அறிவியலை முடக்கும் வதந்திகளும், மூடநம்பிக்கைகளும்
முன்னைப் போல் ஏன் அடிக்கடி பயணக் கட்டுரைகள் அதிகம் எழுதவில்லை என நண்பர்கள்
இன்பாக்சில் கேட்கிறார்கள்.
கூட்டு ஆராய்ச்சிக்காக
தொடர்ச்சியான ஆய்வு கட்டுரைகள் எழுதுவது மற்றும் இன்னும் பிற அலுவல்களால் பெரிய அளவில்
புதிய பயணங்களை திட்டமிட இயலவில்லை. ஆனால் மார்ச் மாதவாக்கில் ஓரிரு மாதங்களுக்கு ஜப்பான்
சென்று வரலமா எனவும் திட்டமிட்டு கொண்டுள்ளேன்.
இணையத்தில் பெரும்பாலும் மூடநம்பிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டுவதிலேயே
எனது பொக்கிசமான நேரம் கழிகிறது. இதற்கு நடுவில் வாட்சப்பில் வரும் "உண்மையான்
தமிழனா இருந்தா ஷேர் பண்ணு", என உயிரை எடுக்கும் மூடர்களின் செய்திகளும் என் நேரத்தை
எடுத்துக் கொள்கிறது.
நேற்று தமிழகத்தையே சுற்றி வந்த ஒரு வதந்தியை பற்றி இங்கே சொல்லியாக
வேண்டும்.
ஒரு அரசு தன் குடிமக்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருப்பவர்களின்
குழந்தைகளுக்கும் தடுப்பூசி போன்ற மருத்துவ வசதிகள் செல்ல வேண்டும் என்று மெனக்கெட்டு
பள்ளிகளில் இதனை கட்டாயமாக்க அறிவுறுத்துகிறது. ஆனால் எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல்
ஒரு விசமி வாட்சப் ஆடியோவை இரவில் அனுப்புகிறான் அது விடிவதற்குள் தமிழகத்தின் மூலை
முடுக்கெங்கும் சுற்றி வந்து விட்டது.
அரசின் நலத் திட்டங்களையே முடுக்கும் அளவிற்கு சதி செய்யும்
இந்த கும்பலின் பின் புலம் என்ன?
இதில் மிகக் கொடுமை, படித்த பலரும் உலகின் பல நாடுகளில்
உட்கார்ந்து கொண்டு இந்த விசமிகளை ஆதரிக்கிறார்கள். அவர்களின் பார்வையில் உலகெங்கும்
உள்ள ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் பன்னாட்டு கைக்கூலிகளாக சித்தரிப்பதே. இவர்கள் தான்
மக்களிடம் அறிவியலை கொண்டு செல்லாமல் தடுப்பவர்கள் என நினைக்கிறேன்.
அறிவியல் நுட்பத்தின் வளர்ச்சியினை சோதனை முடிவுகள் கொண்டே
தர்க்க ரீதியில்தான் அலச வேண்டும். இப்படி விசமத்தனமான பரப்புரையால் அல்ல.
இந்த சம்பவத்தை பார்க்கையில் தன் வாழ்நாளையே அறிவியலுக்காக
அர்ப்பணித்து பூமி சுரியனைத் தான் சுற்றி வருகிறது என நிறுவ முயன்ற “கலிலியோ” என்ற வானவியல் அறிவியலாளர் அந்நாட்டின்
மத அடிப்படைவாதிகளால் எப்படி துன்புறுத்தி
முடக்கப்பட்டார் என்ற செய்தியினை பற்றி இங்கே பகிர்ந்தால் மிகச் சரியாக இருக்கும்.
அறிவியலை புறந்தள்ளி மூடநம்பிக்கையின் பெயரால் ஆட்டம் போட்ட அடிப்படை மதகுருமார்களால் கலிலியோ வீட்டுச் சிறையில்
இருந்த காலத்தில் அந்த சூழலை சித்தரிக்கும் சிலையொன்று நான் பணிபுரிந்த குயின்சு பல்கலைக்
(Queens University Belfast) கழகத்தில் லென்யார்டு கட்டிட வரவேற்பரையில் மக்கள் பார்வைக்கு உள்ளது.
இந்த கலிலியோ சிலையினை உலகின் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு சிற்பக்
கலைஞர் பியோ பெடி (Pio Fedi) அவர்கள் மார்பிள் கல்லில் வடித்துள்ளார்.. பியோ பெடியின்
பிரச்சித்தி பெற்ற “ரேப் ஆப் பாலிகெசனா” (Rape of Polyhexana). இத்தாலியின் பிளாரன்சு
நகரத்தில் இன்றும் இந்த சிலையினை பார்க்கலாம்.
கலிலியோ, பைசா நகரில் ஒரு சாதாரண கணித விரிவுரையாளராக பணி புரிந்து
கொண்டிருந்தார். இடையில் மனுசன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நல்ல வாத்தியார் வேலைக்கு அல்லோலப் பட்டிருக்கிறார்.
1595 வரை வானவியலில் அவருக்கு பெரிய ஆர்வம் ஏற்பட்டு இருக்க
வில்லை. இந்த கால கட்டம வரை அவர் கோபர் நிக்கசின் கோட்பாடுகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல்
தான் இருந்தார்.
1590 ஆம் ஆண்டு கலிலியோ De Motu (பொருட்களின் இயக்கம்) என்ற
கட்டுரையினை வெளியிட்டார். இதில் தனது ஆதர்சன பிம்பங்களான அரிஸ்டாட்டில் மற்றும் ஆர்க்கிமிடீஸின்
தத்துவங்களை மேற்கோள் காட்டியிருந்தார். இத்தையக கால கட்டங்களின் பண்டைய கிரேக்கர்களின்
"பூமியே அண்டத்தின் மையத்தில் உள்ளது" என்ற கோட்பாட்டினை அவரும் நம்பிக்
கொண்டிருந்தார். இந்த நம்பிக்கை அவர் வீட்டுக்கு வந்த ஒரு உறவினர் எதேச்சயாய்
தந்த கெப்லர் (Kepler) எழுதிய மிஸ்ட்டீரியம் காஸ்மோகிராமியம் புத்தகம்தான் கலிலியோவை
அட்ரா மச்சான் விசிலு என வானவியல் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
தொடர்ந்து கெப்லருக்கு கடித பரிவர்தனை மூலம் தனது வானவியல்
பற்றிய அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே பின்னாளில் புதிய வானவியல் கொள்கை
ஏற்பட பெரிதும் வழிகோலாக இருந்தது.
ஆனால், ஹேலியோ சென்ட்ரிக் (பூமியும் மற்ற கோள்களும் சூரியனை
சுற்றுகிறது) கோட்பாட்டினை எடுத்த வைத்த கோபர் நிக்கஸ் தொடங்கி கலிலியோ வரை அப்போதைய
மத குருமார்கள் வீட்டுச் சிறையில் வைத்து முடக்கப்பட்டார்கள்.
கலிலியோவின் இரண்டு கண்டுபிடிப்புகள் உலகையே உலுக்கியது.
1. வேறு, வேறு எடையுள்ள பொருட்கள், மேலே இருந்து விழும் போது
ஒரே திசைவேகத்தில் பயணிக்கின்றன. காரணம் புவி ஈர்ப்பு விசை எல்லா பொருட்களின் மீதும்
மாறிலியாக செயல்படுகிறது என பல்வேறு சோதனைகள் மூலம் நிறுவினார். (பைசா நகர கட்டிடத்தில்
இருந்து வெவ்வேறு எடையுள்ள குண்டுகளை கீழே போடும் போது எவ்வாறு ஒரே நேரத்தில் கீழே
விழுகிறது. , ஒரு பீரங்கியில் இருந்து சுடப்பட்ட குண்டுகள் எவ்வாறு ஒரு பரவளைய பாதையில்
செல்கிறது போன்ற சோதனைகள் பிரபலமானது.
2. இரண்டவாது அவர் வடிவமைத்த நிறப்பிரிகை அடிப்படையிலான ஒளி
நுண்ணோக்கி. இதன் மூலம் வானில் உள்ள நட்சத்திரங்களை பற்றி மேற்கொண்டு ஆராய உதவியாக
இருந்தது.
கன்னத்தில் கை வைத்தபடி இருக்கும் இந்த கலிலியோ சிலை அழகியலின்
உச்சம். மிக சோர்வாக, அடுத்த என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாத நிலையில் இருக்கும்
ஒரு மனிதனின் உள் உணர்வுகளை மிகத்துல்லியமாக இந்த சிலைக்கு வயது 150க்கும் மேல் இருக்கும்.
என்னதான் கலிலியோ போன்ற அறிவியலாளர்களை முடக்க நினைத்தாலும்
வரலாற்றின் பக்கங்களில் அறிவியலின் முடிவுகளே வென்றது.
உங்களுக்கு வரும் வாட்சப் பதிவுகளை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து
பாருங்கள். பிறகு அது சரியென தீர்க்கமாக முடிவு செய்த பின் அடுத்தவருக்கு அனுப்புங்கள்.
ஏனெனில் வதந்தி என்னும் ஆள் கொல்லும் கன்னியில் நாமும் நம்மை அறியாமல் சிக்க வைக்கப்
படுகிறோம் என்பதை உணருங்கள்.
Galileo Galilei statue at Queens University Belfat, Northern Ireland |
No comments:
Post a Comment