Sunday 1 May 2016

காலத்தை கடக்கும் வகுப்பறைகள்

பிரித்தானியாவின் வடக்கு இங்கிலாந்து பகுதியில் ஆறுகள், பசுமையான புல்வெளி பகுதிகள் நிரம்பிய ஒரு அற்புதமான மலை பள்ளத்தாக்கு நகரம் யார்க்சிர் தேல் (Yorkshire Dale). 

இங்குள்ள கிராக்வெய்ட் துவக்கப் பள்ளியில் பணி புரிந்த ஆண்ட்டி சீய்ட் (Andy Seed) என்னும் ஆசிரியரின் பள்ளி அனுபவமே ஆல் டீச்சர்ஸ் வைஸ் அண்ட் ஒண்டர்புல் ( All Teachers Wise and Wonderful) என்னும் புத்தகமாய் விரிவடைகிறது. 

இவரது முதல் புத்தகமான ஆல் டீச்சர்ஸ் ஆர் கிரேட் அண்ட் ஸ்மால் ( All Teachers are Great and Small) என்னும் முதல் புத்தகம் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்று பிரித்தானியாவில் பரவலான கவனக் குவிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் உள்ளது?

ஒவ்வொரு ஆசிரியரும் நினைத்தால் அதனை குழந்தைகள் விரும்பும் கனவு பள்ளியாக மாற்ற முடியும் என்பதையே ஆண்ட்டி சீடின் பள்ளி அனுபவங்கள் நமக்கு சொல்கிறது. 

ஆசிரியருக்கும் குழந்தைகளுக்குமான உரையாடல்களை குழந்தைகள் மொழியில் அப்படியே தந்துள்ளதுதான் இப்புத்தகத்தின் மிகப்பெரிய சிறப்பு என சொல்லலாம்.

நாம் எப்போதுமே உச்சி முகரும்  வகுப்பில்  முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களைப் பற்றி இப்புத்தகம் பேசவில்லை, அதற்கு நேர் எதிராய் நம் ஆசிரியர்கள் கவனிக்கத் தவறிய‌ குறும்புக்கார மாணவர்கள், வெட்கத்தால் பேச மறுக்கும் மாணவர்கள், மதிப்பெண்கள் குறைந்த ஆனால் சூழலியலில் சமயோசிதம் நிறைந்த‌ மாணவர்ககளைப் பற்றிய‌ தனித்த தன் அனுபவங்களை ஒவ்வொரு  அத்தியாயங்களாக அம்மாணவர்கள் பெயரிலேயே எழுதியுள்ளார். ஆண்ட்டிக்கு நல்ல ஞாபக சக்தி போலும்.

ஒரு பள்ளி ஆசிரியர் என்ன எழுதி இருக்கிறார் என அலுத்துக் கொள்பவருக்கு முகப்புரை (Prologue) பக்கத்திலேயே ஆண்ட்டி சிக்சர் அடித்துள்ளார். 

அவரது பள்ளியின் முதல் நாள் அனுபவத்தை அப்படியே தந்துள்ளார்.அதனை படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ஆண்ட்டியின் மாணவனாவான் என்பது சத்தியம்.

ஆண்ட்டி தன் முதல் நாள் வகுப்பறை அனுபவத்தினை இப்படி விவரிக்கிறார். 

அவரது வகுப்பறையில் உள்ள மாணவர்களை  தங்களது காலணிகளை கழட்டி மேசை மேல் வைத்து “காலணியை வெளியில் இருந்து பார்க்க முடிவதை” வரைய சொல்கிறார்.   ஒவ்வொரு மாணவரும் தங்கள் காலணியை கழட்டி தங்கள் மேசை மேல் வைத்து வரைய துவங்குகின்றனர்.

