Thursday, 1 June 2017

மயில் நம்மில் எத்னி பேருக்கு தெரியும்.

 ஆங்கிலத்தில் மயிலின் பொது பலவின்பாற் பெயர் Peafowl ஆகும். "இந்திய மயில்" (Indian Peafowl) அல்லது "நீல மயில்" தெற்காசியாவில் அதிகமாக வாழும் பறவை  இனம் ஆகும்.

ஆங்கிலத்தில் ஆண் மயிலுக்கு  Peacock என்றும், பெண்  மயிலுக்கு Peahen  என்று பெயர். தமிழில் இப்படி பால் சார்ந்து மயிலுக்கு தனித் தனி பெயர்கள் உள்ளதா? ஆம் பெண் மயிலுக்கு "அளகு" என்று பெயர், ஆண் மயிலுக்குச் "சேவல்" என்று பெயர் (நன்றி: விக்கிபீடியா).

தோற்றத்தில் அளகிற்கும் (பெண்), சேவலுக்கும் (ஆண்) உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அதன் தோகைதான். ஆண் மயிலுக்கு மிக நீண்ட பீலி (இறகு) உண்டு. பெண் மயிலின் பீலி குறைந்த நீளம் உடையது. அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயில் எழுப்பும் ஒலியைக்  குறிப்பிடுகிறார்கள்.

நம் சங்க இலக்கியங்களில் மயில் தோகையினை பல பெயர்களில் அழைக்கிறார்கள். அவற்றில்  சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி என்ற சொற்பதங்களை காண முடிகிறது.  தமிழ் இலக்கியங்களில் மயிலுக்கு பல பெயர் உண்டு (மயூரம், ஞமலி, மஞ்சை).

மற்ற பறவைகளை ஒப்பிடும் போது மயிலுக்கு உள்ள தனிச்சிறப்பு. மயிலின் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சு மயில் பிறந்த ஒரு சில மணி நேரத்தில் எழுந்து நடக்கத் துவங்கி விடும்.

இப்படி மயிலைப் பற்றி நிறைய பேசிக் கொண்டே போகலாம், ஆனால் சுருக்கமாக மயில் எவ்வாறு தங்கள் ஜோடியுடன் இணை சேர்கிறது என்பதனை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஆண் மயில் மனிதர்களைப் போலவே பெண் மயிலை ஈர்க்க பயன்படுத்தும் தந்திரம்தான் தன் அழகான தோகையினை விரித்து ஆடுவது.

மனிதர்களைப் போலவே ஆண் மயிலானது பெண் மயிலின் பின்புறம் உள்ள‌ புணர்ச்சி கழிவு பொவாய் (Cloaca)  வழியாகவே உறவு கொண்டு விந்தணுக்களை   செலுத்துகிறது. இவை சினைக் குழாய் (Oviduct) வழியாகச் சென்று அண்டத்தில் உள்ள சினைமுட்டைகளுடன் இணைந்து பெண் மயிலை கருத்தரிக்கச் செய்கின்றது. பிறகு முட்ட இட்டவுடன் பெண் மயில் அடைகாத்து குஞ்சு பொறிக்கின்றன.



ஆகையால் ஆண் மயில் தன் கண்ணீர் வழியாக பெண் மயிலை சினை கொள்ள வைக்கிறது என்பது புராணங்கள் வழி வந்த கட்டுக்கதையாகவோ அல்லது மூட நம்பிக்கையாகவோ இருக்கலாம். முற்றிலும் அறிவியலுக்கு முரணானது.

பெண் மயில் எவ்வாறு ஆண் மயிலுடன் இணை ஏற்கிறது (matting) என்பது பற்றிய சுவாரசியமான ஆராய்ச்சி உலகம் முழுவதும் சென்று கொண்டு உள்ளது. அதில் ஒரு விசயத்தை இங்கே பகிர்கிறேன்.

