சுவான்சி (Swansea) கடற்கரையில் ஒரு நாள்
இன்று காலையில் சுவான்சி கடற்கரையில் இருந்து அருகில் நான்கு கி.மீ தொலைவில் இருக்கும் மம்பிள்ஸ் (Mumbles) மீன் பிடி கிராமம் வரை போய் வரலாம் என சென்று வந்தேன்.
செல்லும் வழியெங்கும் உற்சாகமாக "ஹலோ கண்மணி எப்படி உள்ளாய்", "இனிய நாளாகுக" என கொஞ்சி வாழ்த்து சொல்லும் உள்ளூர் பெரியவர்கள், குழந்தைகளோடு கடலில் சுற்றும் தகப்பன்கள்,நாய்குட்டிகளோடு இளைப்பாறும் முதியவர்கள் என இன்றைய கடல் நடை சுவாரசியமாக இருந்தது.
கடற்கரையில் நடந்து கொண்டு சுவான்சி நகரை பார்க்க தனி அழகாக இருந்தது. கடற்கரையினை ஒட்டியவாறே மிதிவண்டி ஓட்டவும், மெது நடைபயிற்சி செய்யவும் தனித்த பாதை உள்ளது. இந்த சிறிய சாலையில் சுவான்சி நகருக்கும், மம்பிள்ஸ் மீன் பிடி
கிராமத்திற்கும் இடையே பயணிகள் இரயில் 56 வருடங்களுக்கு முன்பு வரை ஓடியுள்ளது
என்பதை நம்பவே முடியவில்லை. இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் தொலைவு 4 கி.மீ. 1807 ஆம் ஆண்டு நீராவியில் இயங்கும் தொடர் வண்டி தொடங்கபட்டு
பின்னர் டீசல், மின்சாரத்தில் இயங்கும் வண்டியாக மாற்றியுள்ளனர். பின்னாளில் இரண்டு
நகருக்கும் பேருந்து வந்த பிறகு 1960 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு
விட்டது. இந்த
கடைசி பயணத்தில் சென்றவர்கள் கதறி அழுதுள்ளனர்.
இப்போது
காலத்தின் சாட்சியாய் எஞ்சி இருப்பது அறிவிப்பு பலகை மட்டுமே.
நான் இந்த சாலையில் நடந்து கொண்டிருந்த போது, சைக்கிள் ஓட்டும் பாதையில் ஒரு வயது குழந்தையினை தனி பெட்டியில் வைத்து தனது மிதிவண்டி பின்னால் இணைத்து கொண்டு ஒரு தகப்பன் ஓட்டி கொண்டு சென்றார். அவர் பின்னால் அவரது இன்னொரு குழந்தையும், மனைவியும் தனி மிதி வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.
வார இறுதியில் பிரித்தானியர்கள் வீட்டை விட்டு வெளியே தான் தங்கள் நாளை உற்சாகமாக கழிக்கின்றனர். நம்ம ஊர் வெயிலுக்கு இது போன்று வாய்ப்பே இல்லை. ஆனால் தொலைக்காட்சி பெட்டிகளின் தாக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்பது என்பது தற்போதைய சவால்களில் மிகப் பெரியது என நினைக்கிறேன்.
கடற்கரையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் சுவான்சி பல்கலைக்கழக மைதானத்தில் வேல்சு தேச அளவிலான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. சரி அப்படியே குட்டீஸ்கள் எப்படி போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்ற ஆர்வ மிகுதியில் உள்ளே சென்று பார்த்தேன்.
எல்லா மாணவர்களின் பெற்றோர்கள் உடன் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை
உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.
நீளம் தாண்டுதலில் நினைத்த படி தாண்ட முடியாத வருத்தத்தில் வந்த மாணவியை தந்தை
ஆறுதலாய் அணைத்து கொண்டு நெற்றியில் முத்தமிட்டு என்னை விட அதிகம் தாண்டியுள்ளாய் என செல்பி எடுத்து ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார்.
100 மீட்டர் ஓட்டத்திற்கு தனது மகனுக்கு அவனது கை தசைகளை மசாஜ் செய்த வண்ணம் ஒரு
தாய் இப்படி ஓடாதே, அப்படி ஓடு என டிப்ஸ் கொடுத்து கொண்டிருந்தார்.
இந்த போட்டிகளை புகைப்படம் எடுக்க அனுமதி உண்டா என அங்கிருந்த போட்டியாளர்களிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே நிச்சயம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னவுடன் கொஞ்சம் புகைப்படங்களை கிளிக்கினேன்.
பார்ப்பதற்கு இந்த மாணவர்கள் நடுநிலை, உயர் நிலை பள்ளியில் பயில்வது போல் போல் தெரிகிறது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட களப் போட்டி, குண்டு மற்றும் ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல் என பல போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு உதவிகளை கோச்சுகளுடன் உள்ளூர் பெரியவர்கள் கூட நின்று உதவி செய்து கொண்டிருந்தனர். தட கள போட்டியில் கடைசியாக வந்த சிறுமியிடம் கோச் தாத்தா அவள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி ஒரு தடகள பலகையினை கொண்டு வந்து எப்படி தாண்ட வேண்டும், காலை எப்படி வளைக்க வெண்டும் என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். பெரியவர்கள் தங்கள் அனுபவங்களை இப்படி நம் ஊரில் சொன்னால் நம் ஊர் குழந்தைகள் இவ்வளவு மரியாதையாக கேட்பார்களா எனத் தெரியாது. ஆனால் அந்த சிறுமி சமத்தாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
போட்டி முடிந்தவுடன் பெற்றோரிடம் ஓடுகிறார்கள். அவர்கள் சிரித்துக் கொண்டே தட்டி கொடுக்கிறார்கள்.குழந்தைகள் வளர்ப்பில் பெரும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் என தெரிகிறது.
பக்கத்து மைதானத்தில் 50 வயதை கடந்த மூத்த மகளிருக்கான ஆக்கி போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. உண்மையில் அவர்களின் உடல் திறன் என்னை மலைக்க வைத்தது. மரண ஓட்டம், அடி என இடியாக செயல்படுகிறார்கள். வயது இங்கே பொருட்டு இல்லை. உடற்பயிற்சி, உற்சாகமான வாழ்க்கை சூழல் என இளமைத் துடிப்புடன் உள்ளனர்.
வார இறுதிகளில் தொலைகாட்சி பெட்டிகளில் மூழ்கி இருந்து விட்டு எல்லா உடல் ரிதியிலான தொந்தரவும் வந்த பிறகு யோகா வகுப்பு போகிறேன் என ஒரு க்ரூப் நம்ம ஊரில் கிளம்புவதை பார்க்க சங்கடமாக இருக்கிறது.
இங்கே பொது மக்கள், குழந்தைகள் விளையாட மிகப் பெரிய பொது விளையாட்டு மைதானங்கள் உள்ளது. நம் ஊரில் பெரும்பாலன நகரங்களில் விளையாடும் மைதானங்களை ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இப்படி செய்வோரை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும் பெரியவர்கள் விளையாட நல்ல ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி தரலாம். வயதாகி விட்டது என குத்தி காட்டி அவர்களை ஒதுக்குவது நல்ல சமூகத்திற்கான அடையாளம் அல்ல. நாளை நமக்கும் வயதாகும் என்பதை நினைவில் கொள்வோம்.
Blackbill station, Swansea Beach, Wales, UK |
Old Train route Swansea- Mumbbles Village,Swansea Beach, Wales, UK |
Old Train route Swansea- Mumbbles Village,Swansea Beach, Wales, UK |
Old Train route Swansea- Mumbbles Village,Swansea Beach, Wales, UK |
Cafe, Mumbbles Village,Swansea Beach, Wales, UK |
Swansea beach,Oystourmouth Road |
Swansea beach,Oystourmouth Road |
Old train route, Swansea beach,Oystourmouth Road |
Swansea beach,Oystourmouth Road |
Uphills view, Swansea city from Beach |
Uphills view, Swansea city from Beach |
Swansea Beach |
Swansea Squash Club, Swansea |
Swansea Squash Club, Swansea |
Swansea University Stadium |
Swansea University Stadium |
Swansea University Stadium |
No comments:
Post a Comment