ஆண்ட்டி அப்படியே வகுப்பறையை சுற்றி வரும்போது சின்ன ஆச்சரியங்கள் அவரை சூழ்ந்து கொள்கிறது

எட்டு வயது நிரம்பிய அந்த மாணவர் களின் ஓவியத் திறமையினை விடவும் ஆசிரியரின் கேள்வியை எப்படி புரிந்து கொண்டு செயலாற்றுகிறார்கள் என்பதை ஆண்ட்டி விவரிக்கும்போது மாணவர்களின் அக வெளித் திறன் பற்றிய உலகை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணத்திற்கு, பெர்னார்தே (Bernadette) என்னும் சிறுமி  வகுப்பறைக்கு வெளியே போய் நின்று கொண்டு சன்னல் வழியே தனது மேசை மேல் வைக்கப்பட்டிருக்கும் காலணியை வரைகிறாள். ஏன் வெளியே நின்று வரைகிறாய்? என ஆண்ட்டி கேட்க, நீங்கள்தான் காலணியை வெளியில் இருந்து என்ன தெரிகிறதோ அதை வரைய சொன்னீர்கள் என பதில் சொல்கிறாள். ஆண்ட்டி கொஞ்சம் ஆடித்தான் போகிறார்.

பெர்னார்தேவின் வார்த்தைகள்  குழந்தைகளின் உலகில் மொழியின் புரிதல்கள் எப்படி இருக்கும் என ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவையை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறது.

ஒருவேளை அவள் எல்லோருடைய‌ கவனத்தை அவள் மீது திருப்புவதற்காக செய்கிறாளோ என யோசிக்கிறார். ஆனால் அவளது அப்பாவித் தனமான கண்கள் அதை இல்லை என மறுக்கிறது. ஒரு ஆசிரியராக அதனை அவர் புரிந்து கொள்கிறார்.

நம் துரதிஸ்டம் என்னவெனில்  பெரும்பாலான மாணவர்களை புரிந்து கொள்ள தவறும் ஆசிரியர்களே இங்கு அதிகம்.

ஒரு ஆசிரியர்  அவசரப்பட்டு குறும்புக்கார மாணவன் என தனது முன் முடிவில் அணுகப்படும் போது அது நிச்சயம் அம்மாணவனின் வாழ்க்கையையே புரட்டி போடும் என்ற ஆண்ட்டியின் கூற்று முற்றிலும் உண்மையானது.

"If there is even the slightest possibility of misinterpretation then at least one child will grab it and run with it, however preposterous the result"

ஒரு துவக்கப் பள்ளி ஆசிரியரின் பணி ஒரு கல்லூரி பேராசிரியரைக் காட்டிலும் அதி முக்கியமானது என்பதே இப்புத்தகம் நமக்கு சொல்லும் செய்தி.

நான் இப்பொழுது ஆண்ட்டி சீடியின் வகுப்பறைக்குள் அமர்ந்துள்ளதாகவே உணர்கிறேன்.

இப்புத்தகத்தை முழுவதும் படித்து முடித்த பின் தனிக் கட்டுரையாக எழுதுகிறேன்.

ஒரு துவக்கப் பள்ளி ஆசிரியர் தன் மாணவர்களுடனான வகுப்பறை அனுபவத்தினை புத்தகமாக வேறு எவரும் எழுதியுள்ளனரா எனத் தெரியவில்லை.


 தமிழ் சூழலில் இது போன்ற முயற்சிகள் வர வேண்டும்.


ஆண்ட்டி சீட் புத்தக ஆசிரியர்

புத்தகத்தின் முகப்பு பக்கம்


புத்தகத்தின் பின் பக்கம்




யார்க்சிர் தேல் தேசிய பூங்கா, இங்கிலாந்து

யார்க்சிர் தேல் தேசிய பூங்கா, இங்கிலாந்து

யார்க்சிர் தேல் தேசிய பூங்கா, இங்கிலாந்து

யார்க்சிர் தேல் தேசிய பூங்கா, இங்கிலாந்து



No comments:

Post a Comment