வண்ணங்களின் உலகம் -1
வண்ணங்கள் அல்லது நிறங்கள் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் நம்மை பிரம்மிக்க வைப்பவை.
உதாரணத்திற்கு ஒரு சிவப்பு நிற இறகை பார்க்கிறீர்கள். உண்மையில் அந்த இறகு சிவப்பு நிறம் கிடையாது என்பது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்?
அப்படியானால் அந்த இறகு ஏன் சிவப்பாக தெரிகிறது?
இயற்கையில் பூமியில் காணக் கிடைக்கும் எல்லாப் பொருட்களும் குறிப்பிட்ட அலை நீளம் (wavelength) உள்ள வண்ணத்தினை ஈர்க்கும் (absorption) தன்மை உடையது. குறிப்பாக, சூரிய ஒளியின் வெள்ளை நிற (white light) கற்றையில் புற ஊதா ஒளி (Ultraviolet light), கண்களுக்கு புலப்படும் ஒளி (visible light), மற்றும் அகச்சிவப்பு ஒளி (infrared light) என்று மூன்று அலை நீளப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த மூன்று பகுதியில், குறிப்பிட்ட அலை நீளத்திற்கு மேல் அந்த பொருள் குறிப்பிட்ட வண்ணத்தினை ஈர்க்க இயலாமல் அந்நிறத்தை எதிரொளித்து விடுகிறது. அப்படி எதிரொளிக்கிற வண்ணமே நம் கண்களை அடைந்து அவ்வண்ணமாக நமக்கு தெரிகிறது.
சிவப்பு நிற இறகானது, சூரிய ஒளியில் உள்ள எல்லா நிறங்களையும் ஈர்த்துக் கொண்டு சிவப்பு நிறத்தை மட்டும் எதிரொளித்து விடுகிறது. அத்தையக சிவப்பு நிற கதிர்கள் நம் கண்களை அடைந்து இறகு சிவப்பாக நமக்கு தெரிகிறது. ஆகையால் நாம் பார்க்கும் வண்ணம் அந்த பொருளுக்கு உண்மையில் கிடையாது.
என்ன குழப்பமாக இருக்கிறதா? அடுத்த ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
நீங்களும், தேனீக்களும் ஒரு பூவினை (flower) ஒரே நேரத்தில் பார்க்கிறீர்கள். இருவருக்கும் அந்த பூ ஒரே மாதிரியான வண்ணத்தில்தான் தோன்றும் என்று எண்ணுகிறீர்களா?
உங்கள் பதில் "ஆம்" என்றால் இனி மாற்றிக் கொள்ளுங்கள்.
மனிதர்களை ஒப்பிடும் போது, தேனீக்களால் புற உதா வண்ணங்களையும் காண இயலும். ஒவ்வொரு பூக்களும் புற ஊதா எதிரொளிப்பு புள்ளிகளை (pigments) கொண்டிருக்கின்றன. இவை மனித கண்களுக்கு புலப்படாத அளவு மிக நுண்ணிய ஒளிப் பகுதி ஆகும். ஆனால், தேனீக்களின் கூட்டுக் கண்கள் இவற்றை எளிதாக ஈர்த்து அவற்றை மூளைக்கு சமிக்ஞைகளாக அனுப்பி பூக்களின் மையப் பகுதியினை எளிதாக கண்டறிந்து விடுகிறது.
இயற்கையின் படைப்பில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவெனில் எல்லாப் பூக்களும் புற ஊதா வண்ணங்களை எதிரொளிக்கும் நிறப் புள்ளிகளை கொண்டிருக்கிறது. இவை தேனீக்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படுகிறது. ஏனெனில் இந்த தேனீக்கள் மூலம்தான் மகரந்த சேர்க்கையும் நடைபெற்று அந்த தாவர இனமும் பல இடங்களுக்கு பரவி வளர்கிறது.
இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் பூக்களின் இதழை விடவும், பூக்களின் மையப் பகுதி மட்டும் அடர் நிறத்தில் புற உதா வண்ணத்தினை கொண்டிருப்பதால் தேனீக்கள் எளிதாக் இந்த பகுதியில் அமர்ந்து தேனை எடுக்கின்றன.
படம். வலது புறம் இருக்கும் பூ, மனிதர்களின் கண்களுக்கு தெரிவது. இடது புறம் இருப்பது தேனீக்களுக்கு தெரிவது.
என்ன ஆச்சரியமாக உள்ளதா.
2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டின் மோனாஸ் பல்கலைக் கழகத்தின் மூளை மற்றும் நடத்தையியல் (Brain and Behaviour) ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தேனீக்கள் மனித கண்களுக்கு புலப்படாத புற ஊதா வண்ணங்களை காண்பதோடு மனிதர்களைப் போலவே பிற வண்ணங்களையும் அதனால் காண இயலும் என்று நிரூபித்துள்ளனர்.
தேனீக்கள் டிரைகுரொமேட்டிக் (trichromatic) பார்வைத் தன்மை உடையது. புற ஊதா வண்ணம், நீலம் மற்றும் பச்சை நிறங்களை இவற்றால் காண இயலும். கீழ்கண்ட படத்தில் உள்ளது ஆஸ்திரேலிய நாட்டில் கிடைக்கும் செடி ஒன்றின் பூவிதழ். இதில் வலது புறம் உள்ள மஞ்சள் நிறப் பூ தோற்றம் மனிதர்கள் கண்களுக்கு புலப்படுவது, இடது புறம் இருப்பது தேனீக்களின் கண்களுக்கு புலப்படுவது. இதில் கூர்ந்து நோக்கினால் அளவில் மிகச்சிறிய ஒளி எதிர்ப்பு புள்ளிகளைக் கூட தேனீக்களால் மிக நுண்ணியமாக காண இயலும்.
இதே போல் மனிதர்களால் பார்க்க முடியாத புற ஊதா அலை நீளத்தில் அமைந்துள்ள வண்ணங்களை கூட ஒவ்வொரு பறவை, வண்டு, பூச்சி இனங்களுக்கும் குறிப்பிட்ட வண்ணத்தினை காணும் சிறப்பு உள்ளது.
குறிப்பாக மருத்துவ துறையில் அறுவை சிகிச்சையின் போது கண்களால் மிக எளிதாக காண இயலாத நரம்பு மண்டலங்கள், திசுப் பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்ய தேனீக்களின் கண்கள் பற்றிய ஆராய்ச்சி பெரிய உதவியாக இருக்கும். அவ்வளவு ஏன் மொபைல் போனில் உள்ள சிறிய ரக கேமராக்களின் பிக்சல்களை இனிவரும் காலத்தில் மேம்படுத்தவும் இது போன்ற ஆராய்ச்சிகள் உதவும்.
இவை எல்லாவற்றையும் விட மனித கண்களில் ஏற்படும் சிக்கலான பார்வை குறைபாட்டு நோய்களையும் நவீன ஒளி ஆராய்ச்சியினால் தீர்க்க இயலும்.
கருப்பு வெள்ளை டிவிக்கள் தொடங்கி இன்றைக்கு கலர்புல்லாக கிடைக்கும் எல் ஈ டி வண்ணத்திரை டிவிக்கள் வரை வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு காரணம் நிறங்களை பற்றிய அறிவியளாளர்கள் செய்து வந்த அளப்பறிய ஆராய்ச்சியே.
இயற்கையின் படைப்பில் உங்கள் கண்கள் ஒரு வசீகரம் மிக்க மாயக் கண்ணாடி இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
பார்வை குறைபாட்டிற்கு மருத்துவ சிகிச்சை எடுப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கண் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு உங்கள் கண் ஒளியினை பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, கண் பார்வைக்கு கண்ணாடி அணிபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி கண்ணாடிகளை கழட்டி விடாதீர்கள். இது தீவிர தலைவலி, கண் பார்வை குறைப்பட்டினையே ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment