Friday, 6 January 2017


பூச்சிகள் இயக்கும் ரோபோட் (Insect controlled Robot)

விலங்குகள், பூச்சிகள், பறவைகள் யாவுமே இயற்கையின் படைப்பில் மனிதர்களுக்கு நிகராக‌ அதற்குரிய தனித்தன்மை வாய்ந்த குணங்களில் விசேசமானவைதான்.

சில நேரங்களில் நாய், பூனை போன்றவை மனிதர்களால் பயிற்றுவிக்கப்பட்டு அவைகள் சிறிய ரக வண்டிகளை ஓட்டுவதை பார்த்திருப்பீர்கள்.

ஒரு வேளை இதே செயலை சிறிய பூச்சி ஒன்று தானாகவே செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நினைக்கவே வியப்பாக உள்ளதா?

ஜப்பானில் உள்ள தோக்கியோ பல்கலைக் கழகத்தில் உள்ள நொரியாசு அந்தோ, சுகெய் எமொதொ, ரியொகி கன்சாகி ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சி குழுவானது விட்டில் பூச்சி அல்லது அந்துப் பூச்சிகளின் (moth) வாசனை அறியும் திறனை கண்டறிய ஒரு சிறிய ரக ரோபோட் காரை வடிவமைத்து வெற்றி கண்டுள்ளனர்.

Schematic of Insect-controlled robot (reprint from Anto et al, J. Vis. Exp. (118), e54802, doi:10.3791/54802 (2016)
அதாவது பூச்சி இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் வைக்கப்படும் வாசனை திரவியம் வைக்கப்பட்டிருக்கும். இயற்கையில் இந்த உந்துப்பூச்சிகள் வாசனையினை நன்கு அறியும் திறன் உடையவை. இந்த குணத்தை கொண்டு இலக்கினை முகர்ந்த படியே பூச்சி செல்ல வேண்டும். இது சரியான இலக்கில்தான் செல்கிறதா என கண்டறிய காற்றி நிரப்பப்பட்ட‌ பந்து ஒன்றை   ஓட்டுநர் இருக்கையாக‌ காரினுள் பொருத்தி உள்ளனர். இப்போது அந்துப்பூச்சி அந்த பந்தை ஒரு ஸ்டிரியங் போல தன் கால்களால் சரியான திசையில் திருப்பி வாசனை திரவியம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அந்த காரை செலுத்துகிறது.


Airflow designs for the treadmill and the odor delivery system (Reprint from Anto et al, J. Vis. Exp. (118), e54802, doi:10.3791/54802 (2016) 

இந்த ஆய்வில் செய்யப்பட்ட பல்வேறு சோதனைகளில்,  நடந்து செல்லும் அந்துப்பூச்சிகளோடு ஒப்பிடுகையில் ரோபோட்களில் பொருத்தப்பட்ட பூச்சிகள் இரண்டு வினாடிகள் தாமதமாக இலக்கை சென்றடைகின்றன. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் இயற்கையில் காணப்படும் உயிரினங்களின் குணங்களில் இருந்து தழுவப்பட்டு செயற்கையாக வடிவமைக்கப்படும் ரோபோட்களை வடிவமைப்பதில் (biologically inspired odor detection systems) பெரும் உதவியாக இருக்கும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சரி இந்த செயல் மூலம் என்ன பயன் என்றுதானே கேட்கிறீர்கள்.

அளவில் மிகச் சிறியவையாக இந்த உந்துப் பூச்சிகள் இருப்பதால் இதனை வாசனையறியும் திறன் மூலம் சிறிய ரக ரோபோட்களை  உருவாக்கி இலக்குகள் நோக்கி துல்லியமாக செலுத்த முடியும். இந்த உத்தியினை பயன்படுத்தி வழமையாக போதை பொருட்களை கண்டறியப் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு (Sniffing dog) பதிலாக இதனை பயன்படுத்த இயலும். மேலும் பேரிடர்காலங்களில் மீட்பு பணிகளுக்கும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வேதி வாயு கசிவுகளை கண்டறியவும் இந்த ஆராய்ச்சி முடிவுகளை பயன்படுத்தலாம்.

ஜப்பான்காரர்கள் விரைவில் பூச்சிகளை கொண்டு பறக்கும் மினி ரோபோட்களை சந்தையில் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உயிரியல் ஆராய்ச்சியும், எலக்ரானிக் துறையும் கைகோர்க்கும் அறிவியல் நுட்பம் மனிதர்களின் வாழ்வை மேம்படைய வைப்பவை என இந்த ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. அவர்களுக்கு நம் வாழ்த்துகளை சொல்வோம்.


 Video Courtesy: சயின்ஸ் இதழ் (www.sciencemag.org)

மூல ஆராய்ச்சி கட்டுரை: 
Ando, N., Emoto, S., Kanzaki, R. Insect-controlled Robot: A Mobile Robot Platform to Evaluate the Odor-tracking Capability of an Insect. J. Vis. Exp. (118), e54802, doi:10.3791/54802 (2016)







1 comment:

  1. அருமையான தகவல் மகிழ்ச்சி
    தொடரட்டும் இது போன்ற பயணங்கள்

    ReplyDelete