Sunday, 21 January 2018


சிதறால் மலைப் பயணம் 

(Chitharal Rock Temple, Kanyakumari District)


திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் அப்பகுதியில் இருக்கும் மிகப் புகழ் வாய்ந்த சமணர்கள் வாழ்ந்த சிதறால் மலைக்கு  (Chitharal rock temple) நிச்சயம் போகலாம் என ஜோ மில்டன் அண்ணன் பரிந்துரைத்த போதுதான் அப்பெயரையே நான் முதன் முதலில் கேள்விப்பட்டேன். 

சமணர்கள்தான் முதன் முதலில் தமிழகத்தில் மலைக் குன்றுகளில் "பள்ளி" என்றழைக்கப்படும் மாணவர்களுக்கு அறிவைச் சொல்லித்தரும் இடங்களை அமைத்தனர். அதன் நீட்சியே இன்று நாம் புழங்கும் பள்ளிக் கூடம் என்ற வார்த்தைக்கு வேராக இருக்கிறது.   அத்துடன் வழிபடுவதற்காக, மலைக் குன்றுகளில் அற்புதமான சிற்பங்களை செதுக்கி வைத்திருந்தனர். 

மூன்று வருடங்களுக்கு முன்பு கழுகு மலை அருகில் இருக்கும் "வெட்டுவான் கோவிலின்" உச்சியில் இருக்கும் சமணர் படுக்கைகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான அந்த சிலைகளை நம்மவர்களின் குரங்கு வேலைகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு சிலைகளை தடுப்பு கம்பிகள் போட்டு வைத்திருந்தனர். 

அதற்கு பிறகு சமணர் படுக்கைகளை, சிற்பங்களை பார்க்க மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு ஜோ அண்ணன் மூலம் அமைந்தது. திற்பரப்பு அருவியில் குளித்த பின், மாத்தூர் தொட்டி பாலத்தை பார்த்து விட்டு நண்பர்களுடன் சிதறால் மலைக்கு போகும் போது மாலை 3 மணி ஆகி விட்டது. 

சிதறால் மலை, நாகர்கோவிலில் இருந்து, மார்தாண்டம் செல்லும் திசையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாகர்கோவில் திசையில் இருந்து வருபவர்கள் மார்த்தண்டம் சென்று அங்கிருந்து திருவட்டாறு, குலசேகரம் செல்லும் சாலையில் மார்த்தான்டம் பேச்சிப் பாறை சாலையில் 2 கிமீ தாண்டி இடது புறம் செல்லும் சிறிய சாலையில் திரும்ப வேண்டும். செல்லும் வழியில் தாமிரபரணி சிறிய கால்வாயாக உருவெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.  தாமிரபரணி ஆற்றினை திருக்குறிச்சி பாலம் வழியாக கடந்து போனால் இரண்டு பக்கமும் ரப்பர் தோட்டங்கள் தான். 

சிதறால் மலைக்கு செல்லும் வழியெங்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகு.

ஏற்கனவே திற்பரப்பு அருவியில் செம்மையாக ஆட்டம் போட்டிருந்ததால் நல்ல களைப்பினால் தூக்கம் வந்து வந்து போனது. ஒரு வழியாக சிதறால் மலை அடிவாரத்தை வந்து அடைந்து விட்டோம். நல்ல மேடான பகுதியில்தான் மலையின் அடிவாரம் உள்ளது.

சிதறால் மலை, தற்போது இந்திய தொல்லியல் ஆய்வகத்தினரால் (Archaeological Survey of India) கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சிதறால் மலை உச்சிக்கு செல்லும் பாதை நேர்த்தியாக போடப்பட்டிருந்தாலும், நல்ல செங்குத்தாக செல்லும் பாதையில் ஒரு கிமீ தூரம் ஏற வேண்டும் என்று நினைத்த போது நண்பர்கள்கள் பலரும் பின் வாங்கினர். ஆனால் மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என்று சில நண்பர்கள் உறுதியாக இருந்ததால், சரி என மேலே ஏறத் துவங்கினோம். செல்லும் வழியெங்கும் பெரிய கற்பாறைகள். இடது புறம் மலைக் குன்று தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

மலையில் பதினைந்து நிமிடம் நடந்து முடிந்த போது மலையாள குடும்பம் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.

