Sunday, 22 May 2016

நீரிழிவு நோய் எச்சரிக்கை ‍ -1
போலி சிகிச்சை கும்பலை நம்பாதீர்கள்

//அக்குபஞ்சர் என்ற மாற்று மருத்துவத்தை நம்பி ஒரு வார காலம் இன்சுலில் எடுக்க தவறிய பள்ளி மாணவன் மரணம்.//


காலை எழுந்தவுடன் இந்த செய்தியினை முகநூலில் பார்த்தவுடன் மனம் மிகுந்த துக்கம் கொண்டு விட்டது.

உப்புமா சினிமா கம்பெனிகள் போல் மருத்துவத்தில் மாற்று மருத்துவம் என்ற பெயரில் கண்ட சுள்ளான்களும் காளான் போல பெருகியதன் விளைவுதான் இது போன்ற மரணங்கள். இதற்கு காரணமாக இருப்பவர்கள தயவு தாட்சயண்யம் பார்க்காமல் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

டயபடீஸ் அல்லது நீரிழிவு நோய் என்பது இன்றைய கால கட்டத்தில் பெருகி வரும் பிரச்சினை. காரணம், நம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மற்றும் போதிய அளவு மருத்துவ பரிசோதனை விழிப்புணர்வு  இல்லாமையே. நோயின் அறிகுறியினை கொண்டு முன் கூட்டியே கணிக்கப்படும்  (early detection )நோயினை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் நம்மில் பலருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளது.

டயாபடிக் பிரச்சினை உள்ளவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் உள்ள நீரிழவு நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவரிடம் தொடர் சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி நீங்கள் உட்கொள்ளும் மருந்தினை மாற்றி கொள்ளுங்கள். நீங்களாகவே முன் முடிவு செய்து கொண்டு மருந்தினை நிறுத்துவது அல்லது மாற்று வழியில் முயற்சிப்பது என்பது எல்லாமே விபரீதத்தில் முடியும்.

டயாபடிக் பிரச்சினையில் டைப் 1, டைப் 2 என இரண்டு விதம் உள்ளது.

டைப் 2 பிரச்சினைக்கு மாத்திரைகள் உட் கொள்வதன் மூலம் இரத்தத்தில் சேரும் குளுக்கோசின் அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம். டைப் 1 பிரச்சினைக்கு அவசியம் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை உணவு மேலாண்மை மூலம் தகுந்த மருத்துவ பரிசோதனை மூலம் டயாபடிக் பிரச்சினைக்கு தீர்வு காண பேலியோ (Paleo diet) டயட்டினை தகுந்த மூத்தோர் ஆலோசனையுடன் முயற்சித்து பாருங்கள். ஆனால் தகுந்த மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்களாவே எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு சிகிச்சையினை முயற்சித்து பார்த்து இருந்த்தாலும் ஒவ்வொருவரின் உடலமைப்பு, வாழ்க்கை முறை, குடும்ப ரிதீயிலான மரபு நோய் என பல கூறுகள் சம்பந்தபட்டு இருப்பதால் மருத்துவத்தை பற்றிய எந்த ஆலோசனைகளையும் பிறருக்கு சொல்லாதீர்கள் அது ஒருவரின் உயிரையே பறிக்கும். “எனக்கு தெரிந்த நபர் ஒருவர் அவரிடம் கசாயம் வாங்கி சாப்பிட்டார்,” “கேரளாவில் ஒரே நாளில் குணப்படுத்துகின்றனர்” “அக்குபஞ்சர் 48 நாள் ஊசியில் குத்தினால் நோய் பறந்து விடும்”, “வெண்டைக்காயை ஊற வைத்து ஒரு மண்டலம் குடித்தால் அண்டவே அண்டாது”, இது போன்ற உட்டாலக்கடி மேட்டரை பொது வெளியில் பரப்புபவர்களை எச்சரியுங்கள். இவர்கள்தான் நம் மண்ணின் சாபக்கேடே.

கொரியாவில் அக்குபஞ்சருக்கு தெருக்கள் தோறும் மையங்கள் உள்ளது. இவர்கள் இதனை உடல் வலிக்கு மட்டுமே சிகிச்சையாக எடுத்து கொள்கிறார்கள். கேன்சருக்கு, நீரிழவு நோய்க்கு, என தீவிர மருத்துவ சிகிச்சை பிரச்சினைகளுக்கு இதனை பயன்படுத்துவதில்லை. நம் ஊரில் ஒரு மண்டலம் இதனை பயிற்சியாக படித்துவிட்டு அடுத்தவரின் உயிரோடு விளையாடுவோரே கொஞ்சம் சிந்தியுங்கள்.

டயாபடிக் டைப் 2 பிரச்சினைக்கு சரியான மருந்துகள் உட்கொள்ளவில்லை என்றால் கீழ்கண்ட பிரச்சினைகள் ஏற்படும். இதனை நீங்கள் உணரும் போது பிரச்சினை கை மீறி போயிருக்கும்

·       சிறுநீரக பழுது (Kidney failure)
·       கரு விழியின் ரெக்டினா- பார்வை பறி போதல்(diabetic retinopathy)
·       இதய நோய் (cardiovascular disease)

டயபாடிக் 1 பிரச்சினைக்கு இன்சுலின் எடுக்கவில்லை என்றால் அது உயிருக்கே உலை வைத்து விடும்.

சிறு வயதில் இருந்து இன்சுலின் எடுத்து கொள்ளும் இரண்டு நண்பர்களை எனக்கு  தெரியும்.ஒருவர் பிஎச்டி முடித்து விட்டு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இன்னொருவர் பிஎச்டி படித்து கொண்டே தற்போது கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இருவருமே தங்கள் மணவாழ்வில் குடும்பம், குழந்தை என்று இறைவன் அருளால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தொடர்ச்சியான, முறையான சிகிச்சை, உடற்பயிற்சி, உணவு மேலாண்மை, சீரான வாழ்வியல் முறை இவை மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

இது போன்று இந்த இறந்து போன குழந்தையும் கூட வாழ்வில் ஒரு சாதனையாளராக வந்து இருக்கலாம். ஒரு முட்டாளின் வார்த்தை அந்த குடும்பத்தின் செல்வத்தையே பறித்து விட்டதே.

நோய் என்பது முற்றிலும் குணமாவது மட்டுமல்ல, அதன் தீவிர தன்மையினை மட்டுபடுத்தி நம் கட்டுக்குள் வைத்திருப்பதும் கூடத்தான்.

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.
No comments:

Post a Comment