Sunday 1 January 2017


2017 ஆம் ஆண்டு வாசிக்க வேண்டிய புத்தகங்கள்

இந்த ஆண்டு வாசிக்க வேண்டிய புத்தகங்களை காலையில் எழுந்து பட்டியல் இட்டு வைத்து விட்டேன்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி சமூக வலை தளங்களில் மேயும் நேரத்தை குறைக்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்த துவங்கி உள்ளேன்.

புனைவு (fiction), அல் புனைவு (non-fiction) நாவல்களை தொடர்ச்சியாகவும், வரலாற்று தகவல் மற்றும் சுயசரிதை, புத்தகங்களை அவ்வப்போது அல்லது தினசரி என்றும் வாசிக்கும் முறையினை கையாளுகிறேன். இந்த வருடமும் அதனையே பின்பற்ற நினைக்கிறேன்.

1. Fidel Castero My Life with Iganico Ramonet. Publishers- Penguin Autobiography series. Translated in English by Andrew Hurely.

கூபாவின் (Cuba) மறைந்த மேனாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோ அவர்களோடு நுறு மணி நேரம் செலவழித்து கேட்கப்பட்ட கேள்வி பதில்களின் தொகுப்பே இப்புத்தகம். இந்த புத்தகத்திற்காக இதன் ஆசிரியர் இக்னாசியோ ரமோநெத் (Iganico Ramonet) பல முறை கூபாவிற்கு பயணித்துள்ளார். பிடலைப் பற்றி நேரடியாகவே அவரது பதில்கள் மூலம் அறியத்தர இப்புத்தகம் பெரிய வாய்ப்பை வழங்குகிறது.

பிடலின் குழந்தை பருவம் தொடங்கி அவர் எவ்வாறு கூபாவின் புரட்சி அரசியலில் இறங்குகிறார், சே குவராவின் நட்பு, கொரில்லா போர், புரட்சி போரின் தொய்வும் சவால்களும், சே வின் மரணம், கூபாவின் ஆயத பற்றாக்குறை, கூபாவும் ஆப்ரிக்காவும், சோவியத் யூனியனின் சிதறல், தன் சகாவும் கூபாவின் முன்னாள் அதிபருமான ஒகாவிற்கு மரண தண்டனை வழங்கியது, கூபாவும் ஸ்பெயினும், இன்றைய கூபா, என 28 அத்தியாயங்களாக இந்த புத்தகம் விரிகிறது.

இதில் சிலிர்ப்பூட்டும் அனுபவம் இதன் மூலப் புத்தகம் முதல் பதிப்பில் எசுப்பானிய (Spainish) மொழியில்தான் எழுதப்பட்டது. பின்னர் அது ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இதன் முதல் பதிப்பில் வராத 24 வது அத்தியாயமான கூபாவும் பிரான்சும் என்ற பகுதி இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டது. அப்போது 2006 ஆம் ஆண்டில் பிடல் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றினை செய்து கொண்டிருந்தார். ஆனால் படுக்கையில் இருந்தவாறே சோர்வின்றி இந்த பகுதியினை பிழை திருத்தம் செய்து தந்துள்ளார். தனக்கு பிறகு கூபாவில் என்ன நிகழப் போகிறது என்பதையும் கணித்து வைத்திருந்த போராளி. பிடலின் மறைவிற்கு பிறகு இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.

2.  Mystery in the Village- Written by Rebecca Shaw. ரெபாக்கா ஷா பிரித்தானியாவின் புகழ் பெற்ற பெண் புனைவு எழுத்தாளர். இது வரை 27 நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை மிக வெற்றிகரமாக விற்பனையினை புத்தக சந்தையில் ஏற்படுத்தியவை. டர்ன்கம் மல்பஸ் என்னும் கிராமத்தில் நிகழும் மர்மம் நிறைந்த சம்பவங்களை முன் வைத்து எழுதப்பட்ட புனைவு நாவல் இது. பீட்டர் மற்றும் கரோலின் இருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் திடீரென நுழைந்த அவளது முன்னாள் காதலன் மோர்கன் மூலம் ஏற்படும் சிக்கல். 

கிறிஸ் மற்றும் டெப்ரோ டெம்லெட்டன் தம்பதிகளின் வாழ்வில் இருந்து டெப்ரோ எவ்வாறு திடீரென காணமல் போகிறார் என்று மர்மங்களோடு பயணிக்கும் இந்த நாவல் டைம்ஸ் இதழின் மிகச் சிறந்த நாவல் என்ற பரிசைப் பெற்றது. 

இவரது மற்ற நாவல்களான Village in Jeopardy, A Village Dilemma, Village Gossip, The Village Newcomers, Very Good - Intrigue in the Village, Talk Of The Village, Village Rumours போன்றவையும் வாசிக்க வேண்டியவை. பெரும்பாலும் இவரது எழுத்துக் களம் பிரித்தானியாவின் நாட்டுப்புற மனிதர்களையே சார்ந்தது. இவருக்கென்று தனித்த ரசிகர் கூட்டம் இன்று உலகம் முழுவதும் உள்ளது. இவர் கையாளும் எளிய, ரசிக்கத்தக்க மொழிக்காகவே இவரது நாவல்களை வாசிக்கலாம்.


3. A Brief History of The Samurai. Written by Jonathan Clements. Robinson Publisher, UK, 2010. ஜோனாதன் கிளமென்ட்ஸ் கிழக்கு ஆசியா பற்றிய வரலாற்று தகவல்களை, சுயசரிதைகளை புத்தகங்களாக எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். ஆசியாவின் வட மேற்கு பகுதியான ஜப்பானின் சமுராய் பற்றிய இவரது புத்தகம் மிக முக்கியமாக வாசிக்கப்பட வேண்டியது. சாமுராய் என்படுபவர்கள் ஜப்பானிய அரசப் படைகளில் மிக முக்கிய பொறுப்பு வகித்த பாதுகாவலர் அல்லது போர் வீரர்கள். ராஜ்ஜிய விசுவாசத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் தங்கள் உயிரையே துச்சமென மதித்து போர்க் களங்களில் செயல்பட்டவர்கள். எதிரிகள் சூழ்ந்தால் தங்கள் வயிற்றை கொடூரமாக கிழித்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தவர்கள். ஜப்பானிய சமூக வரலாற்றில் சமுராய்களின் பங்களிப்போடு அவர்களை பற்றிய மிக விரிவான தகவலோடு இந்த புத்தகம் விவரிக்கிறது.

சமுராய் ஆவது அவ்வளவு எளிதல்ல என்பது இப்புத்தகத்தை வாசித்தால் விளங்கும். புசிதோ எனப்படும் போர்வீரராகும் மரபு சமுராய் ஆவதற்கான வழிகளை விளக்குகிறது. இன்றும் தோக்கியோ நகரில் உள்ள ஜப்பானிய அரசரின் அரண்மனை முன்பு இருக்கும் குதிரையில் இருக்கும் போர் வீரன் சிலை குசுநோகி மசாசிகெ எனப்படும் சமுராய் வீரனின் புகழை பாடுவது. இந்த வீரன், தான் தோற்பேன் எனத் தெரிந்தும் தனது நாட்டைக் காக்க போர்க்களத்தில் தன் உயிரைத் துறந்தான். தான் உயிரை விடும் முன்பு இன்னும் ஏழு பிறப்பெடுத்து தன் நாட்டை காப்பேன் என சபதமெடுத்தான். அவனது நினைவாகவே இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது என்றால் சமுராய்களை ஜப்பானியர்கள் எப்படி மதிக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம். சமுராய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு ஆச்சரியம் ஒரு சிலர் தங்கள் மன்னர்களது பாதுகாப்பிற்காக அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரத்தினையே பெற்றிருந்துள்ளார்கள். அவர்கள் சோகன் என்றழைக்கப்பட்டனர்.

ஜப்பானிய வரலாற்றில் ஆறாம் நூற்றாண்டில் துவங்கி, 17 ஆம் நூற்றாண்டு வரை சமுராய்கள் கடந்து வந்த பாதையினை இப்புத்தகம் விளக்குகிறது.
முக்கியமாக, பிதாட்சு, சுய்கோ சாம்ராஜ்யம் தொடங்கி  கம்மு பேரரசு, சிரகவா, யேயசு மன்னர்கள் காலம் வரை சமுராய்களின் நீண்ட வரலாற்றினை விளக்குகிறது.

இன்றைக்கு நாம் பார்க்கும் அமைதியான ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை இரத்த வேட்கை நிறைந்த தேசம் என்றால் யாரலும் நம்ப இயலாது. ஜப்பானிய வரலாற்றின் ஆன்மா என்றால் சமுராய் என கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். இன்றும் ஜப்பானிய பாரம்பரிய நாடகங்களில் (jidaijeki) சமுராய் கதாபாத்திரங்கள் இல்லாமல் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் சமூகத்தோடு ஒன்றிப்போன இப்புத்தகம் என் மிக விருப்புக்குரிய தேர்வுகளில் ஒன்று என்றே சொல்வேன்.

4. Nagasaki. Written by Craig Collie.  இருபதாம் நூற்றாண்டின் கருப்பு பக்கங்களில் ஒன்றான ஜப்பானின் கிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது நிகழ்த்தப்பட்ட‌  அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சு சம்பவங்கள் மனித குலத்தையே பதற வைப்பவை. அதில் “நாகசாகி” நகரின் மீது குண்டு வீசப்பட்ட போது அதில் தப்பி பிழைத்தவர்களின் சாட்சியங்களையும், அமெரிக்க ஜப்பானிய போர்வீரர்களின் அனுபவங்களையும் சேர்த்து இழைத்து புத்தகமாக தந்துள்ளார் கிரெய்க்.

டெலிகிராப், டைம்ஸ். கார்டிய, சண்டே ஹெரால்டு உள்ளிட்ட முன்னோடி சஞ்சரிகை களால் பாராட்டு பெற்ற புத்தகம் இது.

பேட் மேன் (Fat Man) எனப்படும்  புளுட்டோனியம் அணுகுண்டை சுமந்து கொண்டு அமெரிக்காவில் இருந்து கிளம்பியது துவங்கி நாகசாகியின் மீது குண்டை போட்டது வரை பரபரப்பு மிக்க பொழுதுகளை ஒரு த்ரில்லர் கதைபோல் விவரிக்கும் இப்புத்தகம் ஒரு வரலாற்று ஆவணம்.

விதி விளையாடிய 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதத்தின் 9 ஆம் தேதி காலை எப்படி அந்நகரம் இருந்தது என அறியும் போது நம் மனதை உலுக்குகிறது. இந்நாவலுக்கான தரவுகளுக்கு இந்த ஆசிரியர் மிக மெனக்கெட்டு இருக்கிறார். அடிப்படையில் கிரெய்க் ஒரு தொலைகாட்சி ஆவணப்பட தயாரிப்பாளர். ஆகையால் இவருக்கு இந்த செயல் இலகுவாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் எல்லா தரவுகளும் தேடித் தேடி எழுதுவதென்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. வரலாற்றுப் பிரியர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

5. காடோடி. ஆசிரியர்‍‍ நக்கீரன் . அடையாளம் பதிப்பகம்.

காடுகள் அழிக்கப்படுதல் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சாபங்களில் ஒன்று. தனி மனித லாபத்தையும் மீறி உலகளாவிய பெரும் நிறுவனங்கள் பெரும் வனங்களை குறி வைத்து அழிக்கும் போது அங்கிருக்கும் தொல்குழி மனிதர்களோடு, பல நூறு ஆண்டுகளாக வாழும் மரங்கள், நுண் உயிர்கள், பறவைகள் என அழியும் சோகம் நம்மில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமலே விடப்பட்ட துயரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட அழிந்த வனங்களில் ஒன்றான போர்னியோ பெருந்தீவிற்குள் கதைசொல்லி வாயிலாக பயணிப்பதே இக்கதை. இத்தீவு தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளால் சூழப்பட்டது. 

இந்நாவலின் ஆசிரியர் நக்கீரன் கவிஞரும், சூழலியல் எழுத்தாளரும் ஆவார். தமிழ்ப் பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. காடோடி நாவல் தமிழ் சூழலுக்கு புதிய தளத்தை தந்துள்ளது. காடுகள் பற்றிய புரிதலை புனைவு நாவல் வழியே சொல்லும் இவரது எழுத்துகளுக்காகவே நான் இப்புத்தகத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்.

6. ரோலக்ஸ் வாட்ச். ஆசிரியர் சரவணன் சந்திரன். சமூக வலைதளங்களில் இவரது எழுத்து மிகப் பிரபலம். ஆனால் இவரைப் பற்றி நிறைய ஆச்சரியமான விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். தொழில் முறை ஆக்கி விளையாட்டு வீரரான சரவணன் சந்திரன் தமிழின் முன்னோடி அச்சு மற்றும் மின் அச்சு இதழ்களில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர். ஜீ டிவியில் மிகப் பிரபலமாக சென்று கொண்டிருக்கும் சொல்வதெல்லாம் உண்மை தொடரின் முன்னாள் இயக்குநர். இவரது முதல் நாவலான ஐந்து முதலைகளின் கதை நாவல் மிகப் பெரிதாக பேசப்பட்டது (அதுவும் என் பட்டியலில் உள்ளது). எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சாரு நிவேதிதா இப்புத்தகம் பற்றி அவரது இணையப்பக்கத்தில் சிலாகித்து எழுதி இருந்தார். மேலும் என் நண்பர் க.பாண்டியராஜன் அண்ணனும் இப்புத்தகம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பரிந்துரைத்திருந்தார். ஆகவே இவ்வாண்டில் நான் வாசிக்கப் போகும் முதல் புத்தகம் இதுதான்.

மின்னற்பொழுதே தூரம் வலைப்பூக்கள் பகுதியில் “அபிலாஸ் சந்திரனின்” இப்புத்தகம் பற்றிய விமர்சனத்தை இங்கே தருகிறேன்.

"ஒரு எளிய குமாஸ்தா எப்படி பல்வேறு விட்டுக்கொடுத்தல்கள் மூலம் அதிகார தரகனாகி உச்சாணிக்கொம்பை அடைகிறான், அவன் எப்படி தன் மனசாட்சியை விற்று லௌகீக வாழ்வில் வெல்கிறான், அப்படி அவன் சீரழிவுக்கு காரணம் என்ன என மிக விரிவாய் அலசும் நாவல் அது. ரோலக்ஸ் வாட்ச் தலைப்பே எனக்கு பிடித்திருந்தது. சமீபத்தில் இவ்வளவு பொருத்தமான தலைப்புள்ள நாவலை பார்த்ததில்லை. இதில் நாயகன் ஒரு போலி ரோலக்ஸ் வாட்ச் வாங்க வேண்டி ஒரு நண்பரிடம் கேட்க அவரோ போலி வாட்ச் உற்பத்தியாளர்கள் ரோலக்ஸ் வாட்சை மட்டும் போலி செய்ய மாட்டோம் எனும் கொள்கையை பின்பற்றுகிறார்கள் என்கிறார். ஆனால் கடைசியில் அவருக்கு நண்பர் ஒரு ரோலக்ஸ் வாட்சை பரிசளிக்கிறார். அது உண்மையானதா போலியானதா என இறுதி வரை அவனால் கண்டிபிடிக்க முடியாது. அந்த போலி ரோலக்ஸ் வாட்ச் உண்மையில் அவன் தான். அவனால் என்றைக்குமே தன் நண்பனான சந்திரன் போல் ஒரிஜினல் ஆக முடியாது. ரோலக்ஸ் வாட்ச் அவனைப் போன்ற போலிகளுக்கான குறியீடு"

7. அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை. பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகம் இது. இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியர் ஆவார். 

இந்நூல் அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் பாதித்த காரணிகள் வரலாற்றினூடே விளக்கி அவை பாலின பாகுபாட்டில் எவ்வாறு முக்கிய விசையாக செயல்படுகிறது என்று தெளிவாக விளக்குகிறது. அதன் மூலம் அறிவியலில் முகம் தெரியா பெண்கள், நன்கறியப்பட்ட பெண்கள், அறிவியலைப் பிரபலப்படுத்திய பெண்கள், ஆண்களுக்கு துணையாக இருந்த பெண்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்கிறது.

மேலும் பெண் அறிவியல் அறிஞர்களின் மன, உடல் திறன்கள் நடத்தை ஆகியவை  எவ்வாறு அவர்களின் பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன அவற்றை அவர்கள் கையாண்ட விதம் போன்றவற்றினை தெளிவாக விளக்குகிறது. இப்புத்தகத்தை, அறிவியல் அறிஞர்களாக இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் ஆற்றலை பயன்படுத்துவோரும், சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சியினை விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

முக்கியமாக இந்நூல் முழுவதும் ஆசிரியர் எடுத்தாளும் நேர்த்தியான தமிழ்ப் பதங்கள் அறிவியல் தமிழில் கட்டுரைகள் எழுதும் ஆசிரியர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இப்புத்தகத்தின் ஆசிரியர் கல்வித் துறையில் பேராசிரியராக இருப்பதால் மத்திய நடுவன் அரசு பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கும் ஆய்வுத் தொகை பற்றிய தகவலையும் புத்தகத்தின் இறுதியில் தந்துள்ளார்.

இப்புத்தகம் தரவுகள் நிரம்பிய ஆவணப் புத்தகமாகவெ கருதலாம். அந்த வகையில் இதனை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

8. முகிலினி. ஆசிரியர்: இரா .முருகவேள். பொன்னுலகம் பதிப்பகம்
கோவை, ஈரோடு மாவட்டங்களின் பின்னணியில் சிறுமுகை விஸ்கோஸ் ஆலை ஊடாக அறுபதாண்டு வரலாற்றை நாவலாக விவரிக்கும் புனைவு‍ அல் புனைவு கலப்பு நாவலே முகிலினி. 

ஒரு தொழில்சாலை எவ்வாறு ஒரு பகுதியில் உருவாகிறது. அதற்கு அரசு தரும் சலுகைகளோடு அது எவ்வாறு அப்பகுதியில் சூழலினை கெடுக்கிறது. அதை எப்படி அரசு இயந்திரம் கண்டு கொள்ளாமல் செல்கிறது என்ற கேள்விகளை முன் வைத்து நகர்கிறது முகிலின் நாவல்.

தமிழ்த் தேசிய கதாபாத்திரமான‌ ராஜீவிற்கும், பொதுவுடமைவாதி கதாபாத்திரமான ஆரானுக்கும் இடையேயான முரண்களோடு தொடங்கி பின்னர் காந்திய வழியில் கிராமப் பொருளாதாரம், இயற்கைக்கு திரும்புதல் போன்ற சிந்தாந்தங்களை விவாதிக்கிறது.

மூன்று பகுதிகளாக இந்த நாவல் விரிவடைகிறது. முதல் பகுதியில் பவானி அணையில் வரலாறு நீண்டு விரிவடைகிறது. பின்னர் இரண்டாவது பகுதியில் எவ்வாறு இத்தாலியில் பிரபல செயற்கை இழை (ரேயான்) தயாரிக்கும் நிறுவனமான‌ இத்தாலியானா விஸ்கோஸாவிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டு எவ்வாறு அது கோவையினை சுற்றியுள்ள பகுதிகளில் சூழலியல் சீர்கேட்டை விளைவிக்கிறது என விவரனை செய்கிறது. மூன்றாவது பகுதியாக ஈரோடு, திருப்பூர் பகுதியில் நிலவும் சாதியை அடிப்படையாக கொண்டு நிகழும்  உள்முரண், அரசியல், தொழில்போட்டி என பயணிக்கிறது.
தமிழ் மகனின் வெட்டுப் புலி நாவலுக்கு பிறகு இந்நாவலும் திராவிட அரசியலைப் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் நாவலை வாசிக்க என்னை தூண்டும் ஒரு காரணம் எனச் சொல்லலாம்.

9. The collected poems of Dylon Thomas. The Centneary Edition. Edited by John Goodby.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் மிக முக்கியமானவர் பிரித்தானியாவின் வேல்சு தேசத்தை சேர்ந்த திலன் தாமஸ். சேக்ஸ்பியர், ஜாய்ஸ் இவர்களுக்கு பிறகு ஆங்கில மொழியின் மயக்கத்தினை உலகறியச் செய்தவர் திலன் தாமஸ். மரபுகளை உடைத்து ஓசை சந்தங்களை அடிப்படையாக கொண்ட திலனின் வார்த்தைகள் ஆங்கில கவிதை உலகிற்கு மிகப் புதிது.

கிராமர் பள்ளியில் பணியாற்றிய இவரது தந்தை ஒரு ஆங்கில ஆசிரியர். ஆகையால், இளம் வயதிலேயே இவரது தந்தை மூலம் ஆங்கில இலக்கியம் கற்றவர். உயர்நிலைப் பள்ளி கல்வியினை முடித்து விட்டு  19 வயதில் லண்டனுக்கு சென்று ஒன்னரை ஆண்டு காலம் பத்திரிக்கை ஒன்றில் பணி புரிந்து விட்டு ஊர் திரும்பினார். அதற்கு பிறகு காலத்தால் நிலைத்து நிற்கும் கவிதைகளை புத்தகங்களாக தந்தார்.

இவரது மேப் ஆப் லவ், டெத் அன்ட் என்ட்ரன்சஸ் மிகப் பிரலபமான கவிதை தொகுப்புகள். இரண்டாம் உலக்போரின் போது பிபிசி நிறுவனத்தில் பணியாற்றியபடியே தனது புனைவு சிறுகதைகளை    Portrait of the Artist as a Young Dog என்ற புத்தகமாக‌ எழுதினார்.

மிக இளம் வயதிலேயே (39) தனது ரசிகர்களை தவிக்க விட்டு விட்டு அமெரிக்க பயணத்தின் போது இயற்கை எய்தினார். திலன் ஒரு கலகக்காரர், பெண்களின் நட்பை பெரிதும் நேசித்தார், எப்போதும் புகைத்தபடியே இருக்கும் இவரது புகைப்படங்கள் மட்டுமே நமக்கு இன்று காணக் கிடைக்கிறது. இவரது காதல் ரசம் சொட்டும் “திலனின் காதல் கடிதங்கள்” (The love letters of Dylan Thomas) தொகுப்பு காதலர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டியது. நோய்வாய்ப்பட்டிருந்த‌ தன் தந்தைக்கு அவர் எழுதிய என்ற Do not go Gentle கவிதையும், The Hand that signed, The Force that Through, A refusal to Mourn கவிதைகளும் மிகப் பிரச்சித்தி பெற்றவை.

இவரது கவிதைகள் நாடகங்களுக்காகவே எழுதப்பட்டது போன்ற தோற்றம் உடையது. சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற பாப் திலன் மற்றும் பீட்டல்ஸ் இசைக் குழுவினரால பெரிதும் சிலாகிக்கப்பட்ட கவிதைகளுக்கு சொந்தக்காரர் திலன் தாமஸ்.

இவர் எழுதிய “அன்டர் மில்க் வுட்” கவிதை (Under Milk Wood) ஒரு நவீன செவ்வியல் இலக்கியம் என்றால் மிகையாகாது. இந்நாவலில் வரும் விழிச் சவால் உடைய கேப்டன் கதபாத்திரத்திற்கு சுவான்சி நகரில் சிலையே வைக்கப்பட்டுள்ளது என்றால் அவரது கவிப்புலமை விளங்கும்.

“ராபர்ட் நை” (Robert Nye) சொன்னது போல திலன் “எந்த முகமூடிக்கும் பொருந்தாத பிம்பத்தை உடையவர்”. கட்டட்டற்ற வாழ்வின் மூலம் கவிதை உலகில் பாடித் திரிந்தவர். கொண்டாட்ட மனோநிலையின் உச்சம் திலன் தாமஸ். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளில் இருக்கும் ஓரிரண்டை இந்த ஆண்டில் மொழி பெயர்க்க வேண்டும் என விரும்புகிறேன். பார்ப்போம்.

*******************
இவை தவிர இன்னும் பத்து புத்தகங்கள் (கு.அழகிரிசாமியின் சிறுகதைகள், ஐந்து முதலைகள், தூப்புக்காரி, India Rising, கொற்கை, பிறகு முக்கியமான தமிழ் ஆளுமைகளின் புதிய நாவல்கள்) என்று தனி விருப்ப பட்டியலில் உள்ளது. ஆனால் மேற் சொன்னவை நிச்சயம் வாசிக்கப் பட வேண்டியவை.

எனது பட்டியலில் விடுபட்ட வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இருப்பின் நண்பர்கள் தயவு செய்து பரிந்துரைக்கவும்.








No comments:

Post a Comment