அறிவோம் நோபல் அறிவியலாளர்கள் -1
நேற்றைய காலைப் பொழுதில் ராயல் சுவீடசு அறிவியல் அகாதமியின்
செயலர் கோரன் கன்சன் 2016 ஆம் ஆண்டிற்கான வேதியியல் பிரிவு நோபல் பரிசுகளை அறிவித்துக்
கொண்டிருந்தார்.
பரிசு அறிவிப்புக்கு பின் இவ்வருடத்திய நோபல் பரிசாளர்களில்
ஒருவரான நெதர்லாந்து நாட்டை சார்ந்த பேராசிரியர் பெரிங்கா தொலை பேசி அழைப்பில் வந்தார்.
அங்கு குழுமியிருந்த பன்னாட்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு தொலை பேசி வாயிலாகஅற்புதமாக
பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அதில் ஒரு கேள்வி மிகவும் ஈர்த்தது.
அக்கேள்விக்கு முன் எந்த ஆய்விற்கு இந்த வருட நோபல் பரிசு வேதியியல்
துறைக்கு வழங்கப்பட்டது என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
நம் மயிரிழையின் அளவை ஒப்பிடும் போது ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும்
குறைவான மூலக்கூறு அளவிலான இயந்திரங்களை (Molecular Machines) வடிவமைத்ததிற்கு இந்த
வருடத்திய விருது அறிவிக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் நம் உடலில் இருக்கும் வேதி
அமிலங்களின் மாதிரிகளை கொண்டு ஆய்வகத்தில் செயற்கையாக வடிவமைக்கப்பட்டவை.
சரி விசயத்திற்கு வருகிறேன், அந்த கேள்வியை நோபல் மீடியா ஊடகத்தில்
இருந்து ஒரு பெண்மணி கேட்டிருந்தார் ;
தற்போது உங்களுக்கும்
உங்கள் குழுவினருக்கும் காத்திருக்கும் சவால் என்ன?
பேராசிரியர் பெரிங்கா மிக நேர்த்தியாக தன் பதிலை தெளிவாக சொன்னார். "இந்த சூழலில் நான் ரைட் சகோதரர்களை பற்றி நினைவு கூற விரும்புகிறேன்.ஏறத்தாழ
100 வருடங்களுக்கு முன்பு, முதன் முதலாக அவர்கள் வானில் பறக்க நினைத்த போது, மக்கள்
ஏன் தற்போது பறக்கும் கருவிகள் தேவை என கேள்வி எழுப்பினர், ஆனால் தற்போது போயிங்
747 உள்ளிட்ட பல விதமான விமானங்கள் வந்து விட்டது. அதைப் போன்ற ஒரு கேள்வியாகவே நான்
உணருகிறேன்.
வாய்ப்புகள் என்பது மேன்மையானது. தற்போது இருக்கும் சூழலில்
வேதியியலின் துணை கொண்டு நம்மால் இயன்ற பொருட்களை கொண்டு மூலக்கூறு இயந்திரங்களை வடிவமைத்துள்ளோம்.
ஒரு கால கட்டத்தில் மாறுபடும் செயல்பாடுகளை (dynamic functionality) கொண்ட பொருட்களை
கொண்டு இந்த இயந்திரங்களை வடிவமைக்கும் போது
அவை எண்ணற்ற பயன்பாடுகளை தோற்று விக்கும்.
எதிர் காலத்தில் திறன் மிகு பொருட்கள் நிறைய தொகுக்கப்படும்
சூழலில் இந்த இயந்திரங்கள் பெரிய வரமாக அமையும். முக்கியமாக இந்த மூலக்கூறு இயந்திரங்கள்
தங்களை மீள் கட்டமைப்பு செய்து கொள்வதோடு தானே தகவமைப்பு செய்து கொள்ளும் வாய்ப்பும்
ஏற்படும். மேம்படுத்த சமிக்ஞைகள் மூலம் தன் பண்புகளை தானே செறிவூட்டிக் கொள்ளும். இதன்
வாயிலாக நானோ அளவிலான ஆற்றல் மாற்றிகளை வடிவமைக்கலாம் (Nano Energy Convertors).மேலும்
அளவில் மிகச் சிறிய மூலக்கூறு இயந்திரங்கள் தாங்கள் தயாரித்த ஆற்றலை தன்னகத்திலேயே சேமித்து வைத்துக் கொண்டு எந்த வித புற ஆற்றலிமின்றி தானாகவே
இயங்கலாம். இது நானோ மோட்டார்கள் என்னும் முற்றிலும் ஒரு புதிய துறையாக வளரும்
வாய்ப்பை ஏற்படுத்தி தரும்."
யோசித்துப் பார்த்தால் அறிவியல் நுட்பம் எவ்வளவு மகத்தானது
எனப் புரிந்து கொள்ள இயலும். இந்த மூலக்கூறு அளவிலான நனோ இயந்திரங்கள் மாத்திரை வடிவில்
ஒரு குப்பியில் வைத்து நாம் விழுங்கி விட்டால் போதும். இதனோடு இணைக்கப்பட்டுள்ள மருந்தை
கிருமிகள் இருக்கும் பகுதிக்கு தேடிச் சென்று (targeted drug delivery) அழித்து விட்டு மருந்தை ஒரு கொரியர் பையனைப் போல அங்கு செலுத்தி
விடும். சிக்கலான அறுவை சிகிச்சைகள் இனி எளிதாகலாம். இப்படி பல புதிய பயன்பாடுகள் எதிர்காலத்தில்
நிச்சயம் கிடைக்கப் பெறலாம்.
கடந்த நூறாண்டுகளில் அறிவியலின் துணைக் கொண்டு மானுடத்தின்
தேவைகளை பெருமளவு எளிதாக்கி இருக்கிறோம். இன்னும் நானோ அறிவியல் உலகை சிறிதாக்கும்.