முடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது
Monday, 2 October 2023
மருந்து அல்லது உடற்கூறியல் துறைக்கான 2023 ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்ற இருவரில் ஒருவர் பேராசிரியர் கரிகோ கத்தலின் (Katalin Kariko) அமெரிக்க நாட்டின் உயிரி வேதியியல் (Biochemistry) துறையினை சார்ந்த ஆய்வாளர் ஆவார்.
சமகாலத்தில் பெனின்சுலவேனிய பலகலைக் கழகத்தில் ( University of Pennsylvania) துணைப் பேராசிரியாராகவும் (Adjunct Professor) பணியாற்றுகிறார்.
இன்றைக்கு உலகமே திரும்பி பார்க்கும் உயரத்தில் உள்ள இவரது பூர்விகம் ஹங்கேரி (Hungary) நாடு. ஹங்கேரி மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு. ஏறத்தாழ 1 கோடி மக்கள் தொகையினைக் கொண்டது. அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சராசரியாக ஏழில் ஒரு பங்கு.
கரிகோ, தனது பள்ளிக் கல்வி முதல் முனைவர் ஆராய்ச்சி பட்டம் வரை ஹங்கேரி நாட்டிலேயே பயின்றவர். தனது முது முனைவர் (Post doctoral fellowship) பணி காலத்தில் அவர் பணி புரிந்த ஹங்கேரி நாட்டின் ஆய்வு மையத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் 1985 ஆம் ஆண்டு தனது 2 வயது குழந்தை மற்றும் கணவருடன் குடும்பத்துடன், அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார்.
கரிகோ சமீபத்தில் "Breaking Through: My Life in Science" என்னும் புத்தகத்தை எழுதி உள்ளார். இப்புத்தகத்தில், ஹங்கேரி நாட்டில் எளிய பின் புலத்தில் இருந்து தொடங்கிய தன் வாழ்க்கை முதல் கோவிட் பெருந்தொற்றுக்கு தடுப்பூசி வடிவமைத்தது வரை தனது வாழ்வின் பயணத்தை விவரித்துள்ளார்.
புரோட்டீன் சிகிச்சைக்கான In-vitro mRNA வை உருவாக்குவதே இவரது ஆய்வு. பின்னாளில் 2006-2013 ஆம் ஆண்டு RNARx, என்னும் நிறுவனத்தை அவர் தோற்றுவித்த பின் BioNTech என்ற நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுகிறார். இந்நிறுவனத்தில் முதலில் துணைத் தலைவராகவும், 2019 இல் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.
கரிகோவின் ஆய்வுப் பணியானது ஆர்என்ஏ வை மையமாகக் கொண்ட நோயெதிர்ப்பு செயல்பாட்டின் அறிவியல் ஆராய்ச்சியை உள்ளடக்கியது, இதன் வாயிலாக ஆர்என்ஏவின் நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் நியூக்ளியோசைடு மாற்றங்களை அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணர் ட்ரூ வெய்ஸ்மேனுடன் (Drew Weissman) இணைந்து கண்டுபிடித்தார். இது எம்ஆர்என்ஏவின் சிகிச்சை பயன்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படை முடிவுகளே கோவிட் 19 நோயெதிர்ப்பு தடுப்பூசியின் வடிவமைப்பில் பெரும் உதவியாக இருந்தது.
உலகமெங்கும், மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த பெண்கள், அறிவியல் துறையில் (STEM) பயில வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு பேராசிரியர் கரிகோவின் வாழ்க்கை தரும் செய்தி ஒன்றுதான். வறுமை, பாலின பாகுபாடு போன்ற சமூக சவால்களை கண்டு பெண்கள் அச்சப்படக் கூடாது. இவற்றை எதிர்கொண்டு வெல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போது, தமிழ்நாடு அரசின் உயர்கல்வி அமைச்சகம் "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்" மூலம் அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயினை வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு கட்டணமில்லாமல் பேருந்து வசதியும் கிடைத்துள்ளது. இத்தையக நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முது நிலை அறிவியல் அல்லது பொறியியல் படிப்பு வரை அடித்தளம் இட்டுக் கொள்ளுங்கள்.
உலகமெங்கும், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு உயர்கல்வி ஆய்விற்கான நிதி உதவிகளில் முதன்மை அளிக்கப்படுகிறது. உங்களது முனைவர் ஆய்வுப் பட்ட படிப்பிற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் பிறந்த மண்ணில் மட்டும் தான் சாதிக்க இயலும் என்றில்லை. உங்கள் அறிவைக் கொண்டு உலகை வலம் வரலாம்.
கண்டுபிடிப்பாளர்களுக்கு, அறிவியலாளர்களுக்கு எல்லை என்று எதுவும் இல்லை. சிறகடித்து பறந்து செல்லுங்கள். மானுட குலத்திற்கான கண்டுபிடிக்களை தந்து மனிதம் வெல்லுங்கள்.
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
இணைப் பேராசிரியர், கெரியட் வாட் பல்கலைக் கழகம்
ஸ்காட்லாந்து, பிரிட்டன்
02/10/2023
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment