மொழி என்னும் பெருவரம் -2 (இந்தி
என்னும் மாய விளக்கு)
தமிழ்நாட்டுல
இந்தி மொழிய நுழையவே கூடாதுன்னு திராவிடக் கட்சிகள் நினைச்சிருந்தா இந்தி பிரச்சார
சபாக்கள் எல்லாம் தமிழகத்தில் இயங்கி இருக்க முடியாது.
சும்மா
ஒரு கூட்டம் தேவையில்லாமல் பினாத்திக் கொண்டுள்ளது.
மொழிகளின்
தேவை, அவசியத்தை உணர்ந்த தமிழகம் ஒரு கட்டத்தில் எல்லா மொழிகளையும் கற்பதை அரவணைத்தே
சென்றுள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது இங்கே மாநில எல்லையோர அரசுப் பள்ளிகளில்
மலையாளம், கன்னடம், தெலுங்கு, அரபி, இந்தி என எல்லா மொழிகளையும் அனுமதித்துள்ளோம்.
இங்கே
யாரையும் இந்தி படிக்க கூடாதுன்னு கையப் பிடிச்சு தடுத்து நிறுத்தவில்லை. இந்தி வேண்டும்
என்றால் படித்துக் கொள்ளுங்கள். ஏன் அதற்கு தமிழக அரசு செலவு செய்ய வேண்டும் என்று
எதிர்பார்க்கிறீர்கள் எனப் புரியவில்லை.
அரசுப்
பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் படித்துத்தான் உலக அளவில் பணியாற்றும் வாய்ப்பினை
தமிழர்கள் பெற்றுள்ளார்கள். மீண்டும் மீண்டும் வட இந்தியாவிற்கு போக முடியாமல் தமிழர்கள்
ஏதோ வங்காள விரிகுடாவில் படுத்துக் கொண்டு கதறுவது போல் ஒரு மாயையினை கட்டமைக்க வேண்டாம்.
ஏன்
உலக மொழியினை படிக்கிறீர்கள்? இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகிய இந்தியைப் படிக்க
என்ன தடை என்ற லாஜிக் கேள்விகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் தந்திரங்களை நாங்கள்
நன்கு அறிவோம்.
உங்கள்
லாஜிக் படியே எங்கள் தரப்பில் இருக்கும் கோரிக்கையினை வைக்கிறோம்.
தமிழகத்தில்
இருக்கும் ஒருவர் ஆராய்ச்சி மாணவர் ஆய்வு நிதி விருதுகளுக்கான நேர்முகத் தேர்விற்கு
இன்றைக்கும் டெல்லிக்குதான் போக வேண்டி உள்ளது.
ரயிலில்
இரண்டு இரவு, ஒரு பகல் என உலகின் நீண்ட ரயில் பயணங்களில் ஒன்றை இத்து போன கம்பி வாசத்துடன்
கடந்துதான் போக வேண்டும்.
அங்கே
சென்றாலும் தென்னிந்தியர்களை எந்த அளவிற்கு மதிப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டாம்.
நேர்முகத்
தேர்வினை ஆங்கிலம், இந்தியில் நடத்தலாம் என்ற விதி உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட
மொழி பேசுபவனுக்கு தாய் மொழியிலேயே தேர்வில் பேசிக் கொள்ளலாம். இதர மொழிக்காரன் கடினப்பட்டுத்தான்
ஆங்கிலத்தில் பேசி விருதை வாங்க வேண்டும்.
நீங்கள்
என்னதான் இந்தி கற்றுக் கொண்டாலும், அவர்கள் அளவிற்கு உங்களால் நுட்ப வார்த்தைகளை ப்ரொபசனலாக
பேச முடியாது. பிறகு எதற்கு இந்த ஓர வஞ்சனை.
விருது
தேர்வில் இருக்கும் பேராசிரியர்கள் பலரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே
நடுவில் ரெண்டு இந்தி வார்த்தையோடுதான் பேசுவார். நீங்கள் கேள்வி புரியாமல் தடுமாறும்
போதே மதராசிகளே இப்படித்தான் என்று நக்கலை வேறு சமாளிக்க வேண்டும்.
நீங்கள்
உண்மையிலேயே நாட்டின் எல்லாக் குடிமகன்களுக்கும் பாரபட்சமற்ற ஒரு நிலைப்பாடுடன் நடத்துவதென்றால்,
தென்னிந்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான (ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகம்)
நேர் முகத் தேர்வினை இங்கேயே பிராந்திய ரீதியில் எங்கள் பகுதியிலேயே நடத்துங்கள்.
சுழற்சி
முறையில் ஐந்து மாநிலங்களுக்குள் ஒன்றை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். எத்தனை நாளைக்குத்தான்
நாங்கள் மூட்டையில் புளிச்சோற்றைக் கட்டிக் கொண்டு உங்களைப் பார்க்க வருவது.
மிகப்பெரிய
எல்லைப் பரப்பில் இருக்கும் வெளிநாட்டு தூதரகங்கள், புவிசார் சூழலுக்கு தகுந்தவாறு
ஒரே நாட்டின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் தங்கள் துணைத் தூதரகங்களை அமைப்பது
போல் இதற்கும் அமைத்து விட்டு போங்களேன். எப்படியும் எங்கள் வரிப்பணத்தில்தானே இயங்கப்
போகிறது.
இது
போன்று ஒவ்வொரு தேர்வும் தென்னிந்திய அளவிலேயே இங்கேயே நடத்தலாம். மாணவர்களுக்கும்
அலைச்சல் குறைவு, அரசுக்கும் செலவுக் குறைவு. இப்படி உட்கட்டமைப்பை கொண்டு வாருங்கள்,
மக்கள் தானாகவே இந்தி மொழியின் தேவையின்மையை உணர்ந்து கொள்வார்கள்.
எங்களுக்கான
தேவையினை ஏழு கடல், மலை தாண்டி ஓளித்துவைத்துக் கொண்டு ஏன் எங்களுக்கு மட்டும் நீச்சல்,
பறத்தல், தாண்டுதல், ஓடுதல் என ஆயக் கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்பந்தம்
செய்கிறீர்கள்.
சமூக
நீதி என்பது எல்லோருக்கும் பாரபட்சம் இன்றி தரப்படுவது. தமிழகத்தில் நாங்கள் அதனைத்
தருகிறோம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் எங்கள் மாடலை இந்தியா முழுக்க அமல்படுத்தித்
தருகிறோம்.
Super sago.
ReplyDelete