கர்நாடகத்திடம் இருந்து தமிழகம் நீரைப் பெற்றுக் கொண்டு தமிழகம் அவர்களுக்கு திருப்பி தருவது என்ன?
இன்றைக்கு பிற மாநிலத்தவரின் பார்வையில் நிச்சயம் இந்த கேள்வி எழும்.
இதற்கான விடையினை நேரடியாக தேடிப் பார்ப்பதை விடவும் இரு மாநிலங்களுக்குள் மறைமுகமாக பரிமாறக் கொள்ளப்படும் மனித வள ஆற்றல், வணிகம், ஆற்றல் பரிமாற்றம், என பல்வேறு நிலைகளில் நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.
முதலில் கர்நாடகத்திடம் இருந்து தமிழகம் நீரைப் பெற வில்லை. "காவிரி நதி நீர்" தேசிய சொத்து. மேலும் தமிழர்களுக்கு சட்டரீதியில் பெற வேண்டிய உரிமையான நீரைப் பெறுகிறோம். இதில் திருப்பி தர வேண்டியது என்ற ஒரு பார்வையே அவர்களை காவிரி நீருக்கு முழுப் பாத்தியம் நிறைந்தவராக்குகிறது.
இங்கே நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களுக்கிடையேயான ஹட்சன் நதி நீர் சிக்கலை ஒப்பிடலாம். ஹட்சன் நதி நீர் பாயும் இரு அருகமை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று பெறுவது என்ன? தருவது என்ன.
ஆனால் அவர்கள் இதற்கப்பால் அமெரிக்க ஒன்றியத்தின் “இன்டர்நேசனல் காமன் கமிசன்” மூலம் இணைந்து இரு மாநில மக்கள் நலனுக்கான
கூட்டாகச் செயல்பாடுகளை செய்கிறார்கள்.
அமெரிக்காவின் மாநில சுயாட்சி உரிமை போல் ஒரு வேளை இந்தியாவிலும் அமையுமெனில் கர்நாடகம், தமிழகம் இரண்டும் செக் அன்ட் பேலன்ஸ் முறையில் நேரடியாக இணைந்து செயலாற்றவும் வாய்ப்புள்ளது.
புவிசார் கட்டமைப்பு பார்வையில் காவிரி நதி ஹட்சன் நதியினைப் போல் அல்லாமல் மேட்டில் இருந்து தாழ் நிலையில் தமிழகம் நோக்கி இயற்கையாகவே பாயும் நதி. இதில் ஒவ்வொரு பகுதியும் வேறு வேறான நிலப்பரப்பினை கொண்டவை. ஆகவே இந்த நதியினை நேரடியாக இரு மாநிலத்திற்கும் இடையேயான நீர்ப் போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாது. இதற்கப்பால், தமிழகம் எப்படி கர்நாடக மாநிலத்திற்கு இந்நீரைப் பெறுவதன் மூலம் உதவ முடியும்.
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மனித வள மேம்பாட்டில் நிகழும் பரிமாற்றம் மிகப் பெரியது. இன்றைய சூழலில் இந்தியாவின் தகவல் துறை நுட்ப துறையில் இந்தியாவிற்கு அதிக லாபம் தரும் மாநிலம் கர்நாடகம். இதற்கு அடுத்தது தமிழகமும், ஆந்திராவும் உள்ளது.
குறிப்பாக பெங்களூருவில் உள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் படித்த பல ஆயிரக் கணக்கான ஊழியர்களை தமிழகம் தந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கர்நாடகத்திற்கு தந்திருக்கும் மனித வள ஆற்றல் மிக அதிகம்.
இந்த பொறியாளர்கள் அனைவரும் மேட்டுக்குடி குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்லர். பலரும் காவிரி பாய்கிற அல்லது வேறு நிலப்பரப்பில் இருந்து ஏழை, நடுத்தர வர்க்கத்தில் இருந்து பயின்று வந்தவர்கள்.
இவர்கள் சம்பளத்திற்காக வேலை பார்க்கிறார்கள் என்று வாதம் வைத்துக் கொண்டாலும், இத்தனை மனித வள ஆற்றலை கொணர்வதற்கு ஆரம்ப பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை ஒரு அரசு எத்தனை ஆயிரம் கோடி செலவிட வேண்டும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இவை தவிர, கர்நாடகத்திற்கு இங்குள்ள பல சிறு தொழில் நிறுவனங்கள், குறிப்பாக கோவை பகுதியில் இருந்து உதிரி பாகங்களை தருகின்றனர். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆக இரண்டு மாநிலங்களின் வளர்ச்சியும் காவிரி நீர் பங்கீடு வாயிலாகவும், அதற்கு அப்பாலும் ஒன்றுக் கொன்று பிரித்தறிய இயலாதவை. இதன் விளைவினை நேரடியாக அளவிட முடியாது. மேலும் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் விளையும் அரிசி பெரும்பான்மையும் கர்நாடகத்திற்கே அனுப்பப் படுகிறது. கர்நாடகாவில் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க நிலையில் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து தரப்படும் அரிசி கர்நாடக உணவுத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை தருகிறது.
ஆகையால், தமிழகம் கர்நாடகத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தரும் வளம் குறிப்பிடத்தக்கது.
சர்க்குலர் எக்கானமி (circular economy) பார்வையில் பார்த்தால் காவிரி படுகையில் நிகழும் மனித வள மேம்பாடானது இரு மாநிலங்களிலும் பெரிய மந்திர சாவியாக இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட இன்றைக்கும் கர்நாடக நிலப்பரப்பில் அதிகமான மழைப் பொழிவு காலத்தில் தமிழகம் அத்தனை நீரையும் வடிகாலாக மாற்றி கடலில் கலக்க வைத்து காக்கிறது. இந்த கால கட்டங்களில் தமிழக காவிரி படுகையில் ஏற்படும் வெள்ள சேதம் இன்றும் தொடரும் சோகம். தமிழகம் தன்னையே வருத்திக் கொண்டு கர்நாடகத்தை காக்கும் ஆபத்துதவி.
தமிழகம் கர்நாடகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டும், திருப்பி கொடுத்துக் கொண்டுதாம் இருக்கிறது. ஆகையால் காவிரி கர்நாடகத்தில் உற்பத்தி ஆகிறது என்ற ஒற்றை பார்வையில் கர்நாடகம் நாம் போற்றக் கூடிய அளவிற்கு ஜென்டில்மேனும் அல்ல, தமிழகம் அன்கன்டிசனலாக அவர்களுக்கு திருப்பி தர வேண்டிய செஞ்ச்சோற்று கடனாளிகளும் அல்ல.
பெருந்தேசிய இனங்களில் தமிழர், கன்னடர் இருவரும் புவிசார் நிலப்பரப்பில் மிக அருகே இணைந்து செயலாற்றிடக் கூடிய வகையில் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பல விசயங்களில் விட்டுக் கொடுத்து கர்நாடகத்தை அனுசரித்தே வந்திருக்கிறது என்று சொல்லலாம்.
No comments:
Post a Comment