மயிலின் வால் பகுதியில் உள்ள நீண்ட தோகையை விரித்து ஆடும் போது அதில் உள்ள கண்  (eyespot) போன்ற அமைப்புதான் பெண் மயிலை ஈர்க்க உதவும் சமிக்ஞையினை தருகிறது என்று பரிணாமக் கொள்கையினை உலகிற்கு தந்த டார்வின் எழுதியிருந்தார். இதனையே பின் வந்த பெரும்பாலான ஆய்வுகள் ஏற்றுக் கொண்டன. குறிப்பாக 1991 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் (Open University, England) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெட்ரி என்பார் மயில் தோகையில் உள்ள கண் போன்ற உருவங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் மயில் ஈர்க்கப்பட்டு இணை சேரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவினை வெளியிட்டார் (Anim. Behav., 1991, 41, 323-331).

ஆனால் பின்னாளில் 2008 ஆம் ஆண்டு ஜப்பானில் தோக்கியோ பல்கலைக் கழகத்தில் மயில் எவ்வாறு இணை சேர்கின்றது என்ற மிக நெடிய ஆய்வில் பல புதிய தகவல்களை நிரூபணமாக தந்தனர் (Animal Behaviour 75(2008) 1209–1219).

வழமையாக  பரந்து விரிந்து அதிக எடை உள்ள தோகை கொண்ட ஆண் மயிலே அதிகமாக பெண் மயிலை ஈர்கிறது என்ற கற்பிதத்தை தாண்டி குறைவான தோகைகளை கொண்ட ஆண் மயிலையே பெண் மயில்கள் இணைக்கு ஏற்கின்றன என்ற உண்மையினை அவர்கள் கண்டறிந்தனர். காரணம் அதிக தோகை எடையினால் இணை சேரும் போது ஏற்படும் சிரமங்களை (physical stress) பெண் மயில் விரும்புவதில்லை. இந்த ஆய்வானது அது வரை பெண் மயில்கள் எவ்வாறு இணை சேர்கின்றன (mating success rate) என்ற தளத்தில் ஆய்வாளர்கள் கொண்டிருந்த கருத்தினை மாற்றியமைத்தது.

 இதே பார்வையில் 2011 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள குயின்சு பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது (R. Dakin, R. Montgomerie / Animal Behaviour 82 (2011) 21-28). குறிப்பாக‌, தோகைகள் உடைய மற்றும் தோகைகள் நீக்கப்பட்ட  ஆண் மயில்களுடன் பெண் மயிலை கலந்து ஆய்வினை மேற்கொண்டனர். ஆச்சரியமாக, குறைவான தோகைகள் உடைய ஆண் மயிலுடன் சில தருணங்களில் அவை இணை சேருகின்றன என்ற உண்மையினை அவர்கள் கண்டறிந்தனர். எப்படி தோகை விரித்து சமிக்ஞை தராமல் பெண் மயில் ஆண் மயிலின் குறிப்பை உணருகிறது என்று தீவிரமாக சோதனை செய்து பல முடிவுகளை அறிவித்தனர்.

பெண் மயில் தனது சிறு கூட்டத்தில் உள்ள பல ஆண்களுடன் விருப்பத்திற்கேற்ப இணைகிறது. பொதுவாக இதனை பாலிகேமஸ் இனம் என விலங்கியலில் வரையறுக்கின்றனர். ஆகையால் ஒரு பெண் மயில் ஈர்க்கப்பட ஆண் மயிலின் தோகையில் உள்ள கண் போன்ற உருவ அமைப்பு அல்லாது அதன் நடத்தை (behavior), தோற்றம் (appearance) அவை எழுப்பு ஒலி (vocal) என பல வகையில் ஈர்க்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

நம் குழந்தைகளுக்கு பறவை, விலங்குகள் பற்றிய நடத்தையியல், சூழலியல் தகவமைப்பு ஆகியவற்றை சொல்லிக் கொடுங்கள்.  ஒவ்வொரு விலங்கும், பறவையும் வித்தியாசமான நடத்தையியலை உடையது. இதனை அறிந்து கொள்வதன் வாயிலாக நாம் சூழலியலை புரிந்து கொள்ளவும் அதனோடு நம் சுற்றுப் புறத்தை பகிர்ந்து கொள்ளவுமான ஒரு பரந்து பட்ட பொது அறிவைத் நாம் பெறலாம்.

புராணங்க புரட்டு கதைகளை விலக்கி வைத்துவிட்டு அறிவியலின் வாயிலாக உண்மையினை அறிவோம்.





No comments:

Post a Comment