Saturday, 10 February 2018


சாக்கடை நீர் ஒரு பொக்கிசம்


உங்களுக்கு பிடித்தமான பறவைகள் ஐந்தை சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், நிச்சயம் அதில் காகம் இருக்கவே வாய்ப்பில்லை.

வசீகரிப்பான நிறம், குரல் என்று இல்லாததால் காகம் பெரிதாக மனிதர்களால் ஈர்க்கப்படவில்லை என்றாலும் காகம் குறித்து பல்வேறு பாசிட்டிவான‌  நம்பிக்கைகள் உலகமெங்கும் நிலவுகிறது. 

காக்கை ஆகச் சிறந்த புத்தி கூர்மையுடைய (intelligent) பறவை என்று அறிவியலாளர்கள் தற்போது நிரூபித்துள்ளார்கள்.. மனிதர்களின் நடவடிக்கைகளை கவனிக்கும் காகங்கள் அதனை அப்படியே செய்யவும் பழகுகிறது. குறிப்பாக காகம் அதிகம் சுத்தத்தினை எதிர்ப்பார்க்கும்  பறவை. புறாக்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அது மனிதர்களைப் போலவே எல்லா இடங்களையும் அசுத்தப் படுத்துவதோடு, மனிதர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்து கொள்ளக் கூடியவை.

ஆனால் காகங்கள் மனித நடமாட்டமே இல்லாத மரங்களின் கிளைகளில் வசிக்கும் தன்மை கொண்டது. மனிதர்கள் புழங்கும் இடங்களை அசுத்தப்படுத்தாதவை.

சரி எதற்கு இந்த காகம் பற்றிய பீடிகை. 

இங்கே புகைப்படத்தில் பார்க்கும் நீர்த் தேக்கத்தில் ஏராளமான காகங்கள் குளிப்பதையும் நீர் அருந்துவதையும் காணலாம்.
At sewage water treatment plant inside Rashtriya Chemicals and Fertilisers, Chembur, Mumbai.
காகங்கள் சுத்தமான நீர் நிலையில் மட்டுமே தனக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும். அதனாலேயே மனிதர்கள் பயன்படுத்தும் சுற்றுப் புறத்தோடு அனுசரித்து வாழ்பவை. அந்த வகையில் பார்த்தால் இந்த நீர் நிலை மிக சுத்தமானது என்று நாம் நிச்சயம் நம்பலாம்.

ஆனால், இந்த நீர்த் தேக்கத்தில் உள்ள நீரானது முழுக்க மும்பையின் ஒரு பகுதியில் இருந்து பெறப்பட்ட சாக்கடை (sewage) நீரை சுத்திகரிப்பு செய்தது என்றால் நம்ப முடிகிறதா?

மனித கழிவுகள், குப்பைகள், உணவு கழிவுகள் என பல்வேறு கழிவுகளை நீக்கி நீரை மட்டும் வடி கட்டி பல்வேறு நிலைகளில் சுத்திகரிப்பு செய்து இந்த நீரை ஒரு தேக்கத்தில் தேக்கி வைத்திருந்தார்கள். இந்த குப்பை சுத்திகரிப்பு நிலையம், மும்பை நகரின் செம்பூரில் உள்ள‌ ராஸ்ட்டிரிய ரசயானம் மற்றும் உரத் தொழிற்சாலையின் (Rashtriya Chemicals and Fertilisers) உள்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

மும்பை நகரின் எல்லைப் பகுதியில் இருந்து மிகப் பெரிய கால்வாய் மூலம் குப்பைகளை வடிகட்டி நீரை மட்டும் பிரித்து இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு  கொண்டு வருகிறார்கள். பின்னர் ஏரியேசன், உயிரி நுட்பம், மற்றும் தலைகீழ் சவ்வூடு பரவல் (reverse osmosis) என பல நிலைகளில் சுத்திகரித்து கிருமிகளற்ற, கடினமான தாதுக்கள் நீக்கப்பட்ட மிக‌ சுத்தமான நீரை தனியாக நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கிறார்கள்.

ராஸ்டிரிய உரத்தொழிற்சாலையின் ஐம்பது சதவிகித நீர்த் தேவையினை குப்பையில் இருந்து மறு சுழற்சி செய்யப்பட்ட நீரில் இருந்தே பெறுகிறார்கள். அதை விட ஆச்சரியம் மும்பை நகரில் உள்ள குடிசைகள் நிறைந்த சேரிப் பகுதிகளுக்கு டாய்லெட் மற்றும் இதர தேவைகளுக்கான பயன்பாட்டில் 75 சதவிகிதம் இந்த நீரைப் பயன்படுத்துகிறார்கள்.

நாள் ஒன்றிற்கு 22.75 மில்லியன் டன் மாநகராட்சி சாக்கடை கழிவில் இருந்து 15 மில்லியன் டன் குடி நீரை சுத்திகரித்து பெறுகிறார்கள். தற்போது டிராம்பே பகுதியில் மற்றொரு சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன நுட்ப வசதிகளுடன் நிறுவி உள்ளனர்.

மும்பை போன்ற கோடிக் கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் இது போன்ற கழிவு நீரை பாதுகாப்பாக சுத்திகரிப்பதோடு அதில் இருந்து கிடைக்கும் சுத்தமான நீரை மறு சுழற்சிக்கு செய்வதன் மூலம் சுற்றுப் புற சுகாதார சீர்கெட்டை பெருமளவுக்கு தடுக்க முடிகிறது. மேலும், மனித செயல்பாடுகள், தொழிற்சாலை தேவைகள் இவற்றில் வீணாகும் நீர்ப் பயன்பாடும் சேமிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில்  அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் எதிர் வரும் காலத்தில் நீர்த் தேவை மிகப் பெரிய சவாலாக இருக்கும். உதாரணத்திற்கு இந்தியாவின் கையிருப்பு நீரின் அளவு 2025 ஆம் ஆண்டு தோராயமாக 1320 கன மீட்டர் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு 2001 ஆம் ஆண்டு நீர் இருப்பு 1816 கன மீட்டராக இருந்தது. இடைப்பட்ட 17 ஆண்டுகளில் 496 கன மீட்டர் கொள்ளவு தற்போது வேகமாக குறைந்துள்ளது. அப்படி என்றால் 2025 ஆண்டு நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

நீர் தட்டுப்பாட்டினை எதிர்க் கொள்ள ஒரே உத்தி கழிவு நீரினை மறு சுழற்சி செய்து அதில் இருந்து குடி நீர் அல்லாத மனித தேவைகளை பூர்த்தி செய்வது, விவசாயத்திற்கு பயன்படுத்துவது என முயற்ச்சிக்கலாம்.

சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் கேப்டவுன் நகரில் மிகப்பெரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கே நாள் ஒன்றிற்கு தற்போது கேப்டவுன் நகர் மன்றம் மூலம் ஒரு குடும்பத்திற்கு 25 லிட்டர் மட்டும் ரேசன் முறையில் வழங்கி வருகிறார்கள்.  இந்த 25 லிட்டர் நீரை வைத்து ஒரு குடும்பம் எப்படி வாழ முடியும் என யோசிக்கவே கொடுமையாக உள்ளது. மே மாதம் கோடையில் மிகப் பெரிய நீர் வறட்சியினை எதிர் கொள்ள "ஜீரோ டே" என்று இப்பொழுதே கேப் டவுன் நகரில் நாட்களை கணக்கிடத் துவங்கி விட்டார்கள்.

தமிழகம் கோடை காலத்தில் காவிரி நீருக்காக கர்நாடகத்தையே எதிர்பார்த்து உள்ளது. பருவ மழை பொய்த்து போனால் நிலைமை மிக மோசமாகி விடும். நம்மிடம் கைவசம் உள்ள‌ ஏரி, கண்மாய்களை தூர் வாரி வைப்பதோடு, அவற்றில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், முட்புதர்கள் என மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். குறிப்பாக ஆக்கிரமிப்பு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்.

நகர்ப் புற பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு அதிகமாக நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள் இந்த நீரைக் கொண்டு இயங்கவும் அறிவுறுத்தலாம்.

மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என தனித் தனியாக பிரித்துப் போட்டால் குப்பைகள் மறு சுழற்சி மூலம் மின்சாரம், உரம் போன்ற விலை மிகு பொருட்களை நன்மையாக பெற முடியும்.

குடிநீர் சேமிப்போடு, கழிவு நீரையும் சுத்திகரிக்கும் நுட்பங்களை விரைவாக கற்பதோடு பயன்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் நீர் நிலைகளில் காகம் பெருகட்டும்.


குறிப்பு:
உலக நாடுகளிலேயே சிங்கப்பூர்தான் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதில் முன்னனியில் உள்ளது. கழிவு நீரோடு, மழை நீரையும் சேதாரம் இல்லாமல் சேகரித்து தலை கீழ் சவ்வூடு பரவல் நுட்பம் மூலம் சுத்திகரித்து அவற்றை "NEwater"  என்ற பெயரில் குடிநீராக பாட்டில்களில் சந்தையில் விற்கிறார்கள்.சிங்கப்பூர் அளவிற்கு இல்லை என்றாலும் மும்பையில் உள்ளது போல் சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து மறு சுழற்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment