Saturday, 27 January 2018


தானாகவே சுத்தம் செய்யும் பரப்புகள் (Self-cleaning surface coating)


நீர் விலக்குமை பூச்சுகள் ( water repelling coating) என்றால் என்ன? என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.

இது குறித்து அவ்வப்போது நான் எழுதி வந்தாலும் எளிய வார்த்தைகளில் சொல்லி விடுகிறேன்.

தாமரை இலையில் நீர் ஒட்டாது உருண்டு ஓடும். இதனை லோட்டஸ் எபக்ட் (lotus effect) என்று பொதுவாக சொல்வார்கள்.

எப்படி தாமர இலை மீது மட்டும் நீர் ஒட்டுவதில்லை?

காரணம், தாமரை இலையின் மீது உள்ள மெழுகு (wax) போன்ற பூச்சு. இந்த மெழுகுப் பூச்சு இலையின் மீது நீர்த் தொடு கோணத்தை அதிகரிக்கிறது. அதாவது, தொடு கோணம் 90 டிகிரிக்கு மேல் இருந்தால் நீர் அப்பரப்போடு ஒட்டாது விலகி ஓடும். இத்தையக பரப்பினை நீர் விலக்குமை பரப்பு (hydrophobic surface) என்று அழைக்கலாம். தொடுகோணம் மிக அதிகமாக 150 டிகிரிக்கு மேல் இருந்தால் நீர் அதிவிலக்குமை பரப்பு (superhydrophobic) எனலாம். எனவே நீர் ஒரு பரப்போடு ஒட்டியிருக்க, தொடு கோணமானது 90 டிகிரிக்கு (hydrophilic surface) கீழே இருக்க வேண்டும்.

இதனால் என்ன பயன்?

இயற்கையிலேயே தாமரை இலையில் அமைந்திருக்கும் மெழுகைப் போலவே செயற்கை முறையில் உருவாக்கப்படும் பூச்சுகள், ஒரு குறிப்பிட்ட சுவர் அல்லது பரப்பின் மீது படியும் அழுக்கு, பிசின், எண்ணெய், சேறு, இன்னபிற மாசுக்கள் ஒட்டாதவாறு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக பல அடுக்குமாடி கட்டிடங்களின் சுவர்கள், சன்னல்கள், வாகனங்களின் சன்னல்கள், அதன் வெளிப்புற பகுதி, வீட்டு உபயோக பொருட்கள், மருத்துவ பயன்பாட்டு கருவிகள் ஆகியவற்றை வெளிப்புற தூசு, அழுக்கில் இருந்து எளிதாக‌  பல் பயன்பாட்டிற்கு இந்த பூச்சுகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் மனித ஆற்றல் செலவு வெகுவாக சேமிக்கப்படுகிறது.

சமீபத்தில் நீரில் இருந்து எண்ணெயினை பிரித்தெடுக்கும் சல்லடைகளாகநீர் விலக்குமை பண்பைப் போலவே, எண்ணெய் விலக்குமை (Oleophobic)  பண்புள்ள பூச்சுகளை பயன்படுத்துகிறார்கள். கடல் விபத்துகளில் நிகழும் எண்ணெய் கசிவினை கடல் நீரில் இருந்து அப்புறப்படுத்த பூச்சுகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக நானோ (nanoparticle) அளவிலான பூச்சுகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.

நேரடியான சோதனை மூலம் விளக்க, இங்கே எமது கூட்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட நானோ வடிவிலானகாப்பர் ஆக்சைடு பூச்சு (coppe oxide coating ) எவ்வாறு ஒரு கண்ணாடி பரப்பின் மீது கொட்டப்பட்டுள்ள கரி (carbon) துகள்களை அப்புறப்படுத்துவது என தாமரை இலையோடு ஒப்பிட்டுள்ளேன்.
நானோ அளவிலான காப்பர் ஆக்சைடு பூச்சு நீர் அதிவிலக்குமை பண்பினை கொண்டிருக்கிறது. ஆகையால், நீர் திவலைகள் காப்பர் ஆக்சைடு பரப்பின் ஒட்டாமல் உருண்டு ஓடும் போது அதன் மீது கொட்டப்பட்டுள்ள‌கரித்துகள்களை எளிதாக அப்புறப்படுத்துகிறது என நிரூபித்துள்ளோம். மேலும் இவ்வாய்வில் அதி வேகமாக நீரை இந்த பூச்சின் மீது செலுத்தும் போது பூச்சின் பரப்பு பிய்ந்து கொள்ளாமல் உறுதியாகவும் உள்ளது.  


பயன்பாட்டிற்கு தகுந்த வாறு தற்போது அதிவெப்பநிலையினை தாங்க கூடிய பாலிமர் பூச்சுகளை தானாகவே சுத்தம் செய்யும் பரப்புகளுக்காக‌(Self-cleaning coating) ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.






ஜப்பானிய அரசின் மிக உயரிய அங்கிகாரமாக கருதப்படும் “ஆர்டர் ஆப் கல்சர் மெரிட்” (Order of Culture Merit) விருதை எங்களது வழிகாட்டியும், ஆசிரியருமான, பேராசிரியர் அகிரா புஜிசிமா பெற்றுள்ளார். இவ்விருது இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா விருதைப் போல ஜப்பான் நாட்டில் மிகப் பெரிய மரியாதைக்குரியது.
ஜப்பானிய பிரதமர் அபே-சன் முன்னிலையில், மரியாதைக்குரிய ஜப்பானிய அரசர் அகிகுதொ- சன் அவர்களிடம் இருந்து நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இவ்விருதை பெற்றுள்ளார். இவ்விருது தரும் விழா தோக்கியோவில் உள்ள ஜப்பானிய அரச குடும்பம் வசிக்கும் அரண்மனையில் நடைபெற்றுள்ளது.
ஜப்பானின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இவரது பங்களிப்பினை கவுரவிக்கும் பொடுட்டு இவ்விருது தரப்பட்டுள்ளது.
குறிப்பாக, பேராசிரியர் புஜிசிமாவின் அறிவியல் நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஜப்பானிய வர்த்தக சந்தையில் 60 பில்லியன் யென்னுக்கு ஜப்பானிய நிறுவனங்கள் இலாபம் ஈட்டியுள்ளன.
தொழில்துறையில் இனி வரும் காலங்களில் இத்துறை இன்னும் பல திசைகளில் பயணிக்க உள்ளது. 
1972 ஆம் ஆண்டு நேச்சர் இதழில் வெளிவந்த ஒளியில் இயங்கும் போட்டோ எலக்ட்ரோ கேட்டலிஸ்ட் மூலம் நீர் மூலக்கூறுகளை உடைத்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவினை பெறும் இவரது புதிய கண்டுபிடிப்பு உலகெங்கும் பெரிதும் ஈர்க்கப்பட்டு இன்று "செயற்கை ஒளிச்சேர்க்கை" துறையாக விரிவடைந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்க்ள் இத்துறையில் பணி புரிகின்றனர்.

இந்நுட்பத்தின் தொடர்ச்சியாக பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் சுவர் பூச்சுகள், நீர் விலக்குமை பூச்சுகள் மூலம் தானாகவே சுத்தம் செய்யும் சுவர்கள், சன்னல்கள் என பல புதிய நுட்ப பயன்பாடுகளை இவரது கண்டுபிடிப்பு வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ள்து.
வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசுப் பிரிவில் இன்று வரை விருது வெல்வதற்கான எதிர்பார்ப்பு பட்டியலில் உள்ளார். 75 வயதிலும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும் பேராசிர்யர் புஜிசிமா கடந்த ஆறு ஆண்டுகளாக தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும், சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் மையத்தின் இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.
இவரது நெறியாழ்கையின் கீழ் இரண்டு ஆண்டுகள் ஜப்பானின் ஜே.எஸ்.பி.எஸ் விருதாளராக பணியாற்றியது என் வாழ்வில் எனக்கு கிடைத்த பெரும் பேறு என்றே சொல்வேன்.
பேரா. புஜிசிமா இன்னும் பல ஆண்டுகள் பூரண உடல் நலத்துடன் அறிவியல் உலகிற்கு வழிகாட்டுதலை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

One of the world renowned researchers, and our beloved teacher Prof. Akira Fujishima, President of Tokyo University of Science, Director of International Photocatalysis Research Center has been received great honour “Order of Culture Merit” from Emperor of Japan.
The Order of Cultural Merit is a decoration that is given to people who have shown significant achievements in the development of culture in Japan.
In this context, Prof. Fujishima’s outstanding contribution and Innovation on several scientific fields including photoelectrocatalytic water splitting, antimicrobial coatings, and self-cleaning surface topics has been recognised for this merit. His ground breaking discovery on “photoelectrocataytic water splitting” triggering the new research fields “artificial photosynthesis” and “Photocatalytic water treatment”. Thousands of reserachers are currently working in these fields towards to solve the global energy crisis and environmental pollution issues.
On the other hand, Prof. Fujishima’s innovation generate 65 billion Japanese yen worth industrial business in Japan. This explains the impact of his research work in humanity applications.
My hearty congratulation to Prof. Fujshima for receiving the “Order of Merit” award and wish him to guide Japan scientific community with good health.







 

Sunday, 21 January 2018


சிதறால் மலைப் பயணம் 

(Chitharal Rock Temple, Kanyakumari District)


திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் அப்பகுதியில் இருக்கும் மிகப் புகழ் வாய்ந்த சமணர்கள் வாழ்ந்த சிதறால் மலைக்கு  (Chitharal rock temple) நிச்சயம் போகலாம் என ஜோ மில்டன் அண்ணன் பரிந்துரைத்த போதுதான் அப்பெயரையே நான் முதன் முதலில் கேள்விப்பட்டேன். 

சமணர்கள்தான் முதன் முதலில் தமிழகத்தில் மலைக் குன்றுகளில் "பள்ளி" என்றழைக்கப்படும் மாணவர்களுக்கு அறிவைச் சொல்லித்தரும் இடங்களை அமைத்தனர். அதன் நீட்சியே இன்று நாம் புழங்கும் பள்ளிக் கூடம் என்ற வார்த்தைக்கு வேராக இருக்கிறது.   அத்துடன் வழிபடுவதற்காக, மலைக் குன்றுகளில் அற்புதமான சிற்பங்களை செதுக்கி வைத்திருந்தனர். 

மூன்று வருடங்களுக்கு முன்பு கழுகு மலை அருகில் இருக்கும் "வெட்டுவான் கோவிலின்" உச்சியில் இருக்கும் சமணர் படுக்கைகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான அந்த சிலைகளை நம்மவர்களின் குரங்கு வேலைகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு சிலைகளை தடுப்பு கம்பிகள் போட்டு வைத்திருந்தனர். 

அதற்கு பிறகு சமணர் படுக்கைகளை, சிற்பங்களை பார்க்க மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு ஜோ அண்ணன் மூலம் அமைந்தது. திற்பரப்பு அருவியில் குளித்த பின், மாத்தூர் தொட்டி பாலத்தை பார்த்து விட்டு நண்பர்களுடன் சிதறால் மலைக்கு போகும் போது மாலை 3 மணி ஆகி விட்டது. 

சிதறால் மலை, நாகர்கோவிலில் இருந்து, மார்தாண்டம் செல்லும் திசையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாகர்கோவில் திசையில் இருந்து வருபவர்கள் மார்த்தண்டம் சென்று அங்கிருந்து திருவட்டாறு, குலசேகரம் செல்லும் சாலையில் மார்த்தான்டம் பேச்சிப் பாறை சாலையில் 2 கிமீ தாண்டி இடது புறம் செல்லும் சிறிய சாலையில் திரும்ப வேண்டும். செல்லும் வழியில் தாமிரபரணி சிறிய கால்வாயாக உருவெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.  தாமிரபரணி ஆற்றினை திருக்குறிச்சி பாலம் வழியாக கடந்து போனால் இரண்டு பக்கமும் ரப்பர் தோட்டங்கள் தான். 

சிதறால் மலைக்கு செல்லும் வழியெங்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகு.

ஏற்கனவே திற்பரப்பு அருவியில் செம்மையாக ஆட்டம் போட்டிருந்ததால் நல்ல களைப்பினால் தூக்கம் வந்து வந்து போனது. ஒரு வழியாக சிதறால் மலை அடிவாரத்தை வந்து அடைந்து விட்டோம். நல்ல மேடான பகுதியில்தான் மலையின் அடிவாரம் உள்ளது.

சிதறால் மலை, தற்போது இந்திய தொல்லியல் ஆய்வகத்தினரால் (Archaeological Survey of India) கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சிதறால் மலை உச்சிக்கு செல்லும் பாதை நேர்த்தியாக போடப்பட்டிருந்தாலும், நல்ல செங்குத்தாக செல்லும் பாதையில் ஒரு கிமீ தூரம் ஏற வேண்டும் என்று நினைத்த போது நண்பர்கள்கள் பலரும் பின் வாங்கினர். ஆனால் மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என்று சில நண்பர்கள் உறுதியாக இருந்ததால், சரி என மேலே ஏறத் துவங்கினோம். செல்லும் வழியெங்கும் பெரிய கற்பாறைகள். இடது புறம் மலைக் குன்று தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

மலையில் பதினைந்து நிமிடம் நடந்து முடிந்த போது மலையாள குடும்பம் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.

அந்த குடும்பத்தில் இருந்த பெரியவரிடம், "சேட்டா, மேலே கோவிலுக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே நடக்கும் தொலைவில், அருகில் தான் உள்ளது என்று சொன்ன போதுதான் நிம்மதியாக இருந்தது.  மிகவும் களைத்துப் போய், தஸ் புஸ் என்று நாங்கள் மூச்சு விட்டதைப் பார்த்து அவருடன் வந்திருந்த பெண்மணிகள் அவர்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

ஏனெனில் உடற்பயிற்சியே செய்யாமல் நன்கு பெருத்திருந்த நண்பர்கள் கூட்டத்தினரோடு நானும் கடுமையாக சிரமப்பட்டேன். வழமையாக‌ உடற்பயிற்சி செய்யும் நண்பர்கள் இயல்பாக ஏறியதைப் பார்த்த போது ஊருக்கு போன பின் உடனடியாக உடற்பயிற்சியினை துவங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு பக்கம் களைப்பு, இன்னொரு புறம் விடாதடா கைப்புள்ள என்று ஒருவரை ஒருவர் தேற்றியபடி வேகமாக மலையின் சாலையில் ஏறினோம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு அல்லது மூன்று அறிவிப்பு பலகையில் ஆங்கிலம், மலையாளம் மொழியில் மட்டுமே தகவல் இருந்தது.. இப்பகுதி தமிழகத்தில் இருந்தாலும் அருகில் இருக்கும் கேராளவின் வீச்சு அதிகமாகவே இருந்தது. இப்பகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவில் இருந்த தாக்கமாகவும் இருக்கலாம்.

ஒரு வழியாக மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு சென்ற போது பாதி கோபுரமாய் ஒரு கட்டிடம் தெரிந்தது. ஒருவேளை இடி, மின்னலில் தாக்கி  இந்தக் கோபுரம் இடிந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கோவிலின் முன் பகுதிக்கு செல்லும் வழியினை தேடிய போதுதான் பாறை இடுக்குகளில் உள் நுழைந்து செல்லும் அழகான வழித்தடம் தென்பட்டது. அவ்விடத்தில் இருந்து 50 மீட்டர் பாறை இடுக்குகளின் வழியாக சிறிய தடத்தினால் இறங்கினால் நன்கு உட்காரும் வகையில் திண்ணை போல ஒரு இடம் இருந்தது.

இந்த திண்ணை போன்ற பகுதி, மலை உச்சியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலின் வலது புற சுவராகும். இந்த  கற்பாறையில் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அழகிய திகம்பரர் சிலைகள் இருக்கின்றன.

சிதறால் மலைக்கு செல்பவர்கள் இந்த இடத்தில் உள்ள சிற்பங்களைப் பார்க்க குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த சிற்பங்கள் முதலாம் நூற்றாண்டில் இங்கு வசித்த திகம்பரர் பிரிவைச் சேர்ந்த சமணர்கள் செதுக்கியது.

குறிப்பாக முக்குடையின் கீழ் அமர்ந்திருக்கும் வர்த்தமான மகாவீரரின் சிலை மிக முக்கியமானது. சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான "அரிமான் ஏந்திய அமலி" என்று சொல்லப்படும் சிங்கம் தாங்கிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் சிலைக்கு இருபுறமும் யட்சனும், யட்சியும் காவலுக்கு நிற்கிறார்கள். இவருக்கு மேலே பிண்டி மரமும், தேவ தேவதைகளும் இருக்கிறார்கள். சிலைக்கு மேலும், வலப்புறமும் பாம்பு தலை குடையின் கீழ் நிற்கும் தீர்த்தங்கரர் தொடங்கி மீதம் இருக்கும் 23 தீர்த்தங்கரர்களின் சிலைகளையும் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

முக்குடை கீழ் அமர்ந்திருக்கும் 24 வது தீர்ந்தங்கரர் மகாவீரர்.


தீர்த்தங்கரரை வழிபடும் அம்பிகை சிலை

 தீர்த்தங்கரர்கள்

தீர்த்தங்கரர் பரசுவதநாதர், பத்மாவதி தாயார் சிலை.

மகாவீரர் சிலைக்கு அருகில் தீர்த்தங்கரர்களை வழிபடும் விதமாக அம்பிகை, வித்யாதரர்களின் சிலைகளும் உள்ளன. புடைப்பு சிற்பங்களின் இடைவெளியில் பந்தலிடுவதற்கு ஏதுவாக பாறையின் மீது போடப்பட்டிருக்கும் பொந்துகளை நாம் காணலாம்.

ஒன்றில் இருந்து, இரண்டு அடி அளவில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டு இருக்கும் இந்த புடைப்பு சிலைகள், மற்றும் சமணக் குடைவரைக் கோவில், கி.பி முதலாம் நுற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது..  தமிழகம் முழுவதும் சமணர் படுக்கைகளில் காணக் கிடைக்கப் பெறும் இத்தையக புடைப்பு சிலைகளே பின்னாளில் தமிழகத்தில் பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட அழகிய வெண்கலத் திருமேனிகள், மனித உருவம் (iconography) சார்ந்த சிற்பங்களுக்கு முன்னோடியாக இருந்தன என பேராசிரியர் தொ.பரமசிவன் (தொ.ப) கூறுகிறார்.

சிலைகளைப் பார்த்த பிறகு கீழே இறங்கி, இடது புறம் திரும்பினால் பகவதி கோவிலின் முன் பகுதியினை அடையலாம். கோவிலின் முன்பகுதியே பெரிய மேடை போன்ற அமைப்பின் மேல்தான் உள்ளது. தரைத்தளத்தில் இருந்து சம தளத்தில் கருவறை இல்லாமல் படிகட்டுகள் மேல் ஏறி செல்லும் விதத்தில் கோவிலின் வாசற் பகுதி உள்ளது.

சமணர்கள் வாழ்ந்த இப்பகுதியினை 13 ஆம் நூற்றாண்டில் பகவதி அம்மனை பிரதிஸ்டை செய்து இந்து கோவிலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வு கூறுகிறது. கோவிலின் இடது புறம் இருக்கும் பாறையின் மீது வட்டெழுத்தில் கோவில் பற்றிய தகவல் உள்ளது.

கோவிலின் எதிரே இயற்கையில் அமைந்த சிறிய குளம் உள்ளது. குளம் என்றால் நம் ஊர் கோவில் வாசலில்  இருக்கும் தெப்பக் குளம் போன்று இல்லாமல் பாறையினை   அகழ்ந்து  சிறிய நீர்த்தேக்கம் போல  இருந்தது.

இந்தப் பெரிய நீர் தேக்கத்தின் அருகே சிறிய குட்டையும் இருந்தது. தற்போது அதில் பாசி படர்ந்து இருந்தது. அன்றைய கால கட்டத்தில் மலைகளில் பள்ளிக் கொண்ட சமணர்கள் தங்களுக்கென்று பாத்திரம் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.



பகவதி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள நீர்க் குட்டை


பகவதி அம்மன் கோவிலுக்கு இடதுபுறம் இருக்கும் பாறையில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டுகள்.

பகவதி அம்மன் கோவிலுக்கு இடதுபுறம் இருக்கும் பாறையில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டுகள்.

சமணர்கள் வாழ்ந்த கால கட்டத்தில், எட்டுநாள் (அட்டோபவாசம்), பதினாறு நாள் (சோடசோபவாசம்) உண்ணா நோன்பு இருக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். உபவாச காலத்தில்,  இந்த குழியில் உள்ள நீரை கையினால் மோந்து அருந்தியுள்ளனர் (Reference:பண்பாட்டு அசைவுகள், பேராசியர் தொ.பரமசிவன், பக்கம் 102)

கோவிலின் எதிரே இருக்கும் பகுதிதான் சிதறால் மலையின் உச்சிப் பகுதி அங்கிருந்து 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என குமரி மாவட்ட அழகின் ஒரு பகுதி பிரம்மிக்க வைக்கிறது. மலைக்கு எதிரே தாமிரபரணி ஆறு ஓடுவதை மலையின் உச்சியில் இருந்து பார்க்கலாம்.

நண்பர்கள் அனைவரும் அப்படியெ அந்தப் பாறை மீது சிறுது நேரம் நடந்தும், படுத்தபடியே தென்றல் காற்றை அனுபவித்தோம். அமானுசிய அமைதி, சில்லென்ற காற்று என ஏகாந்தமான ஒரு சூழலை அனுபவிக்க கரும்பு தின்ன கூலி எதற்கு? என்பது போல் அங்கேயே ஒரு மணி நேரம் செலவிட்டோம்.

திரும்பி வரும் போது அதே வழியில் மலையில் போடப்பட்ட சாலை வழியாக வராமல், சிறிது தூரம் மலையின் பக்கவாட்டில் இறங்கினோம். மழை பெய்தால் நீர் வழிந்தோடும் தாரைகள் நன்கு தெரிந்தது. நிச்சயம் மழை பெய்யும் போது இந்தப் பகுதிகள் பாதுகாப்பானவை அல்ல.

நாங்கள் சென்ற சமயம் பாறையின் பக்காவாட்டு பகுதி நன்கு காய்ந்து ஓரளவிற்கு நடப்பதற்கு ஏதுவாக இருந்தது. ஆனாலும், நண்பர்கள் பயந்து பயந்து மெதுவாக காலடி எடுத்து வைத்து இறங்கி வந்ததை பார்தத போது நண்பர் ஒரு பார்த்து கடுப்பாகி விட்டார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படி வரும் வழியில் பாறையினை குடைந்து பத்து பேர் படுக்கும் அளவிற்கு சமணர் படுக்கை (குகைத்தளம்)
 ஒன்றை பார்த்தோம். இந்த படுக்கைக்குள் ஒரு ஆள் குனிந்துதான் நுழைய முடியும். ஆனால் அகல‌ வாக்கில் பதினைந்து அடி இருக்கும் இருந்த இந்த குகையினை இவ்வளவு நேர்த்தியாக, அதுவும் தரைப்பகுதி சிறிய மேடு பள்ளம் இல்லாமல் ஒரே சீராக செதுக்கி இருந்ததை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.

இந்த குடைவரை முன்பு இரண்டு இஞ்ச் அளவில் சிறிய  காடி போன்ற அமைப்பினை வெட்டி வைத்திருக்கிறார்கள். நான் மேலே சொன்னபடி, உபவாச காலத்தில் சமணர்கள் நீர் அருந்துவதற்கு இந்த தொட்டி பயன்பட்டிருக்கலாம்.


சமணர் படுக்கை குகைக் தளம், சிதறால் மலை, குமரி மாவட்டம்.

ஒரு வழியாக சிதறால் மலையின் கீழ் அடிவாரத்திற்கு வந்த போது நாக்கு வறண்டு போய் தண்ணீரை தேடினோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரிய உடற்பயிற்சி செய்தது போல உடல் களைப்பாக இருந்தது. ஆனால் சிதறால் மலையின் உச்சியில் பார்த்த சிலைகளும், வனப்பு மிக்க இயற்கையும் மீண்டும் அப்பகுதிக்கு செல்லும் ஆர்வத்தை தூண்டியது.

குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள், நாகர்கோவிலில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள சிதறால் மலைக் கோவிலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள்.

இந்தப் பயணத்தின் போது குமரி மாவட்டதின் நிலப்பரப்பினையும், இங்கு வாழும் மக்களின் சமூக வரலாற்றைப் பற்றியும் பல கேட்டிராத தகவல்களை ஜோ அண்ணன் காரில் சொல்லியபடியே வந்தார்.

இந்தப் பயணம் என் வாழ்வின் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று என்றுதான் சொல்வேன்.

பகவதி அம்மன் கோவில் வாசலில் நிற்கும் பூத கணம்

பகவதி அம்மன் கோவில் வாசலில் நிற்கும் பூத கணம்

பகவதி அம்மன் கோவிலின் இடது புறம்























Sunday, 7 January 2018


1869 ஆம் ஆண்டு, ரசியா நாட்டு வேதியலாளர் டிமிட்ரி மென்டலிவ் ஆவர்த்தன அட்டவணையினை முதன் முதலில் வடிவமைத்த போது 62 தனிமங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.
ஒரே பண்பினை உடைய தனிமங்களை நிரல், நிறைகளாக (rows and columns) வரிசைப்படுத்த முயன்ற போது மிகவும் சிரமப்பட்டார். பிறகு கண்டுபிடிக்கப்படாத தனிமங்களுக்கென காலி இடத்தினை விட்டார் (இந்த ஐடியா இவருக்கு கனவில் கிடைத்தது என்று ஒரு கதையும் உண்டு).
பின்னாளில் அவர் கணித்தவாறே விடுபட்ட தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடங்களில் பொருத்தப்பட்டன.
2016 ஆம் ஆண்டு கணக்குப்படி தற்போது 118 தனிமங்கள் கண்டறியப்பட்டு தனிம ஆவர்த்தன அட்டவணையில் (periodic table) இடம் பெற்றுள்ளன.
1869 ஆம் ஆண்டு துவங்கி 2016 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் பல ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் தனிமங்கள் கண்டுபிடிப்பில் பணியாற்றியுள்ளார்கள்.
வண்ணங்களின் உலகம் -1

வண்ணங்கள் அல்லது நிறங்கள் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் நம்மை பிரம்மிக்க வைப்பவை.

உதாரணத்திற்கு ஒரு சிவப்பு நிற இறகை பார்க்கிறீர்கள். உண்மையில் அந்த இறகு சிவப்பு நிறம் கிடையாது என்பது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்?

அப்படியானால் அந்த இறகு ஏன் சிவப்பாக தெரிகிறது?

இயற்கையில் பூமியில் காணக் கிடைக்கும் எல்லாப் பொருட்களும் குறிப்பிட்ட அலை நீளம் (wavelength) உள்ள வண்ணத்தினை ஈர்க்கும் (absorption) தன்மை உடையது. குறிப்பாக, சூரிய ஒளியின் வெள்ளை நிற (white light) கற்றையில் புற ஊதா ஒளி (Ultraviolet light), கண்களுக்கு புலப்படும் ஒளி (visible light), மற்றும் அகச்சிவப்பு ஒளி (infrared light) என்று மூன்று அலை நீளப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. 

இந்த மூன்று பகுதியில்,  குறிப்பிட்ட அலை நீளத்திற்கு மேல் அந்த பொருள் குறிப்பிட்ட வண்ணத்தினை ஈர்க்க இயலாமல் அந்நிறத்தை எதிரொளித்து விடுகிறது. அப்படி எதிரொளிக்கிற வண்ணமே நம் கண்களை அடைந்து அவ்வண்ணமாக நமக்கு தெரிகிறது. 

சிவப்பு நிற இறகானது, சூரிய ஒளியில் உள்ள எல்லா நிறங்களையும் ஈர்த்துக் கொண்டு சிவப்பு நிறத்தை மட்டும் எதிரொளித்து விடுகிறது. அத்தையக சிவப்பு நிற கதிர்கள் நம் கண்களை அடைந்து இறகு சிவப்பாக நமக்கு தெரிகிறது. ஆகையால் நாம் பார்க்கும் வண்ணம் அந்த பொருளுக்கு உண்மையில் கிடையாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா? அடுத்த ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

நீங்களும், தேனீக்களும் ஒரு பூவினை (flower) ஒரே நேரத்தில் பார்க்கிறீர்கள். இருவருக்கும் அந்த பூ ஒரே மாதிரியான வண்ணத்தில்தான் தோன்றும் என்று எண்ணுகிறீர்களா? 
உங்கள் பதில் "ஆம்" என்றால் இனி மாற்றிக் கொள்ளுங்கள்.

மனிதர்களை ஒப்பிடும் போது, தேனீக்களால் புற உதா வண்ணங்களையும் காண இயலும். ஒவ்வொரு பூக்களும் புற ஊதா எதிரொளிப்பு புள்ளிகளை (pigments) கொண்டிருக்கின்றன. இவை மனித கண்களுக்கு புலப்படாத அளவு மிக நுண்ணிய ஒளிப் பகுதி ஆகும். ஆனால், தேனீக்களின் கூட்டுக் கண்கள் இவற்றை எளிதாக ஈர்த்து அவற்றை மூளைக்கு சமிக்ஞைகளாக அனுப்பி பூக்களின் மையப் பகுதியினை எளிதாக கண்டறிந்து விடுகிறது. 

இயற்கையின் படைப்பில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவெனில் எல்லாப் பூக்களும் புற ஊதா வண்ணங்களை எதிரொளிக்கும் நிறப் புள்ளிகளை கொண்டிருக்கிறது. இவை தேனீக்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படுகிறது. ஏனெனில் இந்த தேனீக்கள் மூலம்தான் மகரந்த சேர்க்கையும் நடைபெற்று அந்த தாவர இனமும் பல இடங்களுக்கு பரவி வளர்கிறது. 

இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் பூக்களின் இதழை விடவும், பூக்களின் மையப் பகுதி மட்டும் அடர் நிறத்தில் புற உதா வண்ணத்தினை கொண்டிருப்பதால் தேனீக்கள் எளிதாக் இந்த பகுதியில் அமர்ந்து தேனை எடுக்கின்றன.

படம். வலது புறம்‍ இருக்கும் பூ, மனிதர்களின் கண்களுக்கு தெரிவது. இடது புறம் இருப்பது தேனீக்களுக்கு தெரிவது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா.

2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டின் மோனாஸ் பல்கலைக் கழகத்தின் மூளை மற்றும் நடத்தையியல் (Brain and Behaviour) ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தேனீக்கள் மனித கண்களுக்கு புலப்படாத புற ஊதா வண்ணங்களை காண்பதோடு மனிதர்களைப் போலவே பிற வண்ணங்களையும் அதனால் காண‌ இயலும் என்று நிரூபித்துள்ளனர்.  

தேனீக்கள் டிரைகுரொமேட்டிக் (trichromatic) பார்வைத் தன்மை உடையது. புற ஊதா வண்ணம், நீலம் மற்றும் பச்சை நிறங்களை இவற்றால் காண இயலும். கீழ்கண்ட படத்தில்  உள்ளது ஆஸ்திரேலிய நாட்டில் கிடைக்கும் செடி ஒன்றின் பூவிதழ். இதில் வலது புறம் உள்ள மஞ்சள் நிறப் பூ தோற்றம் மனிதர்கள் கண்களுக்கு புலப்படுவது, இடது புறம் இருப்பது தேனீக்களின் கண்களுக்கு புலப்படுவது. இதில் கூர்ந்து நோக்கினால் அளவில் மிகச்சிறிய ஒளி எதிர்ப்பு புள்ளிகளைக் கூட தேனீக்களால் மிக நுண்ணியமாக காண இயலும்.




இதே போல் ம‌னிதர்களால் பார்க்க முடியாத புற ஊதா அலை நீளத்தில் அமைந்துள்ள வண்ணங்களை கூட‌ ஒவ்வொரு பறவை, வண்டு, பூச்சி இனங்களுக்கும் குறிப்பிட்ட வண்ணத்தினை காணும் சிறப்பு உள்ளது.

குறிப்பாக மருத்துவ துறையில் அறுவை சிகிச்சையின் போது கண்களால் மிக எளிதாக காண இயலாத நரம்பு மண்டலங்கள், திசுப் பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்ய தேனீக்களின் கண்கள் பற்றிய ஆராய்ச்சி பெரிய உதவியாக இருக்கும். அவ்வளவு ஏன் மொபைல் போனில் உள்ள சிறிய ரக‌ கேமராக்களின் பிக்சல்களை இனிவரும் காலத்தில் மேம்படுத்தவும் இது போன்ற ஆராய்ச்சிகள் உதவும். 

இவை எல்லாவற்றையும் விட மனித கண்களில் ஏற்படும் சிக்கலான பார்வை குறைபாட்டு நோய்களையும் நவீன ஒளி ஆராய்ச்சியினால் தீர்க்க இயலும்.
கருப்பு வெள்ளை டிவிக்கள் தொடங்கி இன்றைக்கு கலர்புல்லாக கிடைக்கும் எல் ஈ டி வண்ணத்திரை டிவிக்கள் வரை வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு காரணம் நிறங்களை பற்றிய அறிவியளாளர்கள் செய்து வந்த அளப்பறிய ஆராய்ச்சியே.  

இயற்கையின் படைப்பில்   உங்கள் கண்கள் ஒரு வசீகரம் மிக்க மாயக் கண்ணாடி இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு:
பார்வை குறைபாட்டிற்கு மருத்துவ சிகிச்சை எடுப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கண் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு உங்கள் கண் ஒளியினை பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, கண் பார்வைக்கு கண்ணாடி அணிபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி கண்ணாடிகளை கழட்டி விடாதீர்கள். இது தீவிர தலைவலி, கண் பார்வை குறைப்பட்டினையே ஏற்படுத்தும். 







Saturday, 6 January 2018

உலகின் முதல் குக்கர் 

நீரின் கொதி நிலை (boiling point) என்ன?  என்று யாரேனும் கேட்டால் நாம் சட்டென சொல்லும் பதில் 100 டிகிரி செல்சியஸ். இந்த கொதி நிலையில் தான் நீர் மூலக்கூறுகள் உடைந்து ஆவியாக வாயு நிலைக்கு மாறுகிறது.

ஆனால், உண்மையில் நீரின் கொதி நிலை அளவு ஒரே அளவாக எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. இவை இடத்தை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பாக, கடல் நீர் மட்டத்திற்கு (sea level) கீழே இருக்கும் பகுதியில் நீரின் கொதி நிலையானது அதிகமாகவும், கடல் நீர் மட்டத்திற்கு அதிகமாக உயரமான‌ பகுதிளில் கொதி நிலையானது 100 டிகிரி செல்சியசை விட குறைவாகவும் உள்ளது.

ஏன் இந்த வேறுபாடு? 
காற்று மூலக்கூறுகளின் அடர்த்தி உயரத்தை பொறுத்து மாறுபடுவதால் நீரின் கொதி நிலையும் மாறுகிறது. 

உதாரணத்திற்கு கடல் நீர் மட்டத்தினை விட தாழ்வான பகுதியில் காற்று மூலக்கூறுகளின் அடர்த்தி (density) அதிகமாக இருக்கும். ஆகையால் நீர் மூலக்கூறுகள் உடைந்து வாயுவாக காற்றில் கலக்க அதிக ஆற்றல் தேவைப்படும். உயரமான மலைப் பகுதிகளில் காற்றின் அடர்த்தி மிக குறைவாக இருப்பதால் நீர் மூலக்கூறுகள் உடைந்து காற்றில் கலக்க் குறைவான ஆற்றலே போதும். 

அப்படியானால் கடல் நீர் மட்டத்தினை விட தாழ்வாக உள்ள பகுதியில் நீரை கொதிக்க வைக்க அதிக வெப்ப ஆற்றல் தேவைப்படும். 

இந்த சூழலினை சமாளிக்க 1679 ஆம் ஆண்டு பிரெஞ்சு அறிவியலாளர் டெனிஸ் பாபின் (Denis Papin) என்பார் காற்று புகாமல் நன்கு அடைக்கப்பட்ட அழுத்த கலன் (Steam Digester) ஒன்றை வடிவமைத்தார். இதன் மூலம் இந்த மூடப்பட்ட கலனில் உள்ள நீரானது உயர் அழுத்தத்தில் குறைவான நேரத்தில் கொதி நிலையினை எட்டுகிறது, இந்த வடிவமைப்பில் அதிக அழுத்தத்தினால் உலைகலன் வெடிக்காமல் இருக்க நீராவியை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு பிறகு தானாகவே வெளியேறும் படியான ஒரு வெளியேற்று அமைப்பினை வடிவமைத்தார். இதன் மூலம் கடல் நீர் மட்டத்தினை விட தாழ்வான பகுதியில் இருப்பவர்களுக்கு சமைப்பதற்கான நேரத்தையும், வெப்ப ஆற்றலையும் இந்த சிஸ்டம் குறைத்து தந்தது. இதுவே பின்னாளில் பிரசர் குக்கர் வடிவமைப்பாக மாறியது.

இன்றைக்கு நவீன யுகத்தில் நாம் பயன்படுத்தும் பிரசர் குக்கர்களின் முன்னோடி டெனிஸ் பாபின் கண்டுபிடித்த உயர் அழுத்த உலைகலனே.

டெனிஸ் பாபினின் கண்டுபிடிப்பிற்கு பிறகு ஏறத்தாழ 230 ஆண்டுகளுக்கு பிறகு 1918 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாடு பிரசர் குக்கருக்கான காப்புரிமையினை ஜோஸ் அலெக்ஸ் மார்ட்டினஸ் (Jose Alix Martínez) என்பாருக்கு தந்தது. பிறகு 1938 ஆம் ஆண்டு ஆல்பிரட் விஸ்ஸர் (Alfred Vischer) என்பவர் வீடுகளுக்கு பயன்படுத்தும் பிரசர் குக்கரை வடிவமைத்து சந்தைப்படுத்தினார்.

அதற்கு பிறகு கடந்த 75 ஆண்டுகளில் பிரசர் குக்கரின் வடிவமைப்பில் பல்வேறு மாறுபாடுகள் வந்து தற்போது கையடக்க வடிவில் குக்கர்கள் கிடைக்கிறது.

மின், மற்றும் வெப்ப ஆற்றலை சேமிக்கும் நோக்கில் பார்த்தால் பிரசர் குக்கர்கள் ஒரு ஆற்றல் தேக்கி என்றே சொல்லலாம். இந்த வகையில் பார்த்தால் பிரசர் குக்கர்கள் அதிகப் படியான ஆற்றல் செலவீட்டினால்  வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவினை  (CO2 emission) வெகுவாக குறைத்துள்ளது.

"தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய்" என்ற கூற்றுக்கு இணங்க கடல் நீர் மட்டத்தினை விட தாழ்வாக இருக்கும் பகுதியில் நீர் கொதி நிலையினை எவ்வாறு குறைப்பது? என்ற இடத்தில் துவங்கி இன்றைக்கு எல்லா பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கிடைக்கும் சிறந்த நுட்ப வடிவமைப்புகளின் ஒன்றாக "குக்கர்" விளங்குகிறது.

"அறிவியல் வளர்ச்சி" மக்களின் சிரமங்களை குறைத்துள்ளது அந்த வகையில் குக்கருக்கு பெரிய சல்யூட்.

First pressure cooker design. Picture courtesy "Energy and Matter"- Gerard Cheshire. Evans London Publisher.