Wednesday, 23 November 2016


 மனிதர்களின் சாபங்கள்

இன்னைக்கு என் வீட்டம்மா சுவான்சி சிட்டி சென்டரில் ரெண்டு வேலை கொடுத்திருத்தாங்க.  

வேலைய முடிச்சிட்டு அப்படியே நான் எப்பவும் அந்த ஏரியாவில் சுத்தறது வழக்கம். அதுவும்எ சிட்டி சென்டர் பக்கம்  இருக்கும் சர்ச் வாசலில் (St Mary Church, Central Swansea) போடப்பட்டு இருக்கும் பெஞ்சுகளில்  உட்காருவதே தனி சுகம். காரணம் சிட்டி சென்டரில் இந்த இடத்துக்கென்று ஒரு ரம்மியமான சூழல் இருக்கு. நிறைய மரங்கள் சூழ்ந்து எப்போதும் பறவைகள் நிறைந்து இருக்கும். 

தேவாலயத்தின் முன் முற்றம் வாசலில் இருக்கும் வயதான மரங்களின் கீழ் இலையெல்லாம் வீழ்ந்து கிடக்கும். புறாக்களும், சீகில்ஸ் பறவையும் லேசான இளம் வெயிலின் கீத்து பட்டு பொன் மஞ்சள் போர்த்திய அந்த சருகுகளில் புழுக்களை தேடி கொத்தி தின்று கொண்டு இருக்கும். இந்த ரொமாண்டிக்க அனுபவிக்கவே அங்க போவேன்.

அந்த சர்ச் வாசலில்  போடப்பட்டு இருக்கும் பெஞ்ச்சில்   உட்கார்ந்து கொண்டு கடந்து செல்பவர்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த ரம்மியமான சூழலில் இருக்கும் இந்த தேவாலயத்திற்கு பின்னால் ஒரு சோக வரலாறு இருக்கு.

கி.பி 1300 களில் கட்டப்பட்ட இந்த ஆங்கிலிக்கன் சர்ச், 1700 களில் திடீரென்று சரிந்து விழுந்து விட்டது. பின்னர் இடிந்த பகுதிகள் மீண்டும் 1890ல் புணரமைக்கப்பட்டது. இதற்கு பின்னால்தான் நான் சொல்லும் கதையின் சுவாரசியமே உள்ளது.

தேவாலயத்தை புணரமைக்க டென்டர் விட்டபோது, உள்ளூர் கட்டிட பொறியாளர் ஒருவர் அந்த வேலையை தான் எடுத்துச் செய்ய‌ விரும்பினார். தன் திறமை மூலம் இடிபாடுகளாக‌ இருக்கும் இந்த தேவாலயத்தை வலுவானதாக கட்ட முடியும் என நம்பினார். ஆனால் துரதிஸ்டவசமாக, தேவாலயத்தை புணரமைக்கும் பணி லண்டன்வாசியான ஆர்தர் பிளம் பீல்டு என்பவருக்கு தரப்பட்டது. இதனால் உள்ளூர்வாசி மிக கடுமையாக இந்த முடிவை எதிர்த்தார். இவருக்கு அந்த அளவிற்கு திறமை கிடையாது என கொந்தளித்த அவர், இந்த தேவாலயத்தின் எதிரே (நான் அமர்திருக்கும் இடத்தில்) சிவப்பு நிற செங்கல்லில் ஒரு பெரிய கட்டிடத்தை கட்டி அதில் மரத்தால் செய்யப்பட்ட‌ சாத்தான் சிலையினை நிறுவி விட்டார்.

அந்த சாத்தானின் கீழ் ஒரு வாசகத்தையும் காண்டாகி பொறித்து வைத்தார்.
 "ஒரு நாள் இந்த தேவாலயம் இடிந்து விழும் பொழுது இதை கட்டியவனின் திறமையை கண்டு இந்த சாத்தான் எள்ளி நகையாடும்".

சாபத்தின் உருவமாக இருக்கும் இந்த சாத்தான் சிலையினை சுவான்சியின் சாத்தான் (Old Nick) என்று உள்ளூர்காரர்கள் அழைக்கின்றனர். இந்த சிலை மாதிரியினை தற்போது பல இடங்களில் சாபத்தின் குறியீடாக வேல்சு தேசத்தில் வைத்துள்ளனர். ஆச்சரியம் கனடாவில் கூட இந்த சிலையினை வைத்துள்ளனர்.

இந்த சிலை தற்போது சிட்டி சென்டரில், இந்த தேவாலயத்தின் அருகில் இருக்கும் குவாட்டரன்ட் (Quadarant) எனப்படும் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு இந்த தேவாலயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ எப்ப இந்த மனுசன்  இப்படி சாபம் விட்டானோ, சுமார் 50 வருசம் கழித்து 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் நாஜிப் படையினரின் குண்டு வீச்சில் இந்த தேவாலயம் பலத்த சேதத்தை சந்தித்தது. அப்புறம் மீண்டும் ஒரு வழியாக 1950க்கு பிறகு இந்த தேவாலயத்தை புணரமைத்துள்ளனர்.

அப்பாடா ஒரு வழியா இந்த ஆளோட சாபம் அழிஞ்சிருச்சுன்னு பார்த்தா, தேவாலயத்தின் முன் வாசலில் உள்ள பலகையில் எழுதி இருந்ததை பார்த்து சங்கடமாகி போய் விட்டது. அதில் சர்ச்சின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நிதி தாருங்கள் என எழுதி இருந்தது.அடக் கடவுளே, ஒரு மனிதனின் ஆழ் மனதில் இருக்கு வன்மம், சாபம் எந்த அளவிற்கு கொடியது என நினைத்துக் கொண்டேன். அதே நேரம்,  இன்று நான் பார்த்த காட்சி மனித சாபங்களை விடவும் மனிதரின் அன்பென்பது எல்லாவற்றையும் உடைக்கும் என காட்டியது.

நான் உட்கார்ந்து இருந்த இடத்தில் வீடற்ற மனிதர் ஒருவர் நீண்ட தாடியுடன், கையில் தன் நாயை பிடித்தவாறு தளர்வா நடந்து போய் கொண்டு இருந்தார்.அவருக்கு எதிரே நடந்து வந்த  ஒரு காதலர் அவரை அக்கறையுடன் நிறுத்தி விசாரித்தனர்.

அந்த யுவதி வீடற்ற மனிதரிடம் ஏன் தளர்வாக உள்ளீர்கள் எனக் பரிவாக கேட்டார்.

அவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்ற உடன் அந்த யுவதி சற்றும் யோசிக்காமல் அவருக்கு தன் பையில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்ததோடு, அந்த நாய்க்கு அருகில் இருந்த அங்காடியில் சென்று நாய் பிஸ்கட் பெட்டி ஒன்றை ஓடிப் போய் வாங்கி வந்து தந்தாள். பின்னர் அந்த நாயை தடவிக் கொடுத்து விட்டு காதலரை இறுக்கி அணைத்தவாறு நடக்கத் தொடங்கி விட்டாள்.

அவள் ஒரு தேவதை போல் எனக்கு மட்டுமல்ல அந்த வீடற்ற மனிதருக்கும் தெரிந்திருப்பாள்.

மனிதர்களின் சாபங்களை பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சக மனிதர்கள் பால் நாம் கொள்ளும் அன்பு அதனை விழுங்கி  விடும் ஒரு தரிசனத்தையும் நான் கண்டேன்.


அன்பு அரக்கர்கள் உலகை எப்போதும் வெல்கிறார்கள்.


St Mary Church, Swansea

St Mary Church, Swansea


St Mary Church, Swansea

St Mary Church, Swansea

St Mary Church, Swansea

St Mary Church, Swansea

St Mary Church, SwanseaNo comments:

Post a Comment