Thursday, 31 March 2016


குழந்தைகளுக்கு பிடித்த  மழை மனிதன்  


தூர்தர்சன் தொடங்கி பின்னாளில் பல்கி பெருகிய தமிழ் ஊடகங்களில் வரும்  நடிகர்களை தாண்டி செய்தி வாசிப்பவர்களுக்கென்று ஒரு தனித்த ரசிகர் குழு இருப்பதை கவனித்திருக்கிறேன். அந்த வரிசையில் ஊடகங்களுக்கு அரசு செய்தி அறிவிப்பாக வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அறிக்கை தரும் திரு ரமணன் அவர்கள் தமிழக பள்ளி மாணவர்களுக்கென்று மிகவும் பிடித்தவராக  மாறி இருக்கிறார். இவர் சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின்    இயக்குநராக பணி புரிந்தவர். நேற்றைய தினத்தோடு இவரது பணிக்காலம் முடிவடைகிறது.  இவர் பணி புரிந்த சென்னை வானிலை ஆராய்ச்சி மையமானது  இந்திய பருவநிலை துறையின் கீழ் இயங்கும் பிராந்திய அமைப்பு ஆகும்.

Mr Ramanan, Director, Regional Meterological Center, Chennai, India


தற்போது சமூக வலை தளங்களில் இவரை மழை மனிதராக அவதாரம் எடுத்திருக்க வைத்திருக்கிறார்கள்.

இவரை ஏன் குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது?

சம கால பள்ளிகள் விளையாட்டு, நூலக வாசிப்பு, இசை,நடனம் உள்ளிட்ட  கலையினை கற்றல் என்ற அகத் திறன் வெளியினைஅடியே ஒழித்து வெறும் மதிப்பெண்கள் எடுக்கும் கூடங்களாக மாற்றி சித்திரவதை செய்வதன் விளைவே தொலைகாட்சியில் தோன்றி கடும் கன மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என சொல்லும் ரமணனை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது.

விசயத்திற்கு வருவோம்.

வெகு சன மக்களுக்கு புரியும் மொழியில் இயல்பாக வானிலை அறிக்கை தரும் ரமணனை இணைய வெளியில்  எதன் பொருட்டு கிண்டல் அடிக்கின்றனர் என்று பார்த்தால் நம்மவர்களின் அறியாமைகளை வைத்து ஒரு பெரிய புத்தகமே போடலாம்.

இவர்கள் சொல்லும் ஒரே குற்றச்சாட்டு வானிலை அறிக்கை துல்லியமாக இருப்பதில்லை என்பதுதான். இப்படி குற்றம் சொல்லும் நபர்கள்தான்  இஸ்ரோ ஒவ்வொரு முறை பூமியை கண்காணிக்கும் செயற்கோளை ஏவும் போது எதற்கு என்று தெரியாமலேயே பத்தாம் பசலிகளாய் இணைய வெளியில் மொக்கைதனமாய் உளறுவதை பார்க்க முடிகிறது. இவர்களில் பலருக்கும் பருவ கால நிலை மற்றும் சுற்று சூழலை கண்காணிக்கும் செயற்கோள்களை இது வரை இஸ்ரோ எத்தனை திட்டங்களை வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளது என்பது கூட   தெரியாது.

பெரும்பாலான பொதுமக்கள் இவர்கள் மழை பற்றிய அறிக்கை தருவது மட்டுமே  இவர்கள் பணி என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக இவர்களின் அறிவிப்பு கடலோரத்தில் இருப்பவர்கள், மீனவர்கள், துறைமுகப் பகுதி  என அனைவருக்குமான பருவ கால சூழலை கணித்து எச்சரிக்கை தந்த வண்ணம்  இருப்பதால் பொதுமக்கள் இவ்வாறு நினைக்க தோன்றுகிறது.

பருவ நிலையின் முக்கிய கூறூகளான‌ அழுத்தம், வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு, காற்று மற்றும் வெப்ப சலனம் போன்றவற்றினை தானியங்கி பருவ மையம் (automatic weather station) மூலம் ஒவ்வொரு மணிக்கும் ஆய்வு செய்து தருகிறது.

விவசாயத்திற்கு மிகத் தேவையான‌ மழைப் பொழிவிற்கான‌ பருவ காற்றுகளின் தடம் அதன் போக்கு குறித்த இவர்களது ஆய்வு மிகவும் முக்கியமானது. இதற்காக முன் கூட்டியே கணித்து தரும் தகவல் மிக இன்றியமையாதது. முக்கியமாக, பேரிடர் காலங்களில் வெள்ளப் பெருக்கின் போது அதிக மழைப் பொழிவு இருக்கும் பகுதிகளை எச்சரிப்பது தொடங்கி இவர்களின் பணியினை அடுக்கி கொண்டே போகலாம்.

சூரிய ஆற்றல், காற்றாலை, கடல் அலையில் இருந்து மின்சாரம் எடுத்தல் போன்ற பணிகளில் எந்த இடத்தில் இத்திட்டங்களை நிறுவலாம் என்பது குறித்த‌  இவர்களின் ஆய்வு தரவுகள் மிக உதவியாக இருப்பவை. இவை தவிர புவி வெப்பநிலை (global mean temperature) குறித்த ஆய்வுதரவுகள் புவி வெப்பமயாமாதல்  குறித்த உலகளாவிய செயல்பாடுகளுக்கு மிக இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நிலநடுக்கம், சுனாமி குறித்த ஆய்வு மேற்கொள்வதும் இவர்களின் தனித்த பணியாகும்.


மேலே சொன்ன விசயங்களின் அடிப்படைகளை நாம் நம் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என்றாவது இவற்றினை செயல் விளக்க கல்வி மூலம் நம் பள்ளி மாணவர்களுக்கு தந்திருக்கின்றோமா.

சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சுற்றிப்பார்க்க‌ அனுமதி உண்டா. அவ்வாறு அனுமதி உண்டெனில் எத்தனை பள்ளிகள் சுற்றுலாவிற்கு அழைத்து சென்று காட்டி உள்ளீர்கள்?  இத்தனை ஆராய்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு நம் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்று காட்ட வேண்டும் என ஏன் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

சென்னையின் மத்திய பகுதியில் இருக்கும் அறிவியல் துணை நகரம் என்று ஒன்று உள்ளதை எத்துணை பேர் அறிந்திருக்கிறீர்கள். அதன் செயல்பாடு என்ன என்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறீர்களா.

ஆனால் அமெரிக்காவில் இருக்கும் நாசாவையும் (NASA) அங்கு சென்றால்தான் பள்ளி குழந்தைகளுக்கு அறிவு கிட்டும் என்று ஏன் பொய்யான பிம்பத்தை பெற்றோர்களிடம் கட்டி அமைத்து பெரும்பாலான தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் பணம் கறப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நம்மிடம் இருக்கும் நல்ல அறிவியல் நுட்ப மையங்களை நாமே புறக்கணிக்கலாமா?


இது போன்ற சூழலில் ஜப்பான் போன்ற நாடுகள் எவ்வாறு தங்களிடம் உள்ள ஆய்வு மையங்களில் பள்ளி குழந்தைகளுக்கு அறிவை ஊட்டுகிறார்கள் என்ற என் அனுபவத்தினை பகிர விரும்புகிறேன்.

சப்பானின் மேற்குபகுதியில் உள்ள ஒசாகா (osaka) நகரத்தின் கீழ் பகுதியில் கியோகோ எல்லையில் (Hyogo prefecture) உள்ளது அகாசி என்னும் நகரம். இந்நகரின் முக்கியமான‌ சிறப்பு இந்நகரின் வழியாகத்தான் ஜப்பான் நாட்டின் நேரத்தினை நிர்ணயிக்கும் பூமத்திய ரேகைகோடு செல்கிறது. ஏறத்தாழ 1886 ஆம் ஆண்டில் ஜப்பான் நிலையான நேரத்தினை (Japan Standard Time) கணக்கிட தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட போது, உலக நேரத்தோடு ஒப்பிடும் நிலையான நண்பகலை (meridian) கணக்கிட ஏதுவான நகரம் என தெரிவு செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அகாசி நகராட்சி கோளரங்கத்தினை (Akashi Municipal Planetarium) வடிவமைத்தனர். தற்போது இது JSTM என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  ஆகவே இந்நகரம் செல்லமாக “நேரத்தின் நகரம்” (Toki no machi) என ஜப்பானியர்களால் அழைக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணம் 600 யென். பள்ளி மாணவகளுக்கு முற்றிலும் இலவசம். அலுவல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பதினாறு தளங்களில் ஒரு சில தளங்கள் மட்டுமே சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறார்கள்.
Akashi Municipal Planetarium, Japan


