கடற் சூழலியல் விபத்துகள் -கவனக் குறைவின் விபரீதங்கள்
சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தின் அருகில் கடந்த 28 ஆம் தேதி டான் காஞ்சிபுரம் என்ற சரக்கு கப்பலின் மீது குவைத் நாட்டை சேர்ந்த எண்ணெய் கச்சாப் பொருள் கப்பல் ஏற்படுத்திய விபத்தில் 70 டன்னுக்கும் மேற்பட்ட தார் போன்ற ஆயில் கெமிக்கல் (Petrochemical lubricant) கடலில் கலந்தது. இந்த ஆயில் கழிவுகளை முறையான கருவிகளை கொண்டு உடனடியாக 24 மணி நேரத்தில் நீக்கி இருந்தால் சென்னையின் கடற்கரை பகுதி முழுவதும் காப்பாற்றப் பட்டு இருக்கும்.
அப்படியே ஆயிலை விட்டு விட்டால் அதுவே கடலின் கரையில் ஒதுங்கிய பின் வாளியை வைத்து அள்ளி கொள்ளலாம் என எந்த புண்ணியவான் ஐடியா தந்தாரோ தெரியவில்லை. முதல் இரண்டு நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டார்கள். இதென்ன பூசணிக்காயா சோற்றில் வைத்து மறைப்பதற்கு. ஆயில் கழிவுகள் அடுத்த நாள் காலை சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆர் கே நகர் குப்பத்தையொட்டிய கடற்கரை முழுவதும் தார் போல ஒதுங்கி இருந்தது. யாரும் கடலுக்குள் செல்ல முடியாத படி கெட்டியாக கரையில் தேங்கி நின்றது. அதன் பிறகே நிலமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட கடலோர காவல் படை களத்தில் இறங்கியது. அடுத்து அவர்கள் செய்த பணிதான் இப்போது பல சூழலியல் ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது
முக்கியமாக இந்த கழிவுகளை அகற்ற மத்திய கடலோர காவல் படை சென்னையில் இருக்கும் மீனவ மக்களை உரிய பாதுகாப்புகள் இன்றி களத்தில் இறக்கி உள்ளார்கள். அத்தோடு நில்லாமல் தன்னார்வலர்கள் மூலம் அகற்றுகிறோம் எனச் சொல்லி 750 க்கு மேற்பட்ட பொது மக்களை களத்தில் இறக்கியுள்ளார்கள். தயவு செய்து மனிதர்கள் மூலம் இந்த ஆயில் கழிவுகளை அகற்றுவதை நிறுத்துங்கள்.
சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை மீனவர்கள் அகற்றும் போது எடுத்த புகைப்படம் |
சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை மீனவர்கள் அகற்றும் போது எடுத்த புகைப்படம் |
சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை மீனவர்கள் அகற்றும் போது எடுத்த புகைப்படம் |
சென்னை கடலோரத்தில் ஒதுங்கியுள்ள ஆயில் கழிவுகளை தன்னார்வலர்கள் அகற்றும் காட்சி |
அகற்றப்பட்ட ஆயில் கழிவுகள் |
அகற்றப்பட்ட ஆயில் கழிவுகள் |
இது சாதாரண பெயின்டு போல் தன்னார்வலர்கள், மீனவர்கள் வெறும் கைகளால் அள்ளும் புகைப்படங்களை பார்க்கும் போது மனது பகீர் என்கிறது.
ஆயில் கழிவுகளில் பெட்ரோலிய கரிம பொருளான ஹைட்ரோகார்பன் அதிகமாக இருக்கும். குறிப்பாக இவற்றில் உள்ள "கார்சினோசன்" என்னும் கரிம பொருள் சுவாசிக்கும் போது நூரையீரலை பதம் பார்ப்பவை, கேன்சரை தூண்டுபவை. மேலும் முறையான ஆடைகள், மூச்சு கருவிகள் துணையின்றி இந்த கழிவுகளை கையாளும் போது கொடுமையான தோல் வியாதி, கண் எரிச்சல் உள்ளிட்ட சிக்கலை உண்டாக்கும். அது கேன்சர் போன்ற வியாதிகளுக்கு வழி வகுக்கும். தயவு செய்து உரிய முறையில் கழிவினை அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1. இது போன்ற ஆயில் விபத்துகள் உலகில் வேறு எங்காவது நிகழ்ந்துள்ளதா?
மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டு ஆழ்துளை பெட்ரோலிய கிணற்றில் நிகழ்ந்த கசிவு விபத்துதான் உலகிலேயே மிக பெரியது. பி,பி (BP) ஆயில் நிறுவனத்தினரின் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளிப்பட்ட குருடாயில் கசிவு பல மனித உயிர்களையும், கடல் வாழ் உயிரினங்களையும் காவு வாங்கியது. இது தவிர குவைத், பிரித்தானியா, ஆப்ரிக்கா, ஈரான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ந்த எண்ணெய் கிணறு விபத்துக்கள் 250-600 ஆயிரம் டன் குருடாயிலை கடலில் கலக்கி மாசுபடுத்தியுள்ளது. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய விபத்துகளும் நடந்துள்ளன.
தற்போது சென்னையில் ஏற்பட்டு இருக்கும் ஆயில் கசிவு விபத்தின் கள நிலவரம் வெளியே தெரிய வரும் போதுதான் உண்மையான விபரீதத்தை சொல்ல முடியும்.
2. உலகின் மற்ற நாடுகளில் எவ்வாறு கருப்பு நிற, பெட்ரோலிய ஆயில் கசிவுகளை (Oil slick) கடலில் இருந்து நீக்குகிறாரகள்?
பெட்ரோலிய ஆயில் பொருட்கள் நீரூடன் ஒட்டாது, ஆகவே நீரின் புறப்பரப்பில் தான் மிதந்து கொண்டிருக்கும். எனவே விபத்து நடந்த உடன் காலம் தாழ்த்தாது இந்த ஆயில் கசிவு உள்ள பகுதியினை மிதவை பாதுகாப்பு வளையங்கள் (Boom) மூலம் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும். கிட்டத்தட்ட இது முதலுதவி போல, பிறகு நீரையும், ஆயிலையும் பிரித்து பம்பிங் செய்யும் ஸ்கிம்மர் (Skimmer) இயந்திரங்களை பயன்படுத்தலாம். இந்த ஸ்கிம்மர்கள் ஆயிலின் நீர் கலக்குமை தன்மையினை பொறுத்து வேறுபடும்.
3. வேறு எந்த வழிகளில் இந்த ஆயில் கழிவுகளை அகற்றலாம்?
இயற்கையில் கடல் இது போன்று கழிவுகளை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து மட்க வைத்து சுத்திகரிக்கும் (Bio degradable) திறன் கொண்டது. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த நுட்பம் மூலம் எதிர்பாராத ஆயில் கழிவு விபத்துகளில் பாக்டீரியாக்களை செயற்கையாக தூண்டும் பையோ டீகரடபிள் பவுடரை தூவிவிட்டால் அவை இந்த ஆயில் கழிவுகளை சிறிது காலம் எடுத்து மட்க வைக்கும். இது நடுக்கடலில் நிகழும் விபத்துக்களுக்கு நன்கு பொருந்தும். தற்போது இந்த உத்தியைத்தான் மத்திய அரசு செய்துள்ளது. ஆனால் உரிய நேரத்தில் கண்டுகொள்ளாமல் விட்டதால் அவற்றின் ஒரு பகுதி கரைப் பகுதிகளுக்கு பரவி தற்போது பாதிக்கப்பட்ட கழிவுகளை கைகளால் அள்ளும் நிலைக்கு தள்ளி உள்ளார்கள்.
