Tuesday, 4 July 2017

 ஜப்பானின் மிக நீண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம்

உலகின் முக்கியமான சர்வதேச பறப்பகங்களில் ஒன்று ஜப்பானில் உள்ள‌ நரிதா (Narita) சர்வதேச பறப்பகம். இப்பறப்பம் ஜப்பானின் சிபா (Chiba) மாவட்டத்தில் எல்லையில் உள்ளது. தோக்கியோ நகரில் இருந்து ஏறத்தாழ 40 கிமீ தொலைவில் உள்ளது. இப்பறப்பகத்திற்கு தோக்கியோ நகரில் இருந்து செல்லும்  ஸ்கை ஆக்சஸ், கொக்குசோ (Hokuso Railways) ரயில் தடத்தில் பத்து கி.மீ நீளத்திற்கு சூரிய மின் நிலையத்தினை அமைத்துள்ளனர். இரயில் தடத்தின் பக்கவாட்டில் மீதமுள்ள காலியிடத்தில் இந்த மின்நிலையத்தினை அமைத்துள்ளனர்.

நரிதா ஸ்கை ஆக்சஸ் ரயில் வழித் தடத்தினை காட்டும் படம். இதில் முதல் படத்தில் மஞ்சள் கோடிட்டு காட்டிய 10 கிமீ தொலைவிற்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாவது படம் (கீழே) இம்பா நிகோன் இதாய் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனலகள். (நன்றி கூகுள் சேட்டிலைட் படம்)

சிபா மாவட்டத்தில் உள்ள முசாய், சிரோய், வகாகி, இன்சாய் நகரங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஜப்பானின் மிக நீளமான இந்த சூரிய ஆற்றல் உற்பத்தி நிலையத்தினை சிபா மாவட்ட அரசே நிர்வ‌கிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 12.8 மெகாவாட் (12,81,000,00 வாட்) மின்சாரம் பெறப்படுகிறது.

"SGET Chiba New Town Mega Solar Power Plant" bird eye view (source: SGET)
தோக்கியோ நகரில் இருந்து நரிதா சர்வதேச பறப்பகத்திற்கு செல்பவர்கள் சிபா நியூ டவுன் சுவோ ரயில் நிலையம் தொடங்கி, இம்பாநிகோன் இதாய், இன்சாய் மசினோகரா இரயில் நிலையம் வரை தொடர்ச்சியாக நிறுவப்பட்டுள்ள சூரிய மின் நிலையத்தினை காணலாம்.  உலகின் கவனத்தை ஈர்த்த இத்திட்டத்தினை  Sget Kamisu Mega Solar Limited Liability Corporation  என்ற நிறுவனத்தினர் வடிவமைத்து செயல்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தில் உலகின் முன்னோடி ஜப்பானிய நிறுவனங்களான புஜி, தோசிபா போன்ற நிறுவனங்கள் சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர் போன்ற எலக்ரானியல் பொருட்களை இத்திட்டத்திற்கு (SGET Chiba New Town Mega Solar Power Plant) தந்துள்ளனர். 

எப்படி ரயில் பாதையில் அருகில் இத்திட்டத்தினை அமைக்கும் எண்ணம் இவர்களுக்கு உதித்தது?

தோக்கியோ நகரில் இருந்து நரிதா சர்வதேச பறப்பகத்திற்கு செல்லும் இரயில் தடத்தில் ஸ்கை ஆக்சஸ் (Sky Access) புல்லட் இரயில் திட்டத்திற்கு இப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க இத்திட்டம் கைவிடப்பட்டது. அந்த இடத்தினை வீணாக்காமல் ஜப்பானியர்கள் தற்போது சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை தொடக்கி வைத்து விட்டனர். இத்திட்டம் குறித்து ஆலோசனைகள் 2010 ஆம் ஆண்டு பெறப்பட்டு தற்போது இத்திட்டம் நிறைவடைந்து மின் உற்பத்தி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜப்பானில் உள்ள இரயில் நிலையங்களில் உள்ள ஸ்மார்ட் கார்டுகள் மூலம் இயங்கும் டிக்கட் கதவுகள், இரயில்வே நடைமேடைகளில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு கதவுகள் ஆகியவற்றை முழுவதும் சூரிய ஆற்றலைக் கொண்டே இயங்கும் நுட்பம் வந்து விட்டது. தற்போது அந்த வரிசையில் இரயில் பாதையின் ஓரத்தில் ஜப்பானின் மிக நீண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையிலான மின் உற்பத்தி திறனில் (Energy Consumption per Capita) மிகச்சிறிய நாடான ஜப்பானை (~7000 கிலோவாட்/மணி) விட ஏறத்தாழ 7 மடங்கு நாம் பின்னால் உள்ளோம் (~1100 கிலோவாட்/மணி). இத்தனைக்கும் ஜப்பானில் நான்கு மாதம் கடும் குளிர் காலம். குறைவான சூரிய ஒளியே கிடைக்கும். இச்சூழலிலும் அவர்கள் இது போன்ற திட்டங்களில் தொடர்ந்து ஜப்பானியர்கள்  ஆர்வம் செலுத்தி வருவதற்கு காரணம் அங்கு இயங்கும் மிக அதிகமான தொழிற்சாலைகள்.

இந்தியாவில் ஆண்டு முழுவதும் செறிவான சூரிய ஒளி கிடைக்கிறது. நிச்சயம் சூரிய மின் திட்டத்தினை வெகுவாக ஊக்குவிப்பதன் முலம் தனிநபருக்கான மின் உற்பத்தி திறனை இன்னும் பல மடங்கு நம்மால் உயர்த்த முடியும். மேலும் சூரிய மின் திட்டமானது சுற்றுப் புற சூழலுக்கு உடனடி மாசை ஏற்படுத்தாது. ஆகையால் இந்தியா முழுவதும் பயன்பாட்டில் இல்லாத காலி நிலங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்தலாம்.

நரிதா ஸ்கை ஆக்சஸ் ரயில் தடத்தில் நான் பயணித்த போது எடுத்த காணொளியினை இங்கு இணைத்துள்ளேன்.



**பள்ளி மாணவர்களுக்கு இத்தகவலை பகிருங்கள்.

No comments:

Post a Comment