அந்த குடும்பத்தில் இருந்த பெரியவரிடம், "சேட்டா, மேலே கோவிலுக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே நடக்கும் தொலைவில், அருகில் தான் உள்ளது என்று சொன்ன போதுதான் நிம்மதியாக இருந்தது.  மிகவும் களைத்துப் போய், தஸ் புஸ் என்று நாங்கள் மூச்சு விட்டதைப் பார்த்து அவருடன் வந்திருந்த பெண்மணிகள் அவர்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

ஏனெனில் உடற்பயிற்சியே செய்யாமல் நன்கு பெருத்திருந்த நண்பர்கள் கூட்டத்தினரோடு நானும் கடுமையாக சிரமப்பட்டேன். வழமையாக‌ உடற்பயிற்சி செய்யும் நண்பர்கள் இயல்பாக ஏறியதைப் பார்த்த போது ஊருக்கு போன பின் உடனடியாக உடற்பயிற்சியினை துவங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு பக்கம் களைப்பு, இன்னொரு புறம் விடாதடா கைப்புள்ள என்று ஒருவரை ஒருவர் தேற்றியபடி வேகமாக மலையின் சாலையில் ஏறினோம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு அல்லது மூன்று அறிவிப்பு பலகையில் ஆங்கிலம், மலையாளம் மொழியில் மட்டுமே தகவல் இருந்தது.. இப்பகுதி தமிழகத்தில் இருந்தாலும் அருகில் இருக்கும் கேராளவின் வீச்சு அதிகமாகவே இருந்தது. இப்பகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவில் இருந்த தாக்கமாகவும் இருக்கலாம்.

ஒரு வழியாக மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு சென்ற போது பாதி கோபுரமாய் ஒரு கட்டிடம் தெரிந்தது. ஒருவேளை இடி, மின்னலில் தாக்கி  இந்தக் கோபுரம் இடிந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கோவிலின் முன் பகுதிக்கு செல்லும் வழியினை தேடிய போதுதான் பாறை இடுக்குகளில் உள் நுழைந்து செல்லும் அழகான வழித்தடம் தென்பட்டது. அவ்விடத்தில் இருந்து 50 மீட்டர் பாறை இடுக்குகளின் வழியாக சிறிய தடத்தினால் இறங்கினால் நன்கு உட்காரும் வகையில் திண்ணை போல ஒரு இடம் இருந்தது.

இந்த திண்ணை போன்ற பகுதி, மலை உச்சியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலின் வலது புற சுவராகும். இந்த  கற்பாறையில் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அழகிய திகம்பரர் சிலைகள் இருக்கின்றன.

சிதறால் மலைக்கு செல்பவர்கள் இந்த இடத்தில் உள்ள சிற்பங்களைப் பார்க்க குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த சிற்பங்கள் முதலாம் நூற்றாண்டில் இங்கு வசித்த திகம்பரர் பிரிவைச் சேர்ந்த சமணர்கள் செதுக்கியது.

குறிப்பாக முக்குடையின் கீழ் அமர்ந்திருக்கும் வர்த்தமான மகாவீரரின் சிலை மிக முக்கியமானது. சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான "அரிமான் ஏந்திய அமலி" என்று சொல்லப்படும் சிங்கம் தாங்கிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் சிலைக்கு இருபுறமும் யட்சனும், யட்சியும் காவலுக்கு நிற்கிறார்கள். இவருக்கு மேலே பிண்டி மரமும், தேவ தேவதைகளும் இருக்கிறார்கள். சிலைக்கு மேலும், வலப்புறமும் பாம்பு தலை குடையின் கீழ் நிற்கும் தீர்த்தங்கரர் தொடங்கி மீதம் இருக்கும் 23 தீர்த்தங்கரர்களின் சிலைகளையும் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

முக்குடை கீழ் அமர்ந்திருக்கும் 24 வது தீர்ந்தங்கரர் மகாவீரர்.