மேலே சொன்ன நுட்பத்தை தவிர, நீர்-எண்ணெய் பரப்பு விலக்குமை தத்துவத்தினை அடிப்படையாக கொண்டு நானோ பருப்பொருள் (Nanomaterials) மூலம் பிரித்தெடுக்கும் ஆராய்ச்சி (oil and water separation) உலகமெங்கும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் அளவில் மிகச்சிறிய நானோ பருப்பொருள் பூசப்பட்ட பரப்பு (Nanomaterial coated surface) அதி தீவிர எண்ணேய் அல்லது நீர் ஒட்டா பரப்பு பொருளாக (Oleo phobic surface or superhydrophobic surface) செயல்பட்டு இதன் மீது ஆயில் கலந்த கடல் நீரை செலுத்தும் போது எதாவது ஒரு பொருளை உறிஞ்சிக் கொண்டோ (adsorption) அல்லது விலக்கி (repelling) கொண்டோ நீரையும் ஆயிலையும் பிரித்து வடிகட்டி (filtering) தனித்தனியே தந்து விடும்.
இது குறித்த ஆய்வுகள் இந்தியாவில் சென்று கொண்டுள்ளது என நினைக்கிறேன். ஆனால் அதன் முடிவுகள் சந்தைப்படுத்தப்பட்டு விட்டனவா என தெரியவில்லை. ஜெலேசன் எனப்படும் நுட்பத்தின் மூலம் நீரில் மிதக்கும் ஆயில் கசிவுகளை தனியே கட்டிகளாக உருட்டி எளிதாக நீக்கும் முறை பற்றியும் ஆராய்ச்சிகள் சென்று கொண்டுள்ளது
4. அப்படியானால் நம்மிடம் ஸ்கிம்மர் (skimmer) போன்ற நவீன உபகரணங்கள் இல்லையா.
சரியாக தெரியவில்லை. இது வரை களத்தில் இந்த கருவியை மத்திய அரசு செயல்படுத்தியதாக பத்திரிக்கை செய்தியோ அரசு செய்தியோ வந்ததாக தெரியவில்லை. இது வரை சாதாரண பம்பிங் மோட்டார்களை பயன்படுத்தி வருவதாகவே செய்திகள் கூறுகிறது. கடினமான தார் போன்ற ஆயிலை சரியாக பம்பிங் செய்ய இயலாமல் சாதாரண மோட்டார்கள் அடைத்துக் கொண்டு திணறுகிறது.
என் கவலை எல்லாம் இன்னும் நாம் சாக்கடைகளில் மலக் கழிவுகளை அள்ள மனிதர்களையே வைத்து கொண்டு ஒரு பிற்போக்கு தனம் நிரம்பிய குடிமை சமூகத்தை வைத்திருக்கிறோம். இதில் கடலில் ஏற்படும் ஆயில் கழிவுகளை முறையாக அள்ள இயந்திரம் உள்ளதா என தெரியவில்லை. இந்நேரம் மலம் அள்ளும் இயந்திரங்களை வடிவமைக்க பெரிய ஆய்வு நிதி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் இந்த சிக்கலை எளிதில் தீர்த்திருக்கலாம். இப்படியே போனால் நாளை அணு உலை விபத்து ஏற்படும் போது தன்னார்வலர்களுக்கு வாளியை கையில் கொடுத்து களத்தில் இறக்கி விட்டாலும் விடுவார்கள். எனவே, நாம் இது குறித்து தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியத்தையே இந்த விபத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.
