Sunday, 5 February 2017

அவந்தியின் முதல் நாடகம்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை அவந்தியை நாடக பயிற்சி வகுப்பில் கொண்டு  விட வேண்டும். 
பத்து நிமிடம் முன் கூட்டியே நாடக பயிற்சி மன்றத்திற்கு சென்று விடுவதால் கொஞ்ச நேரம் அங்கிருக்கும் குழந்தைகளின் குறும்புகளை அப்படியே கொஞ்ச நேரம் ரசித்த பிறகே வருவேன்.  எனக்கு அது பெரிய ரிலாக்ஸ் பாயிண்ட் என்பதோடு  என் பால்ய வயதினை ஞாபகப் படுத்துபவை.
ஏனெனில் என் கிராமத்து பள்ளியில் பள்ளி ஆண்டு விழாவில் நாடகங்களை பார்த்ததோடு சரி. பின்னாளில் என் கிராமத்தில் இருந்து வெளியேறி உயர்நிலைப் பள்ளி படிப்பிற்கு நகரைப் பார்க்க தொடங்கிய காலம் தொட்டு, கல்லூரி சென்ற காலத்தில் நண்பர்களோடு கல்லூரி மேடைகளில் ஓரங்க நாடகங்கள், கேலி கிண்டல் கலந்த காலாய்ப்புகள் என முடிந்த வரை எல்லாம் சுயம்புவாக செய்யப் பழகி கொண்டோம். 

இப்படியான முறையான பயிற்சி பள்ளிகள் எல்லாம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்திருந்தாலும் அப்போது இருந்த பொருளாதார வசதி இதற்கெல்லாம் கனவிலும் இடம் கொடுத்திருக்காது.

ஆனால் அவந்திக்கு நிச்சயம் இந்த வசதியினை செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. இங்கே சுவான்சியில் யுகேவின் பிரசித்த பெற்ற The Sir Harry Secombe Trust என்ற நாடக குழு உள்ளது. நான்கு வயதில் இருந்து நாடகப் பயிற்சி தருகிறார்கள். முறையாக பாடுதல், நடனம், உடல் மொழி, என படிப்படியாக (musical theatre and performing arts) பயிற்சி தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் தேர்வு உண்டு. இதில் தனியாக நாடகப் பயிற்சிக்காக‌ ஸ்காலர்சிப்பும் தருகிறார்கள். பதினெட்டு வயது வரை உள்ள அனைவருக்கும் இங்கே பயிற்சி தருகிறார்கள்.
மூன்று மாதங்களாக அவந்தி நாடக பயிற்சி பள்ளிக்கு போகிறாள். அவந்தியை நாடக வகுப்பில் இருந்து அழைத்து வரும் போது இன்றைக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள் எனக் கேட்டால் ரோட்டில் குதித்து கொண்டே பாடுவாள். சத்தியமாக அவள் பாடும் ஆங்கிலப் பாடல்கள் எனக்கு புரியாது. ஆனால் புரிந்த மாதிரி. தலையாட்டி விடுவேன்.
மூன்று மாத பயிற்சிக்கு பின் வியாழன் அன்று அவந்தி முதன் முறையாக விசார்ட் ஆப் ஓஸ் (Wizard of Oz) என்னும் மேடை நாடகத்தில் நடித்தாள். இந்த நாடகம் சுவான்சிநகரில் உள்ள 120 வருடங்கள் பழமையான கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது. நேற்றோடு இவளது குழு இந்த நாடகத்தை நான்கு காட்சிகளாக‌ அரங்கேற்றியுள்ளார்கள். எல்லாமே அரங்கு நிறைந்த காட்சிகள்.
முதலில் இந்த குட்டீசுகள் என்ன செய்யப் போகிறார்கள்  என நினைத்துக் கொண்டுதான் வியாழக்கிழமை காட்சிக்கு டிக்கட் எடுத்துக் கொண்டு நானும் எனது மனைவியும் சென்றோம். ஆனால் நாடகம் தொடங்கியவுடன் அப்படியே மெய் மறக்க வைத்து விட்டார்கள்.
விசார்டு ஆப் ஓஸ்  பாடலும், நகைச்சுவையும் நிரம்பிய உலகப் புகழ் பெற்ற அமெரிக்க திரைப்படம். இதனை 1939 ஆம் ஆண்டு மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்பவர் இயக்கினார். இதன் மூலக் கதையானது 1900 ஆம் ஆண்டு பிராங் பாம் என்பவர் எழுதிய The Wonderful of Oz என்ற நாவலைத் தழுவியது. இந்த திரைப்படத்திற்கு பிறகு உலகெங்கும் இந்த கதை மேடை நாடகங்களாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இந்நாடகத்தில் டோரதி (Dorathy) என்னும் பதின்ம வயது சிறுமி தனது நாய்க்குட்டியுடன் (Toto) குள்ளர்கள் நிறைந்த மின்ஞ்கின் தீவில் மாட்டிக் கொள்கிறாள். இந்த தீவில் வசிக்கும் நற்செயல்கள் புரியும் தேவதை, சோளக் கொல்லை மனிதன், சிங்கம், டின் மனிதன் (டப்பாவினால் ஆன மனிதன்). இவர்கள் ஐவரும் டோரதியோடு சேர்த்து முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களோடு கெடுதல் புரியும் சூனியக்காரி, அவளது குரூப், நல்லது செய்யும் குள்ளர்கள் என மற்றொரு டீம் என மொத்தம் இந்த நாடகத்தில் 50க்கும் மேற்பட்ட துணை கதாபாத்திரங்கள் உள்ளன. டோரதி  இந்த தீவில் எதிர் கொள்ளும் சவால்கள், பின்னர் எப்படி அவள் வீடு திரும்புகிறான் என்பதே இக்கதை.

இந்த நாடகம் முழுவதும் நேரடியான பின்னனி இசையிலேயே (arkestra) நடக்கிறது. மொத்தம் 15 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலும் 5 நிமிடத்திற்கு நீடிப்பவை. ஏறத்தாழ இரண்டரை மணி நேர நாடகத்தில் 30 நிமிடம் இடைவேளை மற்றபடி தொடர்ச்சியாக, அநாயசமாக நடிக்கிறார்கள். நாடகத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே 4 -16 வயது வரைதான் இருப்பார்கள். ஒரு சின்ன பிழை  கூட இல்லை. நேரடி ஆர்கெஸ்ட்ராவில் அற்புதமான பிராப்பர்டி செட், காஸ்டியூம், என பின்னி எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் போல் இருந்தது. மேடைக்கும், பார்வையாளருக்கும் இடையே பத்தடிக்கு ஒரு பள்ளம் உள்ளது (கீழ் தளம்). அந்த இடத்தில் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இசைக்கிறார்கள். மேடையில் நடிப்பவர்களுக்கும், இந்த இசைக் குழுவினருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது.

நான் அவந்தியை பயிற்சி பள்ளியில் விடச் செல்லும் பொழுது அவளின் நாடக‌ ஆசிரியருக்கு ஒரு ஹலோ சொல்வதோடு சரி. ஆனால் இன்றைக்கு நாடகம் முடிந்து மேடையின் பின் புறம் உள்ள ஹாலில் இருந்து அவந்தியை கூட்டி வர செல்லும் போது அவர் ஒரு சினிமா இயக்குநர் போல் தெரிந்தார். 
நாடகம் அற்புதமாக இருந்தது என அவரிடம் வாழ்த்து சொன்னேன். நான் பார்த்த வரையில் வயது வாரியாக துணை ஆசிரியர்க‌ள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு சிறு குழுவாக பிரித்து வேலை செய்வதால் நன்கு ஒருங்கிணைக்க முடிகிறது. ஸ்டேஜ் மேனேஜர் என்று ஒருவர் தனியாக எல்லா காட்சிகளையும் மேடையில் ஒருக்கிணைக்கிறார்.
நாடக காட்சி முடிந்ததும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பதின்ம வயது உடைய சிறுவர், சிறுமியர்கள் நாடக மன்றத்திற்கு வெளியே காத்திருந்த அவரது வகுப்பு தோழர்களை கட்டி பிடித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டனர். அவர்களின் பெற்றோரிடம் சென்று என் வாழ்த்துகளை சொன்னேன். மிக்க மகிழ்ச்சி என்று பூரித்தனர்.
கோடிக்கணக்கான பட்ஜெட்டில் சீரியல், திரைப்படம் என பிரித்தானிய திரை உலகம் ஒரு புறம் இருந்தாலும் தங்கள் பாரம்பரிய நாடகக் கலையினை அவர்கள் இன்னும் விட்டு விடவில்லை. பல நகரங்களில் உள்ள புராதன நாடக மன்றங்கள் இன்றும் வழமையாக இயங்குகின்றன. உண்மையில் நான் ஆச்சரியப்படும் இடம் இதுதான்.
 நாடக காட்சி முடியும் வரை ஆம்புலன்சு நர்சு இருவர் நாடக மன்றத்திலேயே இருந்தனர். நாடக காட்சியினை புகைப்படம், காணொளி எடுக்க அனுமதி இல்லை. ஆகவே அவந்தி வரும் காட்சியினை புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவந்தியோடு சேர்த்து இருபது குட்டீசுகள் நாடகத்தில் வரும் போது தியேட்டர் முழுவதும் சிரிப்பலை.
ஒவ்வொரு சீனுக்கும் ரெஸ்பான்சாக கைதட்டுகிறார்கள். நாடகம் முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று 3 நிமிடங்களுக்கு கைதட்டிக் கொண்டே இருந்தார்கள்.
“Ding Dong! The Witch is dead. Which old Witch? The Wicked Witch! Ding Dong! The Wicked Witch is dead.” இந்த பாடல் வரும் இடங்களில் தியேட்டர் கரவொலியில் அதிர்கிறது. காட்சிகளுக்கு இடையே யாரும் எழுந்து குறுக்கே நடப்பதில்லை. விசிலடிப்பதில்லை. அருகில் இருப்பவரிடம் பேசுவதில்லை.
இந்த நாடகத்தை பார்த்தபின்  இந்த ஊரில் சினிமா எடுப்பதெல்லாம் பெரிய சிரமமே இல்லை  என நினைத்துக் கொண்டேன்.  நம் ஊரில்  நடிப்பு பின்புலமோ, முறையான பயிற்சியோ இல்லாத‌ ஆட்களை எல்லாம் வைத்து எப்படித்தான் கட்டி மேய்க்கிறார்களோ..
ஷோ முடிந்தவுடன் அவந்தியிடம் நீ அருமையாக நடித்தாய் என்று சொன்னவுடன், இன்று “நீ நாடகம் பார்க்க வந்ததற்கு தேங்ஸ் டாடி” என்று சொல்லி விட்டு வெட்கப்படாள்.
குழந்தைகளின் அக உலகம் மிகப் பெரியது அவர்களை மேடையில் பார்க்கும் போது அவர்கள் நம்மை விஞ்சியவர்களாக  தெரிகிறார்கள்.. என்னால் ஒரு சீனுக்கான வசனங்களை மனப்பாடமாக சொல் என்றால் சத்தியமாக முடியாது. ஆனால் பாடிக் கொண்டே, ஆடிக் கொண்டே பக்கம் பக்கமான வசனங்களை மிக நேர்த்தியான உடல் மொழியோடு வெளிப்படுத்துகிறார்கள்.
 நம்மிடம் எஞ்சி இருக்கும் நிகழ்த்து கலைகள், மற்றும் தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்களை நாடகங்களாக மாற்றி தியேட்டர் ஆர்ட் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரலாம். குறைந்த பட்சம் நம் தமிழ்ச் சூழலை பீடித்திருக்கும் கொலைகார‌ சீரியல் அக்கப் போர்களை எதிர் வரும் காலத்தில் மாற்ற முடியும் எனத் தோன்றுகிறது.

Photocredit: Andrew Morris Photography, Swansea, UK






















(வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் படமாக வந்துள்ள The Wizard of Oz நாடகத்தை இணையத்தில் பார்க்கவும்)


No comments:

Post a Comment