Sunday 1 November 2015

இலண்டன் மகாலட்சுமி கோவில் (Sri Mahalakhsmi Temple, London)



இந்தியாவில் இருந்த வரை தினமும் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உடையவன் நான். பின்னர் புலம்பெயர்ந்து வெளி நாடு வந்த பிறகு ஜப்பான் போன்ற நாடுகளில் நமது கோவில்களை பார்க்கும் வாய்ப்பே கிடையாது. ஆகையால் முடிந்த வரை புத்த கோவில்களுக்கு செல்வதை வாடிக்கையாக்கி கொண்டேன்.

என்னை விட அவந்தியை கோவிலுக்கு அழைத்து செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் அவ்வப்போது வருவதுண்டு.

இரண்டு நாட்களுக்கு முன்பு இலண்டன் நகருக்கு சென்ற போது ஈஸ்ட் காம் (East Ham) பகுதியில் இருக்கும் மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் பேறு கிடைத்தது. ஈஸ்ட் காம் இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன், வலது புறம் திரும்பி ஐந்து நிமிடம் வந்தால் கோவில் வந்துவிடும். தனியார் கட்டிடத்தில் அழகுற ஒரு பிரதான கோபுர வாசலோடு கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை இங்குள்ள லட்சுமி நாராயணன் அறக்கட்டளையினர் நிர்வகிக்கின்றனர்.

உள்ளே பெரிய கதவுகளை திறந்தவுடன், தரை முழுக்க சிவம்பு கம்பளம் விரிக்கப்பட்டு சுத்தமாக உள்ளது. நுழைவு வாயிலின் இடது புறம் பிள்ளையாரும் (இராஜ மகா கணபதி) அவரை ஒட்டி அற்புத அலங்கார திருமேனியில் எம்பெருமான் முருகன் வள்ளி அன்னையோடும், தெய்வானையோடும் அருள்பாளிக்கிறார். மூலவரான தாயார் மகாலட்சுமி என்னும் திருநாமம் கொண்டு நம்பெருமாள் சம்மேதனமாக காட்சியளிக்கிறார். வார்த்தையில் விளக்க இயலா வண்ணம் மெய் சிலிர்க்கும் விதத்தில் அலங்கார திருமேனியில் வேங்கட மலை குடி கொண்ட‌ நாராயணன் தாயாரோடு சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன்பு படிக் கட்டிற்கு அருகில் இடது புறத்தில் எம்பெருமான் ருத்ர மூர்த்தியாக "சகஸ்கர லிங்கேசுவரராக" லிங்க சொரூபத்தில் காட்சியளிக்கிறார். நான் சென்ற சமயம், வெள்ளியம்பலத்தில் ருத்ர மாலையணிந்து மெய் சிலிர்க்கும் திரு மேனியுடன் காட்சி அளித்தார். மூலவரின் வலது புறம் அன்னை துர்க்கை சக்தியின் சொரூபமாக நிற்கிறார். 

நின்ற கோலத்தில் கையெடுத்து வணங்கிய நிலையில் மூலவரின் இடது புறம் அனுமனும், பதினாறு கரங்களுடன் சக்கரத்தாழ்வாரும் இருப்பது இக்கோவிலின் சிறப்பு. 

அப்படியே மூலவருக்கு வெளியே உள்ள பிரகாரத்தினை வலம் வருகையில் கன்னி மூலை கணபதியாக வல்லப கணபதி நமக்கு தரிசனம் தருகிறார். மூலவருக்கு நேர் பின்னால் இடது மூலையில் அன்னை காயத்ரியும், திருவேங்கட நாரயணரும், உற்சவ கோலத்தில் அலங்கரிங்கப்பட்டுள்ளனர்.

கோவிலின் கொடி மரத்தின் வலது புறம் மேற்கு திசை நோக்கி சனீஸ்வரர் மட்டும் காக்கை வாகனத்தில் தனியாக நின்று தரிசனம் தருகிறார். 

நம்பெருமாளையும், ருத்ரமூர்த்தியையும் வணங்கி விட்டு கோவிலின் உள்ளே கடையில் விற்கும் லட்டுக்களை வாங்கினேன் (ஒரு லட்டு 1 பவுண்டு). வெகு நாட்கள் கழித்து லட்டுகளை பார்த்ததால் மனம் பரவசத்தில் தவித்தது. தரிசனத்தினை முடித்து விட்டு அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். கோவிலின் உள்ளே குழந்தைகள் விளையாடிக் கொண்டு  கொண்டிருந்தனர். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் சொல்லப் போனால் வெளி நாடுகளில் வசிக்கும் நம் குழந்தைகள் நம்மவர்களை சந்திக்கவும், மற்ற குழந்தைகளோடு சிநேகம் கொள்ளவும் கோவில்கள் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்வேன். பெரும்பாலும் அவர்கள் தனித்த சூழலிலேயே வளர்கிறார்கள். அப்படிப் பட்ட தருணங்களில், இறை நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நம் கலாச்சாரத்தினை அறிந்து கொள்ள இது போன்ற கோவில்கள் மிகவும் அவசியம் என்றே தோன்றுகிறது.

தற்போது இருக்கும் இடத்தின் அருகிலேயே மிகப்பெரிய புதிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. நான் சென்ற சமயம், மூலவருக்கும், மற்ற கடவுள்களுக்கும் சமற்கிருதத்தில் மந்திரத்தினை அந்தணர்கள் ஓதிக் கொண்டு இருந்தனர். அள்ள அள்ள குறையாத திருப்பாவையும், திருவெம்பாவையும், ஆழ்வார் பாசுரங்களும் இருக்கையில் தமிழில் அர்ச்சனை இல்லாதது சிறு வருத்தமே. ஒரு வேளை அங்கு வழக்கத்தில் இருப்பின் மகிழ்ச்சியே.

மற்றொரு சிறு விண்ணப்பம். கோவிலின் பிரதான வாயில் அருகே இடது புறம் காலணிகளை கழட்டி விட தனியே அலமாரி வசதி உள்ளது. அதில் பாதி சாப்பிட்டு விட்டு போட்ட நிலையில் இருந்த பிரசாதம், இன்ன பிற குப்பைகள் என கிடந்தது. நான் கோவிலின் வெளியே வந்த போது ஒரு பக்தர் அவசரமாக உள்ளே நுழைந்தார். நடுச்சாலையில் பொறுப்பின்றி தனது காலணியினை கழட்டி விட்டு விடு விடுவென உள்ளே சென்று விட்டார். 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ஆபிசர் போல தெரிந்தது. நம் ஊரில்தான் பொறுப்பின்றி நமது கோவில்களை குப்பை கூளங்களாக்கி, திருநீறு உள்ளிட்ட பிரசாதங்களை தூண்கள் மற்றும் சிற்பங்கள் மீது இறைத்து அசுத்தப்படுத்துகிறோம். இங்கு வெளிநாட்டில் வந்துமா இப்படி நம்மவர்கள் இருக்கிறார்களே என கோபம் வந்தது. தயவு செய்து வெளிநாடுகளில் வசிக்கும் மெய்யன்பர்கள் நம் கோவில்களுக்கு செல்லும் போது கோவிலின் உள்ளே, வெளியே என இருபுறமும் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். நிச்சயம் நம் கோவிலின் வழியே அந்த நாட்டுக்காரர்கள் நடந்து செல்லும் போது நம்மை பற்றி உயர்வான எண்ணக்களை வைத்திருக்க உதவும். மேலும் அவர்களும் கோவிலின் உள்ளே வந்து கடவுளின் தரிசனத்தினை பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும்.



மகாலட்சுமி கோவில், இலண்டன் நகரம்.

மகாலட்சுமி கோவில், இலண்டன் நகரம்.

கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ஈஸ்ட் காம் இரயில் நிலையம் செல்லும் சாலையெங்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களும், உணவு விடுதிகளும் நிரம்பி வழிகிறது. அஞ்சப்பர், சரவண பவன், வசந்த பவன் உள்ளிட்ட நிறைய தமிழ் உணவு விடுதிகளில் சைவ, அசைவ உணவுகள் கிடைக்கிறது. இலண்டன் நகருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் நம்ம ஊர் கடைகளில் ஒரு கட்டு கட்டி வரலாம்.

Near East Ham Railway Station, London

Near East Ham Railway Station, London

Near East Ham Railway Station, London

Near East Ham Railway Station, London

Near East Ham Railway Station, London




1 comment:

  1. உணவகங்களில் உள்ள விலைப்பட்டியல் குறித்து எழுதியிருந்தால் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்குமே?

    ReplyDelete