Wednesday, 5 July 2017

நான் வழக்காம சாப்பிடற உணவகத்தில் இன்றைக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது காவல்துறை பெண்மணி இரண்டு பேர் நகர சோதனைக்கு குதிரையில் வந்து கொண்டு இருந்தார்கள். இதமான வெயில் வெளியே அடித்துக் கொண்டிருந்தது.

அவர்களுக்கு எதாவது சாப்பிடலாம் என்று இருந்திருக்கும் போல் தெரிகிறது. ஒரு வழியா பார்க்கிங் தேடி நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவகத்தின் வாசலில் கொண்டு வந்து குதிரையை நிறுத்தி கொண்டு இருந்தார்கள்.நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவகத்தின் சிப்பந்தி வெளியே சென்று உங்களுக்கு உணவருந்த ஏதேனும் வேண்டுமா? என கனிவோடு விசாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் நன்றி என்று சொல்லி விட்டு ஒரு காவலர் மட்டும் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு சென்றார்.

நான் சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வந்து அந்த காவலர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி விட்டு, எப்படி இவ்வளவு உயரமான குதிரைகளை சமாளிக்கிறீர்கள் என கேட்டேன். இந்தியாவில் பெரும்பாலும் குதிரைகள் இவ்வளவு உயரம் கிடையாது என சொன்னேன். ஓ அப்படியா என ஆச்சரியமாக கேட்டார்கள். நான் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சீன யுவதி குதிரையின் முகத்தில் வாஞ்சையாக தடவிக் கொடுத்தாள்.

உண்மையில் இவ்வளவு உயரமான குதிரைகளை கடுமையான உடற் பயிற்சியோடு கூடிய உடற் கட்டு இருந்தால்தான் சமாளிக்க முடியும். இதன் மீது ஏறுவதற்கே தனியாக ஏணி தேவைப்படும் போல. இயல்பாகவே ஐரோப்பிய பெண்மணிகள் தங்கள் உடல் நலத்தை பேணுவதில் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர்.

குறிப்பாக‌ தினமும் மெது ஓட்டம், மாரத்தான், நீச்சல், கடலில் பாய் மரம் ஓட்டுதல், குழு விளையாட்டு என எல்லா வயதிலும் தங்கள் உடற்பயிற்சியினை நிறுத்துவதே இல்லை.

இந்த இரும்பு பெண்களோடு ஒப்பிடுகையில் என் பள்ளி காலத்தில் நான் பார்த்த பெண்கள் இருந்தார்கள். கட்டு நிறைய கரும்பு தோகையை, பச்சை கோரை, 20 அடி நீளமுள்ள விட்டக் குச்சி கட்டை இவற்றை எல்லாம் அலாக்காக தூக்கிக் கொண்டு போவதை எங்கள் கிராமத்தில் இயல்பாக‌ கடந்து இருக்கேன். அந்த அளவுக்கு அவர்களது உழைப்பும், சாப்பாடும் இருந்துச்சு. ஆனாலும் அவர்களுடைய உடல் நலன் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்காது, அல்லது கவனிக்க கூட அனுமதிக்காத‌ சூழலில்தான் இருந்தார்கள். தங்கள் உடல் நலத்தை விட தங்கள் குடும்பத்திற்காகவே ஓடி ஓடி தேய்ந்தார்கள்.

காலம் நிறைய மாறி இருக்கிறது. உடல் உழைப்பு வழியாக‌ பெண்கள் மீதான‌ அடக்குமுறைக்கு நவீன நுட்பங்கள் விடுதலை தந்துள்ளது. அதே வேளை அவர்கள் உடல் நலத்தில் போதிய அக்கறை செலுத்துகிறார்களா எனத் தெரியவில்லை.

சிறிது நேரம் அந்த காவலர்களுடன் பேசி விட்டு நான் கிளம்பி விட்டேன்.

இங்கே உள்ள காவலர்களோடு மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக உரையாட முடிகிறது. வேற்றுக் கிரக வாசிகள் போல் அவர்களை பார்த்து ஒதுங்காமல் எல்லோரும் புன்னகையோடு எதிர் கொள்கிறார்கள். காரணம் இங்கே ஆரம்ப பள்ளியில் காவலர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து குழந்தைகளுடன் உரையாடுகிறார்கள். காவலரின் பணி என்ன, அவர்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என விளக்குகிறார்கள். இதுதான் ஒரு இயல்பான இறுக்கமற்ற சூழலை இங்கே வைத்துள்ளது.

காவலர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நட்பு கலந்த புன்னகையும், அக்கறையான விசாரிப்புகளுமே. நம் பள்ளி பாடத்திட்டத்தில் இந்த முறையினை கொண்டு வரலாம்.

கடும் கோடையில், மழையில் நம் ஊரில் இது போல் சாலை பாதுகாப்பிலும், உள்ளூர் பந்தோபஸ்து பணியிலும் இருப்பவர்களிடம் ஹலோ என்று ஒரு புன்னைகை செய்யுங்கள். எல்லா காக்கி சட்டைக்குள்ளும் இருப்பவர் மனிதர்கள்தானே!No comments:

Post a Comment