working principle of skimmer in removing oil slick from sea |
Drum type Skimmer removing oil slick from sea |
Skimmer removing oil slick from sea |
Skimmer removing oil slick from sea |
5. மத்திய அரசு இதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
இந்த விபத்து 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்தது. ஆனால் மத்திய அரசு 30 ஆம் தேதிக்கு பிறகு விழித்துக் கொள்கிறது. இடையில் ராஜ்யசபாவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த பிரச்சினையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார். அதன் பிறகே இங்கே கடலோர காவல் படை தன்னார்வலர்களை வைத்துக்கொண்டு களம் இறங்கியது. இவ்வளவு பெரிய சூழலியல் விபத்து நிகழ்ந்தும் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களுக்கான பொறுப்பு அமைச்சரும், எண்ணூர் துறைமுகமும் இந்த விபத்தால் சுற்றுப் புற சூழலுக்கு எந்த விபத்து நிகழவில்லை என்ற பொறுப்பற்ற அறிக்கையினை அளித்துள்ளது.
6. ஆயில் கழிவுகள் என்ன மாதிரியான சுற்றுப்புற சீர்கேடுகளை ஏற்படுத்தும்?
ஆயில் கசிவுகள் கடல் வாழ் உயிரினங்களான ஆமைகள், மீன்கள், கடலை நம்பியிருக்கும் பறவையினங்கள் ஆகியவற்றின் தோல் பகுதியில் ஊடுரும். தோல் பகுதி முழுவதும் ஆயில் பூச்சு ஏற்படுவதால் இவற்றால் கடல் நீரின் தட்பவெப்ப நிலைக்கு தக்கவாறு தங்களை தகவமைத்து கொள்ள இயலாது, முக்கியமாக கொஞ்சம் கொஞ்சமாக தங்களது நீரில் மிதக்கும் திறனை இழக்கும். அப்புறம் என்ன, செத்து மிதக்க வேண்டியதுதான்.
கடல் பறவைகளின் நிலை இன்னும் ஒரு படி மோசம், பெட்ரோலிய கழிவு பொருட்களில் இருந்து வரும் நெடியானது பறவைகளின் மூச்சு குழாயை பாதித்து அவற்றின் பறக்கும் திறனை இழக்கும், மேலும் தங்கள் கூடுகளை கண்டறிந்து திரும்பும் ஞாபக சக்தியையும் அவை இழக்க நேரிடலாம். இப்படி எண்ணற்ற சூழலியல் சீர்கேடுகளை விளைவிக்கும்
7. உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
a) ஆயில் கழிவுகளை நீக்குவதற்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தன்னார்வலர்களை களத்தில் இறக்குவதை நிறுத்தி விட்டு வேறு உபகரணங்களை கையாள வேண்டும். கவனக் குறைவு பெரிய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்
b) இந்த சூழலியல் விபத்தால் பாதிப்படைந்த மீனவர்களுக்கும், தமிழக அரசிற்கும் மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எதிர் வரும் காலத்தில் துறைமுக பகுதியில் நிகழும் விபத்துகளை காலம் தாழ்த்தாது விரைந்து தடுத்திட ஏதுவான கருவிகளை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும்.
c) இந்த விபத்தில் பொறுப்பற்ற முறையில் கையாண்ட எண்ணூர் துறைமுக பொறுப்பு அதிகாரிகள், அமைச்சரகத்தின் மீது நீதி மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
d) இந்த ஆயில் விபத்தினை சுற்று சூழல் அறிவியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் துணையுடன் முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைத் தகவலை வெளியிட வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் இது போன்ற விபத்து நிகழ்ந்தால் சுற்றியுள்ள பொது மக்களுக்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்று அரசு அறிவுரைகள் வழங்கிட வேண்டும்
e) சும்மா வெட்டித்தனமாக நம் பாரம்பரிய பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டு இருக்காமல் அறிவியல் நுட்பங்களின் துணையுடன் புதிய கருவிகளை வடிவமைக்கும் ஆய்வுகளை பல்கலைக் கழக அளவில் முன்னெடுக்க வேண்டும். இதற்கான நிதியினை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி அவற்றை முறையாக சந்தைப்படுத்தலில் உதவிட வேண்டும்.
No comments:
Post a Comment