Friday, 6 May 2016

கோடம்பாக்கத்துக்கு போ

கல்லூரி நாட்களில் படிக்கும் போது எதிர்காலத்தை பற்றிய கனவுகளை விட என்ன மாதிரியான வேலை கிடைக்குமோ என்ற‌ பெரிய பயமே அதிமாக இருந்தது. அதுவும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து கல்லூரி போகிற ஒவ்வொருத்தனுக்கும் அவன் லட்சியங்களை விட குடும்பங்கள் தரும் பொறுப்புகளே அதிகம். அதுதான் நிதர்சனம்.

இந்த பரம பத விளையாட்டுல பாம்புகள் கொத்தாம ஒவ்வொரு ஏணியா கவனமா அடி எடுத்து வைக்கனும். நமக்கு பிடிச்சத விட வாழ்க்கை யோட‌ செட்டில்மென்டுக்காக தேடி பிடிச்சு ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கனும்

அந்த கல்லூரி நாட்களில், படிப்பை விடவும் ஏதோ ஒரு பொறி வெளியில் இருந்து அப்ப நம்ம வாழ்க்கையில் விழும். அதப் பிடிச்சிகிட்டு ஏறி வருவதற்குள் கூட வந்த பாதி பேர் காணாமல் போயிருப்பார்கள். இன்னும் சில பேர் நாம் எதிர்பார்த்ததை விட வேறு மாதிரியான தளத்தில் செட்டில் ஆகி இருப்பார்கள்.

காலம் எப்பவுமே ஒரு விசித்திரமான வாத்தியார்.

திருச்சி, பிசப் ஹீபர் கல்லூரியில் இளம் நிலை இயற்பியல் படிச்சிகிட்டு இருந்த போது இரண்டு பசங்க அவங்கள பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.

செம்ம சாது டைப். கல்லூரி, யுனிவர்சிட்டி கிரிக்கெட் டீமில் இருவரும் இருந்ததால் முதல், இரண்டு வருடங்களில் காலேஜ் கிரவுண்டை தாண்டும் போது அவர்கள் விளையாடுவதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். பெரிதாய் பேசி எல்லாம் பழக்கம் இல்லை.

பின்னாளில் இறுதி ஆண்டில் இவர்கள் இருவரும் பக்கத்து வகுப்பு. நல்ல நண்பர்களாக அறிமுகம் அப்புறம் நான் அங்கேயே முது நிலை இயற்பியல் படிப்பை தொடர ஆரம்பித்து இருந்தேன். இந்த ரெண்டு பாய்ஸும் எம்.சி.ஏ வில் ஒரே வகுப்பில் சேர்ந்துட்டாங்க.

எப்ப பார்த்தாலும் இந்த ரெண்டு பசங்களும் எதாவது வண்டி பார்க்கிங் ஏரியாவில் நின்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. அப்ப பிஜியில் இரு பாலர் வகுப்புகள். நம்ம பசங்க காலேஜ் பார்க்ல, கேண்டீன்ல தவம் இருக்கும் போது ஒரு பொண்ணும் ஏறெடுத்து பார்க்க மாட்டாங்க.

ஆனா, இவர்களை கடந்து போற பொண்ணுங்க, லைட்டா சைட் அடிச்சிட்டு போவாங்க. இத பார்க்கும் போதெல்லாம், தூர நின்னு நம்ம பசங்க செம்ம லந்த கொடுப்பாங்க.  ஆனா கடைசி வர இந்த ரெண்டு பேரும் அப்படி என்னதான் பேசிக்குவாங்கன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

அப்புறம் இந்த இர‌ண்டு பாய்சும், வழக்கமா சினிமாவில் வருவது போல் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கி குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்கள்.
அப்புறம் எதுக்கு பாஸ் இவ்வளவு பெரிய பீடிகைன்னு கேட்கிறீங்கள. கதையில் இப்பதான் டிவிஸ்ட்டே.

ஒரு நாளான திருநாளில் இந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் சாப்ட்வேர் வேலைய தூக்கி எறிஞ்சிட்டு டைரக்டர் ஆகனும்னு கிளம்பிட்டார். இத்தனைக்கும் அப்ப நண்பன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இலட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிட்டு இருந்தான். நம்ம வீட்டில் எல்லாம் இலட்சக் கணக்கில் சம்பளம் வரும் ஒரு பெரிய வேலைய விட்டுட்டு நாளைக்கே சினிமா கத்துக்க போறேன்னு சொன்னா விசம் வச்சு கொன்னுடுவாங்க.

ஆனா இப்படி துணிச்சலா முடிவெடுக்கிற‌ தைரியமும், மன உறுதியும், இருக்கிற ஆம்பிளைய விட, அவன அன்பா தட்டி கொடுத்து உன்னால முடியும்னு சொல்லற ஒரு தேவதை எல்லா ஆண்கள் வாழ்க்கையிலும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அது என் நண்பனுக்கு அமைஞ்சது ஒரு வரம்னுதான் சொல்லனும்.

ஆமாங்க அந்த நண்பன் “கைலு” என்கிற “கைலாஸ் க‌ரித்” இப்ப குறும்பட இயக்குநரா தன்னோட இரண்டாவது படத்தை ரிலீஸ் பண்ண போறார்.  

முதல் குறும்படமான “எனக்கே எனக்கா” வில் கதாநாயகனாக அறிமுகம் https://www.youtube.com/watch?v=OhKgdldvU7g. இப்ப வெள்ளித் திரை என்ட்ரிக்காக ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டு பளீச்சுன்னு ரெண்டாவது குறும்படம் வந்திருக்கு. படத்தோட டைட்டில் “11:11”.

11:11 படத்தோட டிரைலர் இன்றைக்கு ரிலீஸ் ஆகி இருக்கு. நடிகர் மாதவன் இந்த படத்தோட டிரைலர் துவக்கி வச்சு வாழ்த்து சொல்லி இருக்காரு.

டிரைலர் மிக நேர்த்தியா வந்திருக்கு. இசை, காட்சி அமைப்புகள், கதாபாத்திர தேர்வு, எடிட்டிங் என கன கச்சிதமாக சிக்சர் அடித்துள்ளார் இயக்குநர் கைலாஸ். இந்த படத்தின் ஒட்டு மொத்த குழுவுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

இந்த படம் ஆங்கிலத்தில் சப் டைட்டிலோட இன்னும் ஒரு மாதத்தில் வெளி வர இருக்கு. நிச்சயம் என் முகநூல் நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் இந்த குறும்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு உங்கள் வாழ்த்துகளையும், கருத்துகளையும் சொல்லவும்.


மேல சொன்ன கதையில் சொல்ல மறந்த இன்னொரு கேரக்டர் “அருண்” என்கிற எங்களோட இன்னொரு நண்பன் தான் இந்த படத்தின் ஹீரோ. இந்த சாக்லெட் பாய் ஏற்கனவே மாடலிங் துறையில் விளம்பரத்துக்கு நடிக்கவும் ஆரம்பிச்சிட்டார். சோ, இன்னும் கொஞ்ச நாளில் வெள்ளிதிரைக்கு எங்க ஏரியாவில் இருந்து ஒரு கதாநாயகனை ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்.

அப்புறம் இந்த ஒட்டு மொத்த கதையின் பெரிய சஸ்பென்சே இப்படத்தில் இன்வெஸ்டிகேசன் ஆபிசராக வரும் டெரர் கேரக்டர் “ராதா மணாளன்”, என்கிற எங்களது கல்லூரி தோழன். இவர் வேறு யாருமல்ல, சின்ன திரைகளில் (ஜெயா டிவி, தந்தி டிவி) நையாண்டி தர்பார் என்ற நிகழ்ச்சியில் உங்களை புரட்டி எடுத்தவர். சமீபத்தில் தந்தி தொலைக்காட்சியில் இவரது “ழ” என்னும் தமிழத்தின் கலை, இலக்கிய‌ பண்பாட்டு விழுமியங்ளின் தொகுப்பு பரவலான கவனக் குவிப்பை பெற்றது.

ஆக மொத்தம், பிசப் ஹீபரின் ஒரே வகுப்பில் இருந்து இரண்டு நடிகர்களையும், ஒரு இயக்குநரையும் கோடம்பாக்கத்துக்கு பார்சல் செய்கிறோம்.

வாழ்த்துகள் நண்பர்களே.

11:11 படக்குழுவினர்
Director: Kailash Harith
Cinematography : Udaya Venkat Punnia Moorthi
Editing : Vijay Andrews
Sound Design & Mixing : Sachin Sudhakaran and Team (Sync Cinema)
DI Colorist : Sreejith Sarang
VFX : Balaji Rajaram

PRO : Nikil MuruganNo comments:

Post a Comment