Monday, 31 August 2015

சூரிய மின் ஆற்றலில் செயல்படும் மருந்தகங்கள்
- Solar powered pharmaceutical shops 

அவசர காலங்களில் மருந்தகங்களின் (pharmacy) பங்கு மிகவும் இன்றியமையாதது. சொல்லப்போனால் மருத்துவமனைகளுக்கு நிகரான பொறுப்புணர்வுடனும், அறத்தின் அடிப்படையிலும் இயங்கும் பகுதி என்பதால் மருந்தகங்களை நாம் நன்றி உணர்வுடனேயே பார்க்க வேண்டி இருக்கிறது. 

என் நினைவிற்கு தெரிந்த வரையில் பல இடங்களில் மருந்தகங்களை அடைக்கச் செல்லும் நேரத்திலும் யாரேனும் ஒருவர் அத்யாவசிய மருந்துகள் கேட்கும் போது சங்கடமே படாமல் கடையினை திறந்து மருந்து எடுத்துக் கொடுக்கும் நல்ல மனிதர்கள் பலரை பார்த்திருக்கின்றேன். 

சில மருந்துகள் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் (குளிர் நிலையில்) பாதுகாக்கப் பட வேண்டி இருக்கும். ஆனால் மின் வெட்டு பிரச்சினையினால் குளிர் சாதன பெட்டிகளை நீண்ட நேரம் இயக்க முடியாமல் போனால் அம்மருந்துகள் வீணாகி விடும். இதன் காரணமாகவே எல்லா மருந்தகங்களிலும் அத்யாவசிய மருந்துகள் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. 

நம் ஊரில் மருந்துசீட்டுகளை காண்பித்து எல்லா மருந்தகங்களிலும் அம்மருந்தினை பெறலாம். அதிலும் அக்குறிப்பிட்ட மருந்தினை அப்படியே தயாரிப்பு நிறுவனத்தின் அட்டைகளிலேயே வழங்குவார்கள். மருந்து எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை மருந்தாளுநர்கள் (pharmacist) அல்லது மருந்தகங்களின் உரிமையாளர்கள் வாய் மொழியாக சொல்வார்கள். அதன் பின் விளைவு (side effect) அல்லது காலாவதி (expiry) ஆகியவற்றினை பெரும்பாலும் மருந்துவாங்குபவர்தான் அம்மருந்து அட்டையின் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள தகவலில் இருந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

ஜப்பானில் கூடுதலாக இன்னும் ஒரு பிரச்சினை உள்ளது. முறையான மருத்துவரின் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வு சீட்டு இல்லாமல் இங்கு மருந்து வாங்க முடியாது. அவ்வாறு வாங்கச் செல்லும் போது வாங்கும் நபருக்கு ஒரு மருந்து புத்தகம் என்று பிரத்யோகமாக வழங்கப்படும். அதில் நீங்கள் வாங்கிய மருந்து பற்றிய தகவலையும், அம்மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளையும் அச்சிட்டு ஒட்டி விடுவார்கள். நீங்கள் அப்புத்தகத்தினை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

 Pharmacy information book.
 Pharmacy information book.

Pharmacy information book.

முக்கியமான ஒன்று, ஒரு முறை மருந்து வாங்கியவுடன் அம்மருந்து சீட்டு காலாவதி ஆகிவிடும். அதனை கொண்டு மறு முறை மருத்துவரிடம் செல்லாமலேயே வாங்கலாம் என நினைத்தால் நடக்காது. இதனால் தேவையற்ற முறையில் தன்னிச்சையாக நோயாளிகள் மருந்து சாப்பிடப் படுவது தடுக்கப்படுகிறது. 


மேலும் மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்களது அட்டைகளில் நேரடியாக கொடுக்க மாட்டார்கள். உங்களுக்கு தேவைப்படும் மாத்திரகளை பிரத்யோக சிறு பைகளில் இட்டு மாத்திரை பெயர் மற்றும் நோயாளியின் பெயர் ஆகியவற்றினை ஒவ்வொரு வேளைக்குமாக பிரித்து அச்சிட்டு தருவார்கள். பார்ப்பதற்கு பாக்கு அட்டை சரம் போல இருக்கும். 



Pills packing role printed with patient/user name

சரி விசயத்திற்கு வருகிறேன். இப்படி மாத்திரைகளை பிரத்யோகமாக அச்சிட்டு சீல் செய்து தருவதற்கும், மருந்து சீட்டுகளை அச்சிடுவதற்கும், மருந்தகங்களில் எரியும் விளக்குகள் என எல்லா அடிப்படை மின் தேவைகளையும் தற்போது சூரிய மின் சக்தியின் மூலம் சமாளிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

என்னதான் ஜப்பானில் மின் வெட்டு பிரச்சினை என்பது அறவே இல்லை என்றாலும், நில நடுக்கம் (earthquake) போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படும் மின் வெட்டின் போது சமாளிக்கும் வகையில் தற்போது சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் மருந்தகங்களை ஒரு சில இடங்களில் ஆரம்பித்து விட்டார்கள். 

நான் வசிக்கும் நோடா (Nodhshi) நகர் மன்ற பகுதியில் இருக்கும் கோபாரி (Kobari Hospital) பொதுமருத்துவமனை அருகே உள்ள சகுரா மருந்தகத்தின் (Sakura Pharmacy) கூரைப் பகுதியில் சோலார் பேனல்களை பெரிய அளவில் நிறுவி மணிக்கு சராசரியாக 35 கிலோவாட் மின்சாரத்தினை பெறுகிறார்கள். இதன் மூலம் மருந்துகள் பாதுகாக்கப்படும் குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் இதர தேவைகளை சூரிய மின் சக்தியின் மூலம் சமாளிக்கிறார்கள். 

ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சூரிய மின் சக்தி பெறப்படுகிறது. அதற்கு இனையாக எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு வாயு வழமையான மின் உற்பத்தி முறையின் (power generation from fossil sources) போது வெளியேறும் என்ற தகவல்களை மருந்தகத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் காணலாம். இத்தகவலானது, சூரிய மின் சக்தி உற்பத்தியினை நேரடியாக கண்காணிக்கும் மென்பொருளின் மூலம்  கிடைக்கப்பெறுகிறது.    மேலும் ஒரு மாதத்திற்கு எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது போன்ற ஒப்பீட்டு வரைபடங்களும் இந்த மென்பொருளில் காண்பிக்கப்படுகிறது. 


Solar online power monitoring chart.




Solar online power monitoring display


மருந்தகங்களுக்கு வரும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என பொது மக்கள் நேரடியாக இந்த சூரிய மின் சக்தியின்  உற்பத்தியினை தெரிந்து கொள்வதன் மூலம் சூரிய மின் சக்தியினைப் பற்றிய விழிப்புணர்ச்சி பெரும் அளவில் முன்னெடுக்கப்படுகிறது. 


நம் ஊரிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருந்தகங்களில் இது போன்று கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி அவசர காலத்திற்கான மருந்து சேமிப்பிலும், அறுவை சிகிச்சை அரங்கில் தேவைப்படும் மின் ஒளிக்கும், அவசர சிகிச்சை பிரிவில் இயங்கும் மானிட்டர் கருவிகளின் செயல்பாட்டிற்கும் சூரிய மின்சக்தியினை தாராளமாக பயன்படுத்தலாம்.

Wednesday, 26 August 2015


ஜப்பான் ஏன் கல்வியில் முன்னேறிய நாடாக உள்ளது ‍- 3


இன்று காலை ஜப்பானிய‌ தினசரி செய்தி தாளில் இருந்து ஒரு பேட்டிக்காக எமது சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட்  ஆய்வக மையத்திற்கு வந்திருந்தார்கள். நானும் இரண்டு ஜப்பானிய இளம் நிலை மாணவர்களும் கூட்டாக அமர்ந்து பேட்டி கொடுத்தோம். பேட்டியின் குறிக்கோள் எங்கள் மையத்தின் ஆய்வு குறித்த செயல்பாடு மற்றூம் சர்வதேச ஆய்வாளர்களுக்காகன் சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பதே. நான் ஆங்கில மொழியிலும், அவர்கள் தங்களது தாய் மொழியிலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தோம். இந்த பேட்டியின் போது அம்மாணவர்களின் பேராசிரியரும் உடன் அமர்திருந்தார்.  

ஏறத்தாழ எல்லா கேள்விகளுக்கும் மிக இயல்பாக, பூசி மெழுகாமல் அவ்விரு மாணவர்களும் பதில் அளித்த விதம் மிக ஆச்சரியமாக இருந்தது. எந்த வித முன்னேற்பாடான தயாரிப்பு இல்லாமலும் தங்கம் மனதில் தோன்றியதை நேர்த்தியாக பேசினார்கள். தங்களின் எதிர் காலம் என்ன, இதே ஆய்வு மையத்தில் தொடந்து இருப்பீர்களா என்ற கேள்விக்கு, அம்மாணவன், தான் ஒரு நதியினை போன்றவன், என்னால் ஓரிடத்தில் தேங்கி இருக்க இயலாது. சவால்களை தேடி அலைகிறேன். ஒரு வேளை ஜப்பானிய முன்னனி நிறுவனம் ஒன்றில் அடுத்த வருடம் பணி புரிவேன் அல்லது உயர் கல்வி ஆராய்ச்சிக்கு செல்வேன் என பளிச்சென பதில் சொன்னது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தினை கொடுத்தது.  

நான் எனது இளம் நிலை அறிவியல் படிப்பை 2000 ஆம் ஆண்டு முடித்தேன். அப்போதைய கால கட்டத்தில் இப்படி ஒரு பேட்டி கேட்கப் பட்டிருந்தால் இவ்வளவு தெளிவாக பேசி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஜப்பானிய பள்ளிக் கல்வி இங்குள்ள மாணவர்களை சுயமாக சிந்திக்கவும், பேசவும் கற்றுத் தந்து இருக்கிறது. வெறும் மதிப் பெண் கோழிகளை உருவாக்காமல் தன்னியல்பான மாணவ சமுதாயத்தினை பள்ளியிலே கட்டமைத்து விடுகிறார்கள். ஜப்பானில் தனி மனித ஒழுக்கம் பரவலாக காணப்படுவதற்கு இதுதான் மிக முக்கிய காரணி என எண்ணுகிறேன். ஜப்பானில் நடு நிலை பள்ளி வரை மாணவர்களுக்கு நம் நாட்டில்  வழக்கமாக‌ வைக்கப்படும் முழு ஆண்டு தேர்வு எனப்படும் 'திறனறி தேர்வு' கிடையாது. மாறாக நல்ல குடிமகனாக எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படை அம்சத்தினை மட்டுமே பத்து வயது வரை கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.  

இங்குள்ள மாணவர்களுக்கு 20 வயதிலேயே ஒரு ஊடகத்தில் பேச வாய்ப்பு கிடைக்கிறது. எனக்கு இந்த மாணவர்களை பார்க்கும் போது தோன்றுவதெல்லாம் ஏன் தமிழகத்தில் பத்திரிக்கை ஊடகங்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு நேரிடையாக சென்று பேராசிரியர்களையும், ஆய்வு மாணவர்களையும் சந்தித்து வார வாரம் சிறப்பு பகுதியாக அவர்களது பேட்டிகளை வெளியிடலாம். சாதிப்பவனை மட்டும் கொண்டாடும் மனோநிலையில் இருந்து நாம் வெளி வர வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள துடிப்பான இளம் ஆய்வாளர்கள், பேராசிரியர்களை இனம் கண்டு அவர்களது ஆய்வினை வெளி உலகிற்கு எடுத்து சொல்லலாம்.

முக்கியமாக அவர்களின் ஆராய்ச்சி மற்றும் எவ்வாறு அவர்களின் எதிர்காலம் திட்டமிடப்படுகிறது என்பதனை எழுதலாம். நிச்சயம் இது பள்ளி மாணவர்கள், இளம் நிலை மாணவர்களிடையே பெரும் தாக்கத்தினை உருவாக்கும். இந்திய ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை நமது போட்டி நாடான‌ சீனாவை ஒப்பிடும் போது மிகவும் குறைவே. இந்நிலை மாற ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆராய்ச்சி பத்திகள் எழுத ப்ரீலேன்சர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சினிமாத்துறையினையும், அரசியலின் வேகாத பருப்புகளையும் எழுதி தள்ளுவார்கள் எனத் தெரியவில்லை. 

தற்போது தமிழ‌கத்தில் உள்ள‌ செய்திதாள் மற்றும் வெகுசன இதழ்களில் பேட்டி எடுக்கப்பட்டு வெளி வருவது முறைசாரா, தற்செயலான‌ கண்டுபிடிப்புகள் மட்டுமே. உதாரணத்திற்கு, பழனி அருகே வாலிபர் சாதனை, சோலார் பேனலில் இருந்து மொபைல் சார்ஜர் கண்டுபிடிப்பு, பொறியியல் மாணவர்கள் நீரில் எரியும் அடுப்பு கண்டுபிடிப்பு போன்ற சுவாரசியம் ஊட்டும் கட்டுரைகள் மட்டுமே வருகிறது. உண்மையில் இவர்களுக்கு முன்னால் இது போன்று ஓராயிரம் கண்டுபிடிப்புகள் வெளி வந்து பல ஆண்டுகள் ஆகி இருக்கும். அதனை பற்றி ஒரு அடிப்படை புரிதல் கூட இருக்காது. பத்திரிக்கைகளுக்கு தேவை செய்தி பற்றி சுவாரசியம் மட்டுமே. இவர்களை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் இவற்றினை முறையாக ஆராய்ச்சி செய்யும் ஆய்வு மாணவர்கள் ஒரு போதும் வெளி உலகிற்கு தெரிவதில்லை. அவ்வாறு தெரியும் பட்சத்தில் வெகு சன மக்களும், தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியின் மூலம் தங்களுக்கு தீர்வு கிடைக்குமெனில் இம்மாணவர்களையோ அல்லது பேராசிரியர்களையோ தாராளமாக அணுகுவார்கள். பின்னாளில் இந்த ஆய்வு மாணவர்கள் தொழில் முனைவோராக வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். அப்படி ஒரு சூழல் வந்தால் முனைவர் பட்டம் முடித்த இளம் ஆராய்ச்சியாளர்கள் மிகச் சொற்ப சம்பளத்திற்கு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு செல்ல மாட்டார்கள்.

----------------------------------

அமெரிக்க வேதியியல் கழகத்தின் (American Chemical Society) அதிகார செய்தி ஏடான சி அண்டு என் (C &EN), இவ்வருடத்திற்கான (2015) உலக அளவிலான வேதியியல் சார் ஆராய்ச்சியாளர்களில் மிகச் சிறந்த பன்னிரெண்டு இளம் அறிவியலாளர்களை தேர்ந்தெடுத்து உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சராசரி வயது 34. 

தற்போது, உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் சூழலியல் பருவ மாற்றம் மற்றும் மனித நோய்கள் (climate change and human diseaseபற்றிய முன்னேறிய ஆய்விற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். உயிரி நுட்பம், வேதிவினையூக்கிகள், நெகிழி மூலக்கூறுகள், ஒளியியல், போன்ற‌ துறைகளில் இவர்கள் உச்சத்தினை தொட்டவர்கள். வழமையான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடாமல் புதிய பரிணாமத்தில் கண்டுபிடிப்புகளையும், வடிவமைப்புகளையும் நோக்கியதாக இவர்களது ஆராய்ச்சி இருக்கிறது. அதுவே இவர்களை இந்த விருதிற்கு அடையாளம் காண்பித்துள்ளது. 


முக்கியமாக‌, நாம் கவனிக்க வேண்டியது இவர்களது  ஆய்வு தனித்த அறிவியல் துறையாக (வேதியியல்) அல்லாமல் கூட்டான (இயற்பியல், உயிரியியல், உயிரி நுட்பம்) பல் துறை சார்ந்து இருப்பது சமகாலத்தில் அறிவியலாளர்கள் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் அவசியத்தினை வலியுறுத்துகிறது. 






 கீழ்கண்ட சுட்டியில்  இவர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.  

http://talented12.cenmag.org/

இளம் நிலை, முது நிலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த பக்கத்தினை பரிந்துரையுங்கள்.  நிச்சயம் அவர்களுக்கு ஆராய்ச்சி  செய்வதற்கு ஒரு உந்துதலை தரும்.  அடுத்த வருடத்திற்கான சிறந்த அறிவியலாளர் தேர்விற்கான படிவமும் இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆராய்ச்சியாளர்கள், இளம் பேராசிரியர்கள் தாராளமாக முயற்ச்சிக்கலாம்.

கொசுறு தகவல்:





ஆசியாவில் இருந்து ஒரு இளம் ஆராய்ச்சியாளரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. 


இந்த இதழில் வந்த செய்தியினை அச்சிட்டு மாணவர்களுக்கு கொடுக்க ஏதுவாக இதழின் பக்கங்களை நேரடியாக ஒளி நகல்  எடுத்து கீழே இணைத்துள்ளேன். Courtesy: C& EN for academic purpose.












Saturday, 22 August 2015

ஜப்பானில் நம்பெருமாள் (Lord Vishnu in Japan- an Exciting Experience) 




இந்த கோடை விடுமுறையில் தக்காயாமா  (Takayama) நகரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் சுற்றி பார்க்கலாம் என திட்டமிட்டு கடந்த திங்கள் அன்று மாலை வேளையில் தக்காயாமா நகரை அடைந்தேன். தக்காயாமா நகரம் ஜப்பானின் தலைநகரமான தோக்கியோ நகரில் இருந்து வட மேற்கு திசையில் 350 கிமீ தொலைவில் உள்ள மலைகள் சூழப்பட்ட ஒரு பள்ளதாக்கு நகரம்.

 தக்காயாமா நகரை அடைந்தவுடன் விடுதியில் எனது பைகளை வைத்துவிட்டு இரவு சிற்றுண்டி அருந்தலாமா என தக்காயாமா நகரின் பிரதான சந்தை வீதியான கொகுபுஞ்சி (Kokupunji) வீதியில் சென்று கொண்டு இருந்தேன். இரவு ஏழு மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு ஓரிரு சிற்றுண்டி கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அவ்வழியே தொடர்ந்து சென்றபோது  ஒரு ஜப்பானியரின் கடை வாசலில் தற்செயலாக‌ கருடாழ்வார் சுமக்கும் ஆதி கேசவன்  சிலையொன்றை கண்டு திகைத்தேன்.



 ஆதிகேசவனை சுமக்கும் கருடாழ்வார் சிலை, என்கு தோ கைவினை பொருட்கள் விற்பனையகம், கிதா‍‍‍ ‍தகாயாமா கொகுபுஞ்சி கோவிலின் எதிரில், ஜப்பான்.
என்கு தோ கைவினை பொருட்கள் விற்பனையகம், கிதா‍‍‍ ‍தகாயாமா கொகுபுஞ்சி கோவிலின் எதிரில், ஜப்பான்.


ஆனால் அக்கடை பூட்டப்பட்டு இருந்ததால் மேலதிக தவல் பெற முடியவில்லை. இரவு நெடுநேரம் கருடாழ்வாரும், நம்பெருமாளும் நினைவில் நின்றபடியே இருந்தனர்.  இச்சிலை எப்படி ஜப்பான் வந்திருக்கும் என அறிய கடும் ஆவல் கொண்டு, அடுத்த நாள் மாலை  அதே கடைக்கு சென்றேன். அப்போது கடை திறந்து இருந்தது. அது ஒரு மரத்தில் செதுக்கிய சிற்பம் விற்கும் கடை. 

அக்கடையின் வாசலில்தான் அச்சிலை வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் கலை நயம் மிக்க கையால் செதுக்கப்பட்ட அற்புதமான மரச்சிற்பங்கள் பல‌ கண்ணாடிக் கூண்டுக்குள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. கடையின் உட்புறம் வீடு ஒன்று பின்புறமாக இணைக்கப்பட்டு இருந்தது. அவ்வீட்டின் உள்ளே ஒரு தாத்தாவும் பாட்டியும்  தொலைக்காட்சியினை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். சற்றே அவ்வீட்டின் உட்புறம் சென்று என்னை  அறிமுகப்படுத்தி கொண்டு சிலையின் பூர்வீகத்தினை பற்றி அந்த பாட்டியிடம் ஆச்சரியமாக கேட்டேன்.

பாட்டி தன்னை ரெய்கொ புருகாவா (Reiko Furikawa -san) என‌ அறிமுகப் படுத்தி கொண்டார். பின்னர் அச்சிலையின் பின்னணியினை சற்றே பொறுமையாக விளக்கினார். ரெய்கோ‍‍-சன் அவர்களது தந்தையார் காலம் சென்ற தோசிரோ மிவா (Toshiro Miwa) மிகப்பெரிய மரச் சிற்பக் கலைஞர். தோசிரோ-சன் மரத்தில் தத்துவியல் சார்ந்த சிலைகளை செதுக்கும் எங்கு (Enku) எனப்படும் ஜப்பானின் பிரச்சித்திபெற்ற மரச்சிற்பவியலில் நிபுணத்துவம் பெற்றவர். 

எங்கு (Enku) என்பவர் ஜப்பானில் எதோ (Edo period)  கால கட்டத்தில் (1632–1695) வாழ்ந்த ஒரு புத்த துறவி ஆவார். அவர் அதுவரை வழி வழியாக செவி வழியாக சொல்லப்பட்ட புத்த ரின் கோட்பாடுகளை, தத்துவியலை மரங்களில் சிற்பமாக செதுக்கி மக்களிடையே ஞானத்தினை போதித்த ஒரு புனித துறவி ஆவார். அவர் சாதாரணமாக காணப்படும் மரத்தின் குச்சிகளில் இருந்து பெரிய மரத்துண்டுகள் வரை எல்லாவற்றிலும் சிற்பங்களாய் செதுக்கி புத்தரின் போதனைகளை போதித்தவர். அச்சிற்பங்கள் வழமையாக காணப்படும் தத்ரூப குணங்களை கொண்டிராமல் ஒழுங்கற்ற கீறல்களாகவும், வரி வடிவங்களாகவும் இருந்தன. அறுபத்து நான்கு வயது வரை வாழ்ந்த எங்கு துறவி தன் வாழ்நாளில் ஒரு லட்சத்து இருபதாயிரம் புத்தர் மரச்சிலைகளை வடிவமைத்தார். ஜப்பான் தேசம் முழுவதும் கால்நடையாகவே சென்று எல்லா மக்களுக்கும் புத்தரது போதனைகளை போதித்தவர். 

முக்கியமாக எல்லா சிலைகளும் ஒன்று போல் இல்லாமல், வேறு வேறாக இருக்கும் விதத்தில் செதுக்கி இருந்தார். இன்றும்  ஜப்பானில் இந்த துறவியின் சிலைகள் தற்போது செகி நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எங்கு துறவியின் கால கட்டத்திற்கு பிறகு அவரது பாணியிலான மரச்சிற்பங்கள் எங்கு சிற்பக்கலை என்னும் பெயரில் ஜப்பானில் பிரசித்தி ஆயிற்று. தற்போது விசயத்திற்கு வருகிறேன்.

ரெய்கோ புருகவா -சன்  (Reiko Furukawa) அவர்களுடன் 



தொசிரோ சன் (Toshiro Miwa-san) வடித்த எங்கு வகை ஜப்பானிய மரச்சிற்பங்கள். இச்சிலையில் உள்ளவர்கள் எபிசு (Ebisu) மற்றும் தாய்கொகு (Doikoku) ஜப்பானியர்களின் சமூகத்தில் முதன்மை வழிபாட்டுக்கு உரியவர்கள் ஆவர் தாய்கொகு  ஜப்பானியர்களுக்கான பிரதான உணவான அரிசி வளத்தையும்,எபிசு உணவருந்த தேவையான மீன் வளத்தினையும் கொடுப்பவர்கள் என இன்றளவும் நம்பப்படுகிறது. மேலும் இவர்கள் தங்களது இல்லங்களில் மகிழ்ச்சியினையும், அளவற்ற வளத்தையும் கொணரச் செய்யும் விசேட கடவுளர்கள் என ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.  இதில் தாய்கொகு அதிர்ஷ்டத்தினையும் (Fortune), எபிசு தூய்மையான எண்ணங்களின் (Condour) குறியீடுகளாக நம்பப்படுகின்றனர்.

அமரர் தொசிரோ மிவா (Toshiro Miwa-san), எங்கு மரச்சிற்ப நிபுணர் (Enku Carving)


ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன்பு தோசிரோ‍-சன் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவரை சந்தித்து பின்னர் அவருடன் நெருங்கிய நட்பு கொள்கிறார். அச்சிற்பியின் கைவண்ணத்தில் உருவான இந்திய சிலைகளின் புகைப்படத்தினை பார்த்த பொழுது "கருடாழ்வார் சுமக்கும் நம்பெருமாளின்" சிலை அவரை வெகுவாக ஈர்த்துள்ளது. அதைப் போலவே தனக்கு ஒரு சிலை வடித்து தருமாறு தனது இந்திய சிற்பி நண்பரிடம் கேட்க அவரும் இவருக்காக வடித்து தந்துள்ளார். 

இச்சிலையினைப் போலவே, அதே சமயத்தில் செய்த மற்றொரு சிலை தற்போது ஜகார்த்தா அரண்மனையில் உள்ளதாக ரெய்கோ‍-சன் தெரிவித்தார். இத்தகவல்களை சுருக்கமாக ஜப்பானிய மொழியில் அச்சிலையின் மேலே அட்டையில் எழுதி தொங்கவிட்டுள்ளார். 

நான் ரெய்கோ-சன் அவர்களிடம், அவரது தந்தையார் படத்தினை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என கேட்டவுடன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொன்னார். பின்னர் அக்கடையில் இருந்த அவரது தந்தையின் புகைப்படத்தினை எனது காமிராவில் பதிவு செய்து விட்டு, அவர் வடித்திருந்த‌ சிற்பங்களில் ஓரிரண்டை புகைப்படம் எடுத்து விட்டு வெளியே வந்து கருடாழ்வார் கற்சிலையினை வெகு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்னர் ரெய்கோ சன் அவரகளுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு விடை பெற்றேன். 

"கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே"
 என மாயவன் அழகைப் பாடிய கோதையின் பெருமாளை  கடல் கடந்து வந்து ஜப்பானில் கண்டது எனக்கு இவ்வரிகளைத்தான் ஞாபகப் படுத்தியது.


"கணிகண்ணன் போகின்றான் 
காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா 
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்
 நீயும் உன் பை நாகப் பாயைச் சுருட்டிக் கொள்" 

பக்தன் கூப்பிட்டவுடன் தன் பை நாகப்பாம்பை சுருட்டிக் கொண்டு அவன் பின்னாலே போகத் துணிந்த சொன்ன வண்ணம் செய்த பெருமாள், இங்கிருக்கும் பக்தனுக்காக கருடன் மேலேறி வந்ததாகதே எனக்கு தோன்றியது. 



Thursday, 13 August 2015


தென்கொரியா ‍- ஆராய்ச்சியாளர்களுக்கான தேசம்


சமீபத்தில் தமிழக பல்கலைக் கழகங்களில் முனைவர் ஆய்வு பட்டம் முடித்த மாணவ நண்பர்கள் முகநூல் வழியே எங்கு முது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளலாம் என நட்பு ஆலோசனை கேட்டு தொடர்பு கொள்கிறார்கள். என் பணிச் சூழல் சிரமத்தில் அவர்களுக்கு தனிப்பட்ட பதிலுரைக்க இயலாமைக்கு வருந்துகிறேன். இக்கட்டுரை அவர்களுக்கு ஓரளவு உதவும் என கருதுகிறேன்.

என் அனுபவத்தில், இந்தியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி முடித்த ஆய்வாளர்கள்  முது முனைவர் ஆய்விற்கு தென் கொரியாவினை  தாராளமாக‌ தேர்ந்தெடுக்கலாம்.  

குறைந்த பட்சம் முதல் இரண்டு வருடங்கள் தென் கொரியாவில் மிகச் சிறந்த ஆய்வகங்களில் பணி புரிந்தால் தரமான ஒரு ஆய்வுக் கட்டுரையினை நேட்சர் ஆய்விதழில் பிரசுரிக்கலாம். ஏனெனில், கடந்த 5 வருடங்களில் தென் கொரியாவின் ஆராய்ச்சி கட்டமைப்பு வியக்க வைக்கிறது. குறிப்பாக நானோ நுட்பவியலில் பருப்பொருள் அறிவியல் (Material Science), ஆற்றல், சுற்றுச் சூழல், உயிரி மருத்துவம், எலக்ரானியல் என தொழிற்சார் ஆராய்ச்சிகள் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுவதால் தனியார் நிறுவனங்கள் ஆய்வு நிதியினை அள்ளிக் கொடுக்கின்றன. 

ஆங்கிலம் தாய் மொழியாக இல்லாத முன்னேறிய நாடுகளில் ஆசியாவினைப் பொறுத்த வரை தென்கொரியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை தற்போது கோலோச்சுகிறது. இவற்றில் ஆய்வுப் பணிக்கான‌    தென் கொரியாவின் கட்டமைப்பினை நேட்சர் இதழ் மிகச் சிறப்பாக அவதானித்துள்ளது.

http://www.nature.com/nature/journal/v524/n7564/full/524S26a.html

மேற் சொன்ன ஆங்கிலம் தாய் மொழியாக அல்லாத முன்னேறிய நாடுகளில் தென்கொரியாவில் ஆய்வு நிதி எப்போதும் வளமுடன் இருப்பதற்கு காரணம் தொழில் நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சி கூடங்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு. எல்லா நாடுகளிலும் காணப்படும் சராசரி ஆய்வு அரசியல் (Scientific Politics) இங்கு அதிகம் உண்டு. அதனால் எப்போதும் ஆராய்ச்சி தகவமைப்பிற்கான‌ போட்டி சூழல் என்பது தென் கொரியாவில் மிகச் சாதாரணமாக காண இயலும். ஆனால் இந்த சூழல்தான் இங்குள்ள பேராசிரியர்களை தொடந்து இயங்கச் செய்கிறது. கொரியாவின் தேசிய பல்கலைக் கழகங்களின் தலைவர் பதவியில் இருப்பவர் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் பிரதிநிதிக்கு ஒப்பாவார். இத்தகு அரசியல் வசதிகள், தேசிய பல்கலைக் கழகங்களின் முன்னேறிய‌ கட்டமைப்பிற்கு ஒரு பின் கதவினை எப்போதும் திறந்து வைக்கிறது. 





Chart represent the research output included in the 2014 Nature Index for ten of South Korea’s leading institutions, and the contributions of different subjects, measured by weighted fractional count (WFC), adopted from Nature 524 (2015) S26–S27. 


Figures shows the expenditure spend on research and development (R&D) in the past decade. Adopted from Nature 524 (2015) S26–S27. 


சியோல் மாநகரைப் பொறுத்த வரை தனியார் பல்கலைக் கழகங்களான யோன்சே பல்கலைக் கழகம், கொரியா பல்கலைக் கழகம், சங்யுங்வான் பல்கலைக் கழகம், ஹன்யாங் பல்கலைக் கழகம் ஆகியவை இந்த தேசத்தின் முதன்மை பல்கலைக் கழகமான சியோல் தேசிய பல்கலைக் கழகத்திற்கு நிகராக ஆய்வில் போட்டி போடுகிறது. என்றால் எந்த அளவிற்கு இதன் உட்கட்டமைப்பு இருக்கும் என்று கணித்து கொள்ளுங்கள். 

நான் சியோலில் ஹன்யாங் பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டு காலம் பணி புரிந்த போது அதன் வளர்ச்சி முன்னோக்கிய திசையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது. உலகின் பல நாடுகளில் இருந்து பிரசித்தி பெற்ற ஆய்வாளர்களையும், பேராசிரியர்களையும் வரவழைத்தனர். உதவி பேராசிரியர் பணிக்கு குறைந்த பட்ச தகுதியாக நேட்சர் அல்லது சயின்ஸ் ஆய்விதழில் கட்டுரைகள் வெளியிட்டு இருக்க வேண்டும், உலகின் முன்னோடி பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பணி செய்தவருக்கு மட்டுமே பணி முன்னுரிமை என ஒவ்வொரு அடியினையும் கவனமாக எடுத்து வைத்ததின் விளைவு இன்று தனியார் பல்கலைக் கழகங்களில் நான்காவதாக இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் ஹன்யாங் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி இன்னும் விசுவரூபம் எடுக்கும் என்றே எண்ணுகிறேன்.


 Hanyang University, Main entrance.


Old administrative building of Hanyang University at winter. 


தமிழ‌கத்தினை பொறுத்த வரை இன்னும் பத்து வருடங்களில் அரசுப் பல்கலைக் கழகங்களை விட தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி வெகு தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றே கருதுகிறேன். மத்திய அரசின் ஆய்வு நிதிக்கான திட்டங்களை (Research Proposal) சமர்ப்பிப்பதில் தனியார் பல்கலைக் கழகங்கள் வெகு சிரத்தை காட்டுகின்றன. இதன் வழியே அங்கு பணி புரியும் உதவி மற்றும் இணை பேராசிரியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு நிர்ணயிக்கப்படுவதால் ஆய்விற்கான ஒரு அடிப்படை உந்துசக்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் அரசு பல்கலைக் கழகங்களை பொறுத்த வரை சூழல் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. எல்லா அரசு பல்கலைக் கழகங்களிலும்  புதிய இளைஞர் பட்டாளம் உத்வேகத்தோடு ஆய்வு கட்டமைப்பில் களம்  இறங்கி பணியாற்றினாலும்,  பாழாய் போன சாதிய அரசியல், மற்றும் அரசியல்வாதிகளின் லாவணி  வேலைகள்  இதன் வளர்ச்சியினை தடுக்கும் முட்டுக்கட்டைகளாக‌ உள்ளது.   பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த தமிழக பல்கலைக் கழகங்களின் சூழலோடு ஒப்பிடுகையில், துணைவேந்தர் தேர்வு முதல் ஆசிரியர் தேர்வு வரை எல்லா நிலைகளிலும் மாற்றத்திற்கான வழிகள் அடைக்கப்பட்டு விட்டன. வழமையான பழைய சாம்பிராணி தொடந்து சென்ற தலைமுறை ஆட்களால் தொடந்து போடப்படுவதால் இந்த புகையில் இளைஞர்கள் தேறி வந்து வெற்றி பெறுவது என்பது மிகக் கடினம் தான்.  

இந்த வரிசையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆய்வு செய்வோரின் நிலைமை படு மோசம். அவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் அல்லது ஆய்வு மையங்கள், பல்கலைக் கழகங்கள் என்ற சமூக வரிசைக் கிரமத்தில் மூன்றாம்தர அடிமைகளாகவே நடத்தப்படும் அவலம் இன்றும் தொடர்கிறது. பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள‌ கல்லூரிகள் இள நிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாடங்களை பயிற்றுவிக்கும் கூடங்களாகவே பாவிக்கப்படுகிறது. இங்கு ஆராய்ச்சி என்பது இரண்டாம் கட்டம்தான். இப்படி ஒரு மோசமான கட்டமைப்பினை கொண்ட ஒரே தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் இங்கு பயிலும் மாணவர்களுக்குத்தான் ஆய்வு பற்றிய அடிப்படை புரிதலும், பிற்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான விழிப்புணர்வும் அதிகம் தரப்பட வேண்டும். ஆனால் பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து கல்லூரிகளுக்கு சொல்லும் ஒரே மந்திரம் "நீங்கள் ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம்" என்பதே. முடிவில் பாதிக்கபடுவது மாணவர்களே. இந்த நிலை நிச்சயம் வரும் காலத்தில் மாற்றப்பட வேண்டும். 

தொடந்து தமிழை முன்னிறுத்தி ஓட்டு வேட்டையாடும் ஆட்சியாளர்கள் தமிழக பல்கலைக் கழகங்களை முன்னேற்ற கொஞ்சாமது சிந்திக்கின்றனரா என ஐயமுற தோன்றுகிறது. இனியாவது போர்க்கால அடிப்படையில் தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள் புதுப்பிக்க பட வேண்டும்.  பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களே அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி கல்வியில் சேருகிறார்கள். ஆகையால் ஆய்வு மாணவர்களுக்கான விடுதிகள் புணரமைக்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வியல் சூழல் நவீனப் படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னனி ஆய்விதழ்களை இணையத்தின் வழியே பெற தமிழக பல்கலைக் கழகங்களின் ஒருங்கிணைந்த மையம் வழியே பெற ஆவண செய்யலாம். இன்னும் அறிவியல் ஆராய்ச்சிக்கான இதழ்களை பிற நாடுகளில் பணிபுரியும் நண்பர்கள் வழியே தான் பெறக் கூடிய அவல‌ சூழல் உள்ளது. 

மத்திய அரசின் ஆய்வு  நிதி எப்போதும் தென்னிந்திய பல்கலைக் கழகங்களுக்கு பாரா முகமாகவே இருக்கும் சூழலில் தமிழக அரசு பாராளுமன்ற நடவடிக்கைக்கள் மூலம் தமிழக அரசிற்கான ஆய்வு நிதியின் விகிதாச்சாரத்தினை தெளிவு படுத்தி அதனை உயர்த்த நடவடிக்கை எடுக்க‌ வேண்டும். தமிழக பல்கலைக் கழகங்களில் ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். பல்கலைக் கழக ஆராய்ச்சியில் தனியார் தொழில் நிறுவனங்களின் நிதி முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ஆய்வு பூங்காக்கள் பல்கலைக் கழக வளாகங்களில் அமைத்து இளம் பேராசிரியர்களை ஊக்குவிக்கலாம். 

தற்போதைய இரண்டாண்டு முது முனைவர் பாடத்திட்டத்தில் (M.Sc.) மேற்கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி (Ph.D) படிப்பினை தொடர விரும்புபவர்களுக்கு கடைசி பருவ தேர்வுக்கான (semester) தாள்களை விலக்கி கொண்டு அதற்கு பதிலாக ஒரு சர்வதேச ஆய்விதழில் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது வெளியிடும் நிபந்தனையோடு அவர்களை நேரடியாக ஆய்வுக் கூடத்தில் கடைசி ஆறு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை சற்றே கூடும்.

தமிழக‌ பல்கலைக் கழகங்களை உலகின் முதல் 100 வரிசை பட்டியலில் எப்போது பார்ப்போம் என்ற  என் ஏக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. 


(குறிப்பு: முனைவர் ஆய்வுப் பட்ட மாணவர்கள் வாய் மொழி தேர்வு முடித்த பின்னும்  சான்றிதழ் உடனே கிடைக்கப் பெறாததால் பல மாணவர்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை இழக்கிறார்கள். பட்டமளிப்பு விழாவினை வருடம் ஒரு முறை வைத்து அதை சடங்கு போல் பாவித்து வெளி நாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை நிறுத்தி விட்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முனைவர் பட்ட சான்றிதழினை வழங்க வழி செய்யலாம்)

Sunday, 2 August 2015


சங்கொலி இதழில் எனது கட்டுரை


இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!

புதிய உலகிற்கான கதவுகள் நண்பர்கள் வழியே திறந்து கொண்டே இருக்கிறது. 

எப்போதும் பரபரப்பாகவே நண்பர்களோடு இருந்து விட்டு ஜப்பான் வந்த பிறகு ஏனோ ஒரு ஏகாந்த தனிமையினை அனுபவிக்க நேர்ந்து விட்டது. ஆள் அரவமற்ற ஒரு சிறிய கிராமத்தில் (Unga, Nodashi, Japan) தற்போது வசிக்கின்றேன்.  நான் பணி புரியும் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தினை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தின் ஒரு சிறிய கால்வாயின் கரையோரம் கட்டி வைத்த தீர்க்கதரிசியினை பாராட்ட வேண்டும். இளைஞர்களை எப்போதாவது அரிதாய்தான் இந்த கிராமத்தில் பார்க்க முடியும். அப்படியென்றால் எனது சூழலை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். எப்போதாவது, பணி நிமித்தம் தோக்கியோ நகருக்குள் பயணம் என்று தற்போதைய‌ பொழுது ஒருவாறாய் கழிகிறது. 

முக நூல் பல நேரங்களில் என் பொழுதுகளை தீன்று தீர்த்தாலும், உலகில் நான் பார்த்திராத பல நண்பர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது. அந்த வகையில் மார்க்கிற்கு பெரும் நன்றிகள். 

அன்றாடம் பார்க்கும் விசயங்களை அதன் பின் புலத்தினை தேடிப் படித்து எழுதி முக நூலில் பகிர்ந்து கொண்டு இருந்தேன். என் ஆய்வின் ஒரு பகுதி நேரம் இதில் செலவாகி கொண்டு இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக தாய்மொழியில் எழுதிக் கொண்டே இருந்ததால், கட்டுரைகளை எழுதும் விதத்தில் கொஞ்சம் நீக்கு போக்கு பிடிபட ஆரம்பித்தது.   சிறிய செய்தியாக இருந்தாலும் சுவாரசியம் கூட்டி சொல்லுதல், வாசிப்பவரை உள்ளே இழுத்துச் செல்ல தேவையான பொறியினை எழுத்தின் வழியே வலை விரித்தல், குறைந்த பட்சம் வாசிப்பவர்களுக்கு புதிய செய்தியினை பதிய வைத்தல், அவர்களின் நுட்ப அறிவினை தூண்டுதல் என எழுத்தின் பல இரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தது. ஆனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து எழுதினால்தான் இலக்கண பிழைகளை முற்றாய் தவிர்க்க முடியும் என எண்ணுகிறேன். 

இப்போது என் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வேறு கோணங்களில் எழுத ஒரு புதிய பிடி கிடைத்துள்ளது. தாய் மொழியில் நாம் எவ்வளவு பலமாக இருக்கிறோமே அந்த அளவிற்கு எல்லா மொழியின் லாகவமும் பிடிபடும் என நான் உணர்கிறேன். 

என் முகநூல் பக்கத்தினை படித்துப் பார்த்து விட்டு நான் அதிகம் நேசிக்கும் மிகச் சிறந்த பண்பாளர் திரு.வைகோ அவர்களின் உதவியாளர், அன்பிற்குரிய அருணகிரி அண்ணன் அவர்கள் முகநூல் வழியே தொடர்பு கொண்டு ஜப்பானில் உங்களது அனுபவத்தினை ஒரு கட்டுரையாக எழுதி கொடுங்கள் என்று கேட்டார். 

அதுவரை எந்த ஒரு எல்லையும் இல்லாமல் மனதில் தோன்றியவைகளை முகநூலில் எழுதிக் கொண்டு இருந்த எனக்கு அவர் சொன்னவுடன் எப்படி ஒரு தலைப்பிற்குள் எழுதி தருவது என யோசித்துக் கொண்டு இருந்த போது சரியாக இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்க வேண்டிய சூழலில் வேறு மாட்டிக் கொண்டு  இருந்தேன். ஒரு வழியாக‌,  இரண்டு மாதம் கால தாமதத்திற்கு பிறகுதான் அண்ணனிடம் எனது கட்டுரைகளை நான் அனுப்ப நேர்ந்தது. இடையில் உரிமையோடு ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தார். எப்படி எழுதி தர வேண்டும் என கேட்டபோது அவர் எழுதிய ஜப்பானில் அருணகிரி புத்தகத்தின் மின் நூல் பதிப்பினை எனக்கு அனுப்பி வைத்து மேலும் உற்சாகமூட்டினார். மேலும் தொடந்து எழுதுங்கள் அவற்றினை தொகுத்து ஒரு புத்தகமாக பதித்து விடலாம் என்று வழிகாட்டினார். 

நான் மட்டுமல்ல பல நண்பர்களை எழுத வைத்து தமிழுக்கு பல பயணக் கட்டுரைகளை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார் அருணகிரி அண்ணன். அந்த வரிசையில் தற்போது எனது ஜப்பானிய அனுபவங்கள் மதிமுக வின் அதிகார ஏடான சங்கொலி இதழில் தொடர் கட்டுரைகளாக இரண்டு வாரம் வந்துள்ளது. 

அருணகிரி அண்ணனின் வழிகாட்டலுக்கு பிறகு புதிய வலைப்பூக்கள் பக்கதினை தொடங்கி எனது கட்டுரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். நான்கு மாதத்தில் 70 கட்டுரைகள் எழுதி விட்டேன். இன்னும் 15 கட்டுரைகள் பாதி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. வலைப்பூக்கள் தொடங்கிய நான்கு மாதத்தில் எனது பக்கங்கள் ஏறத்தாழ 8000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 41 நாடுகளில் இருந்து 3082 நண்பர்கள் தொடர்ந்து எனது பக்கங்களை படிக்கின்றனர். இந்த சிறியவனின் எழுத்துகளை படித்து விட்டு முகநூல் வழியே உற்சாகமூட்டிய எனது நண்பர்களை அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.  

நான் வலைப்பூக்களில் எழுதும் இக்கட்டுரைகளுக்கு அண்ணன் அருணகிரி கொடுத்த உற்சாகம்தான் முதற்படி என்று சொல்ல வேண்டும்.

முகநூல் வழியே தங்களது நேரத்தினை செலவு செய்து எனது கட்டுரைகளில் உள்ள பிழைகளை நேரம் ஒதுக்கி  திருத்தம் செய்யும் பேராசிரியர் செல்வகுமார் ஐயா, மணி வண்ணன் ஐயா உள்ளிட்ட சான்றோர் மக்கள் பலருக்கும்  எமது நன்றிகள்.

நண்பர்களுக்கு சங்கொலி இதழின் இணைய சுட்டிகளை இணைத்துள்ளேன். 

Part -1:


Part-2: