பாக்டீரியா தொற்றும் அதன் தகவமைப்பும் (Antimicrobial resistance)
பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து மனித உயிர்களை காக்கும் பணியில் ஆன்டிபயாட்டிக்கின் (antibiotic) பங்கு இன்றியமையாதது. இதன் வரலாறு 1928 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து தேசத்து அறிவியலாளர் மருத்துவர் அலெக்சான்டர் பிளெமிங் ( Alexander Fleming) என்பார் கண்டுபிடித்த பென்சிலினில் (Penicillin) இருந்து துவங்கியது. இன்றைக்கு சந்தையில் அனுமதிக்கபப்ட்ட ஆன்டிபயாடிக் மற்றும் அதன் அடிப்படை தகவலை பிறிதொரு பதிவில் விளக்கமாக பார்ப்போம்.
ஒரு குறிப்பிட்ட பாக்ட்டீரியா தொற்று நோய்க்கு ஆன்டிபயாடிக் மருந்து தரும் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் பாக்டீரியா தன்னை இந்த மருந்தில் இருந்து தப்பித்து கொள்ளும் உத்தியினை (survival) தன்னுள்ளே வைத்துள்ளது. இதன் தகவமைப்பு உத்திகள் நான்கு வழி முறைகளில் நடைபெறுகிறது. அதில் முக்கியமானது அரைகுறையாய் கொல்லப்படும் பாக்ட்டீரியா கிருமிகள் அருகில் இருக்கும் ஆரோக்கியமான கிருமிகளுக்கு இத்தகவலை அனுப்பி விடுகின்றன. பிறகு என்ன, அந்த பாக்டீரியாவின் மரபணு அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி (Conjugation) எளிதில் ஆன்டிபயாடிக் மருந்துகளிடம் இருந்து தப்பித்து விடும்.
ஆகையால் ஒரு ஆன்டிபயாடிக் மருந்து குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் தீவிரமாக பாக்டீரியாவின் தகவமைப்பினை எதிர்த்து செயலாற்ற இயலுவதில்லை.
அப்படியானால், ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகும். பாக்டீரியாவில் தொற்றை பொருத்து அவை உடலினுள் பரவும் வேகத்திற்கு தக்க மனிதன் உயிரை விட வேண்டி வரும். அம்மா, ஆயா வைத்தியம் என்று பலரும் கை வைத்தியம் செய்து கொண்டே பல தீவிர பாக்டீரிய தொற்றுகளின் விபரீதம் தெரியாமல் உயிரை விட இதுவும் ஒரு காரணம்.
என்னடா கொடுமை இது. ஆன்டிபயாடிக் எடுத்தாலும் பாக்டீரியா தப்பித்துக் கொள்கிறதே என யோசிக்க வைக்கிறது அல்லவா?
ஆம், பாக்டீரியாக்களும் மனிதர்களைப் போலவே மிகத் திறமையானவை. தன்னை ஒவ்வொரு கால கட்டத்திற்கும் தகுந்த வாறு தகவமைத்துக் கொள்வதில் அதி புத்திசாலி. குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக பாக்டீரியாக்கள் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதை ஆன்டிமைக்ரோபிய ரெசிஸ்டன்ஸ் (antimicrobial resistance) என்று அறிவியல் உலகம் அழைக்கிறது. இங்கே மைக்ரோப்ஸ் (microbes) என அழைக்கப்படுவை பாக்டீரியாக்களோடு சேர்த்து, பூஞ்சைகள், வைரஸ்கள், ப்ரோட்டிஸ்ட்டுகள் என பலவகை கிருமிகள் சேர்ந்ததுதான்.
மனித உடலுக்குள் ஏற்படும் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்சை எப்படி குறைக்கலாம். ஒரு மருத்துவர் உங்களுக்கு மூன்று நாளைக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைத்தால் குணமாகினாலும் மருந்துகளை முழுச் சுற்று முடியும் வரை மருந்தினை எடுத்துக் கொள்ளுங்கள். அரைகுறையாய், நோய் முற்றிலும் குணமாவது தெரியாமல் இடையிலேயே மருந்தினை நிறுத்தினால், அடுத்த முறை அதே பாக்டீரியா தொற்று மிக வீரியத்துடன் தாக்கும் போது முன்பு கொடுக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்யாது.
ஆகவே மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுச் சுற்றுக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றொன்று நீங்களாகவே கூகுளிலோ அல்லது நண்பர்களுக்கு தரப்பட்ட மருந்து பரிந்துரையினையோ எடுத்துக் கொள்வது, அல்லது மெடிக்கலுக்கு சென்று நீங்களாகவே மருந்து வாங்கி உண்பதை தயவு செய்து நிறுத்துங்கள். இதுவும் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் அதிகரிக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று.
சரி நான் சொல்ல வந்த விசயத்துக்கு வருகிறேன்.
இந்தியாவின் பொதுச் சுகாதாரத்தில் (public health) இன்று வரை சவாலாக இருப்பது திறந்த வெளியில் மலம் கழிப்பது (open defecation). குறிப்பாக திறந்த வெளியில் மலம் கழிக்கும் போது ஏற்படும் பாக்டீரியா தொற்று அச்சூழலில் வசிக்கும் அனைவரையும் மிக மோசமாக பாதிக்கக் கூடியது. மேலும் இவை அச்சூழலில் மிக வலிமையோடு எதிர்ப்பு சக்தி (resistance) பெறுவதால் இவற்றினை அழிப்பதும் கடினம். எளிய வார்த்தையில் சொல்லப் போனால் மிக மோசமான ஒரு வெடிகுண்டை ஒவ்வொரு நாளும் திறந்த வெளியில் வெடிக்க வைக்கிறீர்கள்.
இந்த மைக்ரோப்சுகள் நீர் நிலை, குடி நீர் தேக்கிகளில் கலக்கும் போது பல்வேறு வியாதிகளை உண்டு செய்பவை. பிறகு இதனை அழிக்கவல்ல தீர்வு ஒன்றினை பெறுவது என்பது மிகக் கடினம்.
மீண்டும் மீண்டும் ஏன் சொல்கிறேன் என்றால், 1928 ஆம் ஆண்டு தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து வகைகளை இயற்கை, மற்றும் செயற்கை வேதி பொருட்களை கொண்டு மருந்துலகம் வடிவமைத்து இருந்தாலும், 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளை வடிவமைக்க இயலவில்லை. காரணம் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்னும் காரணி.
ஆகையால், திறந்த வெளியில் உங்கள் பகுதியில் மலம் கழிக்கும் வழக்கம் இருக்குமானால் அருகில் இருக்கும் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி சுகாதாரத்துறை மூலம் இதனை நிறுத்த வலியுறுத்துங்கள்.
இந்த தளத்தில் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவை மிக முக்கியமானது.
உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) அறிவுறுத்தலின் படி உலகை எதிர் நோக்கி இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்னும் காரணிதான். இது எந்த தேசம், வயது, பாலினம் என எதையும் பார்க்காது தாக்கும் வல்லமை கொண்ட பாக்டீரியாக்களை உருவாக்க வல்லது.
ஆகவே இவ்விசயத்தில் அரசு, பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், அறிவியலாளர்கள் என எல்லோரும் ஒரு குடையில் கீழ் இயங்கி ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் சிக்கலுக்கு எதிராக நின்று போராடுவோம்.
குறிப்பு:
தயவு செய்து இந்தப் பதிவில் மரபு வழியாக எதையாவது செய்கிறோம் என உளற வேண்டாம். இவை நம்பிக்கை சார்ந்த பதிவு அல்ல, முழுக்க முழுக்க உலகமே எதிர் நோக்கி இருக்கும் சுகாதார பிரச்சினை.
சானிட்டரி துறையில் பணி புரியும் என் ஜி ஓக்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். பிரித்தானியா, இந்தியா கூட்டு ஆராய்ச்சியில் இந்த தளத்தில் ஆய்வுப் பணி செய்ய பல தகவல்களை சேகரித்துக் கொண்டுள்ளேன்.
மக்களின் நலன் கருதி
அன்புடன்
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
19/02/2018
at AMRSan Workshop held at ICT Mumbai, Feb 3-8, 2018 |
No comments:
Post a Comment