சரித்திரமாகும் புகைப்படங்கள்
இந்த புகைப்படத்தினை ஒரு வித்தியாசமான சூழலில் பதிவு செய்தேன்.
அந்த மதிய வெய்யிலில் வானத்தை கிழித்துக் கொண்டு போர் ரக விமானங்கள்
பறந்து பறந்து சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. சுவான்சி நகர கடற்கரை முழுவதும்
எப்போதும் இல்லாத அளவிற்கு கூட்டம் வழிந்து கொண்டிருந்தது. எல்லா கண்களும் வானத்தையே
பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் இவற்றை துளியும் சட்டை செய்யாமல் நாலைந்து சிறுவர்கள்
கடற்கரையில் குதுகலமாக ஈர கால்சட்டையோடு நீளம் தாண்டுதல் விளையாட்டில் மும்முரமாய்
இருந்தனர். கடைசி வரை அந்த சிறுவர்களில் எவனும் வானத்தை அண்ணாந்து கூட பார்க்கவில்லை.
அவர்களின் உலகில் அவர்கள் கரைந்து கொண்டிருந்தார்கள்.
யார் கண்டது நாளை இந்த சிறுவர்களின் எவனாவது ஒருவன் விமானத்தை
ஓட்டிக் கொண்டு தாங்கள் விளையாண்ட கடற்கரையினை மேலிருந்து ஏக்கத்தோடு பார்க்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன்.
புகைப்படங்கள் நாம் வாழ்ந்த வாழ்க்கையினை மட்டும் சொல்வதில்லை,
ஒரு தலைமுறையின், ஒரு இடத்தின் வரலாற்றை சொல்கிறது. சில நேரங்களில் சின்ன புகைப்படங்கள் பலருக்கும் உந்துதலாகவும்,பாடமாகவும்
பல புகைப்படங்கள் உலக அளவில் நிலைத்து நின்று விடுகிறது.
புகைப்படங்கள் எடுத்தால் ஆயுள் குறைவு என்ற மூடநம்பிக்கைகளில்
இருந்து வெளியேறி ஆபத்தான சூழலில் செல்பி எடுத்து உயிரை போக்கி கொள்ளும் அளவிற்கு நவீனமாகி
இருக்கிறோம்.
தன்னை சுற்றி இருக்கும் இயற்கையினை, ஒளியின் ரகசியங்களை, சக
மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்ய எப்போதும் தங்கள் கழுத்தில் காமிராவை
சுமந்து திரியும் எல்லா ஒளிப்பதிவு கலைஞர்களுக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துகள்.
இன்றைய புகைப்படம் நாளைய சரித்திரம்.
No comments:
Post a Comment