Akashi Municipal Planetarium

Akashi Municipal Planetarium

Akashi Municipal Planetarium

Akashi Municipal Planetarium

World time comparison, Akashi Municipal Planetarium


பள்ளி மாணவர்களுக்கு விண்வெளியினை (galaxy systems) பற்றிய பிரத்யோகமான முப்பரிமான படங்களை இரண்டாவது தளத்தில் திரையிடுகிறார்கள். மூன்றாவது மட்டும் நான்காவது தளத்தில் உள்ள கோளரங்க அருங்காட்சியகம் (planetarium museum) சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக காண வேண்டியது. சூரியன் எவ்வாறு நகர்கிறது எனபதனை நுட்ப வடிவமைப்புகளை கொண்டு பொம்மைகள் மூலம் விளக்குகிறார்கள். பள்ளி குழந்தைகள் விளையாட்டின் மூலம் சூரியகடிகாரம், கோள்களின் அமைப்பு, அவை எவ்வாறு சூரியனை சுற்றி வருகிறது. பூமத்திய ரேகை, அட்ச ரேகை, தீர்க்க ரேகை போன்றவற்றினை பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். கடிகாரம் எவ்வாறு வேலை செய்கிறது அவற்றின் பரிணாம வளர்ச்சி போன்றவற்றினை எளிமையாக விளக்குகிறார்கள்.


இக்கோளரங்கின் சிறப்புகள் சிலவற்றினை மட்டும் விளக்குகிறேன். 1) விண்வெளியில் கற்கள் எப்படி இருக்கும் என்பதனை நேரடியாக கண்டு உணரலாம். 2) கோள்கள் சூரியனை சுற்றி வரும் பால் வீதீயினை மாணவர்கள் விளையாடும் வண்ணம் அமைத்திருப்பதால் மாணவர்கள் ஒவ்வொரு கோளுக்கு ஒருவராக நின்று சுற்றி வருவதன் மூலம் கோள்களின் சாய்வு கோணத்தினையும், நேரத்தினையும் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. 3) உலகின் பழமையான வானியல் நுண்ணோக்கிகள், மற்றும் கடிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 4) ஜப்பானின் நிலையான நண்பகல் நேரத்தினையும், மற்ற உலக நாடுகளின் நேரத்தினையும் ஒப்பிட்டு அறியும் வண்ணம் பார்வைக்கு வைத்துள்ளார்கள். 5) 1950 களில் ஜப்பானின் சேய்கோ (SEIKO) நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட குவார்ட்ஸ் படிகத்தால் ஆன (quartz) டிஜிட்டல் கடிகாரம் வைக்கப்பட்டுள்ளது.  ஏறத்தாழ 6 அடிக்கு பெரிய  அலமாரி அளவில் உள்ளது. தற்போது நகத்தினை விட சிறிதாக வடிவமைக்கப்படுகின்ற டிஜிட்டல் கடிகாரங்கள் 60 வருடங்களுக்கு முன்பு எப்படி பெரிய அளவில் இருந்திருக்கின்றது என பார்த்த போது அளவிற் சுருக்குதல் (miniaturization) என்ற விஞ்ஞான நுட்பத்தினை வியக்காமல் இருக்க முடியவில்லை.


இந்த ஆய்வு மையத்தினை சுற்றிப் பார்க்கும் பள்ளி மாணவர்கள் கையில் ஒரு வினாத்தாள் இருக்கும். அவற்றிகான விடையினை உள்ளே சுற்றிப் பார்த்து விடை எழுதி தருகிறார்கள். அவ்வாறு விடை எழுதி தரும் மாணவர்களுக்கு பரிசுகள் தருகிறார்கள். இந்த மையத்திற்கு வரும் பள்ளி மாணவர்கள் சூரியனை மையமாக கொண்ட பூமியின் சுழற்சி முதல் பருவ காலங்களை எப்படி கணக்கிடுவது வரை நேரடியாக விளையாட்டுகள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.


இது போன்று நம் சென்னையில் உள்ள துணை அறிவியல் நகரை போர்க்கால அடிப்படையில் புணரமைக்கலாம். பள்ளி குழந்தைகளை அங்கு அழைத்து சென்று அவர்களுக்கு அறிவியல் நுட்ப அறிவினை ஊட்டலாம்.  தற்போது ஓய்வு பெறும் திரு ரமணன் அவர்களை இத்திட்டத்திற்கு தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்.

த‌ங்கள் ஓய்வுக் காலம் மிகச் சிறப்பாக அமைய எமது வாழ்த்துகள்.
No comments:

Post a Comment