சூரிய ஒளியினை குறைகடைத்தி (semiconductor) மூலம் மின்சார ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி ஆகும். இதனை குழந்தைகளுக்கு எப்படி எளிய சோதனை மூலம் விளையாட்டின் மூலம் புரிய வைப்பது? 

பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் (Bristol) நகரில் அறிவியல் கண்காட்சி மையம் அமைந்துள்ள பகுதியில் தெருவில் ஒரு எளிய சோதனை அமைப்பினை வைத்துள்ளார்கள். அதன் மீது சூரிய மின் கலம் எப்படி செயலாற்றுகிறது என கார்ட்டூன் படம் மூலம் விளக்கி உள்ளார்கள். பெரிய பலகையில் நிறைய சூரிய மின் கலங்களை வரிசையாக இணைத்து பேனலாக வைத்திருந்தார்கள். இதனோடு இணைக்கப்பட்ட ஒலி பெருக்கி ஒன்றில் பாட்டு ஒன்று பாடிக் கொண்டுள்ளது. 

பாட்டின் சத்தத்தின் அளவானது சூரிய மின்கலத்தில் தயார் ஆகும் மின்னோட்டத்தின் (current) அளவைப் பொறுத்து அமையும். உதாரணத்திற்கு சுற்றில் (circuit) மின்னோட்டம் குறையும் போது பாடும் ஒலியின் அளவும் (sound) குறையும். இதே தத்துவத்தை அடிப்படையாக கொண்டுதான் ரேடியோ, அல்லது இதர ஒலிபெருக்கி கருவிகளில் ஒலி அளவினை கட்டுப்படுத்த பயன்படுத்துகிறோம். சுருக்கமாக ஒரு மின்சுற்றில் தடையினை (resistance) எந்த அளவுக்கு ஏற்படுத்துகிறோமோ அதற்கு இணையாக அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் ஒலியின் அளவு குறையும். 

இதே தத்துவத்தை அவர்கள் சோலார் பேனல்களில் ஒரு தடையினை ஏற்படுத்துவதன் மூலம் எளிதாக உணரலாம். உதாரணத்திற்கு சூரிய மின் கலம் மீது ஒளி விழுவதை குழந்தைகள் தங்கள் கைகளால் மறைத்தோ அல்லது இரண்டு மூன்று பேர் சூழ்ந்து நின்று அதன் மீது நிழலை ஏற்படுத்தும் போதே பேனலில் உருவாகும் மொத்த மின்னோட்டத்தின் அளவு குறையும் போது ஒலியின் அளவு குறையும்.

இவ்வாறு எளிய விளையாட்டு சோதனைகளை நாம் அன்றாடம் குழந்தைகள் புழங்கும் இடத்தில் தெருக்களில் அமைக்க வேண்டும். அதனை சீராக பராமரிக்கும் தனி மனித ஒழுக்கத்தையும் நாம் கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவுமான சமூகத்தை முன்னெடுக்க வேண்டும்.

இனி வரும் காலம் அறிவியல் நுட்பத்தின் காலம், அவற்றில் நம் குழந்தைகள் சிறந்து விளங்குவதற்கான எளிய முன்னெடுப்புகளை செய்வோம்.

 
Solar cells experiment- Bristol Science Museum, UK

Solar cells experiment- Bristol Science Museum, UK

Solar cells experiment- Bristol Science Museum, UK





No comments:

Post a Comment