பிளைமவுத் நகரம் (Plymouth) - பிரித்தானியா
(ஒரு பாலத்தின் கதை)
பிரித்தானியாவின் தெவொன் நதியின் வடக்கு
கரையில் அமைந்துள்ள நகரம் பிளைமவுத். இந்நகரம் லண்டன் நகரில் இருந்து 190 மைல் தொலைவில்
அமைந்துள்ளது. இந்நகருக்கு பிளைமவுத் என ஏன் பெயர் வந்தது என்பது சுவாரசியமானது. கிழக்கு
பகுதியில் இருக்கும் பிளை (Ply) நதியின் முகத்துவாரமும், மேற்கு பகுதியில் இருக்கும்
தாமர் (Tamar) நதியின் முகத்துவாரமும் இணையும் வாய்ப்பகுதியில் இந்நகரம் இருப்பதால்,
இதற்கு பிளைமவுத் என்ற பெயர் வந்தது.
பிளைமவுத் நகரம் இங்கிலாந்து மற்றும் கார்ன்வேல்
(Cornwell) பகுதிக்கு எல்லையாக உள்ளது. கார்ன்வெல் பகுதி முழுவதும் பெரும்பான்மையாக
மலைக் குன்றுகள் நிரம்பியது. இரயிலில் நீங்கள் பயணித்தால் ஏறத்தாழ நீங்கள் ஊட்டியில்
பயணிப்பது போலவே இருக்கும். பிளைமவுத் நகரம் வந்தடைந்த பின் பெரும்பாலும் சம வெளிதான்.
பிளைமவுத் நகரை தாண்டி கார்ன்வெல் பகுதிக்குச்
செல்லும் எல்லையில் தாமர் (Tamar) நதி குறுக்கே
ஓடுகிறது. இந்த இடத்தை ராயல் ஆல்பர்ட் பாலம் (Royal Albert Bridge) மூலம் கடந்து செல்லலாம். ஆகவே இப்பாலத்தை “கார்ன்வெல்லின்
நுழைவுவாயில்” என அழைக்கிறார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பாலத்தை பற்றித்தான்
இந்த பதிவில் எழுத உள்ளேன்.
இந்தப் பாலம் “இசாம்பார்டு கிங்டம் புருனெல்” (Isambard Kingdom Brunel) என்ற பொறியாளர் அவர்கள் தலைமையில் வடிவமைக்கப்பட்டு
1848 -1857 ஆண்டு கால இடைவெளியில் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் மே மாதம் 2 ஆம் தேதி
1859 ஆம் ஆண்டு இளவரசர் பிரின்ஸ் ஆல்பர்டு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இப்பாலம் 138.7 மீட்டர் நீளமுள்ள தனித்த
இரும்பு பட்டைகள் 30 மீட்டர் உயரம் நீருக்கு மேல் தாங்கி கொள்ள, மொத்தம் 666.8 மீட்டர்
நீளமுள்ள தனித்த தூண்களால் இந்த பாலத்தை நிறுவி உள்ளனர்.
தனித்தனியாக உள்ள இந்த மத்திய தூண்கள் உத்திரம் (beam), வளைவு (arch), மற்றும் சங்கிலிகளை (chain) இணைக்கும் ஒரு தனித்த வடிவமைப்புடன் கட்டப்பட்டது. புருனெல் இந்த பாலத்தினை செப்ஸ்டோ (Cheapstow) வடிவத்தை அடிப்படையாக கொண்ட ஆனால் புது மாதிரியான வடிவத்தில் கட்டினார். வட்ட வடிவிலான குழாய்களை வளைத்து முட்டை வடிவில் குவி வளை வடிவமாக மாற்றி பாலத்தின் மீது கட்டினார். இந்த தனித்த பால அமைப்பு புருனல் மாடல் என்று கட்டிடக் கலையில் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் 2009 ஆம்
ஆண்டு இப்பாலம் 150 வருட நினைவு தினத்தினை கொண்டாடியுள்ளது.
இதன் வரலாற்று சிறப்பம்சத்தை போற்றும் வகையில்
பிரித்தானியாவின் 2 பவுண்டு நாணயத்தின் ஒரு புறம் இப்பாலத்தின் தோற்றமும், மறுபுறம்
பொறியாளர் புருனெல் அவர்களது திரு உருவமும் பொறித்துள்ளனர். மேலும் இப்பாலத்தின் படம்
சுற்றுலா வாழ்த்து அட்டைகள் உள்ளிட்ட முக்கியமான வாழ்த்து அட்டைகளில் இடம் பெற்றுள்ளது.
Isambard Kingdom Brunel |
Royal Albert Bridge (Photo © Copyright Simon Lewis www.westcountryviews.co.uk) |
இந்த பாலத்தை வடிவமைத்த் புருனெல் பிரித்தானியாவில்
உள்ள மிகப் பெரிய ரயில்வே நிறுவனமான கிரேட்
வெஸ்டர்ன் ரயில்வேயின் (Great Western Railways) முன்னோடிகளில் ஒருவர். இந்நிறுவனம்
அமைத்துள்ள பெரும்பான்மையான (சுமார் 9000 மைல்கள்) இருப்பு பாதை தடங்களை வடிவமைத்தவர்.
லண்டனில் உள்ள தேம்ஸ் நதியின் அடியில் இருக்கும் சுரங்க பாதையினை வடிவமைத்த குழுவில்
முக்கிய பொறுப்பில் இருந்தவர். இத்தையக சாதனைகளுக்கு உரிய புருனெல் இப்பாலம் திறந்து
வைக்கப்பட்ட சில மாதங்களில் காலமாகி விட்டார்.அவரது நினைவை போற்றும் விதத்தில் இந்த
பாலத்தின் இரு நுழைவு வாயில்களிலும் புருனெல் அவர்களின் பெயர் (I K BRUNEL – ENGINEER – 1859) பொறிக்கப்பட்டுள்ளது.
புருனெல் அவர்களின் திறமைகளையும், புகழையும் பற்றிப் பேச தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். பிபிசி நிறுவனம் பிரித்தானியாவின் 100 முக்கியமான ஆளுமைகள் குறித்து பொது மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பில் புருனெல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடம் வின்சென்ட் சர்ச்சிலுக்கு, அப்படியென்றால் இங்குள்ள மக்கள் அவரை எப்படி இன்னும் நினைவில் வைத்துள்ளார்கள் என்பது விளங்கும்.
புருனெல் பற்றி மேலும் அறிந்து கொள்ள Adrian Vaughan எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் (Brunel: An Engineering Biography), Robin Jones அவர்கள் எழுதிய Isambard Kingdom Brunel புத்தகத்தை வாசிக்கலாம்.
நான் கார்ன்வெல் பகுதியில் உள்ள டியூரோ
நகரில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகருக்கு பிளிமவுத் நகரம் வழியாக சென்ற
போது நான் பதிவு செய்த காணொளியினை இந்த சுட்டியில் காணலாம்.
இந்நகரின் பெரும்பான்மையான வருவாய் இங்குள்ள
கப்பல் கட்டும் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால், இந்த
நகரில் ஒரு நாள் தங்கி அந்த தொழிற்சாலைகளை பார்வையிடலாம்.
மிகவும் அருமையான பதிவு. நான் இங்கு உள்ள பிளைமௌத் மரின் லபோரடோரி யில் (PLYMOUTH MARINE LABORATORY) ஆராய்ச்சி செய்துள்ளேன்.
ReplyDelete