தீர்த்தங்கரரை வழிபடும் அம்பிகை சிலை

 தீர்த்தங்கரர்கள்

தீர்த்தங்கரர் பரசுவதநாதர், பத்மாவதி தாயார் சிலை.

மகாவீரர் சிலைக்கு அருகில் தீர்த்தங்கரர்களை வழிபடும் விதமாக அம்பிகை, வித்யாதரர்களின் சிலைகளும் உள்ளன. புடைப்பு சிற்பங்களின் இடைவெளியில் பந்தலிடுவதற்கு ஏதுவாக பாறையின் மீது போடப்பட்டிருக்கும் பொந்துகளை நாம் காணலாம்.

ஒன்றில் இருந்து, இரண்டு அடி அளவில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டு இருக்கும் இந்த புடைப்பு சிலைகள், மற்றும் சமணக் குடைவரைக் கோவில், கி.பி முதலாம் நுற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது..  தமிழகம் முழுவதும் சமணர் படுக்கைகளில் காணக் கிடைக்கப் பெறும் இத்தையக புடைப்பு சிலைகளே பின்னாளில் தமிழகத்தில் பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட அழகிய வெண்கலத் திருமேனிகள், மனித உருவம் (iconography) சார்ந்த சிற்பங்களுக்கு முன்னோடியாக இருந்தன என பேராசிரியர் தொ.பரமசிவன் (தொ.ப) கூறுகிறார்.

சிலைகளைப் பார்த்த பிறகு கீழே இறங்கி, இடது புறம் திரும்பினால் பகவதி கோவிலின் முன் பகுதியினை அடையலாம். கோவிலின் முன்பகுதியே பெரிய மேடை போன்ற அமைப்பின் மேல்தான் உள்ளது. தரைத்தளத்தில் இருந்து சம தளத்தில் கருவறை இல்லாமல் படிகட்டுகள் மேல் ஏறி செல்லும் விதத்தில் கோவிலின் வாசற் பகுதி உள்ளது.

சமணர்கள் வாழ்ந்த இப்பகுதியினை 13 ஆம் நூற்றாண்டில் பகவதி அம்மனை பிரதிஸ்டை செய்து இந்து கோவிலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வு கூறுகிறது. கோவிலின் இடது புறம் இருக்கும் பாறையின் மீது வட்டெழுத்தில் கோவில் பற்றிய தகவல் உள்ளது.

கோவிலின் எதிரே இயற்கையில் அமைந்த சிறிய குளம் உள்ளது. குளம் என்றால் நம் ஊர் கோவில் வாசலில்  இருக்கும் தெப்பக் குளம் போன்று இல்லாமல் பாறையினை   அகழ்ந்து  சிறிய நீர்த்தேக்கம் போல  இருந்தது.

இந்தப் பெரிய நீர் தேக்கத்தின் அருகே சிறிய குட்டையும் இருந்தது. தற்போது அதில் பாசி படர்ந்து இருந்தது. அன்றைய கால கட்டத்தில் மலைகளில் பள்ளிக் கொண்ட சமணர்கள் தங்களுக்கென்று பாத்திரம் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.பகவதி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள நீர்க் குட்டை


பகவதி அம்மன் கோவிலுக்கு இடதுபுறம் இருக்கும் பாறையில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டுகள்.

பகவதி அம்மன் கோவிலுக்கு இடதுபுறம் இருக்கும் பாறையில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டுகள்.

சமணர்கள் வாழ்ந்த கால கட்டத்தில், எட்டுநாள் (அட்டோபவாசம்), பதினாறு நாள் (சோடசோபவாசம்) உண்ணா நோன்பு இருக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். உபவாச காலத்தில்,  இந்த குழியில் உள்ள நீரை கையினால் மோந்து அருந்தியுள்ளனர் (Reference:பண்பாட்டு அசைவுகள், பேராசியர் தொ.பரமசிவன், பக்கம் 102)

கோவிலின் எதிரே இருக்கும் பகுதிதான் சிதறால் மலையின் உச்சிப் பகுதி அங்கிருந்து 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என குமரி மாவட்ட அழகின் ஒரு பகுதி பிரம்மிக்க வைக்கிறது. மலைக்கு எதிரே தாமிரபரணி ஆறு ஓடுவதை மலையின் உச்சியில் இருந்து பார்க்கலாம்.

நண்பர்கள் அனைவரும் அப்படியெ அந்தப் பாறை மீது சிறுது நேரம் நடந்தும், படுத்தபடியே தென்றல் காற்றை அனுபவித்தோம். அமானுசிய அமைதி, சில்லென்ற காற்று என ஏகாந்தமான ஒரு சூழலை அனுபவிக்க கரும்பு தின்ன கூலி எதற்கு? என்பது போல் அங்கேயே ஒரு மணி நேரம் செலவிட்டோம்.

திரும்பி வரும் போது அதே வழியில் மலையில் போடப்பட்ட சாலை வழியாக வராமல், சிறிது தூரம் மலையின் பக்கவாட்டில் இறங்கினோம். மழை பெய்தால் நீர் வழிந்தோடும் தாரைகள் நன்கு தெரிந்தது. நிச்சயம் மழை பெய்யும் போது இந்தப் பகுதிகள் பாதுகாப்பானவை அல்ல.

நாங்கள் சென்ற சமயம் பாறையின் பக்காவாட்டு பகுதி நன்கு காய்ந்து ஓரளவிற்கு நடப்பதற்கு ஏதுவாக இருந்தது. ஆனாலும், நண்பர்கள் பயந்து பயந்து மெதுவாக காலடி எடுத்து வைத்து இறங்கி வந்ததை பார்தத போது நண்பர் ஒரு பார்த்து கடுப்பாகி விட்டார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படி வரும் வழியில் பாறையினை குடைந்து பத்து பேர் படுக்கும் அளவிற்கு சமணர் படுக்கை (குகைத்தளம்)
 ஒன்றை பார்த்தோம். இந்த படுக்கைக்குள் ஒரு ஆள் குனிந்துதான் நுழைய முடியும். ஆனால் அகல‌ வாக்கில் பதினைந்து அடி இருக்கும் இருந்த இந்த குகையினை இவ்வளவு நேர்த்தியாக, அதுவும் தரைப்பகுதி சிறிய மேடு பள்ளம் இல்லாமல் ஒரே சீராக செதுக்கி இருந்ததை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.

இந்த குடைவரை முன்பு இரண்டு இஞ்ச் அளவில் சிறிய  காடி போன்ற அமைப்பினை வெட்டி வைத்திருக்கிறார்கள். நான் மேலே சொன்னபடி, உபவாச காலத்தில் சமணர்கள் நீர் அருந்துவதற்கு இந்த தொட்டி பயன்பட்டிருக்கலாம்.


சமணர் படுக்கை குகைக் தளம், சிதறால் மலை, குமரி மாவட்டம்.

ஒரு வழியாக சிதறால் மலையின் கீழ் அடிவாரத்திற்கு வந்த போது நாக்கு வறண்டு போய் தண்ணீரை தேடினோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரிய உடற்பயிற்சி செய்தது போல உடல் களைப்பாக இருந்தது. ஆனால் சிதறால் மலையின் உச்சியில் பார்த்த சிலைகளும், வனப்பு மிக்க இயற்கையும் மீண்டும் அப்பகுதிக்கு செல்லும் ஆர்வத்தை தூண்டியது.

குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள், நாகர்கோவிலில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள சிதறால் மலைக் கோவிலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள்.

இந்தப் பயணத்தின் போது குமரி மாவட்டதின் நிலப்பரப்பினையும், இங்கு வாழும் மக்களின் சமூக வரலாற்றைப் பற்றியும் பல கேட்டிராத தகவல்களை ஜோ அண்ணன் காரில் சொல்லியபடியே வந்தார்.

இந்தப் பயணம் என் வாழ்வின் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று என்றுதான் சொல்வேன்.

பகவதி அம்மன் கோவில் வாசலில் நிற்கும் பூத கணம்

பகவதி அம்மன் கோவில் வாசலில் நிற்கும் பூத கணம்

பகவதி அம்மன் கோவிலின் இடது புறம்No comments:

Post a Comment