Sunday 23 April 2017


 பறவைகள் பல விதம்

 கடந்த‌ வாரம் ஈஸ்டர் விடுமுறையில் பிரிஸ்டல் நகரில் இருந்து 20 மைல் தள்ளி மேய்ச்சல் நிலம் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு கிராமத்தில் தங்கி இருந்தோம். 

காலையில் எழுந்து 2 மைல் அந்த கிராமத்தின் ஒற்றையடி தடத்தில் வெகு தூரம் நடந்து வந்தேன். அந்த பாதைகள் எங்கும் பறவைகளின் ஓசையால் நிறைந்து இருந்தது அங்கு நான் பார்த்த பல பறவைகள் என் வாழ்வில் இதற்கு முன் பார்த்ததில்லை.

குறிப்பாக இரண்டு பொடிக் குருவிகள். ஒன்று கிளி பச்சை நிறம் மற்றொன்று பழுப்பு வண்ணம். 

என் காமிராவில் மரத்தை போட்டோ எடுக்கலாம் என வியூ பைண்டரில் பார்த்த போது இலையோடு இலையாய் அந்த பச்சை நிற குருவி அமர்ந்திருந்தது. தலை மட்டும் நீல வண்ணத்தில் இருந்தது. அதன் பெயர் தெரியவில்லை. இலை போலவே இருந்ததால் அப்படி ஒரு ஆச்சரியம். நான் மெல்ல நெருங்கி மரத்தின் அருகில் போகையில் அது சட்டென‌ அதே மரத்தின் உள் பகுதி கிளை ஒன்றில் சென்று அமர்ந்து விட்டது. 

என் கண்ணால் அது எங்கிருந்து அமர்ந்திருந்தது என மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியூ பைண்டரில் ஜீம் செய்து மறுபடியும் தேடி பிடித்தேன். ஒரு வழியாக அதே மரத்தின் நுனியில் அதிகம் இலைகள் இல்லாத இடத்தில் அமர்ந்த போதுதான் போட்டோ எடுக்க முடிந்தது. இன்னும் கொஞ்சம் நெருங்கி குளோசப் ஷாட் எடுக்கலாம் என எத்தனித்த போது பொடிப்பயல் பறந்து விட்டான். 






இன்னொரு ஆச்சரியம் மீண்டும் அந்தக் குருவி நல்ல இலைகள் நிறைந்து இருந்த மற்றொரு பச்சை பசேல் மரத்திற்குள் நுழைந்து விட்டது. மறந்தும் கூட அருகில் சற்றே காய்ந்து பழுப்பு இலைகள் இருந்த மரத்தில் அது அமரவில்லை.
இந்த வண்ண தகவமைப்பு கழுகு போன்ற பெரிய எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ள இயற்கையே அவற்றை படைத்துள்ளதா எனத் தெரியவில்லை.

அந்த பகுதியில் காட்டுக் கோழிகள் பன்றியின் உருமலைப் போல தொண்டை கிழிய கத்திக் கொண்டு இருந்தது.  அதி அற்புதம் நிறைந்த அந்த பள்ளதாக்கில் சிறிய ஓடை ஒன்று மெல்லிய இரைச்சலோடு பறவைகளின் ஓசையினை கிழித்தவாறு போய்க் கொண்டு இருந்தது. 

பறவைகள் உலகமே தனி போல.


காட்டுக் கோழி




1 comment: