Wednesday, 6 July 2016


கருப்பு சட்டைக்காரன் ‍ - சுவான்சி ஜாக் (Swansea Jack)


இன்று சுவான்சி கடற்கரையோரம் மெது ஓட்டத்தை முடித்து விட்டு வரும் வழியில் சுவான்சி கிரிக்கெட் கிளப் மைதானத்திற்கு எதிரே கடற்கரையோரம் வைக்கப்பட்டிருந்த ஒரு நினைவுச் சின்னம் என்னை ஈர்த்தது.

சுவான்சி ஜாக் என்ற பெயரோடு, ஒரு நாயின் சிற்பம் அந்த நினைவு சின்னத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த தகவல் இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜாக் கருப்பு நிற ரெட்ரீவர் இன வகையை சேர்ந்தது. ஜாக் தன் உரிமையாளர் வில்லியம் தாமசு என்பாருடன் வேல்சு தேசத்தின் சுவான்சி நகருக்கு அருகே தவே (Tawe) நதிக்கரையில் வாழ்ந்து வந்தது. ஜாக் 1930 ஆம் ஆண்டு பிறந்திருக்க வேண்டும் என்பதை அங்கிருந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.சுவான்சி ஜாக்கின் நினைவு சின்னம்

சுவான்சி ஜாக்கின் நினைவு சின்னம்

ஒரு நாள் ஜாக்கும், தாமசும் நடந்து சென்று கொண்டிருந்த போது அருகே ஒரு நீர் நிலையில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கும் ஆபத்தில் இருந்த போது உள்ளே நீந்திச் சென்று துணிச்சலுடன் அவனை காப்பாற்றியது. அச்சம்பவத்திற்கு பிறகு தான் வாழ்ந்த ஏழு வருடங்களில் 27 நபர்களை நீரில் மூழ்கும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளது.

பல உயிரை காப்பாற்றிய ஜாக் துரதிஸ்டவசமாக எலிக்கு வைக்கப்பட்டிருந்த விசத்தை உண்டு 1937 ஆம் ஆண்டில் தன் இன்னுயிரை இழந்தது. 

நீரில் மூழ்கும் மனிதர்களை நீந்தி சென்று துணிச்சலுடன் அவர்களை கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் ஐந்தறிவு படைத்த ஒரு அற்புத விலங்கு அதை செய்வது மிகப்பெரிய சாதனைதான்,

ஜாக்கின் மறைவினை போற்றும் வகையில் அதன் உடல் பொதுமக்களால் நினைவு கூறும் வண்ணம் சுவான்சி கடற்கரையில் அதன் உடல் எரிக்கப்பட்டு அங்கு பெரிய நினைவு சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. 

இன்றும் வேல்சு தேசத்தில் வீர தீர செயல்களுக்கு சுவான்சி ஜாக் என்னும் வார்த்தை ஒரு உத்வேக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. உலகின் நினைவுகூறத்தக்க ஆற்றல் மிகு நாய்களின் பட்டியலில் சுவான்சி ஜாக்கின் பெயரும் உள்ளது. 

நான் சென்ற சமயம், ஜாக்கின் கல்லறையின் மீது வைக்கப்பட்டிருந்த சிறு மலர் கொத்து, இன்றும் ஜாக் மீது இங்குள்ள மக்கள் வைத்திருக்கும் பாசத்தை உணர முடிகிறது.

  
ஜாக் தன் உரிமையாளர் வில்லியம் தாமசுடன்.

ஜாக் தன் உரிமையாளர் வில்லியம் தாமசுடன்.குறிப்பு:
எல்லா நாய்களும் ஜாக் போன்றதுதான். அதன் மேல் பிரியம் வைத்திருப்பவர்களுக்கு எந்த சூழலிலும் ஒரு ஆபத்து என்றால் அவை தன் உயிரையும் கொடுக்க‌ வல்லது. நண்பர்களே நாய் நன்றி உள்ள பிராணி என்பதனையும் தாண்டி அது மனிதர்களை  நம்பி வாழும் ஒரு அற்புத ஜீவன். அதனை நேசிக்கா விட்டாலும் பரவாயில்லை, குரூர மனதோடு அதனை தாக்குவது, அல்லது உயரமான பகுதிகளில் இருந்து தூக்கி எறிந்து கொல்வது போன்ற செயல்கள் நம் ஆழ்மனநிலையில் புதைந்து இருக்கும் வக்கிரத்தின் குறீயீடுகளே. 

அன்பை விதைக்க  முயற்ச்சிப்போம்!
http://www.walesonline.co.uk/news/wales-news/birth-ivor-allchurch-death-hero- 8771111

http://mentalfloss.com/article/58584/12-amazing-dogs-remember-national-dog-day

No comments:

Post a Comment