Sunday 13 March 2016

திண்ணைகள் நிறைந்த வீதி -1


வெள்ளை வேட்டியும், பூ போட்ட சட்டையும் நிறைந்த மனிதர்கள் வாழ்ந்த என் கிராமத்தில் அப்போது இன்டி சுசுகி வண்டியில் கூலிங் கண்ணாடி சகிதமாக நேர்த்தியான கட்டம் போட்ட சட்டையும், படிய சீவி ஒரு சினிமா நடிகரை போன்ற ஒரு தோரணையில்தான் அந்த இளைஞரை பார்த்திருந்தேன். அப்போது நான் நான்காவது அல்லது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். டிகிரி படிப்பு அரிதாக படித்திருந்த என் கிராமத்தில் அப்போது டிகிரி படிப்பை முடிந்திருந்த அந்த மனிதர் எங்கள் பகுதியின் செல்ல பிள்ளை.நாங்கள் வசித்த பகுதியில் பெருந்தன வீட்டில் பிறந்த கடைக் குட்டி. வேலை நிமித்தம் அவர் திருப்பூருக்கு குடி பெயர்ந்து இருந்ததால் நாளும், கிழமைக்கு அரிதாகத்தான் ஊருக்கு வருவார். அவர் என் உறவினர் வட்டத்தில் இருந்தாலும் நெருங்கி பேசும் அளவிற்கு அவ்வளவான சூழலும் வயதும் அப்போது இல்லை. ஆனால் தெருவில் உள்ள மற்ற உறவினர்களோடு பேசும் போது வான்டடாக அவர் வண்டிக்கு அருகில் நின்று அவரது பைக்கை தொட்டு பார்த்து சிலாகிப்பேன். பெரும்பாலும் கிழக்கு தெருவில் இருக்கும் கல்லு பெட்டியார் தாத்தா கடையின் வாசலில் தான் அவரது நண்பர்களுடனான சம்பாசனை இருக்கும். எங்களிடம் சில்லுண்டியாக வம்பிழுக்கும் மாமன் மச்சான்களை எல்லாம் ஓட விட்டு தெறிக்க விடுவார். நான் பார்த்து பயந்த ஆட்கள் எல்லாம் இவரை கண்டால் தெறிக்கிறார்களே என்பது அவர் மேல் கூடுதலாக‌ ஒரு ஈர்ப்பை தந்தது. அப்போதைய கால கட்டத்தில் சொற்பமான புல்லட்டும், லூனா, டிவிஸ் 50 வண்டிகளுக்கு இடையில் அவரது இண்டி சுசுகி வண்டிக்கு பெரிய கெத்தும் இருந்தது. சொல்லப் போனால் ஒரு சினிமா கதாநாயகனுக்கான தோற்றத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் மீதாக வழமையான ஒரு ஈர்ப்பு அப்போது என் பகுதியில் இருந்த பதின்ம வயது பெண்கள் உட்பட பலருக்கும் இருந்ததை ஒரு வாராய் ஊகிக்க முடிந்தது. எங்கள் ஊரில் இருக்கும் ஒரே அவஸ்தை தெருவின் எல்லா வீடுககளில் இருந்து ஒரிரண்டு நல விசாரிப்புகளையாவது கடந்துதான் செல்லத்தான் முடியும். சுற்றிலும் நெருக்கமான உறவுகள், ஒருவர் வீடு விட்டாலும் கோபித்து கொள்வார்கள். கிராமத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் இன்ப அவஸ்தை அது. அதே அவஸ்தையைத்தான்அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் கடந்து இருக்க கூடும் இருக்கும் என இப்போது என்னால் உணர முடிகிறது. அவசர நேரத்தில் வந்தாலும் வண்டியில் இருந்து கீழே இறங்காமல் உட்கார்ந்த படியே எல்லா உறவினர் வீட்டின் வாசலில் நின்றபடியே ஒரு ஆரன் அடித்து ஹலோ சொல்லி விட்டு கடந்து விடுவார். அவருக்கு அத்தை முறையில் உள்ளவர்கள் எல்லாம் வாஞ்சையாய் அவரை கன்னத்தை பிடித்து நெட்டி முறிப்பார்கள். என்னதான் ரத்த உறவுகளாக இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத பிரச்சினைகளை பூதமாக்கி அங்கும் பங்காளிகளோடு முறைத்து கொண்டு போகும் என் கிராமத்து தெரு ஆட்கள் பேதமின்றி இவரிடம் எல்லோரும் எப்படி பிரியமாக இருக்கிறார்கள் என ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுவேன். கொஞ்சம் நான் வளர்ந்தவுடன் ஊருக்கு வரும் போது எப்போதாவது பார்த்தால் புன்னகைப்பார். பெரிய அளவில் பேசிக் கொண்டது இல்லை. அப்போதும் அவரது வண்டியும், ப்ராண்டட் சட்டையும், சிகரெட்டை அநாயசமாக ஊதுவதுமான‌ அவரது மேனரிசம் என்னை எப்போதும் விட்டு விலகவே இல்லை. காலம் ஆடிய பகடை ஆட்டத்தில் யார்தான் தப்பிக்க கூடும். வியாபாரத்தில் நட்டம், நண்பர்கள் சேர்க்கை என காலம் அவரை நிறையவே புரட்டி போட்டிருந்தன. ஒரு கட்டத்தில் பெரும் சரிவில் அவர் இருக்கிறார் என தெருவில் பேசும் பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.ஆனாலும் ஊருக்கு அவர் வரும் போது அவரது கெத்து ஒரு போதும் குறைந்ததே இல்லை. நாகரீகமான உரையாடலோடு கடந்து போவதுமான அந்த மனிதரை ஒரு பத்து வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டையில் நடந்த பிரபு அண்ணாவின் திருமணத்தில் விடுதியில் ஒரே அறையில் இருந்ததால் சந்தித்து பேச முடிந்தது. இப்போது நானும் முனைவர் ஆராய்ச்சியில் இருந்தேன். அதானால் அவருடன் தயக்கமின்றி பேச முடிந்தது. உங்கள் ப்ராண்டடு சட்டை, பேண்டும், இன்டி சுசுகி வண்டியும் என் பால்ய காலத்தில் என்னை பெரிதும் ஈர்த்தவை என்று அவரிடம் சொன்னபோது பெரிதும் சிலாகித்தார். ஆச்சரியமாக என்னை பார்த்து விட்டு, சாரி தம்பி உன்னிடம் அதிகம் பேசியது இல்லை என்றாலும் உன்னை பற்றி நம் உறவினர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் என்றார். ஒரு மணி நேரமாக அவரோடு பேசிக் கொண்டிருந்தாலும் தலை முறையினை கடந்து பேசத் தெரிந்த அவரோடு இயல்பாக என்னால் கடக்க முடிந்தது. திருமணத்திற்கு அவசியம் நீ எனக்கு பத்திரிக்கை அனுப்ப வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைத்தார். எனது காதல் திருமணத்தின் அவசரத்தில் விடுபட்ட பல உறவுகள் வட்டத்தில் அவரும் இருந்தார். ஆனால் நல்ல ப்ராண்டட் சட்டைகளை ஒவ்வொரு முறை எடுக்கும் போது அவரது நேர்த்தியான உடை உடுத்தும் முறை எப்போதும் ஞாபக இடுக்குகளில் இருந்து கொண்டே இருக்கும். சரி ஊருக்கு போகும் போது அவரை பார்த்தால் ஒரு சாரி சொல்லி விடலாம் என தோன்றும். ஆனால் நேற்று இரவு செருமனியில் இருக்கும் விஜய் மாப்பிள்ளை ஊரில் இருக்கும் மனோகர் மாமா மாரடைப்பால் தவறி விட்டார் என்று முகநூலில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. அவரது மூத்த அண்ணன் என் பிரியத்துக்குரிய இளங்கோ பெரியப்பாவும் தவறி ஒரு ஆண்டுதான் இருக்கும் என நினைக்கிறேன். சற்றேறக்குறைய 50 வயதின் தொடக்கத்தில் இருக்கும் மூன்று பெண் பிள்ளைகளின் தகப்பனாக அவரது மரணத்தினை அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வாழ்ந்த மனிதர்களை காலம் பொருளாதார ரீதியில் வீழ்த்தும் போது அதன் தீராத வலியில், தன் இருப்பியலை தக்க வைத்து கொள்ளவும் பழைய வாழ்க்கையில் இருந்து மீள முடியாமல் பல்லில் சிக்கி கொண்ட கரும்பு சக்கையை போல அவஸ்தையுறும் பல‌ மனிதர்களை பார்த்திருக்கிறேன். அந்த வரிசையில் மனோகர் சித்தப்பாவும் ஒருவர். அவரது தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி எழுதுவதை நான் நாகரீகமாக தவிர்க்கவே விரும்புகிறேன். என்னளவில் அவரை ஒரு ஹீரோவாகவே பார்த்திருக்கிறேன். அதுதான் என்னை எழுத தூண்டியது. நம்மையும் அறியாமல் நம் உடல் மொழியோ, பேச்சோ, எழுத்தோ நம்மை சுற்றி இருப்பவர்களை ஈர்க்கும். அந்த ஈர்ப்பின் ஒரு புள்ளியாகவே அந்த மனிதரும் இருந்தார். என் கிராமம் இப்போது பெரிதும் மாறி விட்டது. பெரும்பாலான வீடுகளின் பிள்ளைகள் கார்ப்பரேட் ஊழியர்களாகி விட்டார்கள். புலம் பெயர்ந்து பல நாடுகளில் இருந்தாலும் என் கிராமத்தின் முதல் ஸ்டைலிசான மனிதாராகவே நான் பார்க்கிறேன். இன்டி சுசுகி வண்டியில் சுற்றி திருந்த, எல்லோருக்கும் பிரியமான ஒருவர் அதே தெருவை இறந்த சடலமாக கடந்து அவரது வீட்டில் படுக்க வைக்கப்படும் போது என்ன மாதிரியான உணர்வுகள் இருந்திருக்கும் என்பதை என்னால் எழுத முடியவில்லை. ஒரே வருத்தம்தான் எனக்கு. கடைசி வரை அவருக்கு ஒரு சாரி சொல்ல முடியாமலேயே போய் விட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.



No comments:

Post a Comment