ஜப்பான் ஏன் கல்வியில் முன்னேறிய நாடாக உள்ளது - 3
இன்று காலை ஜப்பானிய தினசரி செய்தி தாளில் இருந்து ஒரு பேட்டிக்காக எமது சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் ஆய்வக மையத்திற்கு வந்திருந்தார்கள். நானும் இரண்டு ஜப்பானிய இளம் நிலை மாணவர்களும் கூட்டாக அமர்ந்து பேட்டி கொடுத்தோம். பேட்டியின் குறிக்கோள் எங்கள் மையத்தின் ஆய்வு குறித்த செயல்பாடு மற்றூம் சர்வதேச ஆய்வாளர்களுக்காகன் சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பதே. நான் ஆங்கில மொழியிலும், அவர்கள் தங்களது தாய் மொழியிலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தோம். இந்த பேட்டியின் போது அம்மாணவர்களின் பேராசிரியரும் உடன் அமர்திருந்தார்.
ஏறத்தாழ எல்லா கேள்விகளுக்கும் மிக இயல்பாக, பூசி மெழுகாமல் அவ்விரு மாணவர்களும் பதில் அளித்த விதம் மிக ஆச்சரியமாக இருந்தது. எந்த வித முன்னேற்பாடான தயாரிப்பு இல்லாமலும் தங்கம் மனதில் தோன்றியதை நேர்த்தியாக பேசினார்கள். தங்களின் எதிர் காலம் என்ன, இதே ஆய்வு மையத்தில் தொடந்து இருப்பீர்களா என்ற கேள்விக்கு, அம்மாணவன், தான் ஒரு நதியினை போன்றவன், என்னால் ஓரிடத்தில் தேங்கி இருக்க இயலாது. சவால்களை தேடி அலைகிறேன். ஒரு வேளை ஜப்பானிய முன்னனி நிறுவனம் ஒன்றில் அடுத்த வருடம் பணி புரிவேன் அல்லது உயர் கல்வி ஆராய்ச்சிக்கு செல்வேன் என பளிச்சென பதில் சொன்னது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தினை கொடுத்தது.
நான் எனது இளம் நிலை அறிவியல் படிப்பை 2000 ஆம் ஆண்டு முடித்தேன். அப்போதைய கால கட்டத்தில் இப்படி ஒரு பேட்டி கேட்கப் பட்டிருந்தால் இவ்வளவு தெளிவாக பேசி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஜப்பானிய பள்ளிக் கல்வி இங்குள்ள மாணவர்களை சுயமாக சிந்திக்கவும், பேசவும் கற்றுத் தந்து இருக்கிறது. வெறும் மதிப் பெண் கோழிகளை உருவாக்காமல் தன்னியல்பான மாணவ சமுதாயத்தினை பள்ளியிலே கட்டமைத்து விடுகிறார்கள். ஜப்பானில் தனி மனித ஒழுக்கம் பரவலாக காணப்படுவதற்கு இதுதான் மிக முக்கிய காரணி என எண்ணுகிறேன். ஜப்பானில் நடு நிலை பள்ளி வரை மாணவர்களுக்கு நம் நாட்டில் வழக்கமாக வைக்கப்படும் முழு ஆண்டு தேர்வு எனப்படும் 'திறனறி தேர்வு' கிடையாது. மாறாக நல்ல குடிமகனாக எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படை அம்சத்தினை மட்டுமே பத்து வயது வரை கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.
இங்குள்ள மாணவர்களுக்கு 20 வயதிலேயே ஒரு ஊடகத்தில் பேச வாய்ப்பு கிடைக்கிறது. எனக்கு இந்த மாணவர்களை பார்க்கும் போது தோன்றுவதெல்லாம் ஏன் தமிழகத்தில் பத்திரிக்கை ஊடகங்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு நேரிடையாக சென்று பேராசிரியர்களையும், ஆய்வு மாணவர்களையும் சந்தித்து வார வாரம் சிறப்பு பகுதியாக அவர்களது பேட்டிகளை வெளியிடலாம். சாதிப்பவனை மட்டும் கொண்டாடும் மனோநிலையில் இருந்து நாம் வெளி வர வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள துடிப்பான இளம் ஆய்வாளர்கள், பேராசிரியர்களை இனம் கண்டு அவர்களது ஆய்வினை வெளி உலகிற்கு எடுத்து சொல்லலாம்.
முக்கியமாக அவர்களின் ஆராய்ச்சி மற்றும் எவ்வாறு அவர்களின் எதிர்காலம் திட்டமிடப்படுகிறது என்பதனை எழுதலாம். நிச்சயம் இது பள்ளி மாணவர்கள், இளம் நிலை மாணவர்களிடையே பெரும் தாக்கத்தினை உருவாக்கும். இந்திய ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை நமது போட்டி நாடான சீனாவை ஒப்பிடும் போது மிகவும் குறைவே. இந்நிலை மாற ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆராய்ச்சி பத்திகள் எழுத ப்ரீலேன்சர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சினிமாத்துறையினையும், அரசியலின் வேகாத பருப்புகளையும் எழுதி தள்ளுவார்கள் எனத் தெரியவில்லை.
தற்போது தமிழகத்தில் உள்ள செய்திதாள் மற்றும் வெகுசன இதழ்களில் பேட்டி எடுக்கப்பட்டு வெளி வருவது முறைசாரா, தற்செயலான கண்டுபிடிப்புகள் மட்டுமே. உதாரணத்திற்கு, பழனி அருகே வாலிபர் சாதனை, சோலார் பேனலில் இருந்து மொபைல் சார்ஜர் கண்டுபிடிப்பு, பொறியியல் மாணவர்கள் நீரில் எரியும் அடுப்பு கண்டுபிடிப்பு போன்ற சுவாரசியம் ஊட்டும் கட்டுரைகள் மட்டுமே வருகிறது. உண்மையில் இவர்களுக்கு முன்னால் இது போன்று ஓராயிரம் கண்டுபிடிப்புகள் வெளி வந்து பல ஆண்டுகள் ஆகி இருக்கும். அதனை பற்றி ஒரு அடிப்படை புரிதல் கூட இருக்காது. பத்திரிக்கைகளுக்கு தேவை செய்தி பற்றி சுவாரசியம் மட்டுமே. இவர்களை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் இவற்றினை முறையாக ஆராய்ச்சி செய்யும் ஆய்வு மாணவர்கள் ஒரு போதும் வெளி உலகிற்கு தெரிவதில்லை. அவ்வாறு தெரியும் பட்சத்தில் வெகு சன மக்களும், தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியின் மூலம் தங்களுக்கு தீர்வு கிடைக்குமெனில் இம்மாணவர்களையோ அல்லது பேராசிரியர்களையோ தாராளமாக அணுகுவார்கள். பின்னாளில் இந்த ஆய்வு மாணவர்கள் தொழில் முனைவோராக வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். அப்படி ஒரு சூழல் வந்தால் முனைவர் பட்டம் முடித்த இளம் ஆராய்ச்சியாளர்கள் மிகச் சொற்ப சம்பளத்திற்கு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு செல்ல மாட்டார்கள்.
----------------------------------
அமெரிக்க வேதியியல் கழகத்தின் (American Chemical Society) அதிகார செய்தி ஏடான சி அண்டு என் (C &EN), இவ்வருடத்திற்கான (2015) உலக அளவிலான வேதியியல் சார் ஆராய்ச்சியாளர்களில் மிகச் சிறந்த பன்னிரெண்டு இளம் அறிவியலாளர்களை தேர்ந்தெடுத்து உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சராசரி வயது 34.
தற்போது, உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் சூழலியல் பருவ மாற்றம் மற்றும் மனித நோய்கள் (climate change and human disease) பற்றிய முன்னேறிய ஆய்விற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். உயிரி நுட்பம், வேதிவினையூக்கிகள், நெகிழி மூலக்கூறுகள், ஒளியியல், போன்ற துறைகளில் இவர்கள் உச்சத்தினை தொட்டவர்கள். வழமையான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடாமல் புதிய பரிணாமத்தில் கண்டுபிடிப்புகளையும், வடிவமைப்புகளையும் நோக்கியதாக இவர்களது ஆராய்ச்சி இருக்கிறது. அதுவே இவர்களை இந்த விருதிற்கு அடையாளம் காண்பித்துள்ளது.
முக்கியமாக, நாம் கவனிக்க வேண்டியது இவர்களது ஆய்வு தனித்த அறிவியல் துறையாக (வேதியியல்) அல்லாமல் கூட்டான (இயற்பியல், உயிரியியல், உயிரி நுட்பம்) பல் துறை சார்ந்து இருப்பது சமகாலத்தில் அறிவியலாளர்கள் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் அவசியத்தினை வலியுறுத்துகிறது.
கீழ்கண்ட சுட்டியில் இவர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
http://talented12.cenmag.org/
இளம் நிலை, முது நிலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த பக்கத்தினை பரிந்துரையுங்கள். நிச்சயம் அவர்களுக்கு ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு உந்துதலை தரும். அடுத்த வருடத்திற்கான சிறந்த அறிவியலாளர் தேர்விற்கான படிவமும் இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆராய்ச்சியாளர்கள், இளம் பேராசிரியர்கள் தாராளமாக முயற்ச்சிக்கலாம்.
கொசுறு தகவல்:
ஆசியாவில் இருந்து ஒரு இளம் ஆராய்ச்சியாளரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
இந்த இதழில் வந்த செய்தியினை அச்சிட்டு மாணவர்களுக்கு கொடுக்க ஏதுவாக இதழின் பக்கங்களை நேரடியாக ஒளி நகல் எடுத்து கீழே இணைத்துள்ளேன். Courtesy: C& EN for academic purpose.
No comments:
Post a Comment