முடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது
Tuesday, 10 August 2021
பிரித்தானியாவின் தெற்கு எல்லை
Sunday, 14 March 2021
Saturday, 13 March 2021
மகளிர் நலனில் திமுக தேர்தல் அறிக்கை
Sunday, 21 February 2021
சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) 2021 - Welsh Language and Culture
வேல்சு (Wales) தேசம் ஐக்கிய இராஜ்ஜியத்தின் (United Kingdom) ஒரு அங்கமாக விளங்குகிறது. உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாக வேல்சு தேசத்தை சொல்லலாம்.
இலண்டன்
(London) நகரில்
இருந்து இரண்டு மணி நேரம் மேற்கு
திசையில் பயணித்தால், இங்கிலாந்தின் எல்லைப் பகுதியான பிரிஸ்டல் (Bristol) நகரை அடைந்து விடலாம்.
அங்கிருந்து பிரித்தானியாவின்
மிக நீண்ட நதியான செவரனை (River Severn) கடந்தால்
நியூபோர்ட் (Newport) நகர எல்லையில் வேல்சு
தேசத்திற்கான வரவேற்பு பலகையைக் காணலாம்.
வேல்சின்
பூர்விகம் கெல்டிக் (Celtic) மரபைச் சார்ந்தது. தற்போதைய கெல்டிக்
இனத்தின் மிக முக்கியமான நிலப்பரப்புகளாக
விளங்கும் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து தேசத்தை இவர்களது பங்காளிகளாக சொல்லலாம்.
வேல்சு தேசத்து எல்லையில் உள்ள வரவேற்பு பலகை. Picture courtsey - thegaurdian.com |
வேல்சு தேசத்தை அதன் தாய்மொழியான வேல்ஸ் (Welsh) மொழியில் “கிம்ரே” (Cymru) என்றழைக்கிறார்கள். இதன் மக்கள் தொகை, தோராயமாக 35 லட்சம். தமிழ்நாட்டின் நிலப்பரப்போடு ஒப்பிடும்போது தோராயமாக 20 ல் ஒரு பங்கு அல்லது 6 மாவட்டத்தின் நிலப்பரப்பு அளவே உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுரங்க தொழிலே இப்பகுதியில்பிரதானமாக இருந்திருக்கிறது. ஆகையால் இப்பகுதியில் தொழிலாளர் கட்சியின் (Labour Party) கை எப்போதும் சற்று ஓங்கியே இருக்கும். தற்போது கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்களுக்கு தேவையான இயந்திர பாகங்களை தயாரிப்பது உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் வேல்சு பகுதியில் உள்ளது. ஏர்பஸ் (AIRBUS) நிறுவனத்திற்கான விமான பாகங்களில் இறக்கை தயாரிப்பதற்கான தொழிற்சாலையும், ஐரோப்பாவின் மிகப்பெரிய இருப்பு உருக்கு தொழிற்சாலையான டாடா ஸ்டீல் (Tata Steels) இரண்டும் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
1980 களுக்கு முன்பு
வரை இவர்களது பூர்விக மொழி மெல்ல மெல்ல
அழிந்து வந்த சூழலில் வேல்சு
(Welsh) மொழியினை
மீட்டெடுக்க பல திட்டங்களை வேல்சு
அரசு (Wales Government)
முன்னெடுத்தது. அதன் முதல் பகுதியாக
ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி
வரை, முழுக்க வேல்சு மொழியில் சொல்லித்தரப்படும் பள்ளிகளை ஆரம்பித்தார்கள். தற்போது இங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அன்றாட அலுவல் பயன்பாட்டில் வேல்சு, ஆங்கிலம் என்ற இரு மொழிக்
கொள்கையினை கடைபிடித்ததால் வேல்சு மொழி தற்போது மெல்ல தளைக்கிறது.
எமது சுவான்சி பல்கலைக் கழகத்தினை (Swansea University) வேல்சு மொழியில் “பிரிவசுகால் அபர்தவே” (Prifysgol Abertawe) என்று அழைக்கிறார்கள். இதன் பொருள் “தவே” (Tawe) நதியின் முகத்துவாரத்தில் உள்ள “தலைமைப் பள்ளி” அல்லது “பல்கலைக் கழகம்” என்று பொருள். ஆங்கிலத்தில் சொல்வதை விட வேல்சின் தாய்மொழியில் சொல்லும் போது, எங்கள் பல்கலைக் கழகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை துல்லியமாக சொல்லி விடுகிறது. இந்த ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு.
தங்களது
தாய்மொழியை வளர்க்கும் பொருட்டு வேல்சு அரசு தொலை நோக்கு
திட்டம் ஒன்றை வரையறுத்துள்ளது. எதிர்வரும்
2050 ஆம்
ஆண்டில் குறைந்த பட்சம் பத்து லட்சம் (Cymraeg 2050 A
million Welsh speakers) பேருக்காவது
வேல்சு மொழி பேசத் தெரிந்திருக்க
வேண்டும். அதாவது, இவர்களது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களை
தாய்மொழியில் பேச வைக்க வேண்டும்
என்பதே குறிக்கோள். ஒரு மொழியை இனி
புதிதாக உருவாக்க இயலாது, ஆகையால் தமது மொழி அடையாளங்களை
மீட்டெடுக்கும் பணியையே தற்போது வேல்சு தேசம் செய்ய துவங்கியுள்ளது.
அன்றாட வாழ்வில் மக்களுக்கு வேல்சு மொழி வார்த்தைகள் பதிய வேண்டும் என்பதற்காக சாலைகளில் வேல்சு மொழியில் எழுதுத துவங்கினர். “மெதுவாக செல்” எனப் பொருள்படும் “ARAF” வார்த்தை வேல்சு பகுதியில் உள்ள சாலையில் பயணிப்பவர்களுக்கு மிக பரிச்சயமானது. வேல்சு தேசம் முழுவதும் இது போன்ற பல சாலை அறிவிப்பு குறியீடுகள், அறிவிப்பு பலகைகள் என எல்லா இடங்களிலும் இரு மொழியை காணலாம்.
தெற்கு வேல்சு (South Wales) பகுதியான கார்டிப் (Cardiff) நகரம் (வேல்சு தேசத்தின் தலைநகரம்), மற்றும் சுவான்சி (Swansea) நகர பகுதிகளில் ஆங்கிலம் முதன்மையாகவும், வேல்சு அறிவிப்பு இரண்டாவதாகவும் இருக்கும். சுவான்சி நகருக்கு வடக்கு பகுதியில் பயணிக்க துவங்கி விட்டால், வேல்சு அறிவிப்பு முதலாவதாகவும், ஆங்கிலம் மொழி இரண்டாவதாகவும் இருக்கும். வடக்கு வேல்சு பகுதிக்குள் நுழைந்து விட்டால் வேல்சு தேசத்தின் கொடியான “சிவப்பு நிற டிராகன்” எல்லா வீடுகளில் பறக்கும். அந்த அளவிற்கு தாய்மொழியைக் நேசிப்பவர்கள் வேல்சு தேசத்து மக்கள்.
பிரித்தானியாவின்
அங்கமாக வேல்சு இருந்தாலும் ஒலிம்பிங், காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் வேல்சு தேசத்திற்கென்றே பங்கேற்கும் தனி அணியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக ரக்பி, கால்பந்து,
நீச்சல் போட்டியில் உலகத் தரத்திற்கான இணையான அணியை உருவாக்கி வைத்துள்ளனர்.
பிரித்தானியாவிற்கு
வெளியில் இருந்து
பார்ப்பவர்களுக்கு UK முழுவதும் ஆங்கிலம் பேசுவது போல் தோன்றினாலும் நிலப்பரப்பிற்கான
இன அடையாளத்தை விட்டு தர வேல்சு மக்கள்
ஒரு போதும் முன் வந்ததில்லை. சுவான்சி
பல்கலைக் கழகத்தில் என்னுடன் பணிபுரியும் உள்ளூர்காரர்களின் வீடுகளில் வேல்சு மொழி பேசுவதை கட்டாயமாக
கடைபிடிக்கிறார்கள். அந்த அளவிற்கு தாய்
மொழி தாகம் உடையவர்கள். ஸ்காட்லாந்து மக்கள் இந்த விசயத்தில் இன்னும்
ஒரு படி மேல்.
2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான மிதிவண்டி போட்டியில் வேல்சு தேசத்திற்காக கலந்து கொண்டு தங்க பரிசை வென்ற நிகோலா. Picture courtsey - Walesonline.co.uk |
உலகையே கோலோச்சும் ஆங்கில மொழிக்கு எதிராக ஒரே நிலப்பரப்பில் இருந்து கொண்டு தங்களது மொழியை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனெனில் மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது அவர்களின் அதிகாரத்திற்கான திறவுகோலும் கூட. இந்த இடத்தில் “இந்தி” என்னும் பெருந் தேசிய மொழியுடன் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மூலம் ஒரு இனத்திற்கான அதிகாரத்தை 70களில் விதை போட்டு துவங்கி வைத்த பேரறிஞர் அண்ணாவை நன்றியோடு நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்னும்
சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், இந்தி மொழி
ஆதிக்கத்திற்கெதிராக தமிழ் மொழிக்கு கை கொடுத்தது “திராவிடம்”
என்னும் கேடயம். திராவிட மொழி குடும்பங்கள் என்னும் பெரிய அடையாளத்தை முன் வைத்தே நமக்கான அதிகாரத்தினை மீட்டெடுக்க இயலும் என்பதை நன்கு உணர்ந்த தந்தை பெரியார் “திராவிடர்” என்ற பதத்தை கையாளத்
துவங்கினார். இதே போல, வேல்சு
மொழி தனது கெல்டிக் இன
பங்காளிகளோடு இன்றளவும் அரசியல் ரீதியிலான உறவை நன்கு பேணுகிறது.
தமிழகத்தில் மொழி வழியான அரசியல்
அதிகாரத்தில் ஒரே இனக் குடும்பங்களுக்கான உறவை, குறிப்பாக திராவிடத்தின் முக்கியத்துவத்தை இங்குள்ள சூழலைப் பார்க்கும் போது நன்கு
உணர முடிகிறது.
வேல்சு தேசம் முழுவதும் உள்ள எல்லா ஆரம்ப பள்ளிகளிலும் வேல்சு மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, சுவான்சி நகரின் ஆரம்ப பள்ளியில் பயிலும் எனது மகள் வேல்சு மொழிப்பாடத்தை படிக்கிறார். வேல்சு மொழியில் அடிப்படை வார்த்தைகள், உரையாடல், கதை சொல்வது, எண்கள், குறியீடுகள், வாழ்த்து செய்திகள் என பல தளங்களில் இங்குள்ள ஆரம்ப பள்ளியில் பாடத்திட்டம் உள்ளது. மேலும் அரசுப் பணி, பள்ளி, பல்கலைக் கழக பணிகளில் வேல்சு மொழித் திறன் உடையவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. பள்ளி, பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவல்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு சீட்டுகள் என அனைத்தும் வேல்சு, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தரப்படுகிறது. இதன் மூலம் வேல்சு மொழி பெயர்ப்பாளர்களுக்கு பல நிலைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
Wales (Picture courtesy- the guardian) |
உலகம்
செல்கிற வேகத்தில் தாய்மொழிக்கான அடையாளங்களை தக்க வைப்பது, மீட்டெடுப்பது
என்பது கடினமான காரியம். அந்த வகையில் இதற்காக
மெனக்கெடும் வேல்சு தேசத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அறிவியல்
நுட்பம் இவற்றில் வேல்சிடம் இருந்து தமிழகம் கற்க நிறைய இருக்கிறது.
குறிப்பாக பல மொழி பேசும் இனக்கூட்டம் வாழும் நிலப்பரப்பில்
அவர்களுக்கிடையேயான அதிகாரம் மற்றும் பொருளாதார நிதி பகிர்வில் ஒரு சமநிலையோடு கூடிய பரந்துபட்ட தன்மை (equality and
diversity) இருக்க
வேண்டும். ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து கிடைக்கும்
பிராந்திய வளர்ச்சி நிதி (European
Regional Development Fund) மற்றும்
பிரித்தானியாவின் பாரளுமன்ற நிதி பகிர்வு இவற்றில்
எவ்வாறு வேல்சு சாமர்த்தியமாக செயல்படுகிறது என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும்
தனக்கான தத்துவார்த்த கூட்டத்தை, கற்றறிந்த சான்றோர் குழுவை (Learned Society of Wales)
அமைப்பதன் மூலம் எவ்வாறு தனக்கான அதிகாரத்தை நிறுவ
முடியும் என்பதையும்
யோசிக்க
வேண்டுகிறேன். மேலும்
உள்ளூர் சிறு நடுத்தர வணிக
நிறுவனங்களை கல்வி நிறுவனங்களுடன் இணைப்பதற்கான கட்டமைப்பு வேல்சு அரசிடம் உள்ளது. இதனை தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
அதைப்
போலவே, தமிழ்நாடு எவ்வாறு “ஒரு மொழி ஆதிக்க
நிலப்பரப்பில்” பன்முகத்தன்மைக்கான எடுத்துக்காட்டாக, தனித்தன்மையோடு விளங்குகிறது என்பதை நம்மிடம் இருந்து வேல்சு கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக சுகாதாரத் துறைக்கான கட்டமைப்பு, ஆரம்ப பள்ளிகள் வாயிலாக முன்னெடுக்கப்படும் தாய்மொழிக் கல்வி இவற்றில் தமிழகம் உலகிற்கு முன்னோடி
என்றே சொல்வேன்.
தமிழ்,
வேல்சு இரு மொழி பேசும்
மக்களின் வாழ்வியல், மொழி அதிகாரம் குறித்து
அரசியல், சமூகப் பார்வையில் ஆய்வு செய்யலாம். இந்த ஆய்வின் முடிவுகள்
இரு இனத்திற்கும் நன்மை பயக்கும்.
இன்றைய சமகால வளர்ச்சியில், அறிவியல் நுட்ப கூறுகளை உள்வாங்கி புதுமையை புகுத்திக் கொள்ள ஏதுவான மொழியே தொடர்ந்து எதார்த்த உலகில் பிழைக்கும். வெறும் ஆண்ட பரம்பரை கதைகள்
மட்டுமே மொழியை செழிப்பாக வைத்திருக்க உதவாது. இளைய தலைமுறை மொழியை
கைக்கொள்ள அம்மொழியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அதே மொழியில் நுட்பங்களை
கைக்கொள்ளும் தளங்கள் விரிவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் வேல்சு
மொழி புதிய முயற்சிகளுடன் நம்பிக்கையோடு பயணிக்கிறது.
தாய்மொழியை
நேசிக்கிற எல்லோருக்கும் எனது சர்வதேச தாய்மொழி
தின வாழ்த்துகள்!
-முனைவர்
சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி
பல்கலைக் கழகம், வேல்சு, பிரித்தானியா
குறிப்பு:கட்டுரையாளர்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வேல்சு அரசின் கூட்டு இணைப்பில் வழங்கப்படும்
சர் கிம்ரு ரைசிங் ஸ்டார் விருதை (Ser Cymru-II Rising
Star Fellowship) பெற்றவர்.
வேல்சு தேசத்தில் உள்ள சுவான்சி பல்கலையில் நானோ டெக்னாலஜியை அடிப்படையாகக்
கொண்ட போட்டோ கேட்டலிஸ்ட்கள் குறித்த ஆய்வுக் குழு ஒன்றிற்கு தலைவராகவும், மூத்த ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றி
வருபவர். தனது பள்ளிக் கல்வி
முழுவதையும் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அரசுப் பள்ளியில் பயின்றவர். தொடர்ந்து தமிழில் அறிவியல், பயணம் சார்ந்த கட்டுரைகளை தாய்மொழியில் எழுதி வருபவர்.
Dr Sudhagar Pitchaimuthu |