டியூரோ நகர தேவாலயம் (Truro Cathedral)
ஒரு நகருக்கான எந்த பரபரப்பும் இல்லாமல், அமைதியாக படுத்திருக்கும் ஒரு
பசுவின் கன்றை போலவே டியூரோ (Truro) நகரம்
இருந்தது. கொஞ்சம் சூரிய ஒளியின் கதகதப்பில் மக்கள் அங்குமிங்குமாக நகரத் துவங்கிய
மதிய நேரத்தில் தான் டியூரோ நகர தேவலாயத்திற்கு (Turo Cathedral) சென்றோம்.
என் உடன் வந்திருந்த பேராசிரியர் செந்தில் அண்ணா, பல முறை இந்த
தேவாலயத்தை பார்த்திருப்பதால் நான் வெளியில் அமர்ந்திருக்கிறேன். நீ வேண்டுமானால்
உள்ளே சென்று சுற்றிப் பார்த்து விட்டு வா என்று சொல்லி விட்டார்.
சரி அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லி விட்டு
நான் மட்டும் தேவாலயத்தின் உள்ளே
சென்று ஒரு சுற்று சுற்றினேன்.
இந்த டியூரோ நகர தேவாலயம் கன்னி மேரியின் ஆசிர்வாதம் பெற்றது என மக்கள்
நம்புகின்றனர். இந்த தேவாலயம் 1880 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1910 ஆம் ஆண்டு
கட்டி முடிக்கப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த தேவாலயம் இருக்கும் இடத்தில் தான் 1259
ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட பாரிஸ் வழிபாட்டு தலம் (Parish Church) இருந்தது. பிறகு அதனை
இடித்து விட்டு புதிய தேவாலயம் கட்டலாம் என முடிவெடுத்த போது முழுவதும் இடிக்க வேண்டாம்
என போராடி பழமையின் நினைவாகஒரு பகுதியினை (தெற்கு பகுதி) புதிய கட்டிடத்துடன்
இணைத்து விட்டனர்.
ஆகையால் நீங்கள்
இந்த தேவாலயத்திற்கு சென்றால் பின்புறம் இருக்கும் பழைய பகுதியினை காணலாம்.
இந்த
தேவாலயத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் மத்திய கால கட்டத்தில் (Mediaval
Period) ஐரோப்பாவில் பெரிதும் பேசப்பட்ட கோத்திக் (Gothic architecture) பாணியிலான
கட்டிட அமைப்பில் இதன் மேற்கூறைகள் வேயப்பட்டுள்ளது. இது போன்ற கட்டிட அமைப்பினை
சென்ற வருடம் ஸ்பெயின் தேசத்தின் பார்சிலோனா நகருக்கு சென்ற போது அங்குள்ள தேவாலயங்களில்
பார்க்க முடிந்தது. அங்குள்ளது போலவே வண்ணங்களால் ஆன கண்ணாடி பூச்சு ஓவியங்களை இங்குள்ள
சுவற்றில் பார்க்கலாம்.
டியூரோ
நகர தேவாலயத்தின் மற்றொரு சிறப்பு இங்கு நடைபெறும் ஆர்கன் இசையோடு கூடிய அற்புதமான ஆராதனை வழிபாட்டு பாடல்கள். நான் உள்ளே சென்ற
பொழுது மதிய நேர ஆராதனை பாடல்களுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். 2
நிமிடம் கண்ணை மூடி அப்பாடலை கேட்க அவ்வளவு சுகமாக இருந்தது.
ஒருவழியாக
சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்து வாசலில் தேவாலயத்தின் உச்சியை அண்ணாந்து
பார்த்து கொண்டிருந்தேன். தெளிவாக மேகங்கள் பின்னனியில் கோபுர உச்சி அழகியலோடு
மின்னியது. ஆனால் நீண்ட நேரம் பார்த்தால் நிச்சயம் கழுத்து சுளுக்கி கொள்ளும்.
சும்மாவா, 76 மீட்டர் உயரம் ஆயிற்றே.
தேவாலயத்தின்
வாசலில் அரை வட்டமாக இருக்கும் முகப்பு பகுதியில் 200 பேர் வரை
உட்காரும் அளவிற்கு விலாசமாக இருக்கிறது. கொஞ்சம் மர பெஞ்சுகள், பூத் தொட்டிகள்
வைக்கப்பட்டுள்ளது. தேவலாயத்தை ஒட்டி நகரின் சந்துகள் போகிறது. எதிரில் ஒரு தபால்
நிலையம் உள்ளது. தேவாலயத்தை ஒட்டிச் செல்லும் புனித மேரி தெருவில் மட்டும்
மகிழுந்துகள் போகிறது.
**இந்த சுட்டியில் தேவாலயத்தின் உள் பகுதியினை சுற்றிப் பார்க்கலாம்
வாசலில்
சிறிது நேரம் உட்கார்ந்து பேசி விட்டு பக்கத்து தெருவில் சென்று புகைப்படம்
எடுக்கலாம் என நகரத் துவங்கினோம். அப்போது வழியில் வந்து கொண்டிருந்த உள்ளூர்
பாட்டி எங்களை விசாரிக்க துவங்கினார். அவருக்கு வயது எப்படியும் 90 இருக்கும்.
நாங்கள் பேசுவதை ஒரு முறைக்கு இருமுறை கேட்டபின்பே எங்களுடன் உரையாடினார்.
நாங்கள்
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றதும் அவருக்கு மகிழ்ச்சி. அவரது கணவர் ஒரு
வெள்ளைக்காரர். சுதந்திரத்திற்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் பிறந்து
வளர்ந்தவர். பிறகு பிரித்தானியாவின் ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பிரித்தானியாவிற்கு வந்து விட்டார் எனச் சொன்னார்.
அவர் பணி
புரிந்த காலத்தில் போரில் நிறைய மக்களை கொல்லவேண்டிய சூழல் இருந்ததாகவும் பின்னர் கடுமையான மன உளைச்சலில் தவித்ததாக சொன்னார். பிறகு இந்த மன உளைச்சலில் இருந்து மீள ஆப்ரிக்கா சென்று அங்குள்ள
மருத்துவமனையில் இருவரும் மக்களுக்கு சேவை செய்துள்ளனர்.
எங்களோடு
பேசிக் கொண்டிருந்தவர், தேவாலயத்தின் எதிரே இருந்த ஒரு கற்தூணை சுட்டிக் காட்டினார். அவர்
காட்டும் வரை அவ்வளவு நேரம் அங்கிருந்த எங்களுக்கே அது புலப்படவில்லை. அதன் மீது
எந்த வித தகவலும் இல்லை.
என்ன பாட்டி, இந்த தூணில் என்ன விசேசம்? என்றோம்.
அவர்
சிறு வயதில் இருந்த போது, இந்த நகரில் தவறு செய்பவர்களை அந்த தூணின் முன்பு
நிறுத்தி கடுமையான தண்டனை தந்துள்ளனர்.
ஆனால், இன்று அந்த கல் தூண் எந்த சுவடும் இல்லாமல் அமைதியாக ஒரு மூலையில் நின்று கொண்டிருக்கிறது.
அதன் அருகில் இருக்கும் மர பெஞ்சில் இருந்த ஆண்களும், யுவதிகளும் செல்பி எடுத்து
விளையாண்டு கொண்டிருந்தனர்.
எழுபது
வருடங்களில் இந்த இடம் அடைந்த மாற்றத்தினை ஆச்சரியத்துடன் எங்களுக்கு விளக்கி
கொண்டிருந்தார்.
உண்மையில்
சக மனிதர்களின் மேல் அன்பை பொழிவதில் மானுடத்தின் மேன்மை உலகமெங்கும் பெருமளவில்
முன்னேறி இருந்தாலும் இன்னும் போர் நின்று
விட்டதாக தெரியவில்லை. அதன் சாட்சியாகவே அந்த தூண் தெரிந்தது. அந்த தூண் மீண்டும்
உயிர்தெழவே கூடாது என நினைத்து கொண்டு அங்கிருந்து நகரத் துவங்கினோம்.
குறிப்பு:
வாய்ப்பு கிடைத்தான் பிரித்தானியாவில், கார்ன்வெல் பகுதியில் உள்ள
இந்த டியூரோ நகர தேவாலயத்தை சுற்றிப் பார்க்க தவறாதீர்கள். இந்த இடம் லண்டனில்
இருந்து சுமார் 400 கி,மீ தொலைவில் உள்ளது
டியூரோ தேவாலய முகப்பு (Truro Cathedral) |
டியூரோ தேவாலய முகப்பு (Truro Cathedral) |
டியூரோ தேவாலய முகப்பு (Truro Cathedral) |
டியூரோ தேவாலய உள் மேற்கூரை (Truro Cathedral) |
டியூரோ தேவாலய உள் பகுதி (Truro Cathedral) |
டியூரோ தேவாலய உள் பகுதி (Truro Cathedral) |
வெளிப்புற வட்ட வடிவிலான சன்னலின் உட்பகுதி |
வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய பூச்சு
|
வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய பூச்சு |
வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய பூச்சு |
|
வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய பூச்சு |
தெற்கு பகுதியில் உள்ள இரட்டை கோபுரங்கள்
|
தெற்கு பகுதியில் உள்ள இரட்டை கோபுரங்கள்
|
கோவில் வாசலில் உள்ள தண்டனைத் தூண்
|
கோவில் வாசலில் உள்ள தண்டனைத் தூண்
|
No comments:
Post a Comment