நோபல் பரிசு 2017 ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவப் பிரிவு
2017
ஆம் ஆண்டிற்கான உடலியல் மற்றும் மருத்துவ பிரிவிற்கான (Physiology and Medicine) நோபல்
பரிசினை ஜெப்ரி ஹால் (மைன் பல்கலைக் கழகம், அமெரிக்கா), மைக்கேல் ரோபஸ் (பிரன்டைஸ்
பல்கலைக் கழகம் மற்றும் ஹாவர்டு கியூக்ஸ் மருத்துவ நிறுவனம், அமெரிக்கா), மைக்கேல்
யங் (ராக் பெல்லர் பல்கலைக் கழகம், அமெரிக்கா) ஆகிய மூவரும் கூட்டாக பெருகின்றனர்.
மனிதர்கள்,
தாவரம், விலங்குகள், பூஞ்சைகள் இவற்றில் நடைபெறும்
உடல் கடிகாரம் (body clock) அல்லது சர்கேடியன்
ரிதம் (circadian rhythm) என்ற நிகழ்வினை மூலக்கூறு
இயங்கியல் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற நிரூபணத்திற்க்காக இவ்விருது இவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
இவர்களது
சோதனை முடிவுகள் நம் உடல் கடிகாரம் எவ்வாறு
புவியின் சுழற்சிக்கு தக்கவாறு ஒத்திசைவாக ஒன்றிப் போகிறது என்ற விடையினை தந்துள்ளது.
எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் எந்த நேரத்தில் இரவில் உறங்கினாலும் காலையில்
குறிப்பிட்ட நேரத்திற்கு தன்னிச்சையாகவே எழுந்து கொள்கிறோம். இவை நம் உடலுக்குள் உயிரணுக்களில்
நடைபெறும் வேதி வினைகளின் விளைவே. மேலும் உடல் கடிகாரமானது நம் சுற்றுப்புற சூழலில்
இருக்கும் வெளிச்சம், தட்பவெப்பநிலை இவற்றிற்கு தகுந்தவாறு நம் உடலின் இரத்த அழுத்தத்தினை
மாற்றுவதோடு, நாம் உறங்க தேவையான மெலனைன் என்னும் ஹார்மோன்களை சரியான முறையில் சுரக்கவும்
உதவுகிறது. இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும்,
இந்த விடையினை சோதனைகள் மூலம் கண்டுபிடித்து நிரூபணம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல.
இந்த
உடல் கடிகாரம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் இன்ன பிற உயிரினங்களிலும்
நடைபெறுகிறது என்ற உண்மையினை 18 ஆம் நூற்றாண்டில் ஜீன் ஜேக்கஸ் டி ஆர்தஸ் தெ மெய்ரன்
(Jean Jacques d’Ortous de Mairan) என்ற வானவியல் அறிஞர் முதன்முதலில் கண்டறிந்தார்.
இவர் தொட்டாச் சிணுங்கி செடியின் (mimosa plant) இலைகளானது பகலில் சூரிய ஒளியில் விரிவடைந்தும்,
இரவில் சுருங்கியும் கொள்கிறது. இந்த தொடர் நிகழ்ச்சியினை ஒரு இருட்டு அறையில் வைத்து
சோதனை நடத்திய போது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளிச்சம் இல்லாத போதும் அதன் இலைகள்
விரிவடைந்து கொள்கின்றன. இவ்வாறு புவி சூழலுக்கு தகுந்தவாறு தாவரம் எவ்வாறு ஒரு நிகழ்வை
தொடர்ச்சியாக நடத்துகிறது என்ற கேள்வி அறிவியலாளர்களுக்கு பெரிய சவலாக இருந்தது. இவற்றிற்கான
விடையினை இவ்வருட நோபல் பரிசாளர்கள் கண்டுபிடித்து
தந்துள்ளனர்.
ஏன் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது?
நம்
உடலில் இயங்கும் உடல் கடிகாரமானது மனிதர்களின் உறக்கம், உணவு உண்ணுதல், ஹார்மோன்கள்
சுரப்பு, சீரான இரத்த அழுத்தம் போன்றவற்றினை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உயிரணு, செல், மற்றும் திசுக்களில் நடைபெறும் மிக
நுண்ணிய சர்கேடியன் ஒத்திசைவு விளைவானது எவ்வாறு மனித உடலில் சிதைவு நோய்கள், வளர்சிதை
மாற்றத்தின் மூலம் ஏற்படும் நோய்கள், வீக்கம் போன்றவறில் பங்காற்றுகிறது என்பதனை நோபல்
பரிசாளர்களின் சோதனைகள் விளக்குகிறது. இந்த
கண்டுபிடிப்பின் மூலம் குரோனோ உயிரியல் மற்றும் மருந்தியல் துறைகளில் சர்கேடியன் ஒத்திசைவின்
கால இடைவெளி, முடுக்கம், இவற்றினை மாற்றி அமைத்து மனித உடல் நலத்தை முன்னேற்றுவதற்கான புதிய தடங்கள் இனி வரும்
நாட்களில் அமைக்கப்படும்.
சர்கேடியன் கடிகாரம் நம் உடலின் இயக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் (Courtesy: Nobelprize.org) |
குறிப்பு:
உடல்
கடிகாரம் என்றவுடன் பெரிதாக குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு
நாட்டிற்கு பல மணி நேரம் விமானப் பயணம் சென்று இறங்கிய பின் நம் உடலானது
புதிய சூழலுக்கு உடனே மாறாமல், புறப்பட்ட நாட்டின்
நேரப்படியே இயங்கிக் கொண்டிருக்கும். இதனால்
சரியாக உறங்க முடியாது, இந்த சிக்கலை ஜெட் லாக் என்று அழைப்பர். இந்த சிக்கல் யாவும்
நம் உடல் கடிகாரத்தில் ஏற்படும் மாற்றமே.
No comments:
Post a Comment