Saturday 17 February 2018

காவிரி நீர்ப் படுகையும் உச்ச நீதி மன்ற தீர்ப்பும் - 2

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் உச்ச நீதி மன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில் எட்டாவது பக்கம் மிக முக்கியமனாது. அதற்குள் செல்வதற்கு முன் தீர்ப்பு எந்த பார்வையின் அடிப்படையில் அணுகப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

முதலில் கர்நாடகம் தெளிவாக ஒரு விசயத்தை முன் வைக்கிறது. "நதி நீர் பங்கீட்டில் ஒரு நதியின் நீரோட்டத்தினை (water flow)  விடவும் அந்த நதி பாயும் பகுதிகளில் உள்ள நீர் தேவையினை முன் வைத்தே பங்கிட வேண்டும். " 

கர்நாடகம் ஏன் இந்த கூற்றை முன் வைக்க வேண்டும்?

கர்நாடக பகுதியில், காவிரி உற்பத்தி ஆகிறது என்றாலும் தமிழகப் பகுதியில் தான் அதன் பயணம் அதிகம். உதாரணத்திற்கு, காவிரி நதி கர்நாடகத்தில் பாயும் நீளம் தோராயமாக 320 கி.மீ. தமிழகப் பகுதியில் பாயும் நீளம் 416 கி.மீ. இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான நிலப்பரப்பில் பாயும் நீளம் 64 கிமீ. மொத்தம் காவிரி நதியின் நீளம் தோராயமாக 800 கிமீ நீளம். அந்த வகையில் தமிழகம் அதிகம் உரிமை கொண்டாடி விடக் கூடாது அல்லவா. ஆகையால் தேவைகளின் அடிப்படையிலேயே நதி நீர் பங்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

இரண்டாவது, மற்ற நாடுகளில் இதற்கு முன் நடந்த‌ சர்வதேச நீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்புகளை உச்ச நீதி மன்றம் ஒப்பிடுகிறது. உதாரணத்திற்கு, கனடா, அமெரிக்காவிற்கு இடையேயான கொலம்பியா நீர்ப் படுகை சிக்கல். அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்திற்கும் நியூயார்க் மாநிலத்திற்குமிடையேயான‌ நீர் பங்கீட்டு வழக்கு, என பல வழக்குகளை மேற்கோள் காட்டுகிறது. அத்துடன் இரண்டு வேறு பட்ட அரசியல் ஆளுகையின் கீழ் இருக்கும் நிலப்பரப்புகளுக்கு இடையே பாயும் நதியின் நீரைப் பங்கிடுவதில் சர்வதேச விதியாக கருதப்படும் ஹெல்சிங்கி (Helsinki rules) விதிகளையும் கணக்கில் கொள்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியுள்ளது.

தற்போது விசயத்திற்கு வருகிறேன். பக்கம் 8ல் (பத்தி 250-260) தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் வீட்டு உபயோக (domestic), மற்றும்  தொழிற்சாலை (industries) தேவைகளையும் வரையறுக்கிறது. இதில் பெங்களூரு (Bangaluru) நகரின் தேவையாக கர்நாடக தரப்பு முன் வைத்திருக்கும் தரவுகளை உச்ச நீதி மன்றம் முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டுள்ளது. 

அதன் விபரம் பின்வருமாறு;
பத்தி 256 - 1990 ஆம் ஆண்டு கணக்குப் படி, பெங்களூரு நகரின்  நீர்த் தேவையானது 14.52 டிஎம்சி யாகவும், 20 அல்லது 25 வருடங்களில் உத்தேச நீர்த் தேவை தட்டுப்பாடு 30 டிஎம்சியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பெங்களூரு நகரின் நீர் தேவையானது 64% காவிரிப் படுகைக்கு வெளிப்பகுதியிலும், 36% காவிரி நீர்ப் படுகைப் பகுதியிலும் இருந்து பெறப்படுகிறது. இந்த அளவீட்டில் 25% மக்களுக்கு நாள் ஒன்றிற்கு ஒருவருக்கு 135 லிட்டரும், 75% மக்களுக்கு தலைக்கு 100 லிட்டரும் வழங்கப்படுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் பெங்களூர் நகரின் தேவையானது 17.72 டிஎம்சி ஆகும். இந்த நீரை 50% நிலத்தடி நீர் வாயிலாகவும், மீதம் 50% காவிரி நீர்ப் படுகையில் இருந்தும் பெறப்படுகிறது. 

பத்தி 257 - அதே போல தமிழகத்தின் நீர் தேவையானது 2011 ஆண்டு படி 21.98 டிஎம்சியாக இருக்கும் என்ற கணிப்பில் 50% நிலத்தடி நீரைக் கொண்டும், 50% நீர்நிலைகள் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற காரணியை உச்ச நீதி மன்றம் வைக்கிறது. 

பத்தி 256 மற்றும் பத்தி 257 படி,  தமிழகத்தை ஒப்பிடும் போது பெங்களூரு நகரின் நிலத்தடி நீரைக் கொண்டு அம்மக்களுக்கு விநியோகம் செய்ய இயலாததால் தமிழகத்திற்கு தரப்பட்ட நீரின் அளவில் இருந்து 4.75 டிஎம்சி நீரை குறைத்துள்ளது. 

பெங்களூரு போன்ற பெருநகரம் நகர்மயமாக்கலினால் நீர்த் தேவை அதிகரிக்கும் போது,  தமிழகத்திலும் காவிரி நீர்ப் படுகை பகுதியில் இருக்கும் பெருநகரங்களில் உடனடி நகர் மயமாக்கலினால் நீரின் தேவையும் அதிகரித்து இருக்குமே. அதனை மட்டும் கவனத்தில் உச்ச நீதி மன்றம் எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், 
பெங்களூரு நகரின் தேவைக்கு அங்குள்ள நிலத்தடி நீரை தீவிரமாக கணக்கில் கொண்டவர்கள், தமிழகத்தில் காவிரி நீர்ப் படுகையில் இருக்கும் சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை மற்றும் இந்த பகுதியில் இருந்து செயல்படும் கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றினால் பயனடைந்து கொண்டிருக்கும் 5 மில்லியன் மக்களைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. 

காவிரி நீர்ப் படுகையில் இருப்பவர்களின் நிலத்தடி நீர் ஆதாரமே கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் நீரைப் பொறுத்தே இருக்கும். மேலும், பெங்களூரு நகருக்கு மட்டும் உத்தேச நீர் தட்டுப்பாட்டினை (projection rate of water quantity) கணக்கில் கொண்டவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 2011 ஆண்டில் இருந்து ஏழு ஆண்டுகள் கழித்து இன்றைய தமிழகத்தின் நிலையினையும் வழக்கில் கணக்கில் கொள்ளாதது துரதிஸ்டவசமானது. 

நீர் பங்கீட்டு முறைகளில் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஹெல்சிங் விதிகளோடு, சர்வதேச‌ நிலத்தடி நீர் விதிகளை (International Ground Water Regulations) கணக்கில் கொள்ளாதது வருத்தமே. உதாரணத்திற்கு நீர் நிலை, ஆற்று வழி நீர் தடம் சார்ந்த நிலத்தடி நீரை கணக்கில் அறவே எடுத்துக் கொள்ளவில்லை. 

தமிழகம் ஏதோ நீர் ஆதாரங்களை சரி வர கவனிக்கவில்லை என்று பலரும் ஆதங்கப்படும் அதே சூழலில் பெங்களூரு நகரின் மிக மோசமான கட்டமைப்பும், கடந்த 25 வருடங்களில் கர்நாடக அரசின் தொலை நோக்கற்ற திட்டங்களும்தான் பெங்களூரு நகரை இன்றைய நிலைக்கு தள்ளியுள்ளது. இதையும் நீதி மன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். 

சமீபத்தில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் டி.வி. ராமசந்திரன் அவர்கள் தலைமையிலான ஐவர் குழு  "கர்நாடக அரசு மழை நீர் சேகரிப்பினை பெங்களூரு நகரில் சிறப்பாக செயல்படுத்துவதில் தவறி விட்டனர்" என்று தங்களது ஆயவறிக்கையினை சமர்பித்துள்ளனர். 1800 ஆம் ஆண்டு கணக்கு படி பெங்களூரு நகரில் உள்ள ஏரிகளின் நீர் பிடிப்பு கொள்ளளவு 35 டிஎம்சி.  ஆனால், தற்போது அதன் கொள்ளளவு 2 டிஎம்சியாக குறைந்துள்ளது.  இந்த அளவிற்கு நீர் நிலைகளை மோசமான நிலைக்கு தள்ளிய கர்நாடகம் பற்றி எவரும் பேச மாட்டார்கள்.

பத்தி 259 ல் கார்நாடக பகுதியில் இருக்கும் காவிரி படுகையில் கிடைக்கும் நிலத்தடி (ground water) நீரானது 3.82 டிஎம்சி நீர் என உச்சநீதி மன்றம் சிலாகிக்கிறது. ஆனால் அதே அளவு நீரைக் கொண்டு ஏன் அவர்களால் பெங்களூர் நகரை சமாளிக்க முடியாதா? தற்போது  அவர்களுக்கு கிடைக்கும் நீரின் அளவான நாள் ஒன்றிற்கு 1,391 மில்லியன் லிட்டரில் 678 மில்லியன் லிட்டர் காவிரி நீர்ப் படுகையிலும், 672 மில்லியன் நிலத்தடி நீர் வாயிலாகவும், 41 மில்லியன் சுத்திகரிக்கபப்ட்ட நீரிலும் இருந்து கிடைக்கிறது. அவர்களுக்குத் தேவையான நீரினை பெங்களூரு நகரைச் சுற்றியுள்ள ஏரிகளை தூர்வாரி மழைநீரினை தேக்கி வைத்தாலே அவர்களுக்கு தேவையான 672 மில்லியன் லிட்டர் நீரை நாள் ஒன்றிற்கு எளிதாக பெற முடியும். ஆனால் வம்படியான தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரில் கை வைத்துள்ளார்கள்.

மேலும் பெங்களுரு நகர்புறத்து மக்களுக்கு தரப்படும் நீரின் அளவை தலைக்கு 150 லிட்டர் என நிர்ணயித்து விட்டு தமிழகத்தில் காவிரி படுகையில் இருக்கும் மாநகரங்களுக்கு தலைக்கு 100-130 லிட்டர் என நிர்ணயித்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இரண்டு சமமான நகரை ஒப்பிட்டிருந்தால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் பெங்களூரு நகருக்கு மட்டும் சிறப்பு கவனம் தந்து விட்டு தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களை கணக்கீட்டில் புறக்கணித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. 

மொத்தத்தில் நம்மிடம் குறைக்கப்பட்டிருக்கும் 4.75 டிஎம்சி நீர் எத்தையக விளைவினை ஏற்படுத்தும்?

ஒரு டிஎம்சி (tmc.ft) நீரைக் கொண்டு நாள் ஒன்றிற்கு 6 லட்சம் மக்கள் பயனடைவார்கள். அப்படியானால்,  30 லட்சம் மக்களுக்கு தேவையான நீர் இனி நமக்கு நாள் ஒன்றிற்கு குறையும். அதனை எப்படி கூட்டு குடிநீர் திட்டத்தை நம்பி இருப்பவர்கள் சமாளிக்கப் போகிறார்கள். 

இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியினை ஒன்றிய அரசிடமே தந்துள்ளது உச்ச நீதி மன்றம். இது மீண்டும் பூனையை காவலுக்கு வைக்கும் வேலைதான். 

இந்த பதிவில் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டு இருக்கும் 14.75 டிம்சி நீரில் 4.75 டிஎம்சிக்கு மட்டும்தான் இந்தப் பதிவில் விளக்கமாக எழுதி உள்ளேன். மீதம் 10 டிஎம்சி நீர் எப்படி எடுத்துக் கொள்ளப்பட்டது என இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

இவை எல்லாவற்றையும் விட கர்நாடக தரப்பு வாதத்திற்கு நாம் மிகச் சரியாக தரவுகளை முன் வைத்து வாதாடினோமா அதனையும் நாம் தீர்க்கமாக வாசிக்க வேண்டி உள்ளது.
















No comments:

Post a Comment