ஜப்பானில் நம்பெருமாள் (Lord Vishnu in Japan- an Exciting Experience)
இந்த கோடை விடுமுறையில் தக்காயாமா (Takayama) நகரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் சுற்றி பார்க்கலாம் என திட்டமிட்டு கடந்த திங்கள் அன்று மாலை வேளையில் தக்காயாமா நகரை அடைந்தேன். தக்காயாமா நகரம் ஜப்பானின் தலைநகரமான தோக்கியோ நகரில் இருந்து வட மேற்கு திசையில் 350 கிமீ தொலைவில் உள்ள மலைகள் சூழப்பட்ட ஒரு பள்ளதாக்கு நகரம்.
தக்காயாமா நகரை அடைந்தவுடன் விடுதியில் எனது பைகளை வைத்துவிட்டு இரவு சிற்றுண்டி அருந்தலாமா என தக்காயாமா நகரின் பிரதான சந்தை வீதியான கொகுபுஞ்சி (Kokupunji) வீதியில் சென்று கொண்டு இருந்தேன். இரவு ஏழு மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு ஓரிரு சிற்றுண்டி கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அவ்வழியே தொடர்ந்து சென்றபோது ஒரு ஜப்பானியரின் கடை வாசலில் தற்செயலாக கருடாழ்வார் சுமக்கும் ஆதி கேசவன் சிலையொன்றை கண்டு திகைத்தேன்.
ஆதிகேசவனை சுமக்கும் கருடாழ்வார் சிலை, என்கு தோ கைவினை பொருட்கள் விற்பனையகம், கிதா தகாயாமா கொகுபுஞ்சி கோவிலின் எதிரில், ஜப்பான். |
என்கு தோ கைவினை பொருட்கள் விற்பனையகம், கிதா தகாயாமா கொகுபுஞ்சி கோவிலின் எதிரில், ஜப்பான். |
அக்கடையின் வாசலில்தான் அச்சிலை வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் கலை நயம் மிக்க கையால் செதுக்கப்பட்ட அற்புதமான மரச்சிற்பங்கள் பல கண்ணாடிக் கூண்டுக்குள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. கடையின் உட்புறம் வீடு ஒன்று பின்புறமாக இணைக்கப்பட்டு இருந்தது. அவ்வீட்டின் உள்ளே ஒரு தாத்தாவும் பாட்டியும் தொலைக்காட்சியினை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். சற்றே அவ்வீட்டின் உட்புறம் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு சிலையின் பூர்வீகத்தினை பற்றி அந்த பாட்டியிடம் ஆச்சரியமாக கேட்டேன்.
பாட்டி தன்னை ரெய்கொ புருகாவா (Reiko Furikawa -san) என அறிமுகப் படுத்தி கொண்டார். பின்னர் அச்சிலையின் பின்னணியினை சற்றே பொறுமையாக விளக்கினார். ரெய்கோ-சன் அவர்களது தந்தையார் காலம் சென்ற தோசிரோ மிவா (Toshiro Miwa) மிகப்பெரிய மரச் சிற்பக் கலைஞர். தோசிரோ-சன் மரத்தில் தத்துவியல் சார்ந்த சிலைகளை செதுக்கும் எங்கு (Enku) எனப்படும் ஜப்பானின் பிரச்சித்திபெற்ற மரச்சிற்பவியலில் நிபுணத்துவம் பெற்றவர்.
எங்கு (Enku) என்பவர் ஜப்பானில் எதோ (Edo period) கால கட்டத்தில் (1632–1695) வாழ்ந்த ஒரு புத்த துறவி ஆவார். அவர் அதுவரை வழி வழியாக செவி வழியாக சொல்லப்பட்ட புத்த ரின் கோட்பாடுகளை, தத்துவியலை மரங்களில் சிற்பமாக செதுக்கி மக்களிடையே ஞானத்தினை போதித்த ஒரு புனித துறவி ஆவார். அவர் சாதாரணமாக காணப்படும் மரத்தின் குச்சிகளில் இருந்து பெரிய மரத்துண்டுகள் வரை எல்லாவற்றிலும் சிற்பங்களாய் செதுக்கி புத்தரின் போதனைகளை போதித்தவர். அச்சிற்பங்கள் வழமையாக காணப்படும் தத்ரூப குணங்களை கொண்டிராமல் ஒழுங்கற்ற கீறல்களாகவும், வரி வடிவங்களாகவும் இருந்தன. அறுபத்து நான்கு வயது வரை வாழ்ந்த எங்கு துறவி தன் வாழ்நாளில் ஒரு லட்சத்து இருபதாயிரம் புத்தர் மரச்சிலைகளை வடிவமைத்தார். ஜப்பான் தேசம் முழுவதும் கால்நடையாகவே சென்று எல்லா மக்களுக்கும் புத்தரது போதனைகளை போதித்தவர்.
முக்கியமாக எல்லா சிலைகளும் ஒன்று போல் இல்லாமல், வேறு வேறாக இருக்கும் விதத்தில் செதுக்கி இருந்தார். இன்றும் ஜப்பானில் இந்த துறவியின் சிலைகள் தற்போது செகி நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எங்கு துறவியின் கால கட்டத்திற்கு பிறகு அவரது பாணியிலான மரச்சிற்பங்கள் எங்கு சிற்பக்கலை என்னும் பெயரில் ஜப்பானில் பிரசித்தி ஆயிற்று. தற்போது விசயத்திற்கு வருகிறேன்.
ரெய்கோ புருகவா -சன் (Reiko Furukawa) அவர்களுடன் |
அமரர் தொசிரோ மிவா (Toshiro Miwa-san), எங்கு மரச்சிற்ப நிபுணர் (Enku Carving) |
இச்சிலையினைப் போலவே, அதே சமயத்தில் செய்த மற்றொரு சிலை தற்போது ஜகார்த்தா அரண்மனையில் உள்ளதாக ரெய்கோ-சன் தெரிவித்தார். இத்தகவல்களை சுருக்கமாக ஜப்பானிய மொழியில் அச்சிலையின் மேலே அட்டையில் எழுதி தொங்கவிட்டுள்ளார்.
நான் ரெய்கோ-சன் அவர்களிடம், அவரது தந்தையார் படத்தினை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என கேட்டவுடன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொன்னார். பின்னர் அக்கடையில் இருந்த அவரது தந்தையின் புகைப்படத்தினை எனது காமிராவில் பதிவு செய்து விட்டு, அவர் வடித்திருந்த சிற்பங்களில் ஓரிரண்டை புகைப்படம் எடுத்து விட்டு வெளியே வந்து கருடாழ்வார் கற்சிலையினை வெகு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்னர் ரெய்கோ சன் அவரகளுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு விடை பெற்றேன்.
"கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே"
என மாயவன் அழகைப் பாடிய கோதையின் பெருமாளை கடல் கடந்து வந்து ஜப்பானில் கண்டது எனக்கு இவ்வரிகளைத்தான் ஞாபகப் படுத்தியது.
"கணிகண்ணன் போகின்றான்
காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்
நீயும் உன் பை நாகப் பாயைச் சுருட்டிக் கொள்"
பக்தன் கூப்பிட்டவுடன் தன் பை நாகப்பாம்பை சுருட்டிக் கொண்டு அவன் பின்னாலே போகத் துணிந்த சொன்ன வண்ணம் செய்த பெருமாள், இங்கிருக்கும் பக்தனுக்காக கருடன் மேலேறி வந்ததாகதே எனக்கு தோன்றியது.
பிண்ணனியினை= பின்னணியினை
ReplyDeleteநன்றி நண்பரே திருத்தி விடுகிறேன்.
Deleteஜப்பானிய எண்களில் ஹரகிரா எழுத்துமுறையில் ஒன்ப(த்)து எனும் சொல்லுக்குள் பத்து எனும் சொல்லும் அடங்கியுள்ளதாக தோன்றுகிறது. அதை பற்றிச்சொல்லுங்கள்.
ReplyDeleteநிச்சயம்
Delete