Monday 28 March 2016

சொல்ல மறந்த கதை


சுவான்சி நூலகத்தின் நேர் பின்புறம் பெரிய கடற்கரை உள்ளது.
நேற்று நல்ல மழை வேறு. நூலகத்தின் பின்புற சன்னல் வழியே கடல் ஆர்பரித்து எழுவதை பார்க்கவே மனம் குதூகலித்தது.
அந்த சன்னல் ஓரத்தில் ஒரு மூதாட்டி தலையை குனிந்தபடி ஏதோ முனு முனுத்தபடி இருந்தார். சரி அலைபேசியில் ஹெட் போன் போட்டு யாரிடமோ பேசிக் கொண்டு உள்ளார் போல என அங்கிருந்த புத்தக பகுதியில் புத்தகங்களை பார்க்க துவங்கி விட்டேன்.
அவந்தி கதை சொல்லி முடித்து விட்டு விளையாட ஆரம்பித்து இருந்தாள். அவந்தியின் வயதை ஒத்த ஜாக் என்னும் சிறுவன் நூலகத்தின் உள்ளே விளையாட துணைக்கு கிடைத்ததும் ஓடி ஒளியும் விளையாட்டிற்கு நகர்ந்து விட்டாள்.
விளையாட்டின் தீவிரத்தில் சன்னல் ஓரத்தில் போடப்பட்டிருந்த சுழல் நாற்காலிகளில் ஏறி இருவரும் கத்திக் கொண்டே விளையாண்டு கொண்டிருந்தனர்.
அவந்தியின் சத்தம் நூலகம் முழுவதும் கேட்க ஆரம்பித்து விட்டது. கத்தாதே என்று சொன்னால்தான் அதிகமாக கத்துவாள். அதனால் மெதுவாக அவளிடம் போய் சத்தம் போட்டால் அருகில் இருக்கும் பாட்டிக்கு தொந்தரவாக இருக்கும் என சொல்லி இருவரையும் வேறு இடத்திற்கு போய் விளையாட சொன்னேன்.
அப்போதும் பாட்டி தலையை குனிந்த படியே முனு முனுப்பதை நிறுத்தவில்லை. எனக்கும் கொஞ்சம் திகில் ஆகி விட்டது.
ஒரு வழியாக புத்தகம் எடுக்கும் சாக்கில் பாட்டியின் எதிர்ப்புறம் இருக்கும் அலரியின் பின் நின்று எட்டி பார்த்தேன். பாட்டி காதில் ஹெட் போன் போட்டுக் கொண்டு ஒரு நாவலை வாசித்து கொண்டிருந்தார்.
அவர் கையில் வைத்திருந்த ஒலி பதிவு கருவியில் நாவலை வாசித்து பதிந்து கொண்டிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
இது போன்று பதியப்படும் ஒலி புத்தகங்கள், கதைகள் (audio books) எழுத்து வாசிக்கும் வயதுக்கு முன்னர் உள்ள குழந்தைகள், விழிச் சவாலர்கள், பார்வை குறைபாடு உள்ள முதியவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
எத்துணையோ முறை பல நூலகத்திற்கு போய் இருக்கிறேன் ஒரு முறை கூட என் பங்களிப்பாக ஒரு நாவலை வாசித்து பதிந்து வைக்க தோன்றவில்லை. கொஞ்சம் அல்ல நிறையவே வெட்கமாய் இருந்தது.
இனி நூலகங்களுக்கு போனால் ஒலி புத்தக வாசிப்பு வசதி இருந்தால் உங்கள் பங்களிப்பை செய்ய மறக்காதீர்கள். அல்லது முடிந்தால் உங்களிடம் படித்து முடித்த நல்ல புத்தகங்களை உங்கள் கணிப்பொறி அல்லது அலைபேசியின் மூலம் பதிவு செய்து யூ டியூப் போன்றவற்றில் இலவசமாக பதிவேற்றலாம்.
காலத்தை கடந்து உங்கள் குரலும், மொழியும் பிறருக்காக ஒலிக்கட்டும்.

No comments:

Post a Comment