முடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது
Sunday, 14 March 2021
“தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நான்காம் தலைமுறை/ஐந்தாம் தலைமுறை (4G/5G) மாதம் 10 GB பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் கூடிய இணைய தள இணைப்புடன் கைக்கணினி அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்து கல்வி நிலையங்களிலும் Wi-Fi வசதி செய்து கொடுக்கப்படும்.”
- திமுக, 16 வது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை
வகுப்பறை கல்வி மற்றும் பயிற்றுவித்தலில் மல்டி மீடியா கருவிகள் வந்த பிறகு பல்வேறு புதிய உத்திகள் உலகெங்கும் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக தற்போது நமக்கு கிடைக்கும் கட்டற்ற இணைய சேவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெரிய கொடை. கொரானா பெரும் தொற்று முடக்க காலத்தில் மெய்நிகர் வகுப்புகளுக்கு (virtual classroom) இந்த வசதிகள்தான் தற்போது பெரும் உதவியாக உள்ளது. இந்த வசதி இல்லாவிட்டால் நம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முற்றாக முடங்கி போயிருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு கிடைக்கும் மடிக்கணினி (Laptop) அல்லது கைக்கணினி (Tablet) வசதிகள் ஏழை நடுத்தர குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. முந்தைய அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தந்த லேப்டாப்கள் நன்கு கைகொடுத்தன (Special Programme Implementation Department). இத்திட்டம் மூலம் தோராயமாக 40 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டம் மூலம் பலன் பெற்றவர்கள் கடைசிகட்டமாக 20-21 ஆம் ஆண்டு திட்டப்படி 5 லட்சம் மாணவர்களுக்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கணக்குப்படி 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு (பிப்ரவரி) வரை இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 7258 கோடி.
ஆனாலும் இணைய வசதி பெறுதல், மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன கணினி வசதிகள் இன்னும் ஏழை நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
தற்போது திமுகவின் அறிக்கைப்படி எதிர் வரும் கழக ஆட்சியில் மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமில்லாமல் கூடுதலாக கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினிகள் இணைய தள (internet) வசதியோடு தரும் போது மெய்நிகர் வகுப்புகளில் (virual classroom) நடத்தப்படும் பாடங்கள், உலகளாவிய நூலகங்களில் இருந்து ஆய்வேடுகள், மற்றும் மின்நூல்களை தரவிறக்கம் செய்து படித்துக் கொள்ள இயலும். மேலும் கொரோனா முடக்கத்திற்கு பிறகு பெரும்பாலான தேசிய, பன்னாட்டு கருத்தரங்குகளில் இணையம் வாயிலாக இலவசமாகவே நடத்தப்படுகிறது. இவற்றிலும் நம் மாணவர்கள் கலந்து கொள்ள இயலும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல் நிச்சயம் 10 ஜிபி இணைய வசதி ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும்.
இத்திட்டம் மூலம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 5 லட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் (கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரி மற்றும் இதர கல்லூரிகள்) தோராயமாக 10 லட்சம் பேர் என ஆண்டு ஒன்றிற்கு சுமார் 15 லட்சம் பேர் இத்திட்டம் மூலம் பயனடைய வாய்ப்புண்டு. இத்திட்டத்திற்கு உத்தேச மதிப்பாக 15 லட்சம் மாணவர்களுக்கு கைக்கணினிக்கு 3000 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு செலவு ஆகும். இவை தவிர வைபை வசதி கூடுதல் செலவை தரும்.
இத்திட்டம் தமிழகத்திற்கு சாத்தியமாகுமா?
கல்வி நல திட்டத்திற்கு 3000 கோடி செலவு செய்வது என்பது தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியான (Gross State Domestic Product-GSDP) 19.2 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது இதன் செலவு 0.16 சதவிகிதம்தான். ஆனால் மனித வள மேம்பாட்டு வளர்ச்சிக்கு நாம் போடும் இந்த சிறிய முதலீடு 3000 கோடியை பன் மடங்காக்கி திருப்பி தமிழகத்திற்கே தரும். உதாரணத்திற்கு தற்போது உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் பணிபுரியும் வல்லுநர்கள் பலரும் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் நலத்திட்டங்கள் மூலம் பயின்றவர்களே. அத்தோடு பொருளாதார ஏற்ற தாழ்வின்றி சமநிலையான சமூக வளர்ச்சிக்கு இத்திட்டம் நிச்சயம் வழி வகுக்கும்.
ஏன் கைக்கணினி வசதி வேண்டும்?
வளர்ந்த நாடுகளின் வரிசையில் முன்னனியில் இருக்கும் அமெரிக்கா தனது பள்ளி மாணவர்களுக்கு இலவச கைக்கணினிகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஐரோப்பாவின் 18 நாடுகளில் (பிரித்தானியா உட்பட) பள்ளி மாணவர்களிடையே கைக்கணினி வசதிகளை தந்து அவர்கள் கற்றலில் என்ன என்ன மாதிரியான முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை ஒரு ஆய்வாக செய்து வெற்றி கண்டுள்ளனர். ஸ்காண்டிநேவியன் மற்றும் பால்டிக் நாடுகள் இந்த வரிசையில் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளன. கொரொனா தொற்று காலத்தில் வீட்டில் இருந்து மெய்நிகர் வகுப்புகள் வாயிலாக கல்வி கற்க பொருளாதார ரீதியில் பின் தங்கிய பள்ளி மாணவர்களுக்கு பிரித்தானிய அரசு இலவச கையடக்க கணிணிகள் தருகிறது. கல்வியாளர்களின் பொதுவான ஆய்வில் ஒரு மாணவருக்கு ஒரு கைக்கணினி (One Tablet to One Student) என்ற திட்டமே மாணவர்களின் திறனை அதிகரிக்கிறது என்ற உண்மையினை கண்டறிந்துள்ளனர். உருகுவே நாடு தனது பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச கைக்கணினி தந்துள்ளது. இன்னும் பல நாடுகளில் இத்திட்டம் உள்ளது. ஆனால் ஆரம்ப பள்ளிகளைப் பொறுத்த வரையில் வகுப்பறையில் மட்டும் கணிணி தரும் திட்டம்தான் பெரும்பாலும் உள்ளது.
கற்றலில் கைக்கணினிகள் எத்தையக மாற்றத்தை ஏற்படுத்தும்?
• நுட்பவியல் (technology) சார்ந்த கல்வி கற்றலில் கைக்கணினிகள் பயன்படுத்தும் போது விளக்கப்படங்கள் அனிமேசன் முறையில் இருப்பதால் மாணவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள இயலும். இதனால் வழமையான அச்சு புத்தகங்களில் ஆசிரியர் முன்னெடுக்கும் பயிற்றுவித்தல் (teacher led) மாணவர்களின் புரிதலுக்கு சவால் மிக்கவை. ஆனால் கைக்கணினிகள் மாணவர்களே நேரடியாக திறனை அதிகரிக்கிறது. இதனால் கற்றலின் நோக்கம் 30 முதல் 80% அதிகரிக்க வாய்ப்புள்ளது.
• வகுப்பறைகளில் கேள்வி கேட்பதை கைக்கணினிகள் வாயிலாக இணைக்கும் போது மாணவர்கள் நேரடியாக விடையளித்து அது சரியா தவறா என உடனக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
• E-books விலை குறைவு. மின்னூல் வாயிலான ஆசிரியர் தரும் Assignment களை எளிதாக பலருக்கும் பரிமாற்றம் செய்ய இயலும். எடை அதிகம் மிக்க புத்தகங்களை தூக்கிக் கொண்டு போகத் தேவையில்லை.
• ஆசிரியர்களும் வீட்டுப் பாடங்களை கோப்புகளாக சேமித்து மாணவர்களுக்கு எளிதாக தர இயலும்.
இப்படி கைக்கணினிகளின் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
மடிக்கணிணிகளை விட கைக்கணினிகள் சிறந்ததா?
• மாணவர்களைப் பொறுத்த வரை, மடிக் கணினைகளை விடவும் கையடக்க கைக்கணிணிகள் எடை குறைவாக இருப்பதோடு எளிதில் வகுப்புகளுக்கு எடுத்துச் செல்ல இயலும்.
• நீண்ட நேரம் மின்கல சேமிப்பு திறன் (battery charge) மற்றும் தொடு திரை வசதிகள் மாணவர்களுக்கு கையாள எளிதாக இருக்கும்.
எதிர் வரும் திமுக ஆட்சியில் இன்னொன்றையும் செய்ய வேண்டுகிறேன். உலக நாடுகளின் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் Eudoroam என்னும் நெட்வொர்க் மூலம் இணைத்துக் கொள்ளப்படுவதால் உலகின் எந்த மூலைக்கு போனாலும் இந்த நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மாணவர் அந்த கல்வி நிறுவனத்தின் இணைய சேவையினை இலவசமாகப் பெற முடியும்.
இது போல, தமிழகத்தின் ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர் இன்னொரு கல்லூரிக்கு போகும் போது அந்த கல்லூரியின் Wi-fi வசதியினை இலவசமாக பெற இயலும். இதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி தரப்பட்டு அவர்கள் பற்றிய தகவல்களை கோப்புகளாக வைக்கும் போது ஆசிரியர் மாணவர் கற்றலுக்கான பயிற்றுவிக்கும் தளம் (teaching platform) அமைக்கவும் ஏதுவாக இருக்கும்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகிலேயே உயர்கல்வி மாணவர்களுக்கு வீட்டுக்கு எடுத்து செல்லும் வகையில் இலவச கையடக்க கணிணி தரும் முதல் இடத்தை தமிழகம் பெறும்.
-டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து M.Sc., M.Phil., Ph.D, FRSC
பிரித